எவ்வளவு நாள் தான் இப்படி மாசச் சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவது? ஏதாவது ஒரு பிசினஸ் பண்ணி பெரிய ஆள் ஆகிவிடவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்?

உங்களைப் போல் நாட்டில் பல பேர் இருக்கிறார்கள். அதிகரித்து வரும் வேலைப் பளு, சொற்ப சம்பளத்திற்கு அடிமை வேலை என்று அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை நாட்டில் நாளுக்கு நாள் கூடிவருகிறது. அப்படிப்பட்டவர்களின் ஒரே சிந்தனை ‘ஏதாவது ஒரு பிசினஸ்’ தான்!

businessபிசினஸ் என்பதில் எல்லோரும் உறுதியாக இருப்பார்கள். ஆனால் என்ன பிசினஸ் பண்ணலாம் என்பதில் பலரும் குழம்பி விடுவார்கள். சரி! நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம் என்று போனால் எல்லோருமே சொல்லி வைத்தது போல, மல்டி லெவல் மார்க்கெட்டிங், ஊறுகாய் போட்டு விற்பது, இயற்கைக் காய்கறிகள் விற்பனை என்று ஒரே விதமான ஆலோசனைகளைக் கொடுப்பார்கள். அந்த ஆலோசனைகள் எல்லாமே கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறையில் நமக்கு ஒத்து வராது. பிசினஸ் பண்ணலாம் என்று நினைத்த நாம் சற்றே சோர்ந்து போய் விடுவோம்.

அப்படியானால் நாம் எப்படித் தான் வியாபாரத்தைத் தேர்ந்தெடுப்பது? நாமும் எப்போது தான் ‘மாசச் சம்பளப்’ பிரச்சினையில் இருந்து விடுபடுவது?

இருக்கும் வேலையை விட்டுவிடாதீர்கள்

உங்கள் குடும்பம் உங்களுடைய ஒற்றை வருமானத்தை நம்பி இருந்தால், ஏற்கெனவே செய்யும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடாதீர்கள். வியாபாரத்தில் ‘இலாபம்’ என்பது எப்படி அளவுக்கு அதிகமாக வருமோ அதே மாதிரி தான் நட்டமும்! வியாபாரம் பண்ண முடிவு எடுத்து விட்டால் நிதானமாக யோசித்து குறைந்தது ஒரு ஆறு மாதச் சம்பளத்தையாவது சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் முக்கியமானது இந்தத் தொகை உங்கள் வியாபாரத்திற்கான முதலீடு இல்லை. இதைக் குடும்பச் செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வியாபாரம் தொடங்கப்பட்ட முதல் சில மாதங்களுக்கு எதிர்பார்த்த இலாபத்தை நம்மால் அடைய முடியாமல் போகலாம். அந்த மாதிரி நேரங்களில் இந்தத் தொகை ரொம்ப உதவியாக இருக்கும்.

குடும்பத்தின் ஒத்துழைப்பு – ரொம்ப முக்கியம்

முழு நேரமும் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவருக்குக் குடும்பத்தின் ஒத்துழைப்பு என்பது இன்றியமையாதது. நீங்கள் எவ்வளவு பெரிய வியாபாரக் காந்தமாக இருந்தாலும் சரி, வீட்டில் மனைவியோ பெற்றொரோ ஒத்துவரவில்லை என்றால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு போகாது! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் - வீட்டில் சண்டை போட்டுவிட்டு வேலைக்குப் போனால், வேலையே ஓடாது! மனம் அந்தச் சண்டையையே நினைத்துக் கொண்டிருக்கும். வேலையிலே இப்படி என்றால், நாமே முழு நேரம் செய்யப் போகும் வியாபாரத்தில் என்ன ஆகும்? எனவே என்ன வியாபாரம் ஆனாலும் சரி! குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு என்பது கட்டாயத் தேவை!

