அருமை தோழர்களே! ஒரு காலத்தில் பண்பாட்டில், தலைநிமிர்ந்த சமுதாயமாக, சமத்துவம் பேணிய சமுதாயமாக அனைத்து தொழில் செய்கிறவர்களும், சாதி, பேதம் ஏதும் பாராமல், சமத்துவமாய் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த தமிழ் சமுதாயத்தில் இடையில் வந்து புகுந்து கொண்ட சமத்துவமின்மை, பெண் அடிமைத் தனத்தை, சாதிய கொடுமைகளை, இவை அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற அந்த ஆரிய கொடுமையிலிருந்து மீண்டு புத்தெழுச்சியை நம் தமிழ்ச் சமுதாயம் பெற வேண்டும். ஒரு பண்பாட்டுப் புரட்சியை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான். பெரியார் பண்பாட்டு புரட்சி இயக்கமாம் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். 

தன்னோடு உறுப்பினர்களாக இணைத்து கொண்ட மக்கள் மட்டுமல்லாமல் அவருடைய கருத்தை, அடிப்படையாக கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள்கூட அவருடைய பெரும் பணியை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல் துணை நின்றார்கள். பழுத்த சைவ பழம் மறைமலை அடிகள் திரு.வி.க., குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் எல்லாம் துணை நின்றார்கள். ஒரு நாத்திகனோடு கடவுள் நம்பிக்கை உள்ள, கடவுள் நம்பிக்கையை பரப்புகின்ற ஆன்மீகவாதிகள் ஏன், அவரோடு இணைந்து பணியாற்றினர் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.  

ஒரு நாட்டில் பண்பாட்டு படையெடுப்புதான், ஒரு போர்ப் படையெடுப்பைவிட கொடுமையானது, கொடூரமானது. அதுவே மக்களை நிரந்தர அடிமைகளாக ஆக்கக் கூடியது. ஒரு ஆயுதம் தாங்கிய ஒரு போர்ப்படை பெறுகின்ற வெற்றியை ஒரு காலத்தில் மீண்டும் இழந்தவர்கள் பெற முடியும், ஆட்சியை நிறுவிக் கொள்ளவும் முடியும். ஆனால் பண்பாட்டு படையெடுப்பின்போது, ஏற்படுகின்ற கொடுமையிலிருந்து மீள்வது அவ்வளவு எளிதானதல்ல. 

நம் நாட்டில் ஆரியர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வடநாட்டில் புகுந்தார்கள். ஆடு, மாடு மேய்த்து கொண்டு நுழைந்த ஆரியர்கள் ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து கி.மு. 6 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான், தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் படையெடுத்து வரவில்லை. பண்பாட்டு படையெடுத்து நுழைந்தார்கள். பண்பாட்டு படையெடுப்பு எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். 

ஆப்பிரிக்க நாடு இனக் குழுக்களாக இருந்து இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தபோது பல்வேறு காலக்கட்டங்களில் ஐரோப்பியர்கள் மெல்ல, மெல்ல ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினர். அதில் முக்கியமாக கென்ய நாட்டில் விடுதலை போர் நடந்தபோது அந்த நாட்டின் விடுதலை வீரன், டாக்டர் கென்யாடா, அந்த நாடு எப்படி அடிமையானது என்பதை பற்றி சொன்னான். “எங்கள் நாட்டிற்கு ஐரோப்பாவிலிருந்து பாதிரிமார்கள் வந்தார்கள். அப்போது நாடு எங்கள் கையில் இருந்தது. வந்த பாதிரிமார்கள் கையில் பைபிள் மட்டும் இருந்தது. எங்களுக்கு ஜபிக்க கற்றுக் கொடுத்தார்கள். கண்களை மூடிக் கொண்டு ஜபம் செய்த நாங்கள் ஜபத்தை முடித்து கண்களை விழித்து பார்த்தோம். பைபிள் எங்கள் கையில் இருந்தது. நாடு அவர்கள் கையில் இருந்தது” என்று. 

ஒரு பண்பாட்டு படையெடுப்பால் அவர்கள் மெல்ல, மெல்ல அந்த மக்களின் கருத்தை மாற்றி விடுகிறார்கள். அதைத் தான் இப்போது ஐயப்பன் பக்தியில் பார்க்கிறோம். ஒரு ஒற்றை மலையாளி ஒரு ஊரில் ஒரு 25 பேரின் ஆதரவு பெற்று மாலை போடும் குருசாமியாக மாறி அடுத்த ஆண்டு மீண்டும் ஒரு 25 பேரின் ஆதரவு பெற்று ஒரு 50 பேரின் ஆதரவு பெற்றவனாக மாறி விடுகிறான். 

