தலித் மக்களின் மீதான ஒவ்வொரு படுகொலை தாக்குதலுக்குப் பின்னும் இந்தியாவின் சாதிய முகம் நம்மை அச்சுறுத்திச் செல்கின்றது. மத சகிப்புத்தன்மை பற்றி பெரிதும் கவலையுறும் நம் புரட்சிகர அறிவுஜீவிகள் ஏனோ சாதிய சகிப்புத்தன்மை பற்றி மறந்தும் முணுமுணுப்பது கூட கிடையாது. அவர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் மட்டுமேயான பிரச்சினையாகவே சாதியைப் பார்க்கின்றார்கள். ஒவ்வொரு தலித்தின் உயிரையும் அவர்களது தன்மானத்தையும் ஆபத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கியே இங்கு ஆதிக்க சாதி அரசியல் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு தலித் படுகொலை செய்யப்படும் போதோ அல்லது அவமானப்படுத்தப்படும் போதோ யார் முந்திக்கொண்டு வந்து கண்டனம் தெரிவிப்பது என்பதில் தான் நம்முடைய தலித்மக்கள் மீதான பாசம் இருப்பதாக நினைத்துக் கொண்டு திருப்திபட்டுக் கொள்கின்றோம். காட்சி ஊடகங்களிலோ அல்லது அச்சு ஊடகங்களிலோ தொண்டைய செருமிக் கொண்டு பேட்டி கொடுக்கின்றோம் அதன் பின்பு அடுத்த படுகொலை நிகழும் வரையோ, அடுத்த அவமானப்படுத்துதல் நடக்கும் வரையோ ஒரு நீண்ட இளைப்பாறுதலை எடுத்துக் கொள்கின்றோம்.
பெரியாரையும், அம்பேத்கரையும் நாம் ஓட்டு வாங்குவதற்கான காட்சிப்பொருளாக மட்டுமே பயன்படுத்தினோம். சில தலித் தலைவர்கள் கார்ல் மார்க்சின் முகத்தில் எச்சிலை துப்பி, தான்தான் அம்பேத்கரின் உண்மையான வாரிசு என நிரூபிக்க முயன்றார்கள். இன்னும் சிலரோ பெரியாரை ஆதிக்க சாதிக்கான அடையாளமாக மாற்ற முயற்சித்தார்கள். சமூகத்தைப் புரட்டிப் போட்டு, புணர் நிர்மானம் செய்ய வந்த புரட்சிகர அறிவு ஜீவிகளோ பெரியாரையும், அம்பேத்கரையும் சீர்திருத்தவாதிகள் என சிறுமைப்படுத்தினர். கட்சி அணிகளில் உள்ள சில மனநோயாளிகளை விட்டு அவர்கள் இருவரையும் மேட்டுக்குடி வர்க்கத்தின் கைக்கூலிகளாக அடையாளப்படுத்த ஆணையிட்டனர். ஆனாலும் பாவப்பட்ட அந்த ஜீவன்கள் பெரியாரையும், அம்பேத்கரையும் தவிர்த்துவிட்டு இந்தியாவில் எந்த மூலை முடுக்கிலும் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்து அரைகுறை மனதுடன் அவர்களை ஆதரித்தனர்.
ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னாலும் புதைகுழியில் இருந்து எழுந்துவந்து கருத்துச் சொல்வதும் அதன் பின்பு திரும்ப புதைகுழிக்கே திரும்பி விடுவதையும் வாடிக்கையாக சில தலித் தலைவர்கள் வைத்துள்ளார்கள். அவர்களுக்குச் சாதி ஒழிப்பு என்பதெல்லாம் அதிபயங்கரமான தீவிரவாத செயல்களாகும். ஒரு வெற்று கண்டனத்தை வீசி எறிந்துவிட்டு தனது இருத்தலைக் காட்டிக் கொண்டாலே அவர்களுக்குப் போதுமானது. தலித் மக்களின் உண்மையான விடுதலை மீது தீராத அக்கறை கொண்ட சில தலித் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் சாதிகளுக்கு இடையேயான சமரசத்தின் மூலம் தாழ்த்தப்பட்டவன் என்ற பட்டத்தையும் குறைந்தபட்சம் தீண்டாமையாவது ஒழிக்க முடியும் என நினைத்து ஜல்லிக்கட்டைக்கூட ஆதரித்துப் பேசினர். அன்று அவர் எந்த ‘சாதி மாட்டை ஆதரித்துப் பேசினாரோ அதே ‘சாதி’ மாடுதான் இன்று சங்கரை படுகொலை செய்துள்ளது. ஆதிக்க சாதி மாடுகள் தனது சாதிய மேலாண்மையை நிலைநிறுத்தும் போட்டியில் வென்றுவிட்டன. பாவப்பட்ட அடிமாடுகளோ பலிபீடத்தை நோக்கி கூனிக்குறுகி நடக்கின்றன.
