இந்த கணம்
நிச்சயமாக உன்னுடையது
இதோ
விரல் நகங்களில் காயாத
சாயத்தைப் போல்
கொஞ்சம் குழைந்ததும்
இழையாததுமாய்
தூக்கமின்றிக் கழிகின்றது
நாளை
உன்னைக் காணும் வரை
ஓயாத தவிப்பு....

மாதக் கடைசியென்பது
மாதவிடாய்
போலத் தான் உனக்கும்
என் எண்ணங்களைத்
தொடுவதற்கும்
தீட்டுப்படுகின்றது -நீ
மென்றும் விழுங்கப்படாத
மௌனம்....

விடாது இயங்கும்
கடிகாரத்தில்
ஒருமுறை உற்றுப் பார்த்து
நம் நேரத்தை
சரி பார்க்க வேண்டும்
அந்த
ஒரு நொடிப் பொழுதில்
உன்னைச் சுற்றிய
அலுவலகம்
என் கவிதை மிதக்கும்
அடிவானமாய்
நகர்ந்திட வேண்டும்...

செருமிக் கொண்டிருக்கும்
போதெல்லாம்
நினைத்துப் பார்க்கின்றாய்
என்றுதான்
ஏதேனும் ஒரு பாடல்
முணுமுணுக்கின்றது.....

அப்படி
என்னதான் உழைப்பாயோ
என்னைப் போலவே
உன் கன்னத்தில்
காத்திருக்கும் தாடியும்....

களைப்பையும் விருந்தையும்
முதல் தேதியில்
கொண்டாடும் - வருமானத்தில்
தேவைக்கெனவும்
ஒதுக்கி வைக்கிறாயென
நம்புகின்றேன்
அதைப் போலவே
மீண்டும் ஆரம்பிக்கின்றது
ஒரு சேமிப்பு.........!

- புலமி

Pin It