இந்த பண்பாட்டு படையெடுப்பு எந்தவித ஓசையுமில்லால் எந்தவித சலசலப்பும், பரபரப்பும் இல்லாமல் மெல்ல, மெல்ல நுழைந்து கடைசியில் சொந்த நாட்டு பண்பாட்டை இழந்து வந்தவன் பண்பாட்டிற்கு அடிமையாகிற கொடுமை குறிப்பாக ஆரிய படையெடுப்பின்போது நடந்தது. அவர்கள் ஒவ்வொரு நிகழ்விலும் கொண்டு வந்து நுழைத்தவை நம் வீட்டு வாழ்வியல் நிகழ்வுகள். எல்லாவற்றிலும் அவர்கள் கொண்டு வந்து நுழைத்த கொடுமைகள் தான். அதிலிருந்து நாம் மீள்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகும் என்று தெரியாது. இதனால்தான் மிகப் பெரும் சமுதாயம் இழிவில் அமுக்கப்பட்டது. இதிலிருந்து விடுபட தான் பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருந்தார். 

அதில் ஒரு கூறாகத்தான் வாழ்வியல் நிகழ்வுகளில் ஆரியர்களை ஒதுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் ஒவ்வொரு வாழ்வியல் நிகழ்ச்சியிலும் குழந்தைகளுக்கு பிறந்த நாள் எடுப்பதில் இருந்து, குழந்தைகளை பல பேர் பார்த்தால் கண்ணேறு பட்டுவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் மாறி, குழந்தைக்கு பிறந்த நாள் விழா எடுத்து, அதை பல பேருக்கு காட்டி புகைப்படம் எடுத்து, அந்த மூட நம்பிக்கையை, அச்சத்தை மாற்றி காட்டுகிறோம். அடுத்து பெயர் சூட்டு விழாவை எடுத்துக் கொண்டால் இந்த நாளில் பிறந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பெயர்களைத் தேடி, பொருளற்ற பெயர்களையும், கேவலமான பொருள் கொண்ட பெயர்களையும் வைத்துக் கொண்டனர். ஆரியர்களுடைய மேலாண்மையை நிறுவிக் கொள்வது மட்டுமல்ல, நம்மை அடிமையாகவும் வைத்திருக்கிற பண்பாட்டிலிருந்து மீள தரம் தாழ்ந்த பெயர்களை வைத்துக்கொள்ளாமல் பெயர் சூட்டு விழாவின் வழியாக சமுதாய புரட்சியாளர்களின் பெயர்களையும் தமிழ்ப் பெயர்களையும் வைத்துக் கொள்கிறோம். 

எல்லாவற்றிலும் புகுந்து கொண்ட மூட நம்பிக்கை வீடுகட்டுவதில் இன்னும் கூடுதலாக இருக்கின்றது. வாஸ்து சாஸ்திரம் என்று ஒன்று வந்து இந்த மக்களை ஆட்டுகிறது. எல்லா ஊர்களிலும் ஒன்றிரண்டு வீடுகளையாவது இடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கட்டும்போது வாஸ்து பார்த்து வீடுகட்டி தொலைந்தால்கூட பரவாயில்லை என்று மன்னிக்கலாம். ஆனால், கட்டிய வீட்டை வாஸ்து சரியில்லை என்று இடிக்கிறார்கள். இந்த வாஸ்து என்பது ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதை அண்மைக்காலத்தில் மிக அதிகமாக எடுத்து கொள்கிறார்கள். பொதுவாக ஒரு நம்பிக்கை என்பது அறிவியல் சார்ந்ததாக இருக்குமேயானால், ஒரே விதமாக இருக்கும். ஆனால் வாஸ்து அவனவன் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆளுக்கொன்றாய் சொல்கின்றான். இந்த வாஸ்து சாஸ்திரத்தில் கழிவறை பற்றியெல்லாம் எழுதி வைத்திருக்கின்றான். ஆனால், ஒரு காலத்தில் வீட்டில் கழிவறை என்பதே கிடையாது. அரசர்களின் அரண்மனைகளில்கூட கழிவறைகள் கிடையாது. அதனால் தான் வெளிக்கு போதல் என்ற சொல்லாடலே உள்ளது. ஆனால், இப்பொழுது அதை தென்மேற்கு பக்கம் வைக்க வேண்டும் என்கிறன். வாஸ்து நிபுணர் பி.என். ரெட்டி தென்மேற்கில் வைக்கக்கூடாது என்கிறார். கவுரி திருப்பதி ரெட்டி, வீட்டுக்கு முன்னாடி மரம் அல்லது கம்பம் இருந்தால் பையன் இறந்து விடுவான் என்று எழுதி வைத்துள்ளான். ஆனால், பெரும்பாலான வீடுகளின் முன்னால் மின் கம்பம், தொலைபேசி கம்பம் இருக்கத்தான் செய்கிறது.  

