எங்களூரில் (உருளிக்கல்) சோறு கொண்டு போகும் நாட்களைப் பற்றி யோசிக்கிறேன்.

சனிக் கிழமைகளில் என் அத்தைக்கு நான் சோறு கொண்டு போனதுண்டு. நானும், என் அண்ணியும்... தூக்குப் போசியில் சோறு நிரப்பி... சென்ற காலங்களை அசை போடுகையில் பால்ய கால வாழ்வின் நறுமணங்கள் என்னை சுவாசிக்கின்றன.

அப்போதெல்லாம் ஒரு பொரியல்..... ஒரு ரசம்...... ஒரு குழம்பு..... தயிர்.. அல்லது மோர்... கொஞ்சம் பருப்பு நெய் என்றெல்லாம் ஒன்றுமில்லை. சோறு... கூட குழம்பு. அல்லது சோறு கூட ரசம். வாரத்தில் இரண்டு நாட்களில் இரவு உணவில் தோட்டத்து பீன்ஸ்.... கேரட்.... கத்திரிக்காய்.. எப்போதாவது முட்டை பொரியல். சில நாட்களில் சுடு கஞ்சி சோறு மட்டும் கூட ஊறுகாயோடு. ஞாயிறு கறி தனி.

காலையில் அவதி அவதியாக உணவு சமைக்கையில் அதுவும் அந்தக் குளிரில் எழுந்து அந்த வேலைகளை எல்லா நாட்களிலும் செய்வதென்பது இயலாத ஒன்றாகவே இருக்கும். அதை எல்லாரும் புரிந்தபடிதான் இருந்திருக்கிறோம். பெரும்பாலும் இரவு வைத்த குழம்பையே சூடு செய்து, அன்று காலை மதியத்துக்கு பயன்படுத்திய நாட்களும் உண்டு. பெரும்பாலும் அப்போது அங்கு எதுவும் கெட்டுப் போகாது என்பது கூடுதல் தகவலோடு நிம்மதியும்.

வழக்கமாக அத்தையே சோறு கொண்டு போய் விடும். சனிக்கிழமை எங்களுக்கு விடுமுறை என்பதால்..... வேலை செய்யும் காட்டின் நம்பரைச் சொல்லி, கொண்டு வரச் சொல்லும். அதற்குள் என் பெரியம்மா சனிக்கிழமை சிறப்பா, பச்சைப் பயிறு குழம்போ பருப்பு குழம்போ செய்து விட.... அதை தூக்குப் போசியில் போட்டு எடுத்துக் கொண்டு நானும் அண்ணியும் ஒரு பதினோரு மணி வாக்கில் கிளம்புவோம். 12 மணிக்கு உணவு இடைவேளை. காட்டின் தூரங்களைப் பொறுத்து அதற்கான நேரத்தைக் கணக்கிட்டு கிளம்புவோம். பாம்பாஸ் ஒண்ணாம் நம்பர் காடு என்றால் சற்று முன் கூட்டியே கிளம்புவோம்.

கீழே முருகானந்தண்ணன் லைனைத் தாண்டி.. குறுக்கில் பார்த்து.... பார்த்து நடக்க வேண்டும். சரிவு அப்படி. எத்தனையோ முறை சறுக்கி விழுந்து தேயிலை அடியைப் பற்றி தப்பித்துக் கொண்டதும் உண்டு. பச்சை பூத்த இரு பக்கங்களிலும் கண்கள் மேய... செம்மண் சாலையில் கால்கள் தானாக ஆடிக் கொண்டே... குதித்துக் கொண்டே நடக்கும். அங்கொரு பெருத்த வளைவு வரும். அப்போது மட்டும் பேய் பயம். நானும் அண்ணியும் அனிச்சையாக ஓடுவோம். பிறகு ஓட்டம் நடையான பிறகு அப்படியே சென்றால்.. எட்டிப் பிடித்து விடும் தூரத்தில் தான் சோலையார் அணையின் நீர் தேக்கம் இருக்கும். அதில் கல்லை விட்டெறிந்து விளையாடி மகிழ்வது பேரானந்தம். வீட்டு மரத்தில் பறித்து ஏற்கனவே ஜோப்பில் வைத்திருக்கும் கொய்யாக் காய்களை கொறித்துக் கொண்டே செல்வதில்... வானமும் மினுமினுக்கும் நீர்க் குமிழ்களும் கவிதைக்குள் அடங்காவியலாத அற்புதங்களை, அது அற்புதம் என்றே தெரியாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கும்.

2ம் நம்பர் காடென்றால் அது செக்போஸ்ட் பக்கம்தான்... பிரட்டுக்களத்தின் வழியாக மேலேறி, தேயிலைக் காடுகளின் நடுவே செல்லும் இரட்டையடிப் பாதையில் நடந்து சென்று தென்னை மரத்துப் பாடி முக்கில் - சாலையில் இணைந்து கொள்வோம். இப்போதெல்லாம் அந்த குறுக்கில் செல்ல எனக்கு அப்படி ஒரு பயம். காரணம் தெரியவில்லை. அப்போதெல்லாம் எந்த நேரத்திலும் தனியனாக...... நண்பர்களோடு........ நானும் ரோஸியும் (நாய்) மட்டுமாக... மச்சான்களோடு..... என்று இரவு பகல் பாராமல் எப்போதும் அந்த வழியில் தான் செல்வோம். அப்போதெல்லாம் காடுகளின் கடவுள் துணை இருந்தார். இயற்கையை அலைபேசிக்குள் அடைக்கவில்லை.

10ம் நம்பர் காடென்றால் வீட்டுக்கு முன்புறம் காப்பிக்காடு போகும் வழியில் செல்ல வேண்டும். அங்கு தான் 10ம் நம்பர் கான் (canal) இருக்கிறது. அங்கு துணி துவைப்பது... குளிப்பது.... விளையாடுவது என்பது தனி அத்தியாயம். துண்டு சோலை தாண்டி இருக்கும் காட்டுக்கு கூட சோறு கொண்டு போயிருக்கிறேன். அந்த வழியில் இருக்கும் ஒரு குளத்தில் தான் என் ஆத்தா தவறி விழுந்து இறந்தார். இப்போதும் எப்போதாவது அவ்வழியே செல்ல நேரிடுகையில் நான் நடுக்கத்தோடு நின்று பார்க்கிறேன்.

அஞ்சேக்கர் பக்கம் விறகுக்குப் போனதெல்லாம் நினைவில் உண்டு. பெயர் தெரியா பறவையின் நிழலைப் பற்றிக் கொண்டது அப்போது தான் போல.

என் அத்தை ஆசை ஆசையாய் எல்லாருக்கும் என்னை அறிமுகம் செய்யும். எங்க குட்டிப்பையன் அறிவு என்று பாராட்டும். சாப்பிட்டு முடித்து தூக்குப் போசியை வாங்கிக் கொண்டு கிளம்புகையில் இனம் புரியாத திருப்தி இருக்கும். அது திருப்தி என்று இப்போது சொல்ல முடிகிறது. அப்போது அதற்குப் பேர் சிரிப்பு. சில போது காடு பக்கமாக இருக்கும் செட்டியார் கடை பின்னாலிருக்கும் காடுகளில் வேலை என்றால் கடி (Snacks) கூட வாங்கிக் கொண்டு போவேன். அதில் பாதியை நான் தான் தின்பேன்.

தூக்குப் போசியில் சோறு மட்டுமா அடைத்தோம். சொந்தங்களையும் தானே.

- கவிஜி

Pin It