மனித வாழ்வியலில் மொழி என்பது ஒரு பயன்பாட்டுக் கருவியாக உள்ளது. அது காலந்தோறும் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. அந்த நீரோட்டத்தில் தான் இன்றைய அறிவியல் - தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப மொழியும் அதற்கான சொற்களையும் பொருளையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. தொல்காப்பியம் குறிப்பிடுவது போல, எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவாகவே’ உள்ளது.

கால மாற்றத்திற்கு ஏற்ப முன்பு வழங்கிய சொல் தற்போதைய சூழலில் வேறு பொருளை வழங்கி நிற்பதைக் காண முடிகிறது. அதாவது, இலக்கிய வழக்கு ஒன்றாகவும் மக்கள் வழக்கு (பேச்சு வழக்கு) ஒன்றாகவும் இருப்பதைக் காணலாம். அந்த வகையில், தமிழ் நிலப்பகுதியில் குறிப்பாக வட மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கண, இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ள ‘ஓம்பல்’ என்னும் சொல்லானது இன்று வெறொரு பொருளில் வழங்கப்பட்டு வருகின்றது. அதுகுறித்த ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

ஓம்பல்

தமிழில் வழங்கப்பட்டு வரும் ஓம்பல் என்ற சொல்லானது பழந்தமிழ் இலக்கண – இலக்கியங்களில் ‘காத்தல்’, ‘பாதுகாத்தல்’ என்ற பொருளில் வருகின்றது. ஆனால், இன்றைய சூழலில் அது ‘தூற்றுதல்’, ‘பொறாமை கொள்ளுதல்’ என்கிற எதிர்நிலைப்பட்ட பொருளைக் கொண்டு அமைகிறது. மனித மனங்களின் மாறுதல்களின் நிலையிலே சொற்களும் தங்களுக்கான பொருளினை மாற்றி அமைத்துக் கொள்கின்றன என்பதனை இச்சொல்லின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

ஒம்பல் – இலக்கண வழக்கு

தமிழ் இலக்கணத்தில் ஓம்பல் என்கிற சொல் பாதுகாத்தல் என்ற நிலையிலேயே வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனைத் தொல்காப்பியத்தில் காணலாம். அது பின்வருமாறு,

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் - (சொல். கிளவி:13/1)

ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும் - (பொருள். புறத்:2/2)

உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின் - (பொருள். பொருளி:45/1)

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் - (பொருள். கற்:11/3)

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

என்கிற மூன்று இடங்களில் நேரடியாக ஒம்பல் என்ற சொல்லாகவே இடம்பெற்றுள்ளது. அதாவது, ‘வினாவும் விடையும் வழுவின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்ற கருத்தினைக் கூறுகின்றது. ‘வேற்று நாட்டிலிருந்து கவரப்பட்ட பசுக்களை மீளாமல் காத்தல்’ வேண்டும் என்ற பொருளிலும் ‘தோழிக்குரிய மரபான வழுக் காத்தல்’ என்கிற தன்மையிலும் இந்நூற்பா எடுத்துக் காட்டுகிறது. அதே போன்று, கற்பியல் நிலையில் தலைவிக்குரிய செயற்பாடாக, பண்பாக தம் இல்லத்திற்கு வருகை புரிந்தோருக்கு விருந்தளித்தலும் உறவினர்களைப் பாதுகாத்தலும் அவளுக்குரிய செயலாகக் கூறப்பட்டடுள்ளது. ஆக, இலக்கண நிலையிலும் ஒம்பல் என்கிற சொல் காத்தல், பாதுகாத்தல் என்கிற பொருளிலேயே வருகின்றது.

ஒம்பல் – இலக்கிய வழக்கு: சங்க இலக்கியம்

தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைச் சுமந்து நிற்கும் இலக்கியக் களமாக விளங்குவது சங்க இலக்கியமாகும். இந்த நூல்களிலும் மேற்கண்ட ஓம்பல் என்கிற சொல் சில இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றினைப் பின்வருமாறு காணலாம்.

தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும்

வண்டுகடிந்து ஓம்பல் தேற்றாய் அணிகொள. - (அகம் 257/9)

‘தேன் பொருந்திய கூந்தலில் குறியனவாய் பலவாக மொய்க்கும் வண்டுகளைக் கடிந்து பாதுகாத்தலையும் அறியாய்’ என்று தலைவன் கூறுவதாக அமைந்துள்ளது. அதாவது, தன் தலையில் சூடியிருக்கும் பூக்களில் உள்ள ஈக்களை ஒட்டி உன்னை பாதுகாத்துக் கொள்ள தெரியாதவளாய் இருக்கின்றாய் என்று தலைவன் கூறுகின்றான்.

புரைசால் மைந்த நீ ஓம்பல் மாறே - பதி 34/12

‘படையழிவு உண்டாகாவாறு நீ நின் தானையை நன்கு பாதுகாத்தலால்; உன்னுடைய வெற்றிகளும் பொருளும் படையும் புகழும் புகழமைந்தன’ என்று கூறப்படுகிறது. இவ்வாறு சங்க இலக்கியத்துள் இரண்டு இடங்களுள் ஒம்பல் என்ற சொல் பாதுகாத்தல் என்ற பொருளில் வருகின்றது.

ஒம்பல் – இலக்கிய வழக்கு: அற இலக்கியம்

தமிழரின் அறநெறிகளுக்குச் சான்றாக அமைந்து இலக்கிய மரபு அற இலக்கியங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் ஓம்பல் என்கின்ற சொல் முதன்மை நிலையில் அமைந்துள்ளதைப் பார்க்கலாம். முதலாவதாக திருக்குறள் ஒம்பல் என்கிற சொல்லானது ஏழு இடங்களில் பயன்பட்டுள்ளது. இவ்விடங்களில் அனைத்தும் பாதுகாத்தல் என்ற பொருளிலேயே வருகிறது.

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - (குறள்: 5 3/2)

உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா - (குறள்: 9 9/1)

கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் - (குறள்: 39 10/1)

வினைக்கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை - (குறள்: 62 2/1)

காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு - (குறள்: 65 2/2)

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ - (குறள்: 82 10/1)

ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர் - (குறள்: 116 5/1)

இவ்வாறு திருக்குறளில் பயின்று வருவதைக் காணலாம். அதேபோன்று, இன்னா நாற்பது, திரிகடுகம், ஏலாதி என்ற நூல்களிலும் ஓம்பல் என்கிற சொல்லானது பாதுகாத்தல், காத்தல் என்ற பொருளிலே அமைந்துள்ளது.

சிறைஇல் கரும்பினை காத்து ஓம்பல் இன்னா - (இன்னா. 40:5/1)

குடி ஓம்பல் வல்லான் அரசன் வடு இன்றி - (திரி: 13/2)

நல் விருந்து ஓம்பலின் நட்டாளாம் வைகலும் - (திரி: 64/1)

குடி ஓம்பல் வன்கண்மை நூல் வன்மை கூடம் - (ஏலாதி: 17/1)

குடிகளை (குடும்பத்தினரை) பாதுகாத்தல் என்கிற பொருளில் இந்த ஓம்பல் சொல் மேற்கண்ட நூல்களில் கையாளப்பட்டுள்ளதை இதன்வழி அறிந்துகொள்ள முடிகிறது. ஆக, அற இலக்கியங்களில் பதினெரு இடங்களில் ஒம்பல் என்ற சொல் பயன்பட்டுள்ளது.

ஒம்பல் – இலக்கிய வழக்கு: காப்பிய இலக்கியம்

தமிழின் காப்பிய மரபிலும் இந்த ஓம்பல் என்ற சொல்லானது பயன்பட்டுள்ளது. ஓம்ப, ஓம்பலும் என்ற சொல்லாடலில் சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களில் வந்துள்ளது. அவை பாதுகாத்தல், காத்தல் என்ற பொருளையே உணர்த்தி நிற்கின்றது.

ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப

வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த – (சிலம்பு, வஞ்சி: 29/97,98)

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் - (சிலம்பு, மது: 16/71,72)

அதேபோன்று மணிமேகலையிலும் ஓம்பல் என்ற சொல் ஓரிடத்திலும் சீவக சிந்தாமணியில் இரண்டு இடங்களிலும் வளையாபதியில் ஓரிடத்திலும் ஓம்பல் என்ற சொல் பாதுகாத்தல் என்ற பொருளையே குறிக்கிறது. அவை பின்வருமாறு,

வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்

மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் - (மணி: 14/23,24)

நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான் - (சிந்தா: 1 211/4)

ஒளிறு தேர் ஞானம் பாய்மா இன் உயிர் ஓம்பல் ஓடை - (சிந்தா: 13 3074/1)

பொருளை பொருளா பொதிந்து ஓம்பல் செல்லாது - (வளையா: 20/1)

இவ்வாறு நான்கு காப்பியங்களில் கையாளப்பட்டுள்ளது. அவற்றோடு குண்டலகேசி என்னும் காப்பியத்தில் இச்சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்பது கவனத்திற்குரியது.

