இரண்டு நாட்களுக்கு 
ஒருமுறை 
அவசியப் பணி நிமித்தமாய் 
அந்தச் சாலையில் 
இறங்கி நடக்கின்றேன் 
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் 
திணிக்கப்பட்டுத் திறந்துகிடக்கும் 
அவள் துணிப்பைக்கு 
எந்தவித ஆபத்துமில்லை 
நானோ எனது குடையை 
பத்திரமாய்ப் பூட்டிவைத்து 
வாயிற்க் காவலரிடம் 
சாவியும் பெற்றுவிடுகிறேன் 
திரும்பி வரும் பொழுது 
தயங்கித் தயங்கி நிற்கிறேன் 
ஒரு பெண் துணையுமில்லாத 
பின் மாலைப் பொழுதில் 
அவளோ பாதி உட்கார்ந்தபடி 
கண்ணாடியில் முக 
அலங்காரமிட்டுக் கொண்டிருக்கிறாள் 
ஒருமுறை 
ஆண்களோடு மட்டுமே 
பேருந்து நிலையம் வரை 
பயணிக்க 
நான்கு வகை குணங்களும் 
சம்மணமிட்டுக் கொள்ள 
சர்வ காரியதரிசியாய் 
அதே சம்மண உறுதியில் 
பாசி கோர்த்தவளாகினாள் 
என் பார்வைக்குள் 
வேடிக்கையாய்த்  தெரியுமவள் 
குறத்தி 
அவளது அனாவசியப் 
பார்வையாளராய் நான் 
எங்களுக்கிடையில் ஓடும் 
சாலையில் 
எங்கோ விரைந்தபடிதான் 
இருக்கிறது ஒவ்வொரு வாகனமும்....! 

- புலமி

Pin It