பெரியார் பிறந்த மண்ணில் நாமும் பிறந்தோம் என நினைத்து இனி பெருமைப்பட முடியாது. இது ஆதிக்கசாதி வெறியர்களுக்கான மண்ணாக மாற்றப்பட்டு விட்டது. பெரியார் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்து, கோடிகளில் கொள்ளையடித்து, தமிழ்நாட்டின் மன்னர்களாகவும், மகாராணிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் பிழைப்புவாதக் கூட்டம்தாம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பெரியாரின் பெயரைக்கூட உச்சரிக்கத் தகுதியில்லாத இந்தக் களவாணிக் கூட்டமே தமிழ்நாட்டில் சாதிவெறி பிடித்த ரத்தக் காட்டேரிகளுக்கு எல்லாம் அடையாளம் கொடுத்தது.
இளவரசனின் ரத்தவாடையும், கோகுல்ராஜின் ரத்தவாடையும் காய்வதற்குள்ளாக சங்கரின் உடலில் வெட்டுக் காயங்களின் வழியாக வெளியேறிய ரத்தம் நம்மை உறையச் செய்கின்றது. யாருக்காக நாம் போராடுகின்றோம், எதை சாதிப்பதற்காக அனுதினமும் இயங்கிக்கொண்டு இருக்கின்றோம்? தலித் தலைவர்களே! சாதி ஒழிப்பை முன்னெடுக்கத் தவறிய பிழைப்புவாதிகளே! இன்னும் எத்தனை தலித்துகளின் துண்டாக்கப்பட்ட உடல்களின் மீது உங்களின் அரசியல் கோட்டையைக் கட்டப் போகின்றீர்கள்?
சாதிவெறியர்கள் தங்களது கொலைக்கருவிகள் மூலம் அரசியல் செய்கின்றார்கள், சாதிய எதிர்ப்பாளர்களான நாமோ அவர்களது பிணங்களின் மீது அரசியல் செய்கின்றோம். ஒவ்வொரு தலித்தின் துண்டாக்கப்பட்ட உடலும் சாதிய ஒழிப்புக்கான அரசியலுக்கு உரமாகாமல் சாதிவெறி அரசியலுக்கான உரமாக மாற்றப்படுவதை நீங்கள் இன்னும் உணரவில்லையா?. அல்லது அவர்களின் சாவில்தான் உங்களுக்கான வாழ்வாதாரம் இருப்பதாக நினைத்து அமைதியாகி விடுகின்றீர்களா?
இப்படி ஆதிக்க சாதிகளிடம் மண்டியிட்டு ஓட்டுப் பிச்சை வாங்குவதற்காவே கட்சி ஆரம்பித்து பெரும்பான்மை தலித் மக்களை ஆதிக்க சாதிகளின் பிடியில் சிக்கவைத்து அவர்களின் வாழ்க்கையே நாசம் செய்த உங்களை அம்பேத்கரின் வாரிசு என்று தயவு செய்து சொல்லிக் கொள்ளாதீர்கள். அது வெட்கக்கேடான ஒன்று.
இனி பொறுத்துக் கொள்வதற்கும், சகித்துக் கொள்வதற்கும் எதுவுமில்லை. முடிந்தவரை அகிம்சை, முடியாத போது வன்முறை. தலித் மக்களின் உயிரை கிள்ளுக்கீரையாக நினைக்கும் ஆதிக்க சாதி நாய்களுக்கு எதிராக ஒரு வன்மம் நிறைந்த போரை நாம் தொடங்க வேண்டி இருக்கின்றது. வார்த்தைகளால் காயப்படுத்துபவர்களுக்கு எதிராக வார்த்தைகளையும், உடலால் காயப்படுத்துபவர்களுக்கு எதிராக ஆயுதங்களையும் நாம் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சாராயக்கடைகளின் இரும்புக் கம்பிகளை உடைத்தெறிந்த நமது கரங்கள் ஆதிக்க சாதி வெறியர்களின் எலும்புகளையும் உடைத்தெறியட்டும். அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டும் அல்ல, சாதிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவதும் முதன்மையான கடமைகளில் ஒன்றாக மாற்றுவோம். சாதியை ஆதரித்துப் பேசும் ஒவ்வொரு நாயையும் மனிதகுல விரோதிகள் என்று மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். தங்களுடைய பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சாதிய அரசியலைக் கையிலெடுத்து அதன் மூலம் தலித் மக்களுக்கு எதிரான சிந்தனையைப் பரப்பும் ஆதிக்கசாதி நாய்களை அடையாளம் கண்டு கருவறுப்போம். நமக்கான நீதியை நாம்தான் நிலை நாட்டிக் கொள்ள வேண்டும். காவல்துறையோ நீதிமன்றமோ இதை ஒருபோதும் செய்யாது; செய்யமுடியாது. இதையெல்லாம் அவசர அவசியமான நடவடிக்கைகளாக நாம் மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் சங்கருக்காக அழும் குறைந்த பட்ச தகுதியைக்கூட நாம் பெறாதவர்கள் ஆகிவிடுவோம்.
- செ.கார்கி