1.உயர் நிதிமன்றத்தில் தமிழை வலியுறுத்தும் கோரிக்கை சட்டப்பூர்வமானதா?

அரசியல் சட்டம் 348(2)வின்படி ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் மாநில மொழிகளை அல்லது இந்தியை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிக்கலாம்.

தவிர 1963 ஆட்சி மொழிச்சட்டம் பிரிவு 7ன் படியும் மாநில மொழிகளை உயர்நீதி மன்ற ஆட்சி மொழியாக அறிவிக்கலாம். ஏற்கனவே பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தி மொழி அமலில் உள்ளது. ஆனால் இந்தி தவிர மற்ற மாநில மொழிகளை எங்கும் அனுமதிக்கவில்லை. அதே போல் தமிழுக்கும் அனுமதியில்லை.

2. வழக்கறிஞர்கள் போராட்டம் திடீர் போராட்டமா?

 சென்ற மார்ச் 23, 2010 அன்று இதே கோரிக்கைக்காக சாகும் வரை பட்டினிப்போராட்டத்தை வழக்கறிஞர்கள் தொடங்கினர். அப்போது உயர்நீதிமன்றத்தில் தமிழிலேயே பேசலாம் என்று மதுரை தலைமை நீதிபதி கொடுத்த வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு, தமிழில் வாதாடத் தொடங்கினர். ஆனால் உடனடியாக சென்னை தலைமை நீதிபதி அலுவலகத்திலிருந்து அந்த உத்தரவு செல்லாது என்றும் ஆங்கிலமே வழக்கு மொழியாகத் தொடரும் என்றும் அறிவித்தனர். இந்த அவமதிப்புக்குப் பிறகு தான் மீண்டும் போராட்டத்தை ஜூன் 9ல் தொடங்கி 13 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த‌னர்.

2006 டிசம்பர் 6ல் தமிழக சட்டமன்றம் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரிடம் ஒப்புதல் பெற்று மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தது. அதற்கு இன்று வரை பதிலும் இல்லை. பரிசீலனையும் இல்லை.

மூன்றரை ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு சட்டத்தடை ஏதுமில்லாத, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் தமிழக அரசு என அனைத்துப் பிரிவும் ஏற்றுக் கொண்ட ஒரு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி இருக்க வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதே வெட்கப்பட வேண்டிய விட‌யம்.

இப்படிப்பட்ட தாமதங்களைத்தான் குற்றத்தாமதம் என்பார்கள். ஆக வழக்கறிஞர்களின் போராட்டம் உண்மையில் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.

3.உடனடித்தீர்வு நடைமுறைச் சாத்தியமா?

சட்ட மேலவைக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய 1 மாதத்தில் இதே வழிமுறையில் சென்று சட்ட மேலவை அமைத்த முதல்வர் கருணாநிதி நினைத்தால் மத்திய அரசில் செய்துகாட்ட முடியாத கைங்கர்யம் ஏதாவது உள்ளதா?

அமைச்சரவை சொன்னால் குடியரசுத்தலைவர் கையெழுத்து போட்டு விடுவார். தமிழ் வழக்கு மொழி ஆகிவிடும். ஏற்கனவே மத்திய அமைச்சரவை வரை சென்றுவிட்ட நமது கோரிக்கையை நிறைவேற்ற சினிமா பாணியில் ஒரு நாள் முதல்வர் போதாதா?

4.இப்போராட்டத்திற்கு அரசியல் ஆதரவு உண்டா? 

 உயர்நீதி மன்றத்தில் தமிழை ஆட்சி மொழி ஆக்குவதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியபோது அனைத்துக்கட்சிகளும் ஏகமனதாக ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றின.

மேலும் தற்போதைய பட்டினிப்போராட்டம் தொடஙகப்பட்ட பிறகு அறிக்கை விட்டு ஆதரித்த தலைவர்களின் பட்டியல் இதோ.

