29.12.2008 நாளிட்ட தினமணியில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் பாராட்டிற்குரியது. மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஓடி ஒளிந்துகொண்ட அரங்கத்தில் நேரடியாக மக்களே களம் இறங்கி எதிர்கொண்ட பிரச்சினையைக்குறித்த ஒரு தலையங்கம் அது. ஓட்டுப்பொறுக்கும் அரசியல் களத்தில் சொந்த இலாபங்களுக்காக போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தலையங்கம் பொருட்படுத்தக்கூடிய ஒன்றாகத் தோன்றாமலிருக்கலாம். ஏழை எளிய மக்கள் தங்களுடைய பிரச்சினையை தாங்களே கையிலெடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் இந்த நாட்டில் நிலவும் இறுதி உண்மை.

“தட்டவேண்டிய இடத்திலே தட்டுவோம்; தங்கத்தை எடுப்போம்; விற்போம்; காசக்குவோம்; வரியைக்குறைப்போம்; வசதியைப் பெருக்குவோம்.”

“வெட்டவேண்டிய இடத்திலே வெட்டுவோம்; வெள்ளியை எடுப்போம்; விற்போம்; காசாக்குவோம்; வரியைக்குறைப்போம்; வசதியைப் பெருக்குவோம்.”

“இடிக்கவேண்டிய இடத்திலே இடிப்போம்; இரும்பை எடுப்போம்; விற்போம்; காசாக்குவோம்; வரியைக்குறைப்போம்; வசதியைப் பெருக்குவோம்.”

இப்படியெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, கழுத்து நரம்புகள் புடைக்க, தமிழகத்து பட்டிதொட்டிகளில் எல்லாம் ஆளுயர கீற்றுப்பந்தலில் அந்த ஒற்றைமைக்கை பிடித்துக்கொண்டு அர்த்தராத்திரிவரை பேசித்தீர்த்தார்கள். அந்த வரிசையில் இப்போது இரும்பை வெட்டியெடுக்கும் ஒரு முயற்சி முளைத்திருக்கிறது. அதற்கு எதிராக மக்கள் குரலும் எழுந்திருக்கிறது. மக்களின் குரலுக்கு துணைநிற்கும் அந்த தலையங்கத்தின் உள்ளடக்கம் இதுதான்:

திருவண்ணாமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கவுத்தி மலை, வேடியப்பன் மலை என்ற இரண்டு மலைகள் இருக்கின்றன. அந்த மலைகளில் 41 சதவீதம் இரும்புத்தாது இருக்கிறது. இந்த இரும்புக்கனிவளத்தை வெட்டியெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு இரும்புத்தாது கனிமக்கழகம், தொழில்வளர்ச்சிக்கழகம், ஜே.எஸ்.டபுள்யு ஸ்டீல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கைகோர்த்து களத்தில் இறங்கியுள்ளன. மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக மக்கள் கருத்துக்கேட்புக்கூட்டமும் நடத்தியுள்ளன. திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கேட்புக்கூட்டத்திற்கு சுற்றுப்புற மக்கள் சுமார் 800 பேர் வந்திருந்தனர். கவுத்திமலையில் இருந்தும், வேடியப்பன் மலையில் இருந்தும் 325 ஹெக்டேர் பரப்பில் இரும்புத்தாது வெட்டி எடுக்கவும், இரண்டு லட்சம் மரங்களை வெட்டவும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது.

இந்த மலைகளில் வெட்டப்படும் 2 லட்சம் மரங்களுக்கு ஈடாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இரு மடங்கு நிலம் வாங்கி 4 லட்சம் மரங்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூட்டத்தில் ஜே.எஸ்.டபுள்யு ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த அதிகாரிகளிடம் ஒரு கிராமத்துப்பெண்மணி கொதிப்புடன் கேட்ட கேள்வி:

“நீங்க அம்பாசமுத்திரத்தில மரம் நட்டா இங்க எனக்கு காத்தும் நெழலும் கெடைக்குமா?”

எவ்வளவு அர்த்தம் பொதிந்த கேள்வி அது? அவளால் வேறு நகரத்துக்கு நிலமோ, வீடோ வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விட முடியாது. தன்னுடைய பிள்ளைக்கு பெரிய படிப்பு கொடுத்து வெளியூரிலோ, வெளிமாநிலத்திலோ ‘செட்டில்’ ஆகிவிட முடியாது. அவள் அந்த மண்ணில் தோன்றிய செடி, கொடி, மரம், விலங்குகள் போல மனுஷியாய் தோன்றி அதே மண்ணில் கலந்து கரைந்து போகப்போகிறவள் என்பதால் தோன்றிய அந்த கொதிப்பான வார்த்தைகள்தான் எல்லா ‘இஸங்க’ளையும் ஏறிமிதிக்கும் ‘மக்களிஸம்’.

- மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It