புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சியை வெற்றி பெற வைக்க முடியாது என்று லெனின் கூறினார். இன்றைய உலக நடப்புகள் அதை மெய்ப்பித்துக் கொண்டு இருக்கின்றன.

நியூயார்க் நகரில் 17.9.2011 அன்று தொடங்கிய வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்ட (Occupy Wall street) இயக்கம் உலகின் கவனத்தைப் பற்றி இழுத்தது. அது அமெரிக்காவின் பிற நகரங்களுக்கு மட்டும் இன்றி உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. உண்மையான அரசியல் அறிவு பெறாத பல அரசியல் கட்சியினர், முதலாளித்துவத்திற்கு எதிரான வலுவான விசை தோன்றி விட்டது என்று கூறினார்கள். இவர்களில் தங்களை மார்க்சிய தத்துவத்தை முன்னெடுப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் இருந்தனர். அவ்வியக்கம் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை.

Leader of Syriza left-wing party Alexis Tsipras
இன்று கிரேக்க நாட்டில் 25.1.2015 அன்று நடந்த தேர்தலில் இடது சாரிக் கட்சிகள் வெற்றி பெற்றதை மிகப் பெரிய சாதனையாக எண்ணுபவர்கள் இருக்கிறார்கள். இதற்கு முந்தைய கிரேக்க அரசாங்கம் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பலரை வேலை நீக்கம் செய்ததையும், மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகளை வெகுவாகக் குறைத்ததையும் எதிர்த்து அந்நாட்டு மக்கள் சிரிசா (SYRIZA) என்ற இடதுசாரிக் கட்சியும், வேறு சில இடது சாரிக் கட்சிகளும் இணைந்து அரசை அமைக்கும் விதமாக வாக்களித்து உள்ளனர். இக்கட்சிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் முந்தைய ஆட்சியில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை வேலைக்கு எடுத்து உள்ளனர். அண்மையில் தனியார்மயம் ஆக்கப்பட்ட எண்ணெய் மற்றும் மின் உற்பத்தித் தொழில்களை மீண்டும் நாட்டுடைமை ஆக்கி உள்ளனர்.

இச்செயல்களினால் கிரேக்க நாட்டு மக்கள் மட்டும் அல்லாமல் மற்ற நாட்டு மக்களும் மகிழ்ந்து உள்ளனர். ஸ்பெயின் நாட்டு மக்கள் 31.1.2015 அன்று தலைநகரமான மேட்ரிட் (Madrid) நகரில் இலட்சக் கணக்கில் ஒன்று கூடி நம்மால் முடியும் (We can) என்று முழக்கம் இட்டு உள்ளனர். இதற்கு முந்தைய கிரேக்க அரசாங்கங்கள் பல ஆண்டுகளில் செய்ய முடியாததை, இப்பொழுது நிறுவப்பட்டு உள்ள புதிய இடது சாரிக் கட்சிகளின் அரசாங்கம் ஆறு நாட்களில் செய்து காட்டி உள்ளது என்று கூறிய அம்மக்கள் இதே போன்ற ஒரு தீர்வை வரும் நவம்பர் மாதம் ஸ்பெயினில் நடக்க இருக்கும் தேர்தலில் அளிப்பபோம் என்றும் முழக்கம் இட்டு உள்ளனர்.

இவ்வாறு கிரேக்க நாட்டு மக்கள் மட்டும் அல்லாமல் உலக மக்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டு இருக்கையில், கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் இந்த ஒரு வாரத்தில் பங்குச் சந்தை நிலை குலைந்து போய் உள்ளதை, பொருளாதார நிபுணரும் இத்தேர்தலில் நாடாளு மன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டவருமான பேராசிரியர் கோஸ்டாஸ் லபாவிட்ஸாஸ் (Costas Lapavitsas) 3.2.2015 அன்று சுட்டிக் காட்டி உள்ளார். மேலும் கிரேக்க நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஐரோப்பிய ஒன்றிய முதலாளிகளுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளதாகவும், அந்நாடு வாங்கிய கடன்களுக்காகத் திருப்பிக் கட்ட வேண்டிய பணத்தை, மேலும் கடன் வாங்காமல் கட்ட முடியாது என்றும், இந்நிலையைப் பயன் படுத்தி, ஐரோப்பிய ஒன்றியப் பெருமுதலாளிகள் கிரேக்க நாட்டின் புதிய அரசை வெகு மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும், தங்கள் இலாப வேட்டைக்குச் சாதகமாகவும் ஆட்டிப் படைக்க முடியும் என்றும் அவர் கூறி உள்ளார்.

அவர் கூறியது போலவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கிரேக்க நாட்டின் புதிய அரசினால், வரும் மார்ச் மாதம் வரையில் தான் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்க முடியும் என்றும், அதன் பின் நாட்டின் பொருளாதார இயக்கத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளிடம் பணிய நேரிடும் என்றும் 17.2.2015 அன்று கூறி உள்ளனர்.

மேலும் கிரேக்க நாட்டின் புதிய அரசு தங்கள் நாடு செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிக் கட்டும் கால அவகாசத்தை ஆறு மாதங்கள் நீட்டிக்குமாறு விடுத்த வேண்டுகோளை ஜெர்மன் அரசு19.2.2015 அன்று நிராகரித்து உள்ளது.

ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்கள் அந்நாடுகளின் மக்கள் தாங்கள் அனைவரும் கிரேக்க நாட்டு மக்களின் சார்பில் இருப்பதாகவும், அந்நாட்டின் கடன்கள் முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் பேரணி நடத்தி முழங்கிக் கொண்டு உள்ளனர். ஆனால் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் அரசுகள் மக்களின் குரலைக் கேட்க ஒரு சிறதும் ஆயத்தமாக இல்லை.

இதனால் இன்று மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சி அமைத்து இருக்கும், உலக மக்களின் ஆராவாரமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டு இருக்கும் கிரேக்க நாட்டின் இடது சாரிக் கட்சிகளின் அரசு, மக்கள் நலன்களை முன்னெடுக்க முடியாமல் முதலாளிகளின் இலாப வேட்டையில் சிக்க வேண்டி இருக்கும். அதாவது தேர்தல் வெற்றியும், உலக மக்களின் உற்சாகமான வரவேற்பும் மக்களுக்கு உண்மையில் எவிவிதப் பயனும் அளிக்கப் போவது இல்லை.

அப்படி என்றால் உண்மயான தீர்வை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? "என்ன செய்ய வேண்டும்?" என்ற நூலில் லெனின் அறிவுறுத்திய படி மக்களிடையே புரட்சிகரமான உணர்வை ஏற்படுத்தி, புரட்சியை வழி நடத்த ஒரு ஒழுங்கமைவான கட்சியைக் கட்ட வேண்டும். "புரட்சி என்பது ஒரு மாலை நேர விருந்தைப் போன்றதோ, பூத்தையல் போன்றதோ அல்ல; அது ஒரு வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை வலுவில் பறித்துக் கொள்ளும் செயலாகும். ஆகவே அது இனிமையாக இருக்காது; எளிமையாகவும் இருக்காது. ஆபத்து நிறைந்த அச்செயலைத் துணிந்து மேற்கொள்வது தான் புரட்சி" என்று மாவோ சொன்னதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இவற்றைச் செய்யாமல், தேர்தல் அரசியலில் ஆர்வம் காட்டுவதும், வலுவில்லாத வெற்றிகளைக் கொண்டாடி மகிழ்வதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளத் தான் பயன்படும்.

- இராமியா

Pin It