வள்ளுவர் எச்சமயத்தவர்? என்ற வாதம் தற்போது மீண்டும் விவாதப் பொருளாக ஏற்பட்டிருக்கிறது. உலகப் பொதுமறையாக மக்களால் போற்றப்படும் திருக்குறளைத் தந்த வள்ளுவர் இன்று அனைத்து மதத்தினராலும் தமக்குரியவராகவே அடையாளம் காண்பிக்கப்படுகிறார்.

thiruvalluvarதமிழறிஞர்கள் சிலர் வள்ளுவத்தை சமண நூலாக நிலைநாட்டுகின்றனர். திருக்குறள் கடவுள் வாழ்த்தின் முதல் குறளான 'அகரமுதல எழுத்தெல்லாம்' எனத் தொடங்கும் பாடலில் வரும் ஆதி, பகவன் முறையே சமண தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷப தேவரையும், கடையருமான மகாவீரரையும் குறிப்பதாகக் கருதுவர். பௌத்தர்களோ, திருவள்ளுவர் தமக்கே உரியவர் என்ற எதிர்வாதத்தை முன்வைக்கின்றனர். கடவுள் வாழ்த்தின் ஆறாவது பாடலில் குறிப்பிடப்பெறும் 'ஐந்தவித்தான்' என்னும் சொல்லானது ஐம்புலன்களை அடக்கி, உலக ஆசைகளை அறவே வெறுத்த புத்தரையே குறிப்பதாக நவிலுவர். திருக்குறளின் 6, 23, 25 ஆம் எண்ணுள்ள பாடல்கள் பௌத்தம் சார்ந்ததாக கருதப்படுகின்றன.

திருவள்ளுவர் சமணம், பௌத்தம் தவிர ஆசீவக சமயத்தவராலும் தமக்குரியவராக அடையாளம் காட்டப்படுகிறார். ஆசீவகத்தின் லோகாயுதக் கொள்கையை வலியுறுத்தும் குறட்பாக்களும் திருக்குறளில் காணப்படுகின்றன. புத்தரின் சமகாலத்தவரான மற்கலி கோசலரால் கி.மு.ஆறாம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப்பட்ட சமயக்கோட்பாடே ‘ஆசீவகம்’ ஆகும்.1 சங்கப்புலவரான பற்குடுக்கை நண்கணியார் (புறநானூற்றின் 94வது பாடலைப்பாடியவர்) ஆசீவகத்தை பின்பற்றியவராவார். பாலிமொழி இலக்கியங்களில் 'பக்குடக் காச்சாயனா' எனக் குறிக்கப்படுபவர் பற்குடுக்கை நண்கணியாரேயாவார். கணியர் வகுப்பைச் சேர்ந்தவராக தமிழ் இலக்கியங்களில் இவர் சுட்டப்படுகிறார். கணியர்கள் என்போர் தமிழகத்தில் தற்போதுள்ள வள்ளுவ இனமக்களேயாவர்.2

வள்ளுவரது காலம் குறித்து ஆராய்வோமேயானால் அவர் எச்சமயத்தவர், அவரது காலத்தில் பரவியிருந்த சமயங்கள் யாது? என்பதற்கு விடை எளிதில் கிடைக்கும். திருக்குறளில் காணப்படும் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் போன்றன சார்ந்த கருத்துக்கள், வடமொழி நூலான அர்த்தசாஸ்திரத்திலும் அதே பாகுபாட்டில் கையாளப்பட்டுள்ளன. திருக்குறளுக்கும், அர்த்தசாஸ்திரத்திற்கும் இடையே உள்ள கருத்தொற்றுமைகளை ஆராய வேண்டியது அவசியமாகும். திருக்குறளின் சீர்படுத்தப்பட்ட, முழுமைப்படுத்தப்பட்ட வடமொழி வடிவமாகவே 'அர்த்தசாஸ்திரம்' திகழ்கிறது. அர்த்தசாஸ்திரம் சந்திரகுப்தமௌரியனை அரியணையேற்றிய கௌடில்யரால் (சாணக்கியர்) கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் இயற்றப்பட்டது.3 அர்த்தசாஸ்திரம், திருக்குறள் இவற்றுள் காலத்தால் முந்தையது திருக்குறளேயாகும். தென்னகத்திலிருந்தே திருக்குறள் வடநாட்டிற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். அர்த்தசாஸ்திரத்தை இயற்றிய கௌடில்யரை 'தென்னாட்டுச் சோழியன்' என்று தொ.பொ.மீ கூறுவது ஆராயத்தக்கதாகும்.4

சங்க காலப் புலவரான மாமூலனார் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். இவரது அகப்பாடலில் (அகம்.251) ‘வம்ப மோரியர் திகிரி’ நெல்லைச்சீமை வரை வந்து மீண்டதாக குறிப்பிடுகிறார். மாமூலனார் மௌரியர் படையெடுப்பை தெரிவிப்பதால் சந்திரகுப்த மௌரியனின் சமகாலத்தவராக கருதப்படுகிறார்.5 எனவே திருக்குறளின் கால எல்லை கி.மு.நான்காம் நூற்றாண்டிற்கும் முந்தையதாகும்.