1.முதல்வர் கருணாநிதி அவர்கள்

2.திரு.ஜெயலலிதா அவர்கள்

3.திரு. வரதராஜன் அவர்கள் சி.பி.எம்

3.திரு. வைகோ அவர்கள்

4.திரு.ராமதாஸ் அவர்கள்

5.திரு.தா.பாண்டியன் அவர்கள் சி.பி.ஜ

நேரில் வந்து ஆதரித்த தலைவர்கள்:

1.மரு.சேதுராமன் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

2.தோழர் நல்லகண்ணு அவர்கள்

3.திரு.சுதர்சனநாச்சியப்பன் அவர்கள்

4.திரு.சீமான் அவர்கள்

5.திரு.ஓ.பன்னீர் செல்வம் முன்னாள் முதல்வர்

6.திரு.முருகன் ஜீ அவர்கள் பாரதீய பார்வர்ட் பிளாக்

7.திரு.அர்ஜீன் சம்பத் அவர்கள் இந்து மக்கள் கட்சி

8.திரு.நடராஜன் (சசிகலா) அவர்கள்

9.திரு.தொல்.திருமாவளவன் அவர்கள்

வழக்கறிஞர்களுடனான அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஆதரித்த தலைவர்கள்

1.திரு.அழகிரி அவர்கள்

2.திரு.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் (இவர் பேச்சுவார்த்தைக்கு வந்ததாக சொல்லிக்கொள்ளவில்லை.)

அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

அண்ணன் அழகிரி: இது நம்ம கோரிக்கை. இதை 15 நாளில் நிறைவேற்றுகிறேன். என்னை நம்பி போராட்டத்தை வாபஸ் வாங்குங்கள். நிறைவேற்றித் தருகிறேன். 

வழக்கறிஞர்கள்: நீங்கள் இதை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட சட்ட அமைச்சரையோ, அமைச்சவையையோ வாக்குறுதி அளித்து அறிக்கை விடச் சொல்லுங்கள். வாபஸ் வாங்கி விடுகிறோம்.

அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

திரு.சுதர்சன நாச்சியப்பன்: உங்களின் கோரிக்கை நியாயமானது. ஆனால் இதற்கு சட்ட திருத்தம் தேவைப்படுமே?

வழக்கறிஞர்கள்: இந்திய அரசியல் சட்டத்தையும், மற்ற ஆதாரங்களையும் காண்பித்து சட்டதிருத்தம் தேவையில்லை என்பதைப் புரிய வைத்தனர்.

திரு.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள்: சரிதான். சட்டப்பூர்வ தடையேதுமில்லை. நான் சட்ட அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்கிறேன்.

இனி நமக்கு நாமே பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்

1.செம்மொழி மாநாட்டுக்கு எதிராக நடக்கும் பட்டினிப்போராட்டமா இது?

2. தி.மு.க அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியா இது?

3.செம்மொழி மாநாட்டுக்கு வருகை தரும் குடியரசுத்தலைவரிடம் ஒப்புதல் வாங்க முடியாதா?

4.மதுரையில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் மீது வழக்கு போட்டதும் அவர்களை கண்ணியக்குறைவாக நடத்தியதையும் எந்த விதத்தில் நியாயம்?

5.போராடிய வழக்கறிஞர்களுடன் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தாமல் இழிவுபடுத்தியதும் ஏதோ குற்றவாளிகளைப் போல் நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்ததும் என்ன நியாயம்? தமிழை உயிரினும் மேலாக நேசித்தது தான் அவர்கள் செய்த குற்றமா?

இனி யோசிப்பதற்கு சில கேள்விகள்

1.இந்திய அரசு இதுவரை ஆங்கிலம், இந்தியைத் தவிர எந்த மொழியையும் உயர்நீதிமன்ற மொழியாக அறிவிக்க மறுப்பதேன்?

2.தமிழக சட்டமன்றமும் அனைத்துக்கட்சிகளும் ஆதரித்து நிறைவேற்றிய தீர்மானத்தை குப்பைக் கூடையில் போடுவது ஆறரைக் கோடி தமிழர்களையும் இழிவுபடுத்தும் செயலில்லையா?

3.இதை அனுமதித்தால் இந்தியாவின் ஒவ்வொரு மாநில மக்களும் தங்கள் மொழியை நீதிமன்ற ஆட்சி மொழியாக ஆக்கக் கோரிக்கை வைப்பார்கள் என்று இந்திய அரசு அஞ்சுவதால் தான் தமிழ் போன்ற மாநில மொழிகளை நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிக்க மறுக்கிறதா?

