kaushik basuபுது தில்லியில் 'இந்தியாவிற்கான யோசனைகள்' (Ideas for India) என்ற அமைப்பு 21.12.2014 அன்று, உலகப் பொருளாதாரத்தைப் பற்றிய ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில் உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணரும் (Chief Economist), இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகருமான, முனைவர் கெளசிக் பாசு (Dr.Kausik Basu) கலந்து கொண்டு பேசினார். இவர் பேசுகையில் ஏழ்மையை ஒழிப்பது தான் உலக வங்கியின் நோக்கமாக இதுவரையிலும் இருந்து வந்தது என்றும், ஆனால் வளர்ச்சியின் பயன்கள், உள்ளோர் இல்லோர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையும் இப்பொழுது நோக்கமாகக் கொண்டு உள்ளது என்றும் கூறினார். மேலும் இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலான மேட்டுக் குடி மக்கள் உலகத் தரத்தில் கல்வி பெறுவதாகவும், மிகப் பெரும்பான்மையாக உள்ள மற்றவர்களுக்குத் தரம் குறைந்த கல்வி அளிக்கப்படுவதாகவும் கூறி விட்டு, உலகம் முழுவதும் பணம் படைத்தவர்கள் மேலும் மேலும் ஏற்றம் அடைவதாகவும், இல்லாதவர்கள் மேலும் மேலும் தாழ்ந்து கொண்டே போவதாகவும் கூறினார்.

பொருளாதாரத்தை முழுக்க முழுக்க, சந்தையின் பிடியில் விடுவதால் இந்நிலை ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே சந்தைப் பொருளாதார முறை தோல்வி அடைந்து விட்டதாகவும் அவர் கூறினார். அது போலவே பொருளாதாரத்தை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் நடத்தும் முறையும், அதாவது சோஷலிச முறையும், தோல்வி அடைந்து விட்டது என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு ஒரு விஷயத்தின் இரு அம்சங்களைப் பற்றிப் பேசும் போது, ஒரு பக்கமும் சாராமல் நடுவில் இருந்து கொண்டு பேசுவது, பலருக்கு ஒரு விதமான 'நாகரிகம்' (fashion) ஆகிவிட்டது. இதன் மூலம் தாங்கள் ஆழ்ந்து சிந்திப்பவர்கள் என்றும், நடுநிலைவாதிகள் என்றும் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். ஆனால் அது சரியா?

உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் இருப்பது எப்படி நடுநிலையாக இருக்க முடியும்? பொய்க்கு எதிராக உண்மையின் பக்கம் உறுதியாக நிற்பது தானே உண்மையான நடுநிலையாக, நியாயமாக இருக்க முடியும்?

அது போல் முதலாளித்துவப் பொருளாதார முறைக்கு முற்றிலும் எதிராகவும், சோஷலிச முறைக்கு முற்றிலும் சார்பாகவும் இருப்பது தான் சரியான நிலைப்பாடு ஆகும்.

முதலாளித்துவப் பொருளாதார முறையில் உற்பத்தியான பொருளின் மிகை மதிப்பு அதாவது இலாபம், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படாமலும், மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படாமலும், முதலாளிகளின் தன்னிச்சையான திடீர் ஆசைகளுக்குப் பயன்படுவதால், பொருளாதார நெருக்கடி தவிர்க்க முடியாமல் போகிறது. அது மட்டும் அல்ல. உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையயோன ஏற்றத் தாழ்வின் இடைவெளி மிகுந்து கொண்டே போகிறது. ஆகவே மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் பார்த்தால் மட்டும் அல்ல; பொருளாதார நெருக்கடியை வைத்துக் கொண்டு பார்த்தாலும், முதலாளித்துவப் பொருளாதார முறை தோல்வி அடைந்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடியும். இதை வெளிப்படையாகக் கூறுவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அது மட்டும் அல்ல. எந்த விதமான சீர்திருத்தங்களும், முதலாளித்துவத்தைத் தீமையற்றதாக ஆக்கி விட முடியாது.

ஆனால் பொருளாதாரத்தை முற்றிலும்அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் சோஷலிச முறை அப்படி அல்ல. இம்முறையில் மக்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு, பண்டங்கள் உற்பத்தி செய்யப்படும். இம்முறையில் உருவாகும் மிகை மதிப்பு, மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற சமூகப் பணிகளுக்குப் பயன்படுகிறது. ஆகவே தன்னிச்சையான திடீர் ஆசைகளை நிறைவேற்றும் பண்டங்களுக்குக் கிராக்கி (demand) ஏற்படுவது இல்லை; மக்களுக்குத் தேவைப்படாத பண்டங்களின் உற்பத்தியில் இயற்கை மூலாதாரங்கள் செலவிடப் படுவதும் இல்லை. மக்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், பண்டங்கள் விற்பனை ஆகாமல் தேக்க நிலை ஏற்படுவது இல்லை; பொருளாதார நெருக்கடி ஏற்படுவதும் இல்லை.

சோஷலிசப் பொருளாதார உற்பத்தி முறையைக் கையாள்பவர்களின் திறமைக் குறைவினாலோ, பொதுமக்களின் புரிதல் குறைவினாலோ, முழுமையாக அழியாமல் இருக்கும் சுரண்டல்வாதிகளின் சாகசத் தாக்குதல்களினாலோ இம்முறையில் பிரச்சினைகள் ஏற்பட நிச்சயமாக வாய்ப்பு உள்ளது.

ஆனால், இதன் காரணமாக மீண்டும் சுரண்டல்வாதிகள் சுரண்டுவதற்கு வழி திறந்து விடவேண்டும் என்று பொருளாகாது. நோயில் இருந்து குணம் அடைய, மருந்து கசப்பாக இருந்தாலும் உட்கொள்ள வேண்டி இருப்பது போல, சோஷலிச முறையை அமல்படுத்துவதில் சிரமங்கள் நேரிட்டாலும் அவற்றைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு, சந்தைப் பொருளாதார முறையில் குறைபாடு இருப்பது போல, சோஷலிச முறையிலும் குறைபாடு உள்ளது என்று கூறி, ஆகவே இரு முறைகளையும் அனுமதிக்க வேண்டும் என்று வாதாடுவது சுரண்டல் முறையை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று துடியாய்த் துடிப்பவர்களின் வாதமே.

ஆனால் இவர்கள் நடுநிலைவாதிகள் போல வேடமிட்டு ஏய்க்கப் பார்க்கிறார்கள்.

சந்தைப் பொருளாதாரம், நெருக்கடியைப் பிரிக்க முடியாத அம்சமாகக் கொண்ட உற்பத்தி முறை. சோஷலிசப் பொருளாதாரமோ மக்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு செயல்படும் உற்பத்தி முறை. இவ்விரண்டில் சோஷலிசப் பொருளாதார உற்பத்தி முறை மட்டுமே வேண்டும் என்று சொல்வது தான் நடுநிலையும் நியாயமும் ஆகும். இவ்விரண்டும் வேண்டும் என்பது பாலையும் நஞ்சையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறுவது போல் தான் ஆகுமே ஒழிய, நடுநிலை ஆகாது.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.12.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It