ஒத்துழைப்புத் தேவை என்பதற்காக, வீட்டில் இருப்போரைத் தொடர்ந்து மனம் மாற்ற முயற்சி பண்ணலாம். ஆனால் அவர்களுக்கு மன அளவில் நெருக்கடி கொடுத்து ஒப்புதல் பெறாதீர்கள். மனைவியோ, அப்பா அம்மாவோ சகோதரரர்களோ வியாபாரம் தொடங்குவதை விமர்சித்தால் கோபப்படாதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் நன்மைக்கே யோசிப்பவர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய சின்னச் சின்ன சந்தேகங்களையும் பொறுமையாக உட்கார்ந்து கேளுங்கள். அவர்கள் தரப்பு நியாயங்களையும் புரிந்து கொள்ளுங்கள். அந்தச் சந்தேகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்குங்கள். ஒருவேளை அவர்களுடைய சந்தேகம் உங்களுக்கும் நியாயமாகப் பட்டால், வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பதே நலம்! அவர்களாகவே முன் வந்து ‘பிசினஸ் பண்ணலாம்’ என்று சொல்லும் வரை பொறுத்திருப்பதே பிசினஸ் தொடங்குவதற்கான முதல் வெற்றி!

என்ன வியாபாரம் பண்ணலாம்?

இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காமல் தான் பலரும் பிசினஸ் பற்றிப் பேசுவார்கள்; ஆனால் ஈடுபட மாட்டார்கள். ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களில் ஒருவருக்குத் தமிழ் நன்றாக வரும்; இன்னொருவருக்குக் கணக்கு என்றால் உயிராக இருக்கும். வேறொருவர் சமூக அறிவியலில் ஆர்வமுடையவராக இருப்பார். ஒருவருக்குப் பிடிக்கும் பாடம் அதே வகுப்பில் பக்கத்துப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதால் இன்னொருவருக்கும் வரும் என்று நம்புவது முட்டாள் தனம்! இதே தான் வியாபாரத்திற்கும் பொருந்தும்.

நம்முடைய நண்பர் ஒருவர் தண்ணீர் பாட்டில் பிசினஸ் பண்ணிக்கொண்டிருப்பார். அவருக்குச் சொந்தமாகக் கிணறு இருந்திருக்கும். இன்னொருவர் இயற்கைக் காய்கறிகள் விற்பவராக இருப்பார். அவருக்கு விவசாயிகளோடு நெருங்கிய தொடர்பு இருக்கும். இன்னொருவர் எல்.ஐ.சி ஏஜெண்டாக இருப்பார். அவருக்கு யாரையும் எளிதில் மயக்கும் பேச்சுத்திறமை இருந்திருக்கும். மூன்று பேருமே அவரவர் தொழிலில் வெற்றிக் கொடி நட்டிருப்பார்கள். நீங்கள் அவர்களுடைய வெற்றியையோ இலாபத்தையோ பார்த்து, நீங்களும் அந்த வியாபாரம் பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இப்படி யோசிப்பது பல நேரங்களில் எதிர்பார்த்த வெற்றியைத் தராது. பிசினசில் ஈடுபட்டு ஜெயித்தவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்களுடைய தனித்திறமை என்னவென்று குறித்து வையுங்கள். அந்தத் தனித்திறமை உங்களுக்கு இருக்கிறதா என்று ஒரு தடவைக்குப் பல தடவை நன்றாக யோசியுங்கள். உங்கள் பெற்றோர், மனைவி, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் பேசுங்கள். அவர்களிடம் ‘உங்களுடைய தனித்திறமையாக அவர்கள் எதை நினைக்கிறார்கள்’ என்பதைக் கேட்டுத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இப்படிப் பேசி உங்களுடைய தனித்திறமையைக் கண்டுபிடித்த பிறகு அதற்கேற்ற தொழில் என்ன என்று யோசியுங்கள். அந்தத் தொழில் எல்லோரும் பண்ணக்கூடியதாக இருக்கலாம். யாருமே பண்ணாததாகவும் இருக்கலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் திறமை எதில் இருக்கிறதோ அதில் வெற்றி நிச்சயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மைனசும்’ முக்கியம்

