நன்றாக உறங்குகிறேன்
ஐந்து ஆறு கண்கள் இருப்பதுபோன்ற அலுப்பில்
நான் நன்றாக உறங்குகிறேன்
எனது புதிய கனவின் முகத்தில்
பேய் ஓவியங்களை அள்ளி எறிந்தவர்கள்
தூக்கத்தில் நடக்கும் மனிதர்கள்
எனது வீடு நிறைய நிசி
விளக்கைத் தேடி எடுப்பதென்பது
கண்களை ஒரு துணியினால் கட்டி
விளையாடுவது போலிருக்கு
இங்கே
பேய் ஓவியர்கள் அமர்ந்திருப்பர்
குடும்பக் கதையெல்லாம் சொல்லி
வேட்டைப் பற்களைக் காட்டி சிரிப்பர்
என்று
என் மகனுக்குச் சொன்ன கதைகள்
ஞாபகத்தில் வர
பயந்து கத்திவிட்டேன்
நிசி
பேய் ஓவியர்களின் வர்ணம்
பேய் ஓவியர்களின் வர்ணத்திற்குள்
இறங்கிக் கிடக்கும் நான்
உறக்கத்தில் பலவும் பேசுகிறேன்
உறக்கத்தில் பலவும் பேசுவதாக
முன்பொரு விடியற்காலையில்
மனைவி சொன்னாள்
இன்று
பொழுதுவிடிந்தும்
உறங்கியவாறு கிடக்கிறேன்
எனது பலவருடகால படுக்கையில்
அசதியாக இருக்கும் என நினைத்தோ
அழவேண்டி இருக்கும் என நினைத்தோ
முதுகில் தட்டி
என்னை வழமையாக எழுப்புவது போன்று
எழுப்பவில்லை மனைவி

எனதுடலுக்குள்
தூக்கத்தின் தந்தை குடியேறியிருக்கிறார்
என்பதை எழுந்தவுடன் சொல்ல எண்ணியிருந்தேன்
இப்போது நான்
நீளமாகவும், அகலமாகவும்
வானில் பறக்கிறேன்
என்னுடன் அபூர்வமான பறவைகளும்
பேசிக்கொண்டு வருகின்றன
ஒரு பறவை சொல்லிவருகிறது
உன்னை சந்தூக்கில் வைத்து தூக்கி வருகிறார்கள்
உனக்கு பறப்பது போலிருக்கா?
இதைக் கேட்ட நான்
ஏங்கி அழுகிறேன்
எனது கண்ணீரை பன்னீர் என்று
சொல்லிக் கொண்டுவருகின்றனர்
அக் கூட்டத்தினர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.