அண்மையில் நகரப் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பேருந்துக்குள் வழக்கம் போலவே காலை நேரக் கூட்ட நெரிசல். அந்த நெரிசலில் மூச்சுத் திணறுவதுபோல் திமிறிய ஒரு முதிய பயணி தன் மீது சாய்ந்திருந்த ஒரு பயணியைப் பார்த்து, “கொஞ்சம் தள்ளி நில்லுங்கய்யா” என்றார் பரிதாபமாக! உடனே அந்தப் பயணி, “மத்தவங்க மேல படாம சொகுசா போகணும்னா காரில் போக வேண்டியது தானே! மனசுல பெரிய கோடீஸ்வரன்னு நெனப்பு” என்றார் இளக்காரமாக.

ஒருவரின் இயலாமையைச் சுட்டிக்காட்டிக் கேலி பேசுவது, சிலருக்குக் குருதியில் கலந்த குணமாகவே மாறிவிட்டிருக்கிறது. “கூட்ட நெரிசலில் அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்பதுதான் அந்தப் பயணி சொல்ல வேண்டிய பதில். “வருந்துகிறேன். வேண்டுமென்று உங்கள் மீது நான் சாயவில்லை” என்றால் அது இன்னும் நாகரிகமான பதில்.

ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய முற்படும்போது, அங்கு வந்து சேருகிற இத்தகைய ஒப்பீட்டாளர்கள் அந்தக் காரியத்தில் சிகரத்தைத் தொட்ட யாரோ ஒருவரோடு ஒப்பிட்டு, “என்ன மனசுல....ன்னு நெனப்பா?” என்று தனது கேலியைத் தொடங்குகிறார்கள். ஏதேனும் செய்ய முனைகிற ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டிய தேவையென்ன?

இவர்கள் ஒப்பிட்டு மெச்சிக்கொள்கிற எல்லாச் சாதனையாளர்களும் எடுத்த எடுப்பிலேயே சிகரத்திற்குச் சென்று விட்டவர்களா? தனக்குத் தெரியாத ஒரு சாதனையாளரைச் சொல்லித் தனக்குத் தெரிந்த ஒருவரை ஏன் தாழ்த்த வேண்டும்? “ஆமாம் நீ என்ன பெரிய கபில்தேவா? புரூஸ்லீயா?” என்றெல்லாம் கேலியாகக் கேட்கிறார்கள் எனில், அத்துறைகளில் அவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா? அல்லது அவர்களைப் போல இன்னொருவர் உருவாகி வர முடியாதா? எதையாவது சாதிக்க முயல்கிறவரைக் கேலி பேசுவதைத் தவிர இத்தகைய ஒப்பீட்டாளர்கள் வேறு எதைச் சாதித்திருக்கிறார்கள்? தாமே முனைந்து செயலூக்கத்தோடு தமக்கு ஆர்வமான துறைகளில் புதிய புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள், இத்தகையோரைப் பொருட்படுத்துவதில்லை. எனினும் பலவீனமான தருணங்களில் அவர்களது செயல்பாடுகளில் இத்தகையவர்கள் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்தவே செய்கிறார்கள்.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இத்தகைய ஒப்பீட்டாளர்கள் உள்மனத்தில், பிறர் ஆக்கப்பூர்வமாகச் செய்ய முனையும் எதையும் விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். செயலிலும் வாழ்விலும் பத்தோடு பதினொன்றாக சராசரியாக வாழ்ந்துகொண்டு, தன் வட்டத்தில் இருப்பவர்களும் தன்னைப் போலவே இருக்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

கிராமத்தில் பல்வேறு வேலைகளில் ஈடுபாட்டோடு உழைத்துக் கொண்டிருந்தவர்களையும், “உடம்பு முழுக்க விளக்கெண்ணெயைத் தடவிக்கிட்டு விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும், விட்டுட்டு வாய்யா!” என்று சொல்லி அவர்களைச் சாராயக் கடைக்கும் சினிமாவுக்கும் அழைத்துக் கொண்டு போனவர்களையும் பார்த்திருக்கிறேன். ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கட்டமைத்துப் பறக்கவிட முயன்றபோது, ‘இவர்கள் கடவுளுக்கு எதிராக வானத்தில் பறக்க முயற்சி செய்கிறார்கள், இது நடக்குமா?’ என்றுகூட பத்திரிகையிலேயே எழுதினார்களாம்! இத்தகைய மனோபாவம் கொண்டவர்கள் எல்லாக் காலத்திலும் எல்லா மட்டங்களில் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள்; நாளையும் இருப்பார்கள். இத்தகையவர்களைப் புரிந்துகொண்டும், கடந்தும் வர வேண்டிய தெளிவும் உறுதியும் செயலூக்கம் நிறைந்தவர்களின் தேவையாக இருக்கிறது.

நண்பர் ஒருவர் திக்கித் திக்கிப் பேசும் (நற்ஹம்ம்ங்ழ்ண்ய்ஞ்) இயல்புடையவர். இன்று சென்னையில் ஒரு தொழிலதிபராக வளர்ந்திருக்கும் அவர் ஆரம்பக் காலத்தில் தான் தயாரித்த மெழுகுவர்த்திகளை கடைதோறும் ஏறி விற்க முற்பட்டபோது, “சரளமாகப் பேச முடியாத நீ, உன் மெழுகுவர்த்திகளை எப்படி விற்பனை செய்ய முடியும்?” என்கிற கேள்வியையும் அது தொடர்பான கேலிகளையும்தான் அதிகமாக எதிர்கொண்டார். “அய்யா! என் வாயையும், வார்த்தைகளையும் பார்க்காதீர்கள். என் கைகளால் செய்த இந்த மெழுகுவர்த்திகளைப் பாருங்கள்! அவை உங்களோடு சரளமாகப் பேசும்” என்று பல இடங்களில் பதில் சொல்லியிருக்கிறார் அவர்.

சமூகம் கேலி செய்யும் எனக் கருதி தமது ஆசைகளையும் திட்டங்களையும் தமக்குள்ளேயே புதைத்துக் கொள்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். துளிர்க்கும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதைவிட கேலி பேசி, குதர்க்க வாதம் செய்து அதைக் கிள்ளி எறிய முற்படும் கைகளை அடையாளம் கண்டு அலட்சியப்படுத்துவது அவசியமாக இருக்கிறது.

அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

அவர்களையும் கடந்துதான் உலகம் முன்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.


- ஜெயபாஸ்கரன் ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It