உங்கள் திறமையைத் தெரிந்து கொள்வது எந்த அளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் ‘மைனஸ்’ என்ன வென்று தெரிந்து கொள்வது! பிளசும் மைனசும் சேர்ந்த கலவை தான் மனிதர்கள். எனவே வெறும் பிளசை மட்டும் தெரிந்துகொண்டு வியாபாரத்தைத் தொடங்குவது என்பது அபாயச் சங்கிலி இல்லாத இரயிலைப் போன்றது! இக்கட்டான நேரத்தில் நம்மைப் படுத்தி எடுத்து விடும். ‘மைனஸ்’ என்பதில் போதிய முன்னனுபவம் இல்லாமை, புதிய முயற்சி, தொழிலுக்கான சரியான காலம், இடம் எனப் பல விசயங்கள் அடங்கும். இவற்றில் நம்முடைய ‘மைனஸ்’ என்ன என்பதைச் சரியாகக் கண்டுபிடித்து அதற்கு உரிய மாற்று வழியையும் கையில் வைத்திருக்க வேண்டும். மாற்று வழி இருந்தால் மைனசும் பிளசாக மாறி வெற்றியைச் சீக்கிரம் கொண்டு சேர்க்கும்.

சக வியாபாரிகளிடம் பேசுங்கள்

வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன் சக வியாபாரிகளிடம் வியாபாரத்தின் தற்கால நிலை, எதிர்காலம் ஆகியன பற்றிப் பேசுங்கள். ஒருவேளை உள்ளூரில் இப்படிப் பேசுவது நடைமுறையில் ஒத்துவராது என்று நீங்கள் நினைக்கலாம். குறைந்தது உங்களுக்குத் தெரிந்த வெளியூருக்குப் போய் அங்குள்ள வியாபாரிகளிடமாவது பேசிப் பாருங்கள். பல புத்தங்களில் படித்துத் தெரிந்து கொள்வதை விட அந்த வேலையைச் செய்யும் ஒருவரிடம் பேசிப் பார்ப்பது நிறைய ஐடியாக்களைத் தரும். சில ஆண்டுகளுக்கு முன்பு டெலிபோன் பூத் நடத்துவது இலாபகரமான தொழிலாக இருந்தது. ஆனால் இன்று அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. சைக்கிள் கடை, கேசட் கடை என்று பல தொழில்களை இப்படிக் காட்டலாம். எனவே தொழிலின் தற்போதைய நிலை என்பது மட்டும் இல்லாமல், எதிர்காலம் என்பதும் முக்கியமானது தான். எல்லோருமே இப்போது செல்போன் வைத்திருக்கிறார்கள். எனவே ரீசார்ஜ் கடைகள் வைப்பது நிறைய இலாபம் தரும் என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் ரீசார்ஜ் கடைக்காரர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் இருக்கலாம். கறிக்கடை வைத்தால் நல்ல இலாபம் கிடைக்கும் என நமக்குத் தோன்றும். ஆனால் அதில் வரும் நடைமுறைச் சிக்கல்கள் என்னவென்று தெரியாமல் இருப்போம். எனவே போதுமான அளவு அனுபவங்களைத் தொழில் தொடங்குவதற்கு முன்பே திரட்டிக்கொள்ளுங்கள். அந்த அனுபவங்கள் பல நேரங்களில் நமக்குக் கை கொடுக்கும்.

ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்

ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள் என்பது யாருக்குப் பொருந்துமோ தெரியாது – ஆனால் தொழில் தொடங்குபவர்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். பிசினஸ் தான் என்று முடிவு செய்து விட்டால், முதலில் பகுதி நேரமாக அதே தொழிலைச் செய்து பார்க்கலாம். வாரத்திற்கு இரண்டு நாட்களோ தினமும் ஒரு மணிநேரமோ முயன்று பார்ப்பது நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். அந்த அனுபவத்தின் அடிப்படையில் முழுநேரமாகத் தொழில் தொடங்கும்போது செய்ய வேண்டிய மாற்றங்களைக் குறித்து வைத்துக் கொள்ளலாம்.