பி.என்.ரெட்டி என்பவர் ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமாராவுக்கு வாஸ்து சொன்னவர். அலுவலகத்திற்கு தெற்கே கதவிருப்பது ஆட்சிக்கு ஆபத்து, வடக்கே கதவு வைக்க வேண்டும் என்று கூறினார். வடதிசையில் குடியிருப்புகளாக இருந்தது. வாஸ்து மூடநம்பிக்கையால், அரசு பணம் பல கோடிகளை செலவு செய்து சாலை போட ஆரம்பித்தனர். சாலை போட்டு முடிப்பதற்குள் என்.டி.ராமராவ் ஆட்சி போய்விட்டது.

அடுத்து தேவகௌடா பிரதமராக வந்தபோது, 2 படிக்கட்டு இருப்பது சரியல்ல, மூன்று படிக்கட்டுகள் இருக்க வேண்டும் என்று வாஸ்து சொன்னான். அது பொதுப் பணித் துறைக்கு சென்று கட்டி முடிப்பற்குள் அவர் ஆட்சி போய்விட்டது. இதுதான் வாஸ்து சாஸ்திரம். இது மக்கள் மனதில் அவ்வளவு ஆழமாக புகுந்து, நேரத்தையும், பணத்தையும், அறிவையும் இழக்கச் செய்கிறது. 

வீட்டை கட்டி முடித்த பின்பு திறப்பதற்கு செய்யும் முயற்சி இருக்கிறது பாருங்கள். முதலில் பார்ப்பானை அழைப்பது. இப்பொழுது பார்ப்பானை தவிர்ப்பது என்பதே பெரும் புரட்சியாக ஆகிவிட்டது. பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள் என்று பழமொழி சொல்வார்கள். ஒற்றை பார்ப்பான் எதிரில் வந்தால், ஆகவே ஆகாது என்பார்கள். ஆனால் ஒற்றை பார்ப்பானை அழைத்து வந்து வீடு திறப்பார்கள். 

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றெல்லாம் சொல்வார்கள். பார்ப்பனர்கள், நம் அனைவரையும் கீழ் ஜாதி என்று மதிப்பதில்லை. அப்படி கொஞ்சம் கூட மதிக்காத பார்ப்பானை அழைத்து வந்து நம் வீட்டு நிகழ்ச்சியை ஏன் நடத்த வேண்டும்? அவனை விலக்கி வையுங்கள், இதுதான் முதல் வேண்டுகோள். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்ன பெரியார், மக்களிடம் வைத்த முதல் வேண்டுகோள், மான உணர்வுக்கு எதிரான பார்ப்பானை, நம்மை மதிக்காத பார்ப்பானை அழைக்காதே.  

அடுத்து, தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளை தமிழில் நடத்திக் கொள்வது, வடமொழியில் சொல்வதால் நமக்கு ஏதும் புரியாது. எனவே திருமணமாக இருந்தாலும் பெயர் சூட்டு விழாவாக இருந்தாலும் நமது நிகழ்ச்சிகள் அனைத்தையும், தமிழர்களைக் கொண்டு நடத்துங்கள். தமிழில் நடத்துங்கள் என்பதுதான் பெரியார் வைத்த கோரிக்கை. இப்பொழுது நாங்கள் பகுத்தறிவு பற்றியோ, விடுதலைப் புலிகள் ஆதரவு பற்றியோ பேசுகின்றபோது, அதில் உங்களுக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், புரியாமல் இருக்காது. எனவே தமிழ் நாட்டில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில், தமிழர்கள் மத்தியில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில் தமிழில் நடத்தினால்தான், அதில் இருக்கக்கூடிய தவறையாவது சுட்டிக்காட்ட முடியும். 

