1. மறைந்திருக்கும் குறுவாள்
 
ஒளித்து மறைத்து விட்டேனென்
கை வாளை உறையுள்
 
நேர்த்தியான வடிவமைப்பிலான
ஆடை போர்த்தி
பொருத்திக் கொள்கிறேன்
நுட்பமானப் புன்னகையொன்றினை
 
பத்திரப்படுத்துகிறேன்
பயணத்துக்குத் தேவையாய்
வார்த்தைகள் சொற்பம் மட்டும்
பை நிறைய மவுனம்
 
ரசித்து வியக்குமவர்களுக்குத் தெரியுமோ
குருதி காய்ந்த
குறுவாளின் இருப்பு.
2.மற்றுமொரு....
 
கடிகாரம் துரத்தும் காலையில்
இறக்கைகளில் சக்கரம் பொருத்திய
பாதங்கள்
மேம்பாலத்திலிருந்து காண்கையில்
நடைமேடைத் தாண்டி
அபத்தமாய் நிற்கிறது மின்ரயில்
இரும்புப் படுக்கையில் வருகிறது
வெண்துணிப் போர்த்திய சடலமொன்று
சலித்துக் கூவி நகரும் ரயில்
மாநகரின் விருந்தினராய் வந்திருக்கும்
நண்பர்களைப் பத்திரமாய்
வண்டிக்குள் செலுத்தி உடன் செல்பவன்
மாலைத் திரும்புகையில்
நடுவழியில் சந்திதது இன்னொரு மரணம்
காத்திருக்கிறேன்
 நண்பர்கள் வந்துசேர நலமுடன்
விழிகளில் கூடுகட்டும் உறக்கம்
விழித்தெழுந்த காலையில்
சன்னல் வழியாக ப் பார்க்கையில்
அபத்தமாய் நிற்குமொரு மின்ரயில்...
Pin It