மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.

Manmohan singh and Karunanidhiதாங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையை படித்து நொந்து நூலாகிப்போன பல தமிழர்களில் நானும் ஒருவன். இரகசியகாப்பு பிரமாணம் எல்லாம் எடுத்த ஒரு முதல்வரா இப்படி தன் நிலை மறந்து அறிக்கை வெளியிடுவது? இதை வேறுயாரும் பேசியிருந்தால் தற்போது நீங்கள் பிரபலப்படுத்திவரும் தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற வாய்ப்பூட்டுச் சட்டத்தில் அடைத்திருக்க வேண்டும்!

நீங்கள் முதல்வராக இருப்பதால் இதிலிருந்து தப்பிவிட்டீர்கள் என்று நான் சொல்லமாட்டேன். இந்தக் குற்றத்துக்காக நீங்கள் இப்போதும்கூட கைது செய்யப்படவேண்டியவர்தான்! அந்த நல்ல காரியத்தைச் செய்ய முதுகெலும்புள்ள யாரும் மத்தியிலோ மாநிலத்திலோ இல்லாததால் தப்பித்தீர்கள்; ஆனால் இந்த பகிரங்க அறிக்கைக்காக எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பது மட்டும் நிச்சயம்! நீங்கள் ஒன்றும் நிரந்தர முதல்வர் இல்லையே!

நாற்காலிகள் நகரும்போது நீங்கள் இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்! அப்படி என்ன சொல்லிவிட்டேன்? நான் உணர்ச்சி வயப்படாமல் எழுதி வெளியிட்ட அறிக்கைதானே, என்கிறீர்களா? "இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவில் இருக்கின்றவர்கள், இலங்கை நோக்கி ராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! அந்த நாட்டின் அதிபர் ராஜபட்சவை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?" என்று வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டியிருக்கிறீர்கள்.

யார் மீதோ கொட்டித்தீர்க்க வேண்டிய கோபத்திற்கு வல்லுவதக்கென்று இப்படிச் சொல்லி நீங்கள் வகிக்கும் பதவிக்கே இழுக்கு ஏற்படுத்திவிட்டீர்கள்! இதைவிடக் கொடுமையாகவும் கேலிக்கூத்தாகவும் அடுத்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

"கள்ளத் தோணிகளாக இருந்தாலும்... வேண்டாம் இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும்; அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும்." என்று இந்திய அரசின் இராணுவ அமைச்சர் போல.. ஆனால் அப்படிப்பட்ட இராணுவ அமைச்சரே சொல்லமுடியாததைச் சர்வ சாதாரணமாகச் சொல்லியிருக்கிறீர்கள்?!

பொறுப்பு வாய்ந்த ஒரு முதல்வர் இப்படி பொறுப்பற்றதனமாகச் சொல்லியதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றால் இந்திய இறையாண்மையை கேலிக்கூத்தாக்கிப் பேசிய உங்களுக்கு முதல்வர் பொறுப்பு வகிக்க தகுதியற்றவர் என்று அறிவிக்கக்கூடும்! “கோழைகளாகிய நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம்." என்று எகத்தாளம் வேறு!

முதல்வர் அவர்களே இன்றைக்கு இறையாண்மை...... இறையாண்மை என்று புதிதாக கண்டுபிடித்து அதை மீறியதாகச் சொல்லி, அறிவிக்கப்படாத "மிசா"வில் உள்ளே போட்டுக் கொண்டிருக்கிறீர்களே, தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற போர்வையில்!

அன்றைக்காவது காங்கிரசு அரசை விமரிசித்த குற்றத்துக்காக "மிசா"வில் பிடித்து உள்ளே போட்டார்கள்; ஆனால் காங்கிரசைத் திட்டிப் பேசியதற்கும், இராசீவ் காந்தியைப் பற்றிப் பேசியதற்கும், காங்கிரசு அரசுக்கு வேலை வைக்காமல் புதுவைக்குக்கூட அந்த வாய்ப்பு போய்விடாமல் இறையாண்மையை மீறியதாகக் காரணமும் சொல்லி நீங்களே கைது செய்திருக்கிறீர்களே? இது நியாயமா, முதல்வர் அவர்களே?