நம்முடைய மறுமலர்ச்சிக்கும், தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பதோடு, அரசியல் ரீதியான உரிமை பெறவும் பார்ப்பனர்கள் தடையாக இருக்கின்றார்கள். நம்முடைய உரிமைக்கு, உரிமை வாழ்வுக்கு தடையாக இருக்கும் பார்ப்பனர்களை புறக்கணிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து, நம் வீட்டு நிகழ்ச்சிகளை அறிவார்ந்த முறையில் நடத்திக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்து. 

அடுத்து, நம் உரிமை பெற்ற வாழ்வுக்காக, இழந்து போன வரலாற்றை மீண்டும் மீட்டெடுக்க, நாம் போராடியாக வேண்டும். அரசியலில் இந்தியாவிற்கு அடிமையாக இருக்கின்றோம். பொருளாதார சுரண்டலுக்கு நாம் வடவருக்கு அடிமையாய் இருக்கின்றோம். பண்பாட்டில், வடநாட்டான் ஆரியனின் ஆதிக்கத்திற்கு நாம் உட்பட்டிருக்கின்றோம். இதிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கின்றபோது, ஒரு காலத்தில் 1938 இல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் பிறந்தது. அதை ஆட்சியைப் பிடித்து நடைமுறைபடுத்து வோம் என்றவர்கள், அதன்பிறகு மாநில சுயாட்சி இப்போது இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றி பேசி வருகின்றார்கள். 

அரசியல் உரிமைகளை மீட்டு எடுப்பது, தமிழர் களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளை தமிழர்களே எடுத்துக் கொண்டால் தான், தமிழர்கள் விடுதலை பெற்ற மனிதர்களாக வாழ முடியும். விடுதலைப் பெற்ற நாடாக வாழ வேண்டும். அதைப் போராட்டமாக முன்வைக்கத் தயங்கினாலும், அதை நோக்கி குரலாவது எழுப்பவேண்டும். 

பக்கத்து ஈழ நாட்டில் ஒரு மானமுள்ள தமிழன் தொடங்கினான். அவன் பெரும் போரை நடத்தினான். அது மெல்ல மெல்ல வளர்ந்தது. முதலில் கூட்டாட்சி என்று தான் தந்தை செல்வா சொன்னார். அதன் பிறகுதான் தனிநாடு தீர்மானம். அறவழியில் போராட்டம், பிறகு ஆயுதம் தாங்கிய போராட்டம். இத்தகைய நீண்ட நெடிய போராட்டத்தை பார்த்த நாம், தமிழ்நாட்டில் நடந்த தலைகீழ் மாற்றத்தை மாற்றி மீண்டும், நாம் அவர்களைப் போல், முன்னேறிய பாதையில் செல்ல வேண்டும். புலிகளைப் பார்த்து மகிழ்கின்ற நாம், புலித் தலைவர்களை பார்த்து வியப்படையும் நாம், அவர்களைப் போன்ற உறுதியைப் பெற வேண்டும்.

பெரியார் சொன்னார் நம்முடைய கலை, பண்பாடு, இலக்கியம் எல்லாம் எப்போது இழந்தோம் என்றால், நம்மை இந்தியன் என்று கருதியபோதுதான், நமக்குள்ள தனித்துவத்தை எல்லாம் இழந்தோம். நம்மை இந்து என்று கருதத் தொடங்கிய போதுதான், நம் சமுத்துவ பண்பாட்டை இழந்தோம். சாதி மதத்திற்குள் புதைந்து போய் அடிமைத் தமிழர்களாய் ஆகிப்போனோம். 

இந்து, இந்தியன் என்ற இரண்டு கட்டுகளில் இருந்து விடுபடுவதுதான். விடுதலை பெற்ற தமிழர்களாய் மீள்வதற்கான வழி என்ற பெரியார் மொழியை, நினைவூட்டி, அனைவருக்கும் நன்றி கூறி, இந்த அழகிய வீட்டை கட்டியிருக்கும் தோழர் பா. உதயராஜ், உ. சுயசந்திரா எங்களது வாழ்த்துக்களை கூறி விடைபெறுகின்றேன்.

(4.4.2010 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு புதுவை மாநிலம் வீராம்பட்டிணத்தில், தி.மு.க. புதுச்சேரி மாமன்ற உறுப்பினர் பா. சக்திவேல் சகோதரரும், கழக ஆதரவாளருமான பா. உதயராஜ் - உ. சுயசந்திரா ஆகியோரது “ஈன்றோர் இல்லத்தையும்” பெரியார் படத்தையும் திறந்து வைத்து கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் - அ.கோகுலகண்ணன்)

Pin It