people 312ஏகாந்தமென்பதே ஏலாததாகி விட்டது
எனக்கு

அதிகாலை நடையில் செவி புகுந்த
பண்பலைப் பாடல்

காதைக் கடிக்கும் வாகன நெரிசல்

வீட்டில்
அலறும் சட்னி அரைப்பான்கள்
கதறும் சோறு சமைப்பான்கள்
கண்ணீர் விடும் முட்டாள் பெட்டி
வீறிடும் அண்டை சிசு
சிணுங்கிடும் கைபேசி...

நிரம்பி வழியும் மேல்நிலைத் தொட்டி
நீரிலும் ததும்பும் அபஸ்வரங்கள் ....

கூட்டலையும் கழித்தலையும்
கட்டிக்காத்து,
வகுத்துப் பிரிக்கும்
அலுவலக உபாதைகள் ...என்
ஏகாந்த எமன்கள் ...

காதை உரசும் காற்றிலும்
ஒளிந்திருக்கும் என்
தனிமை தின்னிகள் ...

பகலோனின் பணி முடிவில்
துப்பட்டி முக மறைத்தலில்
என் விருப்பம் எதிர் நோக்க ....

மூளையைப் பிராண்டுகிறது
அதிகாலை பண்பலைப் பாடல் ...

ஏகாந்தமென்பதே....

Pin It