இருவாரங்களுக்கு மேலாகப் பூட்டப்பட்டிருக்கும் திருகோணமலையின் மாவிலாறு நீர்ப்பாசன கதவுகள், மூர்க்கமான பல போர்முனைகளைத் திறந்து விட்டுள்ளதுடன் பேரினவாத அரசியல்வாதிகளின் அரசியல் அரங்கமாகவும் மாறியுள்ளது. 'விரிவுபடுத்தப்பட்ட அல்லை நீர்ப்பாசனத் திட்டத்தின் மாவிலாறு அணையிலிருந்தான நீர் சேருவில, மூதூர், ஈச்சிலம்பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள வயல்களுக்குச் செல்லாமையால் ஏற்பட்ட பிணக்கிற்குள் அரசியல்வாதிகள் மூக்கை நுழைத்தமையால் நிலைமை தேவையற்ற விதத்தில் விசுவரூபம் எடுத்துள்ளது.

கடந்த ஜூலை 20ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைச் சேர்ந்த மக்களால் நீர்வடிகால் கதவுகள் மூடப்பட்டன. திருகோணமலையிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை மற்றும் பாரபட்சம் காட்டப்படல் போன்றவற்றை எதிர்த்து உள்ளூர் மக்களால் மூடப்பட்ட இக்கதவுகளைத் திறக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இப்பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் பிரச்சினையைப் பூதாகாரப்படுத்திய இனவாத அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மாவிலாறு ஏன் மூடப்பட்டது?

இப்பிணக்கு குறித்து தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் கூறுகையில்:

"திருகோணமலையின் மூதூர் கிழக்கு, கட்டை பறிச்சான், சேனையூர், கடற்கரைச்சேனை, சம்பூர், கூனித்தீவு, சூடக்குடா, இலக்கந்தை, பாட்டாளிபுரம், நல்லூர், கணேசபுரம் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பல கிராமங்கள் அரச படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு இலக்காகி வந்தன. ஏப்ரல் 25ம் திகதி இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலைத் தொடர்ந்து இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் படுகாயமடைந்துமிருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இத்தாக்குதல்களுக்குப் பின்னர் அப்பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டேன். எந்தவொரு புலிகளின் முகாம்களும் தாக்கப்படவில்லை.

அப்பாவிப் பொதுமக்களே கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகளும், சொத்துகளுமே மோசமாகச் சேதமடைந்தன. ஆனால், இன்றுவரை அரசாங்கம் சொல்கின்றது புலிகளின் அடையாளங் காணப்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடாத்துவதாக. இதில் எந்தவித உண்மையுமில்லை. பொதுமக்களே தொடர்ச்சியான பாதிப்புகளுக்கு இலக்காகி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் அரசின் திட்டமிட்ட பொருளாதாரத் தடையால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். தமது பாரம்பரிய தாயகத்தில் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இவர்களுக்கு மின்சாரமில்லை. குடிநீரில்லை, மருத்துவ வசதிகளில்லை, மருத்துவர்களில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களில்லை, போக்குவரத்து வசதிகளில்லை, அரச சார்பற்ற நிறுவனங்கள் கொண்டுவரும் உதவிப் பொருட்கள் அப்பகுதிகளைச் சென்றடைவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. காலாகாலமாக அங்குள்ள தமிழர்கள் எவ்வித வசதிகளுமில்லாமல் வாழ்ந்து வருகையில் இடையில் திட்டமிட்டு குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சகல வசதிகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு அரசாங்கத்தினாலும் அதன் படைகளாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டு பொறுமையிழந்த மக்களே மாவிலாறை மூடினர்.

இப்பிரச்சினை பேசித் தீர்க்கப்படும் நிலையிலேயே இருந்தது. அதற்கிடையில் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் இவ்விடயத்தில் தலையிட்டமையால் பிரச்சினைகள் விசுவரூபமெடுத்துள்ளன" என்றார்.

