gokulraj dalit

இளவரசனின் மரணம் நமக்குள் ஏற்படுத்திய ரணங்கள் காய்வதற்குள் அடுத்த நரபலியை வாங்கிக் கொண்டிருக்கின்றது சாதிப்பேய். மனித ரத்தத்தை குடித்துக்குடித்து வயிறு புடைத்த அந்தப் பேய் இன்னும் வீரியம் குன்றாமல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் கோகுல் ராஜ் பறையர் வகுப்பைச் சார்ந்தவர், சுவாதி கொங்கு வேளாள கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தனாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று திரும்பும் போது தீரன் சின்னமலைப் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த யுவராஜ் என்ற கவுண்டர் சாதி வெறியனால் கோகுல்ராஜ் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தலை இல்லாத கோகுல்ராஜின் உடல் ஈரோடு கிழக்கு தொட்டிபாளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 கோகுல்ராஜை கடத்திச் சென்றது கோவில் சி.சி.டீவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. மேலும் சுவாதி கொடுத்த புகாரில் கோகுல்ராஜை கடத்திச் சென்றவர்களின் காரில் தீரன் சின்னமலைப் பேரவை என்று எழுதி இருந்ததாகக் கூறியுள்ளார். இதில் இருந்தே இது ஒரு அப்பட்டமான படுகொலை என்பது தெளிவாகின்றது. மேலும் இந்த தீரன் சின்னமலைப் பேரவை என்ற அமைப்பு பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசுவின் ஆதரவு பெற்ற அமைப்பாகும். 2013 ஏப்ரல் 16ஆம் தேதி தீரன் சின்னமலைப் பேரவை சார்பாக தொகுக்கப்பட்ட பிறந்தநாள் விழா மலரை நம்முடைய மக்களின் முதல்வர் வெளியிட, சட்டமன்ற உறுப்பினரும் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவருமான உ.தனியரசு பெற்றுக்கொண்டார். சுவாதி பரமத்தி என்பதையும், தனியரசு பரமத்தி தொகுதி எம்.எல்.ஏ என்பதையும், ஏற்கெனவே இந்த சாதிவெறி அமைப்புடன் அம்மாவுக்கு உள்ள தொடர்பையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் காவல்துறையின் மெத்தனப் போக்குக்கான உண்மையான காரணம் நமக்குத் தெரியவரும்.

 திவ்யா-இளவரசன் பிரச்சினையில் கடைசிவரை குரல் கொடுத்த பல முற்போக்கு அமைப்புகள் ஏனோ இந்த பிரச்சினை பற்றி வாய் திறக்க மறுக்கின்றன.(ஒரு வேளை கவுண்டர் சாதி வெறியர்கள் மீதான பயமா? அல்லது பாசமா?) கோகுல்ராஜின் உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் போராட்டமே இதை கொலை வழக்காக பதிவு செய்ய வைத்துள்ளது. காதல் பிரச்சினையில் யாராவது கொலை செய்யப்படும் போது அதற்காகப் போராட முன்வரும் அமைப்பை வைத்துதான் இறந்து போனவர் என்ன சாதி என்று தெரிந்துகொள்ள வேண்டிய வெட்கக்கேடான நிலையிலேயே நாம் இன்னும் உள்ளோம். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் சாதியின் ஓட்டைப் பெருவதற்காக இந்த பிரச்சினையில் கள்ள மெளனம் சாதிக்கின்றன. அம்மாவின் அரசு இந்தப்பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இன்னோரு காரணம் அம்மாவின் அமைச்சரவையில் இருக்கும் பல அமைச்சர்கள் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதிலே சில பேர் இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 திவ்யா-இளவரசன் பிரச்சினைக்குப் பின் தமிழ்நாட்டில் வன்னிய சாதிவெறியர் ராமதாசால் முன்னெடுக்கப்பட்ட தலித்துகளுக்கு எதிரான அவதூறு பரப்புரையும், சாதிச் சங்கங்களின் ஒருங்கிணைப்பும் இன்று தலித்மக்களுக்கு எதிராக ஒரு அணிசேர்க்கையை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாதி வெறியர்களின் பின்னால் அணிதிரட்டப்பட்டு தீவிரமாக இயங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களின் முக்கிய வேலை என்னவென்றால் தன் சொந்த சாதிப் பெண்களை வேவு பார்ப்பதுதான். இவ்வாறு இந்த சாதிவெறியர்கள் ஒட்டுமொத்த பெண் இனத்தின் ஜனநாயகத்துக்கும் எதிரானவர்களாக மாறி இருக்கின்றார்கள். ஒவ்வொரு பெண்ணும் யாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும், யாரை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் சக்திகளாக இந்த சாதிவெறியர்கள் உருவாகி இருக்கின்றார்கள்.

 இந்தக் கொலையின் மூலம் சாதிவெறியர்கள் சமூகத்துக்கு சொல்ல வரும் செய்தி இதுதான், “தலித்துகள் சமூகத்தில் தங்களது இடம் எதுவென்று தெரிந்து செயல்பட வேண்டும். அவர்கள் தங்களது எல்லையை மீறினால் விளைவு இப்படித்தான் இருக்கும்.”

 கவுண்டர் சாதிப் பெண்களை தன்னுடைய நாவலில் இழிவுபடுத்தியதாகக் கூறி பெருமாள்முருகனை திருச்செங்கோட்டை விட்டே விரட்டிய அதே கவுண்டர்சாதி வெறியர்கள் தான் இன்று கோகுல்ராஜையும் கொலை செய்திருக்கின்றார்கள். தங்கள் சாதிப் பெண்களின் ஒட்டுமொத்த கற்பையும் குத்தகைக்கு எடுத்திருக்கும் இந்த அயோக்கியர்களின் முகத்தில் கறியைப் பூசி இருக்கின்றார் சுவாதி. ஆம், இந்த வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்ட அம்மணப் பயல்களுக்கு எதிராக அவரே காவல் நிலைத்தில் புகார் அளித்திருக்கின்றார். இது சாதி வெறியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!.

 கோகுல்ராஜின் கொலைக்கு கண்டனம் தெரிவித்த ஒரு சில அரசியல் கட்சிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் சாதியின் பெயரைக் குறிப்பிடாமல் மிக சாமர்த்தியமாக கண்டனம் தெரிவித்து தங்களுடைய பார்ப்பனிய பாசத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சுவாதிக்கு இருந்த தைரியம் கூட இந்தக் கோழைகளிடம் இல்லை.

 சாதி வெறியர்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டு நிற்கும்போது சாதிய எதிர்ப்பு, மத எதிர்ப்பு சிந்தனைகொண்ட முற்போக்கு சக்திகள் துண்டு துண்டாக பிரிந்து கிடப்பதுதான் மிகப்பெரிய அவலமாகும். நாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று நம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்பார் மாவோ. எதிரி தெளிவாக அவனது ஆயுதத்தை நம்மிடம் காட்டிவிட்டான். நாம் தான் இன்னும் தயாராகாமல் சட்டவாத சகதிக்குள் சிக்கிக்கொண்டு இருக்கின்றோம்.

- செ.கார்கி                                                                                                                                                                                                   

Pin It