அன்றைய பகல் பொழுது
உனக்கு அவ்வளவாகப் பிடித்திருந்திருக்காது
முன்சாமத்தில் ஒருநாள்
நெறி கட்டிய பசலையில்
நான் உனக்கு சொல்லியது
நினைவிருந்திருக்கும்

உன் மல்லிகைப் பூவை
முதலில் முத்தமிட்ட தலையணையை
நான் முறைத்துப் பார்த்தது
உனக்கு நினைவிருந்திருக்கும்
அன்று அம்புலி மாமா கதைகளை
நீ பலமுறை முயற்சி செய்து
பிள்ளைகளைத் தூங்கச் செய்வதிலும்
வெற்றி கண்டிருக்கலாம் . . . .

அடுப்பிலிருந்த பால்
அன்றும் நெருப்பின் கோரப்பசிக்கு
உணவாகிய பின்
அதன் மூச்சுக்காற்று
உன் மறதிக்கு மகுடம் சேர்த்திருக்கலாம்

அயர்ந்து உறங்கிய பிள்ளைகளுக்கு
அன்று நீ கொடுத்த முத்தங்களில்
சந்தோசத்தில் மிளிர்ந்திருப்பாய்
விழித்தும் உறங்கியும்

தாழிடப்படாத கதவு எழுப்பும் ஓசையில்
ஒரு சங்கேத இசைக்காக மட்டுமே
காத்திருப்பாய் என்பதை நானும் அறிவேன்
இரவின் அமைதியை
குலைத்த தொலைபேசி செய்தி கேட்டு
எப்படி துடித்திருப்பாய்

என் பிணம் ஆம்புலன்சில் வருவதை
வந்து சொன்னவன் எப்படிச் சொல்லியிருப்பான்
இதன்பிறகு வரும் பொழுதுகள் கூட
உனக்கு இரவலாகிப் போகுமென
நினைக்கும் போதுதான்
முன்னிலும் அதிகமாய்
என் உயிர் நெருங்குகிறது உன்னை

- வசுமதி மூர்த்தி

Pin It