எங்களின் தோட்டங்களிலுள்ள

முளைக்கீரைகளை ஆடுகள் மேய்ந்தன

எச்சரிக்கை பண்ணியும்

மீண்டும் மீண்டும் மேய்ந்தன

ஆடுகளின் கழுத்துக்களில் தொங்கவிடப்பட்ட

கெவர்களில் கட்டப்பட்ட தடிகளால்

பொட்டுக்கால் நுழைவது தடுக்கப்பட்டது.

 

வேலியோரத்தில் மதத்து வளர்ந்திருந்த

பயிர்களின் குருத்துக்களை

கட்டாக்காலி மாடுகள்

தமது கழுத்தினை நீட்டி,

நீளமான நாக்கினை வளைத்து

ஆப்பிட்டவற்றைச் சுருட்டிக் கொண்டன.

 

காட்டுக் கரைகளில்

பொட்டல் வெளிகளைப் பண்படுத்தி

சாமியும் குரக்கனும் நட்டோம்

மழைக்காலங்களில்

மொட்டைக் கறுப்பனும் விதைத்தோம்

காட்டுப் பன்றிகளும் காட்டெருமைகளும்

அப்பப்போ யானைகளும் வந்து

கபளீகரம் பண்ணிப் போயின

 

எங்களின் உழைப்பெல்லாம்

பயனற்றுப் போயின,

பரம்பரை பரம்பரையாய்த் தொடரும்

அவலங்களை முற்றுவிக்க

கிராமச்சபையிருந்து சட்டசபை வரை

சட்டநிபுணர்களும் பேசிப்பார்த்தனர்

 

தார்மீக சிந்தனைகள் ஊற்றெடுக்கும்

எங்கள் தேசத்தில்

சகல ஜீவராசிகளுக்கும்

சாவகாசமாய் நடமாடும் சுதந்திரமுண்டு,

அதற்குப் பங்கம் விளைவிப்போர்

தண்டனைக்குரிய குற்றவாளிகள்

இச்சரத்துக்கள் மிகக்கண்டிப்பாக

முன்னரைவிட முனைப்பாக

யாராலும் எப்போதும் மாற்றமுடியாதபடி

கடைப்பிடிக்கப் படுமாம்.

- இதயராசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It