ஊடல் விரும்பா நிகழ்வு.
நிழல்களின் இருள்தாண்டவம்.
அன்னியர்களின் அனிச்சைதேசம்

கதவுகளை அடைத்துவிட்டாய்
என் பெயர் எழுதி
உன்னைத்
தொந்தரவு செய்ய வரவேண்டாம்
என்கிற வாசகத்தை வாசலில்
தொங்கவிட்டிருக்கிறாய்.

மடிக்கணினி ஒன்றின் மீதான
உன் பிரேமை நானறிந்தது.
தேடலொன்றை
இணையத்தில் துவங்கினேன்.

முகப்புத்தகத்தில்
உனக்குச் சொந்தமான
பக்கத்தை திறந்துபார்த்தேன்.

அதில்
உன் பழைய தோழமைகளும்
நானறியாப் புதியவர்களுமான
நீண்ட நட்புப் பட்டியலிருந்தது.

என்னை நீ தண்டித்ததை
அறியாதவர்களுக்கும்
என்னையே நீ
அறிவித்திராதவர்களுக்கும்
நட்பு வேண்டி மனுச்செய்தேன்.

ஓரிருவர் உடனடியாக
என்னையும் வரவேற்றனர்.
சேராநதி ஒன்றின்
கரைகளுக்கிடையில் பாலமாயினர்.

நாமிருவரும்
முகப்புத்தகத்தின்
பொது நடைபாதையொன்றில்
உலாவிக்கொள்கிறோம்
அவ்வப்பொழுது

உனது இடுகைகளுக்கு
நான் விருப்பக்குறியிடுவதும்
நான் வைக்கும் மறுமொழிகளுக்கு
நீ நகைத்துக் கொள்வதும்
தானாகவே நிகழ்ந்தன.

நாட்கள் கழிந்த
குருட்டுத் தைரியமொன்றில்
உனக்கு ஒரு நட்புக்கோரலை
அனுப்பிவைத்தேன்.

மாதக்கணக்காகியும்
நீ என் புதிய நட்பை
உறுதிசெய்யவேயில்லை.

உனக்காகத் துவங்கிய
முகப்புத்தகக் கணக்கு
எனக்கானதாய் மாறி
நுழைவதும் அகல்வதும்
நிகழ்கிறது.

எதிர்பாரா மழையொன்றில்
நனைய பிரியமின்றி
வலையகம் ஒன்றில்
புகுந்தேன் இன்று மாலை.

என் முகப்புத்தகத்தைத்
திறந்தவுடன் அதனுள்
எனக்கொரு
செய்தி இருந்தது.

நீ என் நட்பை
ஏற்றுக்கொண்டிருந்தாய்.
அது சாதாரணமாகத் தோன்றுவண்ணம்
கூடவே ஒரு குறுஞ்செய்தி
அனுப்பியிருந்தாய்.

"இன்னமும் என்னைக்
காதலிக்கிறாய் தானே.?"
என்று.

கணிணியை அணைத்துவிட்டு
வெளியேறி சாலையில்
நடந்து கொண்டிருக்கையில்
அறிந்துகொண்டேன்.

நமக்கான மழை
நமக்காக பொழியத்
தொடங்கியிருப்பதை.