குறிக்கோள் இல்லை என்றால் வெற்றி இல்லை

இப்படிப் பல விசயங்களை அலசித் தொழில் தொடங்கிய பிறகு குறுகிய காலக் குறிக்கோள் என்ன, நீண்ட காலக் குறிக்கோள் என்ன என்று முடிவு செய்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் குறிக்கோளை நோக்கி நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்களா என்று தனக்குத் தானே கேட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அன்றன்றைய கணக்கு வழக்குகளை எழுதி வைப்பது மாதக கடைசியில் நம்முடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள உதவும். தினசரி செய்தித்தாள் விற்கும் கடை விற்கும் ஒருவருக்கு எந்தச் செய்தித்தாள் எந்தக் கிழமைகளில் அதிகம் விற்கும் எனத் தெரிந்திருக்க வேண்டும். உணவகம் நடத்தும் ஒருவருக்கு அவருடைய கடையில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் உணவு என்ன என்று கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் புள்ளி விவரங்கள் நம்மிடம் இருந்தால் திட்டமிடல் மிக எளிதாக இருக்கும். சிறந்த திட்டமிடலே பாதி வெற்றி என்பதை மறந்து விடாதீர்கள்.

மனிதாபிமானமில்லாத் தொழிலால் பயனேதும் இல்லை

தொழில் தொடங்கி வெற்றி பெற்ற பிறகு பலரும் வழுக்கி விழும் இடம் இது தான்! ஓரளவு காசு பார்த்த பிறகு காசைப் பெருக்குவது எப்படி என்பதை மட்டுமே பலரும் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அளவு கடந்த இலாபத்திற்குப் பொருட்களை விற்பது, வாடிக்கையாளர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது, வேலையாட்களைச் சக்கையாகப் பிழிந்தெடுப்பது, சக வியாபாரிகளை நசுக்குவது என மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள். இது ஒரு மோசமான போக்கு! இப்படிச் செய்வது பார்ப்பதற்கு வெற்றி போலத் தென்பட்டாலும் நீண்ட காலத்தில் பெரிய அளவில் நம்மைப் பாதித்து விடும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் – நம்மை யார் நசுக்கினாலும் சரி, திறமை இருந்தால் நாம் முன்னுக்கு வரப் போகிறோம். இதே கருத்து, போட்டியாளர்களுக்கும் பொருந்தும். நாம் எவ்வளவு தான் அவர்களை நசுக்கினாலும், திறமை இருந்தால் அவர்கள் மீண்டு வந்து விடுவார்கள். எனவே இவை போன்ற செயல்கள் நம்முடைய நேரத்தைத் தான் வீணடிக்குமே தவிர வேறு பலன் எதையும் தராது.

பெரிய தொழிலதிபர்களாக வெற்றிக்கொடி நாட்டியவர்களுடைய பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். அவர்களுக்கு இடையே இருக்கும் பொதுவான குணங்களைப் பட்டியல் படுத்துங்கள். குறைந்த அளவு இலாபம், உயர்ந்த தரம், வாடிக்கையாளர்களுக்கு மரியாதை, ஊழியர்களுக்குப் போதிய சம்பளம், போதிய ஓய்வு, போட்டித் தொழிலதிபர்களிடமும் மரியாதை ஆகியன அப்பட்டியலில் கட்டாயம் இடம்பிடித்திருக்கும்.

இப்போது நாம் பார்த்தவை மட்டும் இல்லாமல், அலையும் காற்றும் திசையும் மிரட்டும் படகுப் பயணம் போன்றது தான் வியாபாரம்! அவற்றிற்கு ஒருமுறை உங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும்! எவ்வளவு பெரிய சுறாவையும் வலையில் வீழ்த்தி விடலாம்! வெற்றி நமதே!

-       முத்துக்குட்டி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It