சமரச முயற்சிகள் சீர்குலைந்தது எப்படி?

இதேவேளை, இவ்விடயம் குறித்து விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றினை கடந்த 31ஆம் திகதி வெளியிட்டிருந்தனர். பேசித் தீர்க்கப்படும் நிலையிலிருந்த இப்பிரச்சினையை சிரீலங்கா அரசாங்கம் இராணுவ முனைப்புகள் மூலம் சீர்குலைத்துவிட்டதாக அந்த அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

"போர் நிறுத்த உடன்படிக்கைக் காலத்தின் ஆரம்பத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான குடிநீர்த் திட்டமொன்றைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்த்தனர். தமக்கு குடிநீர் விநியோகம் உள்ளிட்ட உடனடித் தேவைகள் பல உள்ளன. இப்படியிருக்கையில், தமது பகுதிகளின் நீர் வேறொருவருக்கு வழங்கப்படுவதா என்ற விரக்தியே இதற்கான காரணம். இந்த எதிர்ப்பையடுத்து ஆசிய அபிவிருத்தி வங்கி தமது நீர் விநியோகத்திட்டத்தை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதாக உடன்பட்டுக் கொண்டது. ஆனால், வங்கியின் இத்திட்டம் அரசியல் நிலைமைகள் காரணமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தன.

இரு வாரங்களுக்கு முன்னர் (கதவுகள் மூடப்படுவதற்கு முன்) வட, கிழக்கு அபிவிருத்தி அமைச்சு இத்திட்டத்தை அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயற்படுத்தப் போவதாக அறிவித்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகளை வெளிப்படுத்தவும், அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, கடந்த ஜூலை 20ஆம் திகதி நீரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல விடுவதில்லையென முடிவெடுத்த மக்கள் துரிசை மூடினர். அத்துடன், இலங்கை அரசுக்கு தமது 3 நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை அனுப்பி வைத்தனர். ஆனால், அரசு பதிலளிக்கவில்லை.

எப்படியிருந்தபோதும், சூலை 25ஆம் திகதி அரச சமாதான செயலகத்தின் செயலாளர் நாயகம் பாலித கோஹண இந்த நீர்ச் சர்ச்சையைத் தீர்த்து வைப்பதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். காலை 9.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டது. அக்கடிதம் உடனடியாக திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ். எழிலனுக்கு அனுப்பப்பட்டது. புதன்கிழமை 26ஆம் திகதி காலை மக்களுக்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டபோது தாம் கண்காணிப்புக் குழுவிடம் நேரடியாகப் பேசவேண்டுமென அம்மக்கள் தெரிவித்தனர். ஆனால், அன்றைய தினம் கண்காணிப்புக் குழுவால் பாதுகாப்பு நிலைமையால் வரமுடியவில்லை.

தாம் மக்களைச் சந்திப்பதாக கண்காணிப்புக் குழு 26ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு உறுதியளித்திருந்தது. இவ்வுறுதிமொழி கிடைத்து ஒன்றரை மணி நேரத்துக்குள் அதாவது 3.20 மணிக்கு மாவிலாறிலிருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள கதிரவெளியில் புலிகளின் முகாம் மீது விமானப்படை குண்டு வீசியதில் 7 பேர் பலியாகினர். 28ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மக்களுக்கும் கண்காணிப்புக் குழு தலைவருக்குமிடையிலான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பு நடைபெற்றபோது கண்காணிப்புக் குழு தலைவரிடம் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமென்ற உறுதிமொழியைக் கேட்டனர். ஆனால், உத்தரவாதம் தரமுடியாதென அவர் மறுத்துவிட்டார். இச்சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மிக அண்மையாக விமானப் படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தினர். கூட்டத்திலிருந்த மக்கள் சிதறியோடினர்" என புலிகளின் அறிக்கை கூறுகின்றது.