கம்பராமாயணத்தில் இரண்டு இடங்களிலும் ஓம்பினேன் என்ற சொல் காத்தல் என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது.

இங்கு நின் அருளினால் இனிதின் ஓம்பினேன் - (கம்ப. பால:5 2/4)

உறு பகை ஒடுக்கிஇ உலகை ஓம்பினேன்

பிறிது ஒருகுறை இலைஎன் பின்வையகம் - (கம்ப. பால:5 3/2,3)

பெருங்கதை என்னும் நூலிலும் இச்சொல்லானது ஒரு இடத்தில் வந்து சிறப்பு செய்கின்றது. அவையும் காத்தல் என்ற பொருளையே பெற்று நிற்கிறது. அது,

உருவ கோலமொடு ஓம்பல் செல்லாது – (பெருங். உஞ்ஞை:40/341)

தமிழ்க் கிறித்தவ இலக்கியமான தேம்பாவணி என்னும் காப்பிய நூலில் ஓம்பல் என்ற சொல் நான்கு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவையும் பாதுகாத்தல் என்ற பொருளையே பெற்று சிறக்கிறது.

தளர்ந்த தன் குலத்தை ஓம்ப தற்பரன் பணிப்ப அங்கண் - (தேம்பா: 21 12/2)

சேய் வினை புரிவரை சேர்த்தி ஓம்ப ஓர் - (தேம்பா: 25 54/1)

கான் உறை உலகில் நாம் கொள் கசடு அற வரம் தந்து ஓம்ப

மான் உறை வளம் இல்லாராய் வணக்கு உரி தேவர் அல்லார் - (தேம்பா:28 65/3,4)

இனிய கூறலும் எமர் பிறர் இன்றி ஓம்பலும் உள் - (தேம்பா: 27 27/2)

குலத்தைக் காக்க, வரம் தந்து காக்க, பிறறின்றி பாதுகாத்தலும் என்ற பொருள்களையே உணர்த்துகிறது.

இஸ்லாமிய இலக்கியமான சீறாப்புராணத்திலும் நான்கு இடங்களில் ஒம்பதல் என்ற சொல் காத்தல் என்ற பொருளில் வந்துள்ளது. அவை,

ஒருத்தரும் தீண்டா வண்ணம் உயிர் என ஓம்பி ஓர்பால் - (சீறா: 3102/3)

தடம் பயில் நகர சுற்றினும் ஓம்பி இருந்தனர் தனியவன் அருளால் – (சீறா: 4456/4)

புறத்தினில் காவல் ஓம்பும் புண்ணியர் திருமுன் வந்தார் - (சீறா: 2769/4)

நீக்கிய வெண்குடை நீழல் ஓம்புவோர்

வீக்கிய கழல் அடி வேந்தர் பொன் முடி – (சீறா: 171/2,3)

உயிர் என காத்து, பாதுகாத்து இருந்தனர். பாதுகாப்பு, காத்தலில் என்ற பொருளையே மையமாகக் கொண்டு இயங்குகிறது இச்சொல்.

ஒம்பல் – இலக்கிய வழக்கு: பக்தி இலக்கியம்

தமிழ் பக்தி இலக்கியப் பரப்பு என்பது சமய போதனை மட்டுமின்றி பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. அதேபோன்று, மக்கள் வழக்குச் சொற்களையும் ஏரளமாகக் கொண்டுள்ளது. தம் கருத்தியலை பாமர மக்களிடமும் கொண்டு சேர்க்க அவர்களுடைய பயன்பாட்டு மொழிச் சொற்களையும் இவ்விலக்கியம் படைத்தோர் கைகொண்டனர் என்பது பக்தி இலக்கியப் பாடல்களே சான்றாகத் திகழ்கின்றது. அந்தவகையில், ஓம்பல் என்ற சொல்லும் வழக்கில் பயன்பட்டுள்ளதைப் பின்வருமாறும் பாடலடிகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இரண்டு இடங்களிலும் திருக்கோவையாரில் இரண்டு இடங்களிலும் தேவாரத்தில் ஓரிடத்திலும் இச்சொல்லானது பயின்று வந்துள்ளது.

ஊன்நேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் - (நாலாயி:1566/1)

ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின் - (நாலாயி: 2239/2)

கரும்தினை ஓம்ப கடவுள் பராவி நமர் கலிப்ப - (திருக்கோ: 279/1)

மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய - (திருக்கோ: 99/3)

ஓம்பல் மூது எருது ஏறும் ஒருவனார் - (தேவா. அப்: 1323/2)

இங்கும் பாதுகாத்தல் என்ற பொருளையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

மக்கள் வழக்கு – பேச்சு வழக்கில் ஓம்பல்

மேற்கண்ட சான்றுகளானது தமிழ் இலக்கண – இலக்கியப் பரப்பில் ஓம்பல் என்கிற சொல்லானது எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்தது. இனி, மக்களின் பேச்சு வழக்கில் இச்சொல் எவ்வாறு, எப்படியான சூழலில் வெளிப்பட்டு நிற்கிறது என்பதனைக் காணலாம்.

ஓம்பல் என்ற சொல் மக்கள் வழக்கில் பெரும்பாலும் வசையாகவும் குடியைத் தூற்றலாகவும் சண்டை – சச்சரவு நேரங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது,

ஓம்பல் வுட்டே எங் குடும்பத்த ஒன்னுமில்லாம ஆக்கிட்டாங்க’ - தூற்றல்

‘எங் புள்ளைங்க வளரத பார்த்து ஒம்பல் வுட்டானுங்க… ஒன்னுமில்லாம போச்சுங்க’

‘ஊரு ஓம்பலே பெரிய கண்ணு’

‘ஏண்டி எங்கள பாத்து (எங் குடும்பத்த பாத்து) ஓம்பல் அடிச்சுக்கிறீங்க’

‘ஊரு ஒம்பலு வுட்டே எங் வூடு வெறும் வூடா போச்சு’

இப்படியாக பல்வேறு நிலைகளில் ஓம்பல் என்கிற சொல் ‘பொறாமைக் கொள்ளுதல்’ என்கிற பொருளில் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், பழந்தமிழ் இலக்கண – இலக்கியத்தில் பாதுகாத்தல் என்ற சொல்லாக பயன்பட்டு இன்று இழிபொருட்பேறாக வழங்குகிறது என்பது இச்சொல் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றமாக அமைகிறது.

நிறைவாக

மனிதன் மொழியைக் கருத்துப் பரிமாற்றக் கருவியாக பயன்படுத்தினான். என்றாலும் அச்சொற்களின் பொருள்கள் காலந்தோறும் மாறுபட்டுக் கொண்டே வந்துள்ளதைக் காண முடிகிறது. அந்தவகையில், மேற்சொல்லப்பட்ட ஓம்பல் என்ற சொல் காத்தல், பாதுகாத்தல் என்ற நிலையிலிருந்து இன்று தூற்றுதல், பொறாமைக் கொள்ளுதல் என்ற நிலைக்கு வந்துள்ளது. நாளை எந்தப் பொருளில் வேண்டுமானாலும் வழங்கப்படலாம் என்பது தான் மொழியின் நெகிழ்வுத் தன்மையாக உள்ளது. அது அனைத்து மொழிகளுக்கும் உரியதாகவே அமைய வேண்டு. ஏனென்றால் ஒரு மொழியானது காலந்தோறு தன்னை தகவமைத்துக் கொள்ளுதல் என்பது புத்துயிர்ப்பாக வைத்துக் கொள்ளுதல் என்பதும் அவசியத் தேவையாக உள்ளது. அந்த வகையில் இச்சொல் காலத்தின் ஓட்டத்தில் நகர்ந்துள்ளது என்பதனைப் புரிந்து கொள்ளுதல் நலம்.

(நன்றி: முனைவர் ப. பாண்டியராஜா – தமிழ் இலக்கியத் தொடரடைவு, அமெரிக்கன் கல்லூரி – மதுரை.)

முனைவர் ஜெ. மதிவேந்தன், கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி, செய்யாறு- 604 407

Pin It