vinayaga 400உழைப்பெனும் உன்னதம் பழகி
குரங்கு நிலையிலிருந்து குதித்து
மனிதனாய் மேன்மை பெற்ற
நெடியதொரு வரலாற்றுப் போக்கில்
மனிதன் கடவுளைப் படைத்தான்

வேட்டையாடுதலும்
வேட்டையாடப் படாமல் தப்பித்தலுமே
வாழ்வியலாய்க் கொண்ட
ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில்
மனிதனின் அறியாமைகளை,
மனிதனின் அச்சங்களை
முழுதாய்த் தமக்கு சாதகமாக்க
உழைக்காமல் பிழைக்க நினைத்த
ஓநாய் மனிதன் கடவுளைப் படைத்தான்

வேட்டையில் வென்றால்
வேட்டைப் பொருள் அவனுக்கு உணவு
வேட்டையில் தோற்றால்
வேட்டைப் பொருளுக்கு அவன் உணவு

வேட்டையில் முன் நிற்பதிலும்
வாழ்வியலில் முன்னோடியாய்ச் செல்வதிலும்
பெண்ணே முன் நின்ற தாய் வழிச் சமூகம்

பிரசவகால ஓய்விலிருந்த பெண்ணொருத்தி
பாதி தின்றெரிந்த பழக்கொட்டையொன்று
புதைந்த இடத்தில் புதிதாக
செடியொன்று துளிரக் கண்டாள்

விதை முளைப்பதைக் கண்டுகொண்டாள்
விவசாயம் பூமிக்கு கற்றுத் தந்தாள்

நாடோடி வாழ்க்கைக்கு
இந்நிகழ்வே முற்றுபுள்ளி
நாகரிக வாழ்க்கைக்கு
இந்நிகழ்வே துவக்கப் புள்ளி

ஓடித்திரிந்த கூட்டம் இங்கு
ஓரிடத்தில் நின்றது
வேட்டையாடித் திரிந்த கூட்டம்
விவசாயம் செய்தது

உணவைத் தேடி அலைந்தவர்கள்
உணவை உற்பத்தி செய்தது
ஒரு பண்பாட்டு வளர்ச்சி

தாய் வழிச் சமூகம் திரிந்து
தந்தை வழிச் சமூகம் வளர்ந்தது
ஒரு பண்பாட்டு வீழ்ச்சி

பாம்பின் விசத்துக்கு
மனிதன் அஞ்சினான்
பாம்பை வணங்கினான்

காட்டு விலங்குகளுக்கு
மனிதன் அஞ்சினான்
விலங்குகளை வணங்கினான்

இடி மின்னலுக்கு
மனிதன் அஞ்சினான்
அவற்றையும் வணங்கினான்

தன் சக்திக்கு மீறிய
அனைத்துக்கும் அஞ்சினான்
தன் அறிவுக்கு மீறிய
அனைத்தையும் வணங்கினான்

இயற்கையின் சீற்றங்களை
தெய்வங்களின் கோபமென
பாமரனை நம்ப வைத்து
ஓநாய்க் கூட்டமொன்று
உழைக்காமல் பிழைக்கத் துவங்கியது

பூஜைஎன்றும் பரிகாரமென்றும்
பாமரர் சொத்துக்களைத் திருடியது

பலியென்றும், பழியென்றும்
எளியவர் செல்வங்களை சுரண்டியது

'வேதியர்' (பிராமணர்) எனும்
திருட்டுக் கூட்டம்
முதல் வர்ணமானது

உழைப்பின் விளைவால்
உண்ண உணவு கிடைத்தது
கூட்டு உழைப்பின் விளைவால்
உபரி உற்பத்தி கிடைத்தது

ஓரிடத்தில் சேர்த்து வைத்த உபரி தானியங்களை
ஒரேயடியாய் கொள்ளையிட்டுச் செல்லும்
விவசாயம் அறியாத பிற நாடோடிக் குழுக்களிடமிருந்து
விவசாய விளைபொருளைப் பாதுகாத்துக்கொள்ள
வலிமை வாய்ந்தோர் படையொன்று உருவாக்கப்பட்டது

குழுத் தலைவன் அரசனானான்
உபரி செல்வத்தின் மீதான அரசனின் ஆதிக்கம்
உழைக்கும் மக்களின் மீதும் இறுகிப்போனது

மக்கள் உழைப்பில் விளைந்த பொதுச் சொத்து
மன்னனின் தனிச்சொத்தாகிப் போனது
தனிச் சொத்துடைமை காக்கவே
'அரசு' என்றாகிப் போனது

'வேந்தர்' (சத்ரியர்) என்னும்
சுரண்டல் கூட்டம்
இரண்டாம் வர்ணமானது

இவ்விரண்டு வர்ணத்தாரும்
சுகவாழ்வு வாழ
இன்னல்பட்டு உழைக்கும்
இயலாத மக்களை
'வணிகர்'(வைசியர்) என்கிற
மூன்றாம் வர்ணம் என்றனர்

யுத்தத்தில் தோற்றவர்களைக்
கொல்லும் வழக்கம் மாறி
யுத்தக்கைதிகளை தமக்கு
அடிமைகளாக்கிய காலத்தில்
அத்தகு அடிமைகளை
'வெள்ளாளர்' (சூத்திரர்) என்னும்
நான்காம் வர்ணம் என்றனர்

இவ்விதம்
உழைக்கத்தயங்கிய
சோம்பேறிக் கூட்டம்
கடவுளைப் படைத்தது

பிறர் உழைப்பில் வாழப்பழகிய
சுயநலக் கூட்டம்
வர்ணங்களைப் படைத்தது

அன்று
மனிதனின் அச்சத்தால்
கடவுளை வாழ்வியலில் கலந்தான்

இன்று
மனிதனை அச்சப்படுத்த
கடவுளை அரசியலுக்குள் கலந்தான்.

அரசியலில் நுழைக்கப்பட்ட
கடவுளின் பெயரில்
ஊரெங்கும் திருவிழா
விநாயகர் சதுர்த்தி பெருவிழா

Pin It