இனியும் பொறுக்கமுடியாது
ஆதலினாலே
முடிவாக தீர்மானித்துவிட்டேன்
பொறித்தே தீர்வதென

அடைகாக்கும் வரையிலென
மட்டிடப்பட்ட உரிமையை
கொண்டாட முடியாதென்னால்
சுயமிழந்து இருப்பது
சோதியிழந்திருப்பதுபோல
நிறமூர்ந்து செழிக்க
ஒளி வேணுமெனக்கு

சோளக்காட்டின் நடுவிருக்கும்
வைக்கோல் பொம்மைக்கஞ்சி ஓடுவதும்,
இருளையும், கூர் ஒளியையும்
கண்டு மிரள்வதும் எனக்குரிய பண்பன்று

இருள்
விடியலுக்கான சமிக்ஞையென்றே
என் அறிவுக்கு விளங்குகிறது
யார் குற்றம் கூறினும்
நான் இப்படித்தான் இருப்பேன் நிமிர்ந்து

சுற்றிலும் சூட்சுமங்கள்
என்னை வியாபித்திருக்கும்
பவித்திரமான உணர்வுகளை
களைந்தெறிய பலவழி பிரயத்தனங்கள்
ஆயினும் தடுமாறாதென்
நிமிர்ந்த நெஞ்சம்

எனக்குள் ஊடுறுவியிருப்பதும்
அடித்துச் செல்லமுடியாத
நாணலதையொத்த வேரொன்றே
ஆணிவேர்!

சுகந்த மணம் கமழும்
தோப்பொன்றை ஆக்கவே
இந்த செப்பனிடுதலும்
கழனி செய்தலும்

புதர் மண்டிக் கிடக்கும்
இந்த வெளி தோப்பாகும்
குருவிகளும், கிளிகளும்
கூடுகட்டிக் குலாவும் அதில்
குயில்களும், மைனாக்களும்
என் பெயர்கூவிப் பாடும்

எனது வேர் தோப்பான
அதிசயம்கண்டு வையகமே வியக்கும்!
Pin It