விடுமுறைக்கு முந்தைய அவசரவாக்கில்
காற்றைக் கிழித்து
வீடேகும் வாகனங்களோடு
என் கனவுகளும்
கையாண்டு செல்கிறது இச்சாலையை

வீடடைய
கால்களைக் கட்டிக்கொள்ளும்
பிஞ்சுக் கரங்களால்
கண்கள் மிளிர்வது போல் இல்லை
எதிர் வாகன விளக்குகள்

கைகளாட்டி முன் போகும் குழந்தைக்கு
கடைக்கண் உருண்டு செல்வது போல்
இருக்கை வெப்பம் தணிய
ஒரு குளிர் கால தருணங்களை
அடிக்கடி கடப்பதுண்டு

இது போலவே
பின்னிருக்கைகள் சுமக்கும்
அன்பின் குரல்
அவ்வபோது என் காதுகள் வழியே
என்னை என் வாசலுக்கு
அழைத்துப்போகையில்
குறும்புன்னகையோடு முன் நகர்கிறேன்

பதட்டங்களை கடினங்களை கண்ணீரை
சுமந்தும் கடந்தும் பழகிவிட்டேன்
ஆனால்
காலையில் மகள் கேட்டவைக்கு
வெறுவார்த்தையோடு கடந்ததில்லை

அபத்தங்களுக்கு காதுகளை
செவிடாக்குபவனில்லை நான்
அவற்றை வெறுத்தபடியே
எதிர்த்தபடியே பயணிக்கிறேன்

அழைத்துச் செல்லும் பாதை
போகச் சொல்லி வாழ்வைக் காட்டும்
முந்திச் செல்பவை ஒரு தடவையாகினும்
பழக்கி விடுகிறது நிதான அருமையை

கடந்து போகும் நம் பயணங்களில்
எல்லோரும் ஒரு வழிகாட்டி
எல்லோர் கால்களிலும் ஒரு புதிய பாதை
எப்படிப் பார்த்தாலும்
நீங்களும் ஒரு வாகனன் தானே...

- முருகன்.சுந்தரபாண்டியன்

Pin It