வள்ளுவர் வாழ்ந்த சங்ககால தமிழகத்தைப் பொறுத்த மட்டில் தனிச்சமயங்கள் எல்லாம் வழக்கிலில்லை. வாழும் மார்க்கங்களாக மட்டுமே மூத்தோர் வகுத்த கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு வந்தன. எனினும் திருக்குறளில் காணப்படும் சமயக் கருத்துகளுக்கும் சைவ, வைணவ சித்தாந்த கருத்துகட்கும் ஒற்றுமை இருப்பதை மறுக்கவியலாது.6 திருக்குறளின் கடவுள் வாழ்த்தின் முதல் குறளில் குறிப்பிடப்பெறும் ‘ஆதிபகவன்’ என்னும் சொல்லானது ஆதிசிவனையே குறிக்கும் என்பர். மேலும்,

‘மடியிலா மன்னவ னெய்து மடியளந்தார்
தாஅயது தெல்லா மொருங்கு' என்னும் குறளானது

திருமால் உலகளந்ததைக் குறிப்பிடுகின்றது. அதேபோல்,

'தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொள்
தாமரைக் கண்ணான் உலகு' என்னும் குறள் தாமரைக்கண்ணன் என்று திருமாலையே குறிக்கிறது.7

இந்திரனைப் பற்றியும், வானுலக தெய்வங்கள், தென்புலத்தார் தெய்வங்கள் பற்றியும் வேள்விகள் செய்வது குறித்தும் எண்ணற்ற பாடல்கள் திருக்குறளில் பாடப்பட்டுள்ளன.

உண்மை இவ்வாறிருக்க வள்ளுவர் கி.பி. முதல்-இரண்டாம் நூற்றாண்டுகளில் மயிலையில் வாழ்ந்தார், புனித தோமையருடன் நட்புறவு கொண்டிருந்தார் என்று கூறுவது உண்மை வரலாற்றை திரித்துக் கூறுவதாகும். கலை, பண்பாட்டில் உலகளாவிய வளர்ச்சி பெற்றிருந்த சங்க கால தமிழகத்தில் மயிலையில் நரமாமிசம் உண்ணும் முரட்டுக் கூட்டத்தார் இருந்தனரென்பது முற்றிலும் முரண்பட்ட தகவலேயாகும். வள்ளுவர் எம்மதத்தவராயினும் அவர் கூறிய கருத்துக்கள் வாழ்விற்கு வளம் சேர்ப்பவையேயாகும்.

தோற்றுவாயை ஆராயமல், பயனை மட்டும் எடுத்துக்கொண்டு வள்ளுவத்தின் பெருமையை வானளாவச் செய்வதே தமிழரின் பணியாகும். அதே வேளையில் வள்ளுவரின் மீது தனிப்பட்ட சமய அரிதாரம் பூசப்படும்போது அதனைக் களைவதும் உலகளாவிய தமிழரின் தலையாய கடமையாகிறது.

மேற்கோள் நூல்கள்

1. க.நெடுஞ்செழியன், ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், திருச்சி 2002, பக்.54.
2. மேற்படிநூல், பக்.61
3. மா.இராசமாணிக்கனார், திருவள்ளுவர் காலம் யாது? காரைக்குடி,1954, பக்.30
4. தொ.பொ.மீ, தமிழும் பிறபண்பாடும், சென்னை.1973 பக்.10
5. அ.மு. பரமசிவானந்தம் தமிழக வரலாறு, சென்னை, 1958, பக்.106.
6. காமாட்சி சீனிவாசன், குறள் கூறும் சமயம், மதுரை, 1979, பக்.217
7. பா.வீரமணி, வள்ளுவர் சமணரா? (கட்டுரை) செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு.76 பரல்.2, பக்.7.

- இல.கணபதி முருகன்
திராவிட வரலாற்று ஆய்வுக் கழக இயக்குநர்
உதவிப் பேராசிரியர்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி
திருத்தணி.

Pin It