இந்த காலம் நம்மை எங்கோ ஓரிடத்தில் சுருட்டி வைத்துக் கொண்டே இருக்கிறது.

எனக்கு இசை அறிமுகமானது ரேடியோ என்றாலும், ரேடியோவுக்கு அடுத்து படக்கென்று என்னால் சேர்ந்து கொள்ள முடிந்த அரிய அதிசயம் அன்றைக்கு இருந்த இசை கேஸட்.

tape recorder"இக்பால் ம்யூசிக்கல்ஸ்" என்ற ம்யூசிக் கடை இன்னமும் ப்ரவுன் நிறத்தில் பசுமையாய் நினைவில் இருக்கிறது. அந்தக் கடையும் இன்றைய காலத்துக்குத் தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொண்டு இன்னமும் இசைத்துக் கொண்டுதானிருக்கிறது. அந்தக் கடையில் தான் மச்சான்...(மாமா பையன் ) சென்று கேஸட் வாங்கி வருவார். பெரும்பாலும் இளையராஜா பாடல் தான்.

கடலோரக் கவிதைகள்.... அக்னி நட்சத்திரம்.... சிந்து பைரவி..... ஆளப்பிறந்தவன்.... எங்க ஊர் பாட்டுக்காரன்... ஒரு தாயின் சபதம்... செண்பகமே செண்பகமே..... கரகாட்டக்காரன்... ரசிகன் ஒரு ரசிகை என்று கேட்ட பாடல்கள் எல்லாமே இன்னமும் என்னில் ரீங்காரமிடுவன. சிலபோது வேறு வேறு படங்களில் இருந்து நல்ல பாடல்களை மட்டும் தேர்வு செய்து 60, 90 என்று கேஸட்களில் (90 என்றால் கொஞ்சம் அதிகம் பாடல் பதிவு செய்யலாம்) பதிவு செய்து ஞாயிறுகளில் முழுக்கக் கேட்போம். பக்கத்து வீடு.. எதுத்த வீடு என்று எல்லாரும் கூட்டாக அமர்ந்திருப்போம். அடுத்த வீதி அண்ணன்கள் கூட வந்து வாசலில் அமர்ந்து கொண்டும் வேடிக்கையாக விளையாடிக் கொண்டும் கேட்பார்கள். பாடல்கள் என்பது பாடல்களால் மட்டும் ஆனவை அல்ல, அவை பால்யங்களாலும் ஆனவை.

தினமும் பாடல்களோடு தான் விடியும். பாடல்களை ஒலிக்க விட்டு அவரவர் வேலைகளில் ஈடுபடுவது அத்தனை பிரியத்துக்குரியவை. பக்கத்து வீட்டு அக்காவுக்குப் பிடித்த பாடலை எதுத்த வீட்டு அண்ணன் ரசிப்பது.... பாடல்களாலே பார்வை பரிமாற்றம் நடப்பது என்று ஒலி நாடாவில் ஒளிந்திருந்த உள்ளங்கள் அவைகள். மனதுக்குள் தாளமிடும் லயத்தோடு பள்ளி சென்று இந்த மாதிரி எங்கள் வீட்டில் டேப் ரெக்கார்ட் இருக்கு.. அதில் இந்த பாட்டெல்லாம் கேட்டேன் என்று கொஞ்சம் கதையும் சேர்த்துக் கொள்வேன். புனைவுகளை அங்கிருந்து தான் ஆரம்பித்திருக்கிறேன். பெரும்பாலும் எங்கள் ஊரில் நாங்கள் தான் எந்த ஓர் எலக்ட்ரானிக் பொருளையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறோம் என்று இப்போது நினைக்கையில் இப்போதும் அது பெருமை தான்.

கேஸட்டில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது அவ்வப்போது தொண்டைக்குள் கீச் மூச் என்று கயமுயவென சப்தமிட்டு உள்ளுக்குள் சுற்றிக் கொண்டு விடும். பொறுமையாக கேஸட்டை டேப்பில் இருந்து பிரித்தெடுத்து, கைக்குழந்தையை தூக்குவது போல பவ்யமாக எடுத்து உள்ளே மாட்டிக் கொண்டிருக்கும் நாடாவை அப்படி இப்படி என்று சரி செய்து கொண்டே வெளியே எடுத்து மீண்டும் அதை கேசட்டுக்குள் சுற்றி அனுப்ப வேண்டும். (அதை எடுப்பவர் பெரும்பாலும் எல்லாம் தெரிந்தவர் போல முகத்தை வைத்துக் கொள்வார். பெரும்பாலும் எங்கள் வீட்டில் மச்சான் தான். ஓர் அலட்சிய பார்வை நம் மீது இருக்கும்) கேஸட்டின் இருபக்கமும் இருக்கும் பற்சக்கரங்களில் லாவகமாக ரெனால்ஸ் பேனாவை நுழைத்து சுற்றிக் கொண்டே வந்து அந்த ஒலி நாடாவின் கசங்கலை சரி செய்ய வேண்டும்.

பிறகு நான் கூட அதில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்தவனாக மாறிய பொற்காலமும் உண்டு. பிறகு அதே கேஸட்டில் நம் குரலைப் பதிவு செய்யும் வசதியும் இருப்பது தெரிந்து செய்யுளைச் சொல்லி அதை பதிவு பண்ணி சனிக்கிழமையில் பக்கத்துக்கு வீட்டு நண்பர்களுக்கு போட்டு, கேட்கச் சொல்லி கை தட்டு வாங்கியதெல்லாம் டிஜிட்டல் உலகிற்கு அப்பாற்பட்டவை.

எங்கோ ஒரு மூலையில் இந்தக் காலத்திலும் அப்படித்தான் நான் என்னை சுருட்டிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது எதற்குள்ளோ சிக்கி கசங்கிப் போவதும் உண்டு. என்னால் என்னை நானே மெல்ல வெளியே எடுத்து சரி செய்யும் லாவகமும் வாய்க்கப் பெற்றவனாக இருக்கிறேன். பாடல்களால் ஆனவன் நான்.

'ராஜா ஹிந்துஸ்தானி' என்ற ஹிந்திப் படத்தின் பாடல்களெல்லாம் சனி இரவுகளில் மைக்கில் அலறும் அளவுக்கு ஆம்பிள்பேர் எல்லாம் வைத்து பாடல் கேட்ட காலம் அது. எத்தனையோ முறை ரீவைண்டிங் செய்து கேட்டுக் கொண்டே இருப்போம். அது ஒரு கூட்டு முயற்சி போல...... அந்தக் காலத்தின் கையில். ஆளுக்கொரு பிடி இருந்தது. அந்த கேஸட்டில் ஆளுக்கொரு பாடல் பிடித்ததாக இருந்தது. ஒரே முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரே காலத்தோடு கேட்டுக் கொண்டிருந்தோம்.

இன்று ரீவைண்டிங் செய்ய முடியாத தூரத்தில் நின்று கொண்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கோ ஒலிக்கிறது நமக்குப் பிடித்தமான பாடல்....எப்படியோ...!

தொடரும்

- கவிஜி

Pin It