சரி. அவர்கள்தான் பொறுப்பில்லாதவர்கள், பேசிவிட்டார்கள்; நீங்கள் பொறுப்பானவர்; பொறுப்பான பதவியில் இருப்பவர்; நீங்கள் இப்படிப் பேசலாமா?

"இறையாண்மையை மீறுகிறார் என்று காரணம் காட்டி தமிழகத்தில் யாரும் கைது செய்யவில்லை. சொல்லப்பட்ட காரணங்களில் இறையாண்மைக்கு விரோதம் என்பதும் ஒன்றாக இருக்கலாம்" என்று அந்த அறிக்கையின் இறுதியில் சொல்லியிருக்கிறீர்கள்.

நல்ல தோணியில் கூட இல்லை; கள்ளத்தோணியில் செல்லலாம் என்று நீங்கள் சொல்லியது இறையாண்மைக்கு விரோதம் இல்லையா? நீங்கள் முதல்வராக இருப்பதால் மட்டுமே இறையாண்மைக்கு விரோதமாக எழுதி அறிக்கை விட்ட உங்களை என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள் முதல்வர் அவர்களே!?

"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அணியில் உள்ளவர்கள் இப்போது சமீப காலமாக, இலங்கையில் உள்ள முல்லைத் தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி குறித்தோ பேசுவதில்லை. அவர்களுடைய பிரச்னை எல்லாம், திருநெல்வேலி யாருக்கு? திருச்சி யாருக்கு? சிதம்பரம் யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? மாநிலங்களவைத் தொகுதியும் சேர்த்தா? சேர்க்காமலா? இவை பற்றித்தான் அல்லும் பகலும் ஆராய்ச்சி செய்து அவைகளைப் பெறவும், தரவும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்." என்று நக்கலும் நையாண்டியும் செய்திருக்கிறீர்களே முதல்வர் அவர்களே!?

அவர்களை விடுங்கள், முதல்வர் அவர்களே. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தங்கள் இல்லத்தரசியர்கள் வைக்கப்போகும் மதியக் குழம்புக்கு மசாலாவா அரைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இல்லை.... இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் மூலம் மன்மோகன் சிங்கிற்கு போரை நிறுத்தச் சொல்லி இறுதி வேண்டுகோளை உறுதியோடு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?

போரை நிறுத்தவோ, அதிகாரப் பகிர்வுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை; யுத்தத்தை நடத்தவே ஒத்தழைத்தது என்று இலங்கை நாடாளுமன்றத்திலேயே அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா சொன்னதைக் கேட்டு பதறிப்போய் பிரதமரையும் தலைவி சோனியா காந்தியையும் தொலைபேசியில், இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் என்ற முறையில், இந்தியா எந்த உதவியும் செய்யாதபோது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல குட்டை உடைத்துக்கொண்டிருப்பதை என்ன ஏது என்று கேட்டீர்களா? முதல்வர் அவர்களே?!

இல்லை...முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்புக் காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறதே, அது ஏன்? என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் சார்பில் பிரதமரை விளக்கம் கேட்டு மடல் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா, முதல்வர் அவர்களே?!

நீங்கள் அடிக்கும் வடிவேலு காமெடியை மிஞ்சிய கூத்துக்களை எல்லாம் தமிழக மக்கள் பொறுமையாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்!

நொடிக்கு நொடி தமிழன் அங்கே செத்து மடிகிறான் என்ற ஆவேசம் எல்லாம் உங்களிடமிருந்து மறைந்து பெட்டிப்பாம்பாய்..... அடங்கிப் போன கிழச் சிங்கமாய் மாறிய மர்மங்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தீர்ப்பளிக்கவிருக்கிறார்கள், முதல்வர் அவர்களே!

"நமக்கே நாற்பதும்" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!

அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!

அசாதாரணத் தமிழன், 

- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)