4.அப்படி ஒவ்வொரு மாநில மக்களும் கோரிக்கை வைத்தால் என்ன தவறு?

5.பிறகு இப்படியே ஒவ்வொரு கோரிக்கையாக வளர்ந்து அது மாநில சுயாட்சி வேண்டும் என்ற கோரிக்கையாக வளர்ந்து விடும் என்று அஞ்சுகிறதா?

6.அப்படி மாநில சுயாட்சி கோரிக்கையாக வளர்ந்தால் அதில் என்ன தவறு?

7.இதிலிருந்து மத்திய அரசு மாநில உரிமைகளை நசுக்குகிறது என்று நாம் முடிவுக்கு வரலாமா?

யோசிப்போம்....

பின்வரும் தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞரின் சொற்களைப் படிப்போம்

 "மத்தியில் உண்மையான கூட்டாட்சி விள‌ங்கிட வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சி தன்மை பெற்று விளங்கிட வேண்டும் என்பதுதான் பொருத்தமானதாகும். மண்டபத்தின் மேற்பகுதியில் பளு அனைத்தையும் வைத்துவிட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தை தாங்குவதற்காக அமைப்பது என்பது கேலிக்குரிய ஒன்று. இன்றுள்ள மத்திய அமைப்பும் மாநில அமைப்பும் இந்த நிலையில் தான் உருவாக்கப்பட்டுள்ளன."

. "இந்திய சுதந்திரத்தையொட்டி உருவான அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இயங்கிய மத்திய மாநில அரசுகள், எதிர்பார்த்த மேன்மையை நாட்டு மக்களுக்கு அளிக்க இயலவில்லை என்பதை பல ஆண்டுகால அனுபவம் நமக்குப் புரிய வைக்கிறது. ஆகவேதான் மத்திய மாநில உறவுகளை மீண்டும் ஆராய்ந்து மாநிலங்களை, மத்திய அரசின் முதலாளித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக, அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. மக்களிடம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மாநில அரசுகள், அந்த மக்களுக்கு நன்மைகளைப் பெருக்கிட சுயாட்சி உரிமையைப் பெற்றாக வேண்டும்.

 அதிகாரமற்ற சூழ்நிலைக் கைதியாக மாநில முதலமைச்சர்கள் இருப்பதை எடுத்துக்கூறிய அண்ணா அவர்கள், மாநிலங்கள் உரிமைக்கொடி உயர்த்த மக்களைத் தயார்படுத்தவும் , ஒரு நேரம் வரும்போது உறுதியுடன் நின்று போராடவும் தயாராக இருக்க வேண்டுமென்று தனது இறுதிக்கட்டுரையில் குறிப்பிட்டார்.

 அந்த எண்ணத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள எழுச்சி வடிவம்தான் கழகம் பிரகடனம் செய்துள்ள மாநில சுயாட்சிக் கொள்கையாகும். இந்த நூல் வெளிவரும் நேரத்தில், டெல்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், மாநில சுயாட்சிக்கு இணங்கமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 இதே போன்ற திடமான மறுப்பைத்தான் சேக் அப்துல்லாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மறுபபு வழங்கிய அதே மத்திய அரசு இன்று அப்துல்லாவை அழைத்துப் பேசி, காஷ்மீர் சிம்மாசனத்தில் உட்காரவைத்து, தன் பிடிவாதப் போக்கிலிருந்து கீழே இறங்கி வந்துள்ளது. ஜனநாயக முறையில் இந்தக்கோரிக்கை வெற்றி பெற வேண்டும் என்பதே நமது கருத்து. தியாகத்தின் வாயிலாகத்தான் இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமென்ற நிலை பிறக்குமானால் அதற்கும் நாம் தயாராகத்தான் இருக்க வேண்டும்.இருக்கிறோம்.’’

- முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் 5/3/1975 (மலர்க மாநில சுயாட்சி என்ற நூலுக்கான அணிந்துரையில்)

குறிப்பு, இதில் தலைவர்களின் பெயர்கள் அவர்கள் பார்த்துச் சென்ற கால வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன

- தங்கப் பாண்டியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It