“கார்ட்போர்ட் பெட்டியில்

     அவர்கள் இறந்த குழந்தையைப் புதைப்பதைக் கண்டேன்.

     பெட்டியின் மீது

     ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி

     முன்னேற்றமே எமது சிறந்த தயாரிப்பு”

-லூயி அல்ப்ரெடோ அரோகோ

மனிதத் தவறுகளால் நேர்ந்த பேரழிவுகளின் துயரம் நிறைந்த போபாலின் இழப்பதற்கு எதுவுமற்ற கொடிய வெற்று நிலத்தின் எஞ்சிய நினைவுகளின் முப்பதாவது ஆண்டில், ஆயிரக்கணக்கான மனித சாம்பரின் மீதும், சாபங்களின் மீதும் இந்திய அதிகாரவர்க்கத்தின் ஆதரவோடும் துணையோடும் தப்பிச் சென்ற ஆண்டர்சனின் இயற்கையான மரணம் இறுதியில் முற்று முழுதாகத் தனது 79 வயதில் எவ்வித குற்ற உணர்வுமின்றி நிகழ்ந்துதான்விட்டது. ஆண்டர்சனின் மரணம் சொல்வதெல்லாம் இந்தியாவில் எலிகளைவிட மனித உயிர்கள் என்பது மிக மலிவானவை என்பதைத்தான். ஆண்டர்சன் எல்லா வழக்குகளிலிருந்தும், எல்லா குற்றங்களிலிருந்தும் எல்லா பொறுப்புகளி லிருந்தும், எல்லா ஆமோதிப்புகளிலிருந்தும் தனது ஒரு போதும் திரும்ப வேண்டியிராத மரணத்தின் வாயிலாக தப்பிக் கொண்டுவிட்டார். போபால் மக்களின் சாவு எப்படி நேர்ந்தது என்பதை தெரிந்திருந்த அமெரிக்கா விரும்பிய ஆண்டர்சனின் மரணமும்கூட இப்படியானதுதான். அதனால்தான் அலட்டிக் கொள்ளாமல் அவரது மரணத்தை ஒரு திங்கள் கழித்து ஒத்துக் கொண்டுள்ளது.

warren andersonஆண்டர்சன் என்பவர் அன்றைக்கு போபால் விசவாயுவான மெதில் அய்சோசயனைட் கசிவிற்கு காரமான யூனியன் கார்பைட் ஆலைக்குப் பொறுப்பானவர் மட்டுமல்ல இந்திய அதிகாரவர்க்கம், காவல், நீதி வழங்கு துறைகள், என்பவை யாருக்கானவை என்பதையும் நமக்கு ஒருசேர சொன்னவர். விபத்திற்கு முன்னரும் பின்னரும் விசவாயுவின் முழு இயல்பையும் போக்கையும் அறிந்திருந்த ஆண்டர்சன் ஆலையிலும், அதனை சுற்றி வதிந்திருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கும் பேரிடர் மேலாண்மை என்ற ஒன்று தேவைப்படவில்லை என்ற முடிவிற்கு வரும் துணிச்சலை எங்கிருந்து பெற்றிருக்க முடியும் என்பதை ஊகித்து அறிவது கடினமானதல்ல. சொல்லப்போனால் இதே யூனியன் கார்பைடு ஆலையை அமைக்க கனடா நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து துரத்தியடித்த நிலையில், சொந்த நாடான அமெரிக்காவின் சட்டத்திட்டங்கள் கடுமை காட்டியமையாலும் கொல்வதற்கு எளிதான மக்கள் நிரம்பிய, இந்திய மண் ஆண்டர்சனுக்கும், அவரது நிறுவனத்திற்கும் இசைவளித்தது.