சமரச முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அரசு இராணுவ முனைப்பைக் காட்டியமையால் பேச்சுகள் அர்த்தமற்றதாகி முழு அளவிலான யுத்தம் வெடித்தது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இது இவ்வாறிருக்க, மாவிலாறு துரிசை திறக்க புலிகள் தயாராகியபோது படையினர் குண்டுத் தாக்குதல் நடத்தியமையாலேயே பிரச்சினை சிக்கலாக மாறியதாகவும் தாக்குதல் நடைபெற்றிருக்காவிட்டால் நிலைமையை சமாளித்திருக்கலாமெனவும் சேருநுவர ரஜமகா விகாரையின் தலைமைப் பிக்குவான சரணகீர்த்தி சேருநுவர தேரர் தெரிவித்திருக்கின்றார்.

ஆற்றை திறந்துவிடுவதற்கு எழிலன் தயாராகியதாகவும் ஆனால், விமானப் படையினரின் தேவையற்ற குண்டுவீச்சு அவர்கள் முடிவை மாற்ற வழிகோலிவிட்டதெனவும் தெரிவித்துள்ள அந்தப் பிக்கு, அரசியல்வாதிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சுமார் 17 ஆயிரத்து 413 ஏக்கர்களில் விவசாயம் செய்வதற்கு இந்த விரிவுபடுத்தப்பட்ட அல்லை நீர்பாசனத் திட்டம் நீர் வழங்கியது. மகாவலி கங்கையிலிருந்து பிரியும் வெருகல் ஆறு மாவிலாறை மறித்துக் கட்டப்பட்ட அணையிலிருந்தே (மாவிலாறணை) இத்திட்டம் செயற்படுத்தப் படுகின்றது. அணையைத் தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ள துரிசிலிருந்து வலதுபுறமாகவும், இடதுபுறமாகவும் இருவடிகால்கள் செல்கின்றன. வலதுபுறம் செல்லும் நீர் சேருநுவர தோப்பூரையும் இடதுபுறம் செல்லும் நீர் கங்குவேலியையும் அடைகின்றது. தற்போது துரிசு பூட்டப்பட்டுள்ளது. இதுதான் மாவிலாறின் நிலை.

இந்த நீர்ப்பாசனத் திட்டத்தால் மக்களுக்கிடையே சர்ச்சைகள் ஏற்படுவதாகவும் ஆனால், மக்களாகவே அதைப் பேசித் தீர்த்துக்கொள்வது வழமையெனவும் தெரிவித்த துரை ரட்ண சிங்கம் எம்.பி., ஒரு மாதத்துக்கு முன்னர் மாவிலாறில் நீர்ச்சர்ச்சை ஏற்பட்டதாகவும் அது பேசித் தீர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தற்போது எழுந்துள்ள நீர்ப் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தச் சென்ற ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட எம்.பி. ஜயந்த, சிங்கள மக்களால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார். 1960களின் பின்னர் இந்த நீர்ப்பாசனத் திட்டம் அபிவிருத்தி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கும் மக்கள், தமிழர் தாயகம் மீதான பேரினவாதிகளின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்காகவே இந்நீர்ப்பாசனத் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது நீர் தடைப்பட்டதால் தாம் குடியமர்த்தியவர்கள் இடம்பெயர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இம்முறை அப்பகுதியில் குறைந்த அளவிலானோரே வேளாண்மை செய்வதாகவும் அங்கு சிங்களவர்களால் தமிழர்களின் நிலங்களுக்கு நீர் வழங்காமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள் பலவுள்ளதாகவும் துரை ரட்ண சிங்கம் எம்.பி. தெரிவித்தார். மாவிலாறு அணைப்பகுதியை தமிழர்கள் கொட்டடி முகப்பு என்றே அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ச்சியான புறக்கணிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்கள் வேறுவழியின்றியே ஆற்றை மூடியுள்ளனர். அதைக்கூட வன்முறை ரீதியில் அணுகிய அரசு எவ்வாறு பிற உரிமைகளைத் தரப்போகின்றது.

நன்றி: தென்செய்தி