மழைக்காலத்தில்
மரத்துப்போன கதவில்
வண்டுகள் குடும்பத்துடன்
குடியேறிவிட்டது

ரெட்டிப்பான ஜன்னல்களில்
ஒட்டிப்போன ஒட்டடைகள்
வீட்டின் இன்றைய
நிலையை வட்டமிடுகிறது

தாழிடப்பட்ட
மாடக்குழியில்
தாத்தாவின்
வெற்றிலைப்பெட்டி
சத்தமில்லாமல்
நூறு செய்திகளை
கடத்தி வைத்திருக்கிறது

புதிய அத்தியாயத்தின்
தொடக்கத்தில்
புணரமைக்கப்படாமல்
போன மேல்கூரைகள்
ஒளியை உலாவவிட்டு
ஓவியம் பழகுகிறது

பிழையின்றி பாச
மழையில் நனைத்த
தாத்தாவின் குடை
நினைவிழந்து நித்திரையில்

பரிமாரிக்கொண்ட பேச்சுக்கள்
இன்னும் திண்ணையில்
உலாவிகிடக்க
திண்ணைமட்டும் காலஓட்டத்தில்
கொஞ்சம் தேய்ந்துவிட்டது

நான் கிறுக்கிய
நானூறு வண்ண
சுவற்றோவியங்கள்
நான்கு சுவற்றுக்குள்
அடைப்பட்டு வெடிப்புக்களில்
வெம்பிகிடக்கின்றது

எச்சங்களின் மத்தியில்,

இருவரும் சப்பிப்போட்ட
மாங்கொட்டை துளிர்த்து
புதியதலைமுறையானது
விருட்சத்தின் ஒரு
பக்கத்தில் நம்பிக்கை
விதைக்கப்படுகிறது
மரமே என் தாத்தாவாக

- நீச்சல்காரன்

Pin It