1984 திசம்பர் 2 ஆம் திகதி அன்றய நாளில் நிகழ்ந்தது விச வாயு விபத்து என்பதை சாதாரண மக்களால் ஊகித்தறிய இயலாமலே இறந்து போனது நள்ளிரவு உறக்கம் மட்டும் காரணமல்ல, இப்படி ஒன்று நடந்துவிட்டது என்பதை உடனடியாக அறிந்து கொண்டும் தூங்குவது போல பாசங்கு செய்த அரசதிகார வர்க்கமும்தான் காரணம். விபத்தில் உயிர் ஊசாலாடிக் கொணடிருந்த பல்லாயிரக் கணக்கானோரை கைவிட்டுவிட்ட அரசு, அன்றிவே ஆண்டர்சன் என்ற ஒற்றை மனிதரை மட்டும் காப்பாற்றி அக்கரை சேர்த்தது. என்றாவது ஒருநாள் வாயு விபத்து நடக்கும் என்பதை அறியாதவரல்லர் ஆண்டர்சன். நிறுவனத்திற்கான இயந்திரங்கள் முடிவானபோதே அவை குறைபாடு உடையவை என்பதை சோதனையில் அறிந்திருந்தவர்தான் அவர். மேலும் 10 டன் வரை தாங்கக் கூடிய ஆலையின் கொள்கலனில் 40 டன்வரை வெகு அலட்சியமாக உயிர்க் கொல்லி வாயுக்களை அழுத்தி வைத்த குற்றவாளியும் அவர்தான் ஆனால் விபத்து நடந்தபோது அவர் பதட்டப்பட்டாரில்லை. அவரது இதயமும், முகமும் வேதனையில் துடிக்கவில்லை, வாடவில்லை. வாயுவை கசியவிட்ட அவரது கண்கள் கசிந்திருக்கவில்லை. ஏனெனில் அவர் மட்டுமே குற்றவாளியில்லை என்பது அவருக்குத் தெரியும், பல பேரைத் தாண்டியே விசாரணையின், நீதியின் கரங்கள் அவரை தொட வேண்டியதிருக்கும் என்பதையும் அறியாத அப்பாவியல்லர். அதனால்தான் அதற்குள் அவரை நம் மக்கள் பிரதிநிதி என்ற ஆண்டர்சனின் பிரதிநிதிகள் தனி விமானத்தில் இந்தியத் தன்மானத்தோடு சேர்த்து அனுப்பிவைத்தனர். அவரோ வசதியாக அமெரிக்காவின் மடியில் அமர்ந்து கொண்டு இந்தியாவை நலம் விசாரிப்பவராக இருந்தார்.

விபத்துக்கு காரணமான மெதில் அய்சோசயனைடு எனும் ஆலகாலம் என்பதை சொன்ன அரசுக்கு, ஆண்டர்சன் குற்றவாளி என்று சொல்ல தயக்கமிருந்தது. அதன்பின்னால் அமெரிக்க இலஞ்சமும், மிரட்டலு மிருந்தது. உலகின் மிக மோசமான விபத்திற்கு சமூகத்தின் விளிம்பு நிலை மக்களைப் பலி கொடுத்த அதிகாரவர்க்கம், விச வாயு பரவி நின்ற நிலையில் மருத்துவ மனைகளைத் தேடி ஓடிவந்தவர்களுக்கு வாயுவின் தீவிரத்தைக் குறைக்கும் மருந்தான சோடியம் தியோ சல்பேட் ஊசி மருந்தை ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொண்டுவிட்டது. அதற்கு காரணம் மருந்தின் பற்றாக்குறை அல்ல, மாறாக, கசிந்தது குறிப்பிட்ட வாயுவு என்பதை அடையாளப்படுத்தவும் அதே மருந்துதான் தேவைப்படுவதாக இருந்தது. மக்கள் செத்தொழிந்தாலும், தங்களை வாழ வைக்கும் பன்னாட்டு நிறுவனத்தை காப்பாற்றுவது என்று முடிவெடுத்த அதிகார அரசியல்தான். இன்றைக்கு அணு விபத்து ஏற்பட்டாலும் தொடர்புடைய நிறுவனங்களோ, நாடுகளோ பழியை சுமக்காமல் இழப்பீட்டை தானே ஒத்துக் கொள்ளும் நிலைக்கு வந்து நிற்கிறது. போபால் நிகழ்வு அதற்கு ஒரு முன்னோட்டமாகும்.

நீதியற்ற மரணம் என்பதை பதியவே இங்கு சம்மதமில்லாதபோது அதை நீர்த்துப்போகச் செய்யும் வேலையில் ஈடுபட்ட ஆண்டர்சனின் உள்ளூர் அடியாட்களைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது. விபத்து நடந்த நாளில் காவல்துறையில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் காணமல் போயிருந்தது ஆண்டர்சன் மட்டுமல்ல பலி கொடுக்கப்பட்ட போபால் மக்களுக்கான நீதியும்தான். கடந்த முப்பது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டுத் தொகையை இழக்கவே சம்மதிக்காத யூனியன் கார்பைடு ஆலை, போபால் மக்களின் நம்பிக்கையை இழந்தாலும், இங்கு முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் வழங்கிக் கொண்டுள்ளன.

விசவாயுக் கசிவை வெளி சொல்லவே தயங்கிய அரசு, ஆயிரக்கணக்கில் மக்களை பலிகொடுத்துவிட்டு ஆண்டர்சனைத் தப்பவிட்ட அதே அரசுதான், மக்கள் சார்பில் இழப்பீடு கேட்டு நீதிமன்றமும் சென்றது. இழப்பீட்டின் தொகையை யாதொருவரும் கூடுதலாக கேட்டுவிடக்கூடும் என்றோ அல்லது, பல தவறுகள் வெளியே கசிந்துவிடும் என்றோ தெரியவில்லை. ஆனால் பல குழறுபடிகள் மட்டும் எதிர்பார்த்தவாறே நடந்தேறச் செய்தன. 3.3 பில்லியன் டாலர் இழப்பீடுத் தொகையாக கேட்ட அரசு இறுதியில் 470 மில்லியன் டாலருக்கு பாதிக்கப்பட்ட மக்களை ஒரு தரப்பாகவே கருதாமல் எளிதாக ஒப்புக்கொண்டது. நீதி மன்றமும் வலுவான காரணங்கள் ஆண்டர்சன் மீதும், நிறுவனத்தின் மீதும் இருந்தும், அதாவது வாயு கசிவதற்கு வாய்ப்புகள் ஏராளமாக இருந்ததாக நீதிமன்றம் ஒப்புக் கொண்டாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர கடைபிடிக்கவில்லை என்பதை கடிந்து கொண்டாலும், குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வெறும் கவனக் குறைவு என்ற பிரிவின் கீழ் மிகக் குறைத்தே வழங்கியது.

ஒரு நரகத்தை மண்ணில் கொண்டு வருவதும், ஒரு பன்னாட்டு நிறுவனத்தை கொண்டுவருதும் ஒன்றுதான் என்பதை போபால் நமக்கு தொடர்ந்து உணர்த்தியவாறுள்ளது. மக்களின் மரணத்தை ஒத்துக் கொண்டாலும் கசிந்தது வாயு என்பதை ஒத்துக் கொள்ளாத அரசதிகாரம், நச்சு வாயுக்களின் பாதிப்பு கார்பைடு ஆலைக்கு அப்பால் 40 கி.மீ. வரை பரவியிருந்தது என்பதை லேசில் ஒத்துக் கொண்டுவிடவில்லை. அரசு சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவர்களடங்கிய 20 க்கும் மேற்பட்ட குழுக்கள் தமது முடிவுகளை இறுதிவரை வெளியிட முன்வரவில்லை. பாதிக்கப்பட்டது மக்கள், என்பதை காட்டிலும் பன்னாட்டு நிறுவனம்தான் என்பது நீதி வழங்குதுறைகள், காவல்துறை, மருத்துவர்கள் என அதிகாரவர்க்கத்தின் மேலடுக்கு அத்தனையும் கவலைப்பட்ட ஒன்றாகும். வாயுக் கசிவில் ஏற்பட்ட பிணிகள், தலைமுறையை பாதிக்கும் மரபணு கோளாருகள் உட்பட யாதொன்று பற்றியும் ஒரு மருத்துவர் கூட வாய்த் திறக்க முன்வராதது நமது சனநாயகத்தின் விரிந்து பரந்த தன்மைக்கு ஒரு சவாலாகும். அன்றைக்கு அரசு புள்ளி விபரங்களின் படி விசவாயு நிவாரண மருத்துவ மனையில் மட்டும் 9 இலட்சம் நோயாளிகள் பதிவு செய்து கொண்டிருந்தனர். இதில் 6 இலட்சம் பேர் புதிய நோயாளிகளாக இருந்தனர். என்ற தகவல் யாதெருவரையும் உலுக்கியதாகவேயில்லை.

ஆண்டர்சன் அன்றைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்படவில்லை யானால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் என செத்துக் கொண்டிருந்தவர்களை கொலைகாரர்களாக, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்களாக மக்களின் ஓட்டைப் பொறுக்கிக் கொண்ட அதே அதிகார வர்க்கம் கூசாமல் பேசிற்று. பாதுகாப்புக் கருதியே ஆண்டர்சன் அன்றைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறினார்கள். மிகத் தாமதமாக விழித்துக்கொள்ள வைக்கப்பட்ட காவல்துறை மற்றும் நீதி மன்றமும் ஆண்டர்சனுக்கு பிடி ஆணை பிறப்பித்தபோது அவர் அமெரிக்காவில் இல்லை என்றது அந்நாட்டு அரசு. இந்திய அதிகார வர்க்கமும் அதை வழிமொழிந்து கொண்டிருந்தது. இந்தியாவின் பின்லேடன் ஆண்டர்சன் என்பதை அமெரிக்கா எப்படி ஒப்புக் கொள்ளும்.

 அன்றைக்கு விபத்தின் ஒரு சில நாட்களில் சி.பி.அய். வழக்கு விசாரணையை ஏற்றுக் கொண்ட நிலையில், கார்பைடின் நிர்வாகத் தலைவர் வாரென் ஆண்டர்சன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு உடனடியாக வீட்டுக் காவலில் வைக்கபட்டனர். வீட்டுக் காவல் என்றால் ஏதோ சினிமாவில் வருவது போலவோ, நமது குப்பனுக்கும், சுப்பனுக்குமான வீட்டுக் காவலைப் போன்றோ கற்பனை செய்து கொள்ள வேண்டாம். ஆண்டர்சன் மற்றும் அவரது கூட்டாளிகள், தில்லியின் மிக உச்ச அதிகாரம் படைத்தவர்ளின் கட்டளையின்படி, அல்லது வாஷிங்டனின் விருப்பப்படி அவர்களது இந்திய நண்பர்களால் ஆயிரக்கணக்கானோர் படுகொலைக்குக் காரணமான கார்பைடு ஆலையின் சொகுசு பங்களாவில் ‘தங்கவை’க்கப்பட்டனர். பின்னர் உடனடியாகவே பெருந்தொகைக்கு பிணையில் எடுக்கப்பட்டுவிட்டனர். ஆண்டர்சன், வழக்கு நடந்த ஆண்டுகளில், புலனாய்வு அதிகாரிகள், விசாரணை முகமைகள் அல்லது இந்திய நீதி வழங்குத் துறைகள் முன்பு ஒரு முறைகூட சமூகளித் திருக்கவில்லை என்பது வியப்பதற்கில்லைதான். மேலும் விபத்து நடந்த மரண ஆலையின் 10 வது குற்றவாளியாக மேம்போக்காகவே சேர்க்கப்பட்டிருந்தார் முதல் குற்றவாளியான ஆண்டர்சன்.

Warren-Anderson

வழக்கை ஆராய்ந்த மத்தியப் புலனாய்வு துறையினர், வாரென் ஆண்டர்சன் மற்றும் கார்பைடு நிறுவனத்திற்கு எதிராக வேண்டா வெறுப்பாக 1987 ஆம் ஆண்டு சம்மன் அனுப்பினர். ஆனால் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற(!) ஆண்டர்சன், நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசை புறக்கணித்ததாக 1992 வாக்கில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே கார்பைடு ஆலையில் பணியாற்றிய இந்திய அதிகாரிகள் மீதான வழக்கின் தீவிரத்தை குறைக்கும் பொருட்டு, சட்டத்தின் சில பிரிவுகளை உச்சநீதிமன்றம் 1996 இல் மாற்றியமைத்தது. இந்நிலையில் வழக்கின் போக்கை ஒருவாறு ஊகித்த தொலை உணர்வுமிக்க சிலரும், வாயு தாக்