இராமன் என்ற ஊதி பெருக்கப்பட்ட ஆரிய பிம்பம் இன்று பெருமளவில் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக அவனின் கற்பொழுக்கமும், ஆட்சி முறையும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இராமன், சீதையைத் தவிர வேறொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காதவன் என்றும், ஏக பத்தினி விரதனாய் வாழ்ந்தான் என்றும் பார்ப்பன கூட்டத்தால் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டு, பார்ப்பனக் கூட்டத்தால் மட்டும் அல்லாமல் இன்று நாடு முழுவதும் சூத்திர, பஞ்சம மக்களாலும் இராமன் விதந்தோதப்படுகின்றான். ஆனால் வால்மீகி இராமயணத்தின் படியே இராமன் பல்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டவன் என்றும், பல பெண்களை வைப்பாட்டியாய் வைத்திருந்தவன் என்றும் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய 'இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர்கள் ' என்ற கட்டுரையில் அம்பலப்படுத்துகின்றார். இராமன் எப்படி ஒழுக்கம் கெட்ட முறையில் பிறந்தானோ, அதே போல இராமனுக்குத் துணையாக அமைந்த வானரங்களும்  எப்படி ஒழுக்கம் கெட்ட முறையில் பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

  rama and sita 319“இராமயணக் கதையின் தொடக்கத்திலேயே தசரதனின் மகன் இராமனாகப் பிறப்பதற்கு உடன்பட்டும் அதன்படி விஷ்ணுவே இராமனாக அவதரித்ததாக வால்மீகி கூறுகின்றார். இதனைப் பிரம்மதேவன் அறிகின்றான். விஷ்ணு இராமாவதாரம் எடுத்துச் சாதிக்கவிருக்கும் காரியங்கள் யாவும் வெற்றியுடன் முடிய வேண்டுமானால் அவனோடு ஒத்துழைத்து உதவக்கூடிய வல்லமை மிக்க துணைவர்கள் இருக்க வேண்டும் என்பதையும் பிரம்மன் உணர்கின்றான். ஆனால் அத்தகைய துணைவர்கள் எவரும் அப்போது இருக்கவில்லை”.

 “இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காகக் கடவுள்கள், பிரம்ம தேவனின் கட்டளையை ஏற்று விலைமாதர்களான அப்சரசுகள் மட்டுமன்றி, யக்ஷர்கள், நாகர் ஆகியோரின் மணமாகாத கன்னிப் பெண்கள் மட்டுமன்றி, முறையாக மணமாகி வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா,வித்யாதர், கந்தர்வர்கள், கின்னரர்கள், வானரர்கள் ஆகியோரின் மனைவியரையும் கற்பழித்து, இராமனுக்குத் துணையாக அமைந்த வானரர்களை உருவாக்கினர்”.

  “இத்தகைய வரம்பு மீறிய ஒழுக்கக் கேடானாது இராமனுடைய பிறப்பு அல்ல என்றாலும், அவனுடைய துணைவர்கள் பிறப்பு அருவெறுப்புக்குரியது. இராமன் சீதையை மணந்ததும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. பெளத்தர்களின் இராமாயணத்தின் படி சீதை, இராமனின் சகோதரியாவாள். சீதையும், இராமனும் தசரதனுக்குப் பிறந்த மக்கள். பெளத்த இராமாயணம் கூறும் இந்த உறவு முறையை வால்மீகி இராமாயணம் ஏற்கவில்லை. வால்மீகியின் கூற்றுப்படி விதேக நாட்டு மன்னனான ஜனகனின் மகள் சீதை என்றும், அவள் இராமனுக்குத் தங்கை உறவு உடையவள் அல்ல என்றும் ஆகின்றது. சீதை ஜனகனுக்குப் பிறந்த மகள் அல்லவென்றும், உழவன் ஒருவன் தன் வயலில் கண்டெடுத்து ஜனகனிடம் அளித்து வளர்க்கப்பட்ட வகையிலேயே சீதை ஜனகனுக்கு மகளானாள் என்றும் கூறப்பட்டிருப்பதால் வால்மீகி இராமாயணத்தின் படியே கூட சீதை ஜனகனுக்கு முறையாகப் பிறந்த மகள் அல்ல என்றாகின்றது. எனவே பெளத்த இராமாயணம் கூறும் கதையே இயல்பானதாகத் தோன்றுகின்றது. அண்ணன் தங்கை உறவுடைய இராமனும், சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்குத் தக்கது அல்ல எனலாம். இராமன் ஏக பத்தினி விரதன் என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படுகின்றது. இத்தகைதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது  என்பது புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அனேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்”.(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 8: ப. எண் 451-452)

   இப்படி பல மனைவிகளையும், வைப்பாட்டிகளையும் வைத்துக் கொண்டு கூத்தடித்துக்கொண்டு இருந்த இராமன், அரியணை ஏறிய பின் நாட்டு மக்களுக்கு எப்படி எல்லாம் அல்லும் பகலும் உறக்கமின்றி உழைத்தான் என்பதையும், அதன் மூலம் நாட்டு மக்கள் எப்படி எல்லாம் செழிப்பாக இருந்தார்கள்(!!) என்பதையும் அம்பேத்கர் சுட்டிக் காட்டுகின்றார்.

 “இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகின்றார். அதன் படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்புவரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும், பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால், கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் இராமன். அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகி மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்குதான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவைப் பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன; மது மாமிசம், பழவகைகள்  உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் என வால்மீகி குறிப்பிடுகின்றார். அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி  சொல்லும் விவரங்கள் அற்பமானவை அல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்தில்  புகழ் பெற்ற கிண்ணரி, உரகா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப்புரத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இந்த அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து, கூத்தாடி, கலந்து, மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம். வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கின்றார் வால்மீகி. இவை இராமனின் ஒருநாள் வாழ்க்கை நிகழ்ச்சிகளல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளே இவை”. (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 8: ப. எண் 461-462)

  இதைவிட இராமன் ஒரு பெண் பித்தன் என்பதற்கும் , ஒழுக்கம்கெட்டவன் என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும்? மன்னர்கள் என்றாலே அந்தப்புரப் பெண்களுடன் கூத்தடித்து அகமகிழ்ந்து கிடக்கும் சொகுசு பேர்வழிகள் என்பதற்கு எந்தவகையில் இராமன் விதிவிலக்காக இருந்தான் என்று இராமனைக் கொண்டாடும் இந்துமத வெறியர்கள் பதில் சொல்ல வேண்டும். இராமாயணக் கதையை எழுதிய வால்மீகியே இராமனை ஒழுக்கம் குறைந்தவனாக, வஞ்சகனாக, பெண்களை வன்புணரும் கொடியவனாக சித்தரித்து இருக்கும் போது இராமனை எதன் அடிப்படையில்  ஏக பத்தினி விரதன் என்று நாக்கூசாமல் பார்ப்பன பாதம் தாங்கிகளால் சொல்ல முடிகின்றது? பத்து மாதம் இராவணனுடன் தங்கி இருந்த சீதையை கற்பு கெட்டவள் என்று சந்தேகப்பட்டு அவளை நெருப்பில் இறங்கச் சொல்லியும், பின்னர் கர்ப்பமாக இருந்த அவளை கொடிய மிருகங்கள் இருக்கும் அடர்ந்த வனத்தில் தனது தம்பி இலட்சுமணன் மூலம் கொண்டுபோய் விட்டுவிட்டுவந்த இராமனின் கற்பு எப்படிப்பட்டதாய் இருந்திருக்கின்றது? மதுவும் மாமிசமும் தின்றுவிட்டு மனைவிகள்,வைப்பாட்டிகள், அந்தப்புரப் பெண்கள் சகிதம் நாட்டு மக்களின் நலன் மறந்து, மக்களின் வரிப் பணத்தை எல்லாம் தன்னுடைய சொந்த களியாட்டங்களுக்கு செலவிட்ட ராமன் எப்படி  நேர்மையானவனாய், ஒழுக்கம் நிறைந்தவனாய் இருந்திருக்க முடியும்?

  ஒருவேளை இப்படி மக்கள் பணத்தில் ஊர் மேய்வதை ஊக்குவிப்பதுதான் இராமராஜ்ஜியமா என்று தெரியவில்லை. ஆனால் அரசியல் இலாபத்திற்காக இல்லாத இராமனின் ஒழுக்கத்தை வலிந்து திணிக்கும் அற்பப் பதர்கள் எந்தவித ஆதாரமும் இன்றி இராமனை தேசிய நாயகனாக சித்தரிக்கின்றார்கள். ஒரு விபச்சாரத் தரகன் கூட இப்படி ஒரு கேடுகெட்ட செயலை செய்யத் துணியமாட்டான். உண்மையில் இராமன் ஏக பத்தினி விரதனாக இருந்தான் என்றால் அதற்கான ஆதாரங்களை சொல்லி அதை நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவனிடம் மருந்து அளவிற்கு கூட இல்லாத ஒழுக்கத்தை இருப்பதாகச் சொல்லி மக்களை நம்பவைத்து, அதன் மூலம் அரசியல் செய்ய நினைப்பவர்கள், எய்ட்ஸ் நோயாளியை நல்ல உடல் நலம் உள்ள ஒருவன் என்று நம்ப வைத்து திருமணம் செய்து வைப்பதற்கு ஒப்பாகும்.

    இப்படிப்பட்ட ஒழுக்கம் கெட்ட கதையைத்தான் தமிழில் கம்பன் மொழி பெயர்த்தான். மொழி பெயர்த்தவன் வால்மீகியின் இராமாயணத்தை அப்படியே மொழிபெயர்த்தால் எங்கே செருப்படி விழுந்துவிடுமோ என்று அஞ்சி, பல புரட்டுகளைச் செய்து தமிழ்மக்களின் மீது திணித்தான். "நமது சில முட்டாள் புலவர்களும், சில மானம்கெட்ட “இரட்டைப் பிறவி” தமிழர்களும் அவற்றையெல்லாம் தெரிந்தும், தெரியாதவர்கள் போல நடந்துகொண்டு, பார்ப்பனர்களுக்கு நல்லபிள்ளையாய் நடந்து எச்சில் பொறுக்குவதற்காக மானத்தைப் பறிகொடுத்து, பச்சை ஈனத்தை தலைமேல் சுமந்துகொண்டு 'கம்பன் விழா' கொண்டாடுகிறார்கள் என்றால், தமிழ்நாடே பூகம்பத்தால் மறைந்தோ, புயலால், வெள்ளத்தால் அழிந்தோ போனால் ஒழிய தமிழனுக்கு மானாவமானம் என்பது இன்னதென்று  புரியாது என்றுதானே சொல்ல வேண்டி இருக்கின்றது".(நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? தொகுதி 3 ப. எண்.762)

 தமிழ்நாட்டில் இன்றும் இந்த ஒழுக்கக் கேடான இராமாயணக் கதையையும், அதில் வரும் இராமனையும் தூக்கிக்கொண்டு சுமக்கும் பார்ப்பனக் கைக்கூலிகளை நாம் பார்த்துதான் வருகின்றோம். இவர்களின் நோக்கம் தமிழ்நாட்டை ஒழுக்கக் கேடான மாநிலமாக, இராமன் வழியில் மாற்றுவதுதான். இப்படிப்பட்ட இராமனை தூக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தால், மானமுள்ள தமிழர்களாக இருந்தால் அவர்களை செருப்பால் அடித்து விரட்டுவதுதானே முறையாகும். அப்படி இல்லாமல் அதற்கு ஆரத்தி எடுத்து வரவேற்பவன் அடிப்படையில் ஒழுக்கம் கெட்டவனாகத்தானே இருக்க முடியும். கட்டின மனைவியின் கற்பை சந்தேகப்படும், எந்தத் தகுதியும் இன்றி பல மனைவிகளையும், வைப்பாட்டிகளையும் வைத்துக்கொண்டு எந்நேரமும் குடியும் கூத்தியுமாக இருந்தவனை தமிழர்களின் கடவுளாக, ஆதர்ச நாயகனாக சித்தரிக்க முயல்பவனின் தனிமனித  ஒழுக்கம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று மானமும், அறிவும் உள்ள தமிழர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மலத்தின் மீது உட்கார்ந்து வரும் ஈக்கள் நம் சாப்பாட்டுத் தட்டில் உட்கார்ந்தால் எந்த தவறும் செய்யாத நாம் நோயால் பாதிக்கப்படும் சூழ்நிலைதான் ஏற்படும். இன்று தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற ஈக்கள் உட்கார்ந்து இதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றன. தமிழ் மக்கள் எந்தவித தயவு தாட்சணமும் இன்றி ஈக்களை விரட்டி அடிக்கவில்லை என்றால், உங்களின் சாப்பாட்டுத் தட்டில் இருக்கும் சோறெல்லாம் மலமாக மாறுவது போன்று உங்கள் சிந்தனை எல்லாம் வக்கிரமாகவும், ஆபாசமாகவும், ஒழுக்கக் கேடாகவும் மாறுவது உறுதி. இன்னும் வரும்…

- செ.கார்கி

Pin It