பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹென்றி மார்கன் என்ற அமெரிக்க அறிஞர் செவ்விந்தியரிடையே வாழ்ந்து பழகி அவர்களது வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், குடும்ப உறவு முறைகள் முதலியவற்றை ஆராய்ந்தார். அந்த ஆய்வின் முடிவில், ‘அம்மக்கள் பொதுவுடைமை வகைப்பட்ட கணசமூகமாக வாழ்ந்தனர்’ என்றும் ‘பெண்சமூகத்துக்கு தலைமை ஏற்ற தாய் வழிச் சமூகம் அவர்களிடையே நிலவியது’ என்றும் கண்டு கூறினார். மேலும், அம்மக்கள் வரைமுறையற்ற புணர்ச்சி வழக்கத்தில் இருந்த காட்டு மிராண்டி நிலையில் இருந்தும் குழு மணம் நிலவிய அநாகரிக நிலையில் இருந்தும் மாறி வளர்ச்சி பெற்று கணசமூகம் என்ற நிலையில் இணை மணம் என்ற மணமுறையை மேற்கொண்டிருந்தனர் என்றும் ஆராய்ந்து கூறினார்.

செவ்விந்தியர்கள் நீக்ரோக்கள் மட்டுமல்லாது, உலகத்தில் நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் அனைத்து இனமக்களுமே காட்டுமிராண்டி நிலை அநாகரிகநிலை என்ற நிலைகளைக் கடந்து தான் இன்றைய நாகரிக நிலையினையை அடைந்துள்ளனர். இந்த விதிக்கு எந்த இனத்தவரும் விலக்காக இருக்க முடியாது என்பது அறிவியல் உண்மை ஆகும்.

மார்கன் ஆராய்ந்து கூறிய வழியில் எங்கல்ஸ் அவர்களும் இலியாத், ஒடிஸி முதலிய பண்டை இலக்கியங்களை ஆராய்ந்து, அவை தோன்றிய கால கட்டத்தில் கிரேக்ககர்கள் ரோமானியர்கள், கெல்டுகள் ஜெர்மானியர்கள் முதலிய ஐரோப்பியர்கள் கணசமூகமாக வாழ்ந்ததை எடுத்துக் காட்டியுள்ளனர். அந்த கணசமூகங்கள் படிப்படியாக வளர்ந்து அடிமைச் சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற முன்னேற்றகரமான நிலையை எட்டியது பற்றியும் குடும்பம் தனிச்சொத்துடைமை அரசு ஆகியவற்றின் தோற்றம் பற்றியும் ஆராய்ந்து கூறியுள்ளார்.

மார்கனும் எங்கல்சும் காட்டிய வழியில் சங்க இலக்கியங்களை ஆராய்ந்தால் சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே நிலவிய சமூக நிலை பற்றி அறிய முடியும்.

எங்கல்ஸ் அவர்கள் கணசமூகம் பற்றி ஆராய்ந்து அச்சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளாகச் சில வற்றைக் குறிப்பிட்டுக் கூறுகிறார். அவை, தமிழகத்தில் சங்க காலத்தில் கணசமூகமாக வாழ்ந்த மக்களிடையிலும் நிலவியிருந்ததைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. அவற்றுள் முக்கியமானவையாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. கணசமூகத்துக்கு தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய் வழியாகவே வம்சாவளி குறிக்கப்பட்டது.
2. கணசமூக மாந்தர் தமக்குக் கிடைத்தது எதுவாயினும் அதனைத் தமக்குள் எவ்விதப் பாகுபாடுமின்றிச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.
3. ஒரு கணத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தம்முள் மணம்புரிவதை கணம் தடைசெய்தது. இரு பாலாரும் தமக்குரிய இணையைப் பிறகணங்களில் தான் தேடிக் கொள்ள வேண்டும்.
4. கணத்துக்குள் குழு மணமும் இணை மணமும் சாதாரண நடைமுறையாக இருந்தது.

மேற்குறித்தவற்றுள் குழு மணம் தமிழகத்தில் நிலவியது என்பதற்கு நேரடியான இலக்கியச் சான்றுகள் எவையும் இல்லை. ஆனால் அறநூல்களால் ஒழுக்கக்கேடு என்று கடியப்பட்ட பிறனில் விழைதல் என்பது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் சாதாரண நடைமுறையாக இருந்துள்ளது. இன்றும் உள்ளது. பிறனில் விழைதல் என்பது கணசமூகத்தில் நிலவிய குழு மணம் என்பதன் தொடர்ச்சியின் அடையாளமே என்பது சரியான கூற்றேயாகும். இது தவிர, இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்ற பெருந்திணை என்பது, குழுமணம் தமிழகத்தில் சங்ககாலத்தில் நடை முறையில் இருந்தது என்பதற்கு நேரடியான சான்று ஆகும் என்று கூறுதல் தவறாகாது. இதனை, பெருந்திணை என்பதற்கு இலக்கண நூல்கள் கூறுகின்ற விளக்கம் உறுதிப்படுத்துகிறது.

கணத்தைச் சேர்ந்த ஒருவன் பிற கணத்தவரால் கொல்லப்பட்டால், கொன்றவனை ரத்தப்பழி வாங்கும் கடமையை கணம் ஏற்றுக் கொண்டு செயல்பட்டது. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவனது ரத்தசம்பந்தமான நெருங்கிய உறவு உடையவர்களிடமே அச்செயல் ஒப்படைக்கப்பட்டது என்று, அமெரிக்க செவ்விந்தியர்களைப் பற்றிக் கூறும்போது எங்கல்ஸ் குறிப்பிடுகிறார். இத்தகைய ரத்தப்பழி வாங்கும் செயல்களில் கணம் ஈடுபட்டதற்குச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் காணப்படுகின்றன.

மக்கள் கண சமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த அவர்களிடையே ஆநிரைகளுக்காக அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அப்போர்களில் அவர்கள் வெற்றி அல்லது வீரமரணம் என்ற குறிக்கோளுடனேயே ஈடுபட்டனர். தோல்வி என்பதை கணசமூக மாந்தர் நினைத்தும் பார்த்ததில்லை. இதற்கு தோழர் எங்கல்ஸ் அவர்கள் ஆப்பிரிக்க நீக்ரோக்களான ஜீலு இனத்தவர் ஐரோப்பியருடன் நிகழ்த்திய போர்ச் செயலைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். அதற்கு ஒப்பான வீரத்துடன் தமிழகத்தில் கணசமூகமாக வாழ்ந்த மேய்ச்சல் சமூகத்து மாந்தர் போரிட்டதற்கு இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

இவ்வாறு, மார்க்கனும் எங்கல்சும் காட்டிய வழியில் மார்க்சீய ஒளியில் சங்க இலக்கியங்களைப் படிக்கும் போது சங்ககாலத்தமிழகத்தில் நிலவிய சமூக அமைப்பு பற்றிய தெளிவான சித்திரத்தை நாம் காணமுடிகிறது. அவ்வாறு கண்டதனை நூல் வடிவாக்கிக்காட்டும் முயற்சியின் வெளிப்பாடாகத்தான் ‘சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை’ என்ற இந்நூல் தோன்றியது. தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் உழைக்கும் வர்க்கம் இதனை வரவேற்கும் என்ற நம்பிக்கையில் இந்நூல் உங்கள் முன் சமர்பிக்கப்படுகிறது. இந்நூலுக்கு அணிந்துரை நல்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டபோது, தமது பல்வகைப்பட்ட பணி நெருக்கடிகளுக்கு இடையிலும் அற்புதமானதொரு ஆய்வுரையை அணிந்துரையாக வழங்கிய தோழர் எஸ்.ஏ பெருமாள்(ஆசிரியர் செம்மலர் மதுரை) அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றி உரியதாகும். மேலும் இந்நூல் வெளிவருவதற்குப் பெரிதும் துணைபுரிந்த தோழர் ச.தமிழ்ச் செல்வன் (மாநிலச் செயலர் த.மு.எ.ச தமிழ்நாடு) அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

வெ. பெருமாள்சாமி
புலிப்பாறைப்பட்டி

மேற்கோள் நூல்கள்:
1. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சாமினாதையர் பதிப்பு.
2. எட்டுத் தொகை நூல்கள். சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
3. திருக்குறள் பரிமேலழகர் உரை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
4. குடும்பம் தனிச்சொத்துடைமை அரசு ஆகியவற்றின் தோற்றம், எங்கல்ஸ் அவர்கள் முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ.
5. சிலப்பதிகாரம்.
6. மணிமேகலை.


எஸ். ஏ. பெருமாள்
அணிந்துரை

சங்க இலக்கியங்கள் குறித்து ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆய்வு நோக்கிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் மார்க்சீய நோக்கில் வரலாற்றியல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தோடு வந்தவை மிகவும் சொற்பமே. அந்தக்கண்ணோட்டத்துடன் ‘சங்க காலத்தமிழகத்தின் சமூகநிலை’ என்ற இந்நூலை தோழர் புலவர் வெ.பெருமாள் சாமி திறம்பட ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

சுமார் 1600 முதல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்மக்களின் சமூக வாழ்வையே சங்க இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. பண்டைய தமிழக மக்களின் சமூக அமைப்பு, உணவு வேட்டை, அகவய, புறவய வாழ்க்கை நெறிகள், சமூக நீதி , வாழ்வுக்கான போராட்டங்கள், போர்கள் பற்றியெல்லாம் நாம் அறிய முடிகிறது. பிரபல கல்வெட்டு அறிஞர் திருவாளர் ஐராவதம் மகாதேவன்’ சங்க காலத்தில் பெரும்பாலான மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாகத் திகழ்ந்தனர் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் ஆரியம்புகுந்து வர்ணாசிரம முறை நடைமுறைக்கு வந்தபின்பு பெரும்பாலான மக்களுக்குக் கல்வி அடியோடு மறுக்கப்பட்டது. இதனால் சமூக வாழ்வின் சகலதுறைகளிலும் இம் மக்கள் பின் தங்கி விட்டனர். சம வாய்ப்பினை உருவாக்கும் ஒரு சமூகம் அமைப்பு ஏற்படாமல் போய்விட்டது. இந்நிலை 19 ம் நூற்றாண்டின் பாதிவரை நீடித்தது. 1863 ம் ஆண்டில் கிறிஸ்து சபையினரின் வற்புறுத்தலால் இந்தியாவில் அனைவருக்கும் கல்வி என்ற அரசாணை வந்தது. அதன் பிறகே கல்வி மறுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வி பயிலும் வாய்ப்புக் கிடைத்தது. இதனுடைய வெளிப்பாடு தான் பிற்காலத்தில் இட ஒதுக்கீடு வந்தது என்பதாகும்.

தமிழகத்தில் ஆதிகுலங்களின் வேட்டைச்சமூக வாழ்வு, பின்பு மேய்ச்சல் சமூக வாழ்வு, விவசாயச் சமூக வாழ்வு, தாய்வழி மற்றும் தந்தைவழிச் சமூகங்கள் குறித்து தகுந்த மேற்கோள்களுடன் இந்நூல் விவரிக்கிறது. தமிழக மக்களின் வாழ்வில் ஆதிபொதுவுடைமைச் சமூகம், அடிமைச்சமூகம், நிலப்பிரபுத்துவச் சமூகம் உருவாகித் நிகழ்ந்த விதம் பற்றியும் சங்க இலக்கிய ஆதாரங்களுடன் இதில் கூறப்பட்டுள்ளது. மார்கன், மார்க்ஸ், எங்கல்ஸ் போன்ற அறிஞர்களின் மேற்கோள்களும் நூல் முழுவதும் விரவியுள்ளன.

வேட்டைக்கருவிகள் வளர்ச்சியடையாதகாலத்தில் வேட்டை கிடைப்பது அரிது. எனவே மனிதரை மனிதர் அடித்துத் தின்னும் நரமாமிச முண்ணும் பழக்கம் இருந்ததை புகார் நகரத்து வணிகன் சாதுவன் கதை ஆதாரத்துடன் நூலில் கூறப்பட்டுள்ளது. மனிதனுக்கு உழுவதற்குத் தெரியாது. பன்றிகள் பூமியிலுள்ள வேர்களையும் கிழங்குகளையும் தின்பதற்குத் தங்கள் மூக்கினால் உழுதன. அப்படிப் பன்றிகள் உழுத இடங்களிலேயே மனிதர் விதைகள் விதைத்தனர். அதில் தினை முளைத்து வளர்ந்து விளைந்தது. இவ்வாறு உழப்பாடத நிலத்தில் விதை போட்டால் மழைநீர் விதைகளை அடித்துச் சென்றுவிடும். பன்றி உழுத இடங்களில் மழைபெய்யும் போது விதைகள் தப்பாது முளைக்கும். இதைப் புறநானூற்றுப் பாடலின் (168) மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கணவாழ்வில் வீரயுகம் திகழ்ந்ததை காக்கைப்பாடினியரின் பாடல் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்டு வென்று மீண்ட வீரர்களுக்கு விருந்து படைத்துப் போற்றியதும் உள்ளது. கால்நடைகள், தானியங்கள் உபரியான பின் அதற்குக் காரணமான ஆண் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினான். தாய்வழிச்சசமூகம் வீழ்ந்து, தந்தை வழிச்சமூகம் எழுந்ததைக் காணமுடிகிறது. உற்பத்தியிலும் கருவிகளிலும் ஏற்பட்ட வளர்ச்சியால் வர்க்க சமூகமான அடிமைச் சமூகம் தோன்றியது. தமிழகத்தில் அடிமைகளின் வாழ்வு மோசமான நிலையிலிருந்தது. காடுகொன்று நாடாக்கி குளந்தொட்டு வளம் பெருக்கியவர்களுக்கு, அரண்மனை, வளமனை, கோட்டை கொத்தளங்கள் கட்டியவர்களுக்கு ஆண்டைகள் பழைய சோற்றையே படைத்தனர் போர்களில் தோற்று அடிமையானவர்கள் கடும் உழைப்பில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டனர். அவர்கள் ஏராளமாய் மடிந்தனர் பெண் அடிமைகள் நெல்குற்றி சமையல் செய்வது முதல் சலவை செய்வது வரை புறநானூறும் பெரும்பாணாற்றுப்படையும் எடுத்தியம்புகின்றன. அடிமைகளின் வாழ்வு நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சங்க காலத்தில் எல்லாம் பொங்கி வழிந்தது என்று கதைப்போர். இதைப் படித்தால் வாயைப் பொத்திக் கொள்ள வேண்டும்.

உழவுத்தொழிலில் உழுவது, விதைத்துப்பயிர் வளர்ப்பது, அறுவடை செய்வது வரை அடிமைகளின் வாழ்வு அவலம் நிறைந்திருந்தது. பணியாற்றும் காலத்தில் பெண்கள் தங்கள் அழுதபிள்ளைக்கு பால்புகட்ட முடியாது, அறுவடையில் கருக்கரிவாளைத் தீட்டுவதற்கு வெளியே செல்லாமல் வயலிலேயே ஆமையோட்டில் தீட்டிக் கொள்ள வேண்டும். இவர்களை ‘மடியா வினைஞர்’ என்று புறநானூறு குறிப்பிடுகிறது. இது போன்ற கொடுமைகள் அண்மைக்காலம் வரை நீடித்தது. செங்கொடி இயக்கம் தான் அதைத் தகர்த்து முற்றுப்புள்ளி வைத்தது.

ஆதி தமிழ்ச் சமூகத்திலேயே உலகாயததத்துவம் இருந்ததை மணிமேகலை கூறுகிறது. உயிர்தோன்றுவது கடவுளின் படைப்பினால்அல்ல, நான்கு பூதங்களால்தான் என்று உலகாயதன் பேசுகின்றான். தமிழகத்தில் ஒரு காலத்தில் உலகாயதம் சிறந்து விளங்கியுள்ளது. இந்த உலகாயதக் கருத்துகளின் தாக்கத்துக்கு ஆளாகாத தத்துவங்களையோ, பக்தி இலக்கியங்களையோ பார்க்கவியலாது. திருமூலர் முதல் தாயுமானவர் வரை காணமுடிகிறது.

ஆரம்பகாலத்தில் இயற்கையை எதிர்த்த வாழ்வில் மது என்பது பயத்தைப் போக்கவே பயன்பட்டது. பிற்காலத்தில் காமம் முதல் களியாட்டங்கள் வரை மது பயன்படுத்தப்பட்டது. மதுவை உருவாக்கிய விதங்களும், பருகிய விதங்களும் சங்ககால வாழ்வில் இருந்த ஆபரணங்கள், குடியிருப்புகள் பற்றிய விபரங்களும் இலக்கியங்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

சமூகத்தில் வர்க்கவேறுபாடுகள் மலிந்தன. தீமைகளும் தீங்கு செய்வதும் மலிந்தன. நிலப்பிரபுத்துவச் சமூகம் பிறந்தது. தமிழ்ச் சமூக வாழ்வில் அக்காலத்தில் வர்க்கப் போராட்டங்கள் நிகழ்ந்ததற்கான சான்றுகள் குறிப்பிடப்படாதது நூலின் குறையாகும். அடுத்த நூலிலாவது ஆசிரியர் இக்குறையைப் போக்க வேண்டும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நிலப்பிரபுத்துவமும் மன்னராட்சியும் தலைதூக்கிய பின்பே ஆரியர் வருகை நிகழ்ந்தது. நிலப்பிரபுத்துவத்துக்கு ஆரியப்பார்ப்பனர் ஆதரவு தந்து வாழ்ந்தனர். உலகாயதவாதிகள், சமணர், பௌத்தருக்கெதிராய், பார்ப்பனர் செயல்பட்ட விதம் பற்றிய புறப்பாடல் விளக்கங்கள் நூலில் தரப்பட்டுள்ளது. நாத்திகரோடு நட்புக்கூடாது என்று அரசர்க்கு ஆலோசனை வழங்கினர். மன்னர்கள் விளைநிலங்களை பார்ப்பார்க்கும், படை வீரர்க்கும் தாரை வார்த்தனர். பொது நிலங்கள் தனியுடைமை ஆயின. தனிச் சொத்தும் தனியுடைமையும் தோன்றின. தங்களின் வர்க்கவிரோதிகளான ஏழைகளை ஒடுக்கி வைக்க அரசு எந்திரம் வலிவோடு அமைக்கப்பட்டது. சுரண்டும் வர்க்கத்தின் பாதுகாவலனாகவே அரசு எந்திரம் இன்று வரை தொடர்கிறது.

சங்க கால வாழ்வை மிகவும் யதார்த்த நோக்கில் ஆய்வு செய்திருப்பதே இந்நூலின் தனிச்சிறப்பாகும். பல ஆண்டுகள் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்த புலவர் தோழர் வெ.பெருமாள்சாமி அவர்களைத் தமிழகம் நிச்சயம் பாராட்டும். அவரது ஆய்வுகள் தொடரட்டும்.

எஸ். ஏ. பெருமாள்
ஆசிரியர் - செம்மலர்
மதுரை


(பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை (மார்க்சீய நோக்கில் சங்க இலக்கிய ஆய்வு)’ புத்தகத்தின் பகுதிகள் கீற்றுவில் தொடராக வெளிவர இருக்கிறது. அதன் முதல் பகுதியாக புத்தகத்தின் முன்னுரையும், அணிந்துரையும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது)

Pin It