காலை புலர்ந்தும் அமைதியாகக் கிடக்கிறது ஆறண்டால் நகர். நோர்வேயின் தெற்கே அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. பெருந்தொகை பணத்தில் அங்கே அழகாக அமைக்கப்பட்டிருந்தது ஒரு சிறைச்சாலை. எமக்குச் சிறைச்சாலை என்றதும் நினைவுக்கு வருவது சித்திரவதைகூடங்கள் தான். பாதுகாப்பு என்பது இல்லாதபோது எம்நாடே ஒரு சித்திரவதை கூடமாகத்தானே இருக்கிறது. தெருவில் வைத்து ஒரு இயக்கம் யாரையும் அடிக்கும், சித்திரவதை செய்யும், சுட்டுத்தெருவில் வீசியெறியும். துப்பாக்கியும் குழுவுமிருந்தால் எதுவும் செய்யலாம் என்றாகி விட்டது எம்நாட்டில். நாய் கூடக் குரைத்துத் தன் எதிர்ப்பைக் காட்டும். என்ஈழத் தமிழ்மக்களுக்கு இந்த உரிமைகூட இல்லை.

Norway prisonஇங்கே பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், தற்காலிகமாகக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள், விசாரணையின் நிமித்தம் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் என்று பல வகைப்படுவர்.

இன்று 22.10.2007 மதியம், சிறையில் எங்கோ தீப்பற்றி விட்டது. பிடித்த தீ அதி வேகமாகப் பரவத்தொடங்கியது. எப்பொருட்கள் அழிந்தாலும், எரிந்தாலும், தீ எதனைக் காவுகொண்டாலும் ஒர் உயிர் கூட இழக்கப்படக்கூடாது என்பதில் நோர்வேயும், நோர்வேயிய மக்களும் உறுதியாக உள்ளனர். இதற்கு ஏற்றால் போல் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் தம்மாயுதங்களை மூன்றாமுலக நாடுகளுக்கு அனுப்பி தம் ஆயுதங்களை பரீட்சிப்பார்கள் அன்றேல் பழைய கழிவுகளைக் கொட்டும் குப்பைத்தொட்டியாகப் பாவிப்பார்கள்.

சிறையெங்கும் அல்லோலகல்லோலம். கைதிகள் எரிந்துபோய் விடக்கூடாது என்பதால் எல்லாச் சிறைக்கதவுகளும் திறந்து விடப்பட்டன. எல்லாக் கைதிகளும் வெளியே ஓடினார்கள். யார் யார் தப்பிக்கப் போகிறார்களோ யார் அறிவார்? பின்பென்ன பொலிஸ்வேட்டை, பாதுகாப்பு எச்சரிக்கை என்று பல பல நடக்கும்.

அங்கே வேலை செய்பவர்கள் தீ பரவாதிருக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்து கொண்டிருந்தார்கள். தீயணைக்கும் படைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைக்கும்படை வருவதற்கு முன்பே தீயணைக்கும் சிறுசிலிண்டர்கள், தண்ணீர்வாளிகள், தண்ணீர் குழாய்கள் இவற்றின் உதவியுடன் கைதிகளும், அங்கு வேலை செய்பவர்களும், அதிகாரிகளுமாக வளர்ந்து படர்ந்து கொண்டிந்த தீயை அணைத்து விட்டார்கள்.

இங்கே ஆச்சரியம் என்னவென்றால் ஒரு கைதி கூட தப்பிக்காது தாமும் சேர்ந்து தீயை அணைத்ததுதான். இந்த மனங்களையும், நேர்மையையும் வெல்ல எந்தக் கடவுளால் எந்த மதத்தால் முடியும்? காரணம் என்ன என என்மனம் படபடக்கத் தொடங்கியது. விடை விடைபெற்றுக் கொண்டே இருந்தது. கேள்வி கேள்வியாகவே தொடர்கிறது.

தீயணைப்புப் படையுடன், ஊடகங்கள், நகரப்பாதுகாவலர்கள் (பொலிஸ்) என எல்லோரும் கூடினார்கள். அக்கைதிகளிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் சொன்ன பதில்கள் நெஞ்சம் நெகிழ்ந்து ஆச்சரியத்தில் அதிரச்செய்தது.

• மக்களின் பணத்தில் கட்டிய இந்த அழகிய சிறையை அழிந்துபோவதை நாம் விரும்பவில்லை. இதில் எமது வரிப்பணமும் இருக்கிறது. எமது பொருட்களை நாமே அழிக்கலாமா?

எத்தனை பேர் இப்படிச் சிந்திப்பார்கள். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

• நாங்கள் நாட்டையும், சட்டத்தை மதிக்கிறோம், தீர்ப்புக்கள் பிழையாகலாம் அதற்காக போராடுவோமே தவிர, மீண்டும் மீண்டும் குற்றம் செய்யமாட்டோம். தனிமனித உரிமைக்காகப் போராடும் வசதிகளை எம்நாடு செய்து தந்திருக்கிறது. நாம் திருந்திக் கொள்வதற்குத்தானே இங்கே வந்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் தப்புக்களையே செய்து கொண்டே போனால் நாம் திருந்துவதும், வெளியே போவது எப்போது? நமது தண்டனைக்காலம் முடிந்ததும். நாமும் மற்றவர்களைப் போல் குற்றமற்றவர்களே. நாம் இங்கே மனிதத்துவத்துடன் அன்பாகவே நடத்தப்படுகிறோம்.

• நாம் திருந்த வாய்ப்பளிக்கும் இந்தத் திருக்கோயிலை நாம் எப்படி அழிய விட முடியும்.

விடுதலைக்காகப் போராடுவது மட்டுமல்ல போராட்டம் தன் நாடு பொருளாதாரம், மனிதவுரிமை, சமவுரிமை, தேசியம், பெண்ணியம், நீதி என எல்லாத்துறைகளிலும் முன்னிற்கவும், தலைநிமிர்ந்து நிற்கவும் ஒவ்வொரு தனிமனிதனும் செய்யும் சிறு சிறு சேவையும் ஒரு விடுதலைப் போராட்டமே.

என்தாயகத்தின் நினைவு என் நெஞ்சை நெருட என் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுகிறேன். அங்கே நான் ஒர் இலங்கைத் தமிழன் என்ற என்னடையாளத்துடன் என்னை வாழவிட்டார்களா? குறைந்த பட்டசம் நாம் மனிதர்கள் மற்றவர்களும் மனிதர்கள் என்று எண்ண விட்டார்களா? நாம் இலங்கையர் என்று எண்ணுவதற்கு வழிவிட்டார்களா? நாம் தேசியமாய் ஒன்றாய் செயற்பட்டது எப்போ? இலங்கை என்ற தேசியம் கட்டி எழுப்பப்பட வேண்டுமானால் அதற்கு ஒரு யுகம் போதாது. தமிழர்களின் மனங்களை மட்டுமல்ல, சிங்களவர்களின் மனங்களையும் வென்று, அரசியல்வாதிகளால் ஆழமனதில் அழுத்திக் கீறிய இனவெறியை அழித்து, அழுக்கேறிய அள்ளூறாகி இதயப்பம்பகளைப் பிடுங்கி எறிந்து, முழுமையாக மாற்றி, மூளைகளில் மனிதத்தை ஊட்டி ஒரு அதியம் நடந்தாலன்றி ஐக்கிய இலங்கை என்றும் சாத்தியமாகுமா?

சட்டம் என்பது மக்களுக்காக மனிதருக்காக என்றில்லாது இனத்துக்காக மொழிக்காக மதத்துக்காக என்று ஆகும் போது தேசியம் குறுகி நடுத்தெருவுக்கு வந்து நடைப்பிணமாகிறது.

பேச்சுவார்த்தை என்பது போருக்கான தயார்படுத்தல், பயங்கரவாதம் என்பது ஒர் இனத்தை அழிப்பதற்குச் சொல்லும் சாட்டு. மனிதம் என்பது மதிக்கப்படாத வரை விடுதலை என்பதும், தீர்வுகள் என்பதும் என்றுமே சாத்தியமில்லாதது. தன்மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் என்பதில் சிங்களம் குறியாக இருக்கிறது. இலங்கைத் தமிழரை தாம் அழிப்போம். புலத்துத் தமிழன் புலத்தில் பொசுங்கிடுவான், வேறினமாய் மாறிடுவான். இதைத்தானே சிங்கள அரசும் விரும்புகிறது.

கம்பிகள் இல்லாச் திறந்தவெளிச் சிறையில் மதம், இனம், மார்க்கம், நிறம் எனும் கம்பிகளுக்குப் பின்னால் மனிதம் அடைக்கப்பட்டுக்கிடக்கிறது. மீட்பரைத் தேடுகிறோம் மனங்களைக்காணவில்லை. மீட்பர் என நம்பியவர்கள் எல்லோரும் ஆயுதங்களைக்காட்டிக் காசு பறித்தவர்களும் ஆயுதம் வாங்கக் காசு பறித்தவர்களாயுமல்லவா இருக்கிறார்கள். உலகமெனும் கொலைக்களத்தில் மனிதத்துக்குத் தூக்குத்தண்டனை.

ஏக்கத்துடனும், வேதனையுடனும், அங்கலாய்பபுடனும் துருவத்துக் குயிலாய் உறைபனியில் விறையுறும் கண்களை இறுக மூடி என்தேசத்தை நினைத்தபடி என்னிதையத்தை ஆறண்டால் சிறைக்குள் எரியவிட்டேன். முடிந்தது என் குறுங்கதை. முடியுமா? என்தேசத்தின் தொடர்க(வ)தை?

இது ஒர் உண்மைச் சம்பவம் 

- நோர்வே நக்கீரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It