சந்தையின் போட்டியில் வெல்வதற் கென்றே
சிந்தையில் அறிந்ததைப் பிறரறி யாது
தம்முள் இருத்தி மனதில் அழுத்தம்
விம்மிப் பெருக்கி மாய்தல் ஏனோ?
நேயம் மிக்க சமதர்ம அமைப்பில்
ஈய வியலா உழைப்பைத் தவிர
அறிந்தவை அனைத்தையும் கூட்டுற விற்கே
செறிவுடன் வைப்பதில் பெருகும் வளத்தால்
புகழ்சால் மனிதம் உருவா கும்மே

(சந்தை(ப் பொருளாதார முறை)யில், போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, மனதில் அறிந்த பல விஷயங்களைப் பிறர் அறியாத வண்ணம் இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டி இருப்பதால், மன அழுத்தம் விம்மிப் பெருகி ஏன் மாய்ந்து போக வேண்டும்? மனித நேயம் மிக்க சோஷலிச(ப் பொருளாதார முறை)யில் ஒருவர் மற்றவருக்கான வேலையைச் செய்யும் அடிமையாக வைத்துக் கொள்ள முடியாது தான். (ஆனால்) அறிந்த அறிவு அனைத்தையும் அனைவரின் கூட்டுறவில் செறிவுடன் வைப்பதால் (உற்பத்தியிலும் விந்யோகத்திலும்) வளம் பெருகி புகழ் மிக்க மனிதப் பண்பு உருவாகுமே!)

- இராமியா

Pin It