சந்திப்பு 1

Yogi Ram Surathkumarதொண்ணூறுகளின் பிற்பகுதி. ‘தமிழில் நவீனத்துவம்’ என்கிற பிரமிளின் புத்தகத்தின் முதல்பக்க புரட்டலிலேயே நின்று விடுகிறது மனது.

Dedicated to my impossible friend Yogiram surathkumar at Tiruvannamalai என்ற சமர்ப்பணப் பக்கத்தைக் கடக்க முடியாமல் போய் நின்ற இடம் சன்னதி தெருவில் இருந்த யோகிராம் சூரத்குமாரின் நாட்டு ஓடு வேய்ந்த வீட்டின் வாசல்.

பாதசாரியின் ‘காசி’ படித்து மனம் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த தருணமது. இரும்புக் கேட்டை தட்டுவதற்குத் தயங்கி (காசி கதையில், காசி அதே கேட்டை வேகமாகத் தட்டியதைச் சகிக்க முடியாமல், அவனை சந்திக்க விரும்பாமல் துரத்திவிடுவார் யோகிராம் சூரத்குமார்) தயங்கி நின்றேன். உள்ளே ‘‘0’’ வாட்ஸ் பல்ப்பின் மிகமங்கலான வெளிச்சத்தில் அடங்கும் உயிர்மாதிரி கிடந்தது தாழ்வாரம். தாறுமாறாக வீசப்பட்ட உலர்ந்த மாலைகள் பத்திருபது கண்ணில்பட்டது. அவ்வீட்டிற்குக் பத்தடிதூரக் கோயில்வளாகமும், தேரடி வீதிநெரிசலும் என்னைவிட்டு பெருந்தொலைவிற்கு அப்பால் போய் ஒரு பெரிய வனாந்தரம், அதன்நடுவில் சூரத்குமாரின் வீடு, அந்த இரும்பு கேட், நான், பிரமிளின்புத்தகம் இவை மட்டுமே நிறைந்த அமானுஷ்ய கணமது.

சப்தம் கலைந்து கதவுதிறந்து கையில் ஒரு விசிறியோடு, ஆஜானுபாகுவான உருவத்தில் முகமெங்கும் பொங்கும் புன்னகையோடு என்னைச் சமீபித்தார். அவர் மீதிருந்து எழுந்த சுகந்த மணமும் அவர் உடல் நிறமும் அத்தனை நெருக்கத்திலான அவர் இருப்பும் என்னைத் தடுமாற்றி நிலைப்படுத்தியது.

இந்தப் பிச்சைகாரனிடமிருந்து என்ன வேணும் உனக்கு?

எளிமையான, ஆனால் தெளிவான ஆங்கிலத்தில் என்னைப் பார்த்துக் கேட்டார். நான் அவரை ஏறிட்டுப் பார்த்தேன். அந்த கண்கள். நான் கண்டறியாத, வசீகரமான நீலநிறத்தில், பார்க்கும் யாரையும் நிலைத்து நிறுத்திவிடக் கூடிய கண்கள் அவை.

உங்களுக்குக் கவிஞர் பிரமிளைத் தெரியுமா?

உனக்கு?

ஆம், நான் அவர் கவிதைகளை வாசித்திருக்கிறேன். தற்போது இந்தப் புத்தகத்தை வாசிக்கிறேன். இதை உங்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார். அவர் ஏன் இதை உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்?

இது நீ பிரமிளைக் கேட்கவேண்டிய கேள்வி?

நீங்களும் கவிஞரா?

இல்லை நான் பிச்சைக்காரன்.

உரையாடல் அறுந்துவிட, நான் அமைதியாய் நின்றேன். அவர் என் கைகளைப் பற்றி

உன் பெயரென்ன?

பவா. செல்லதுரை

நான் உன்னை பவா என்றழைக்கலாம் இல்லையா?

தலையசைத்தேன்.

நீ திருவண்ணாமலையா?

ஆம்

எந்த ஏரியா?

சாரோன்.

ஓ... ... என் நண்பன் ஜோன்ஸ் அங்கிருந்தான் அவனைத் தெரியுமா?

என் ஞாபகத்தோடு துழாவினேன்.

அவன் ஒரு பெயிண்டர். சுவர்களில் கடவுள் மறுப்பு வாசகங்களாக எழுதித் தள்ளுவான். உன்னால் நினைவுபடுத்த முடிகிறதா?

நான் ஜோன்சை கண்டடைவதை என் முகத்திலிருந்து வாசித்தறிந்து,

சொல் பவா, ஜோன்ஸ்சை தெரியுமா?

தெரியும். அவர் இப்போது இல்லை. அவர் மறைந்து சில வருடங்களாகிறது. அவர் வாழ்ந்த வீடு குட்டிச்சுவராகிவிட்டது. அவர் பிள்ளைகள் இங்கிருந்து இடம் பெயர்ந்து விட்டார்கள்.

ஜோன்ஸ்.... இப்போதில்லையா?

இல்லை.

இருக்கிறான் பவா... இருக்கிறான்.

நான் இயல்பற்றிருந்தேன். மீண்டும் வீட்டுக்குள் போய் 0 வாட்ஸ் வெளிச்சத்தில் ஒரு Charminar பாக்கெட்டைத் தேடியெடுத்துப் பற்றவைத்து, கைகளைக் குவித்து (கஞ்சா பிடிப்பவர்களை அப்படிப் பார்த்திருக்கிறேன்) சிகரெட்டின் நுனிகங்கைப் பரவலாக்கி

நீயும் எழுதுவியா என்றார்.

எப்போதாவது

நீ பிரமிளைப் பார்த்திருக்கிறாயா?

இல்லை, அவர் அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதுவார். கடிதங்கள் மூலமாக நாங்கள் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு எழுதமாட்டார். ஒரு பிச்சைக்காரனுக்கு எழுத என்ன இருக்கு பவா...?

ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை அள்ளித் தந்ததோடு எங்கள் முதல் சந்திப்பு அடுத்த சந்திப்பிற்கான இடைவெளியைவிட்டது. 

- பவா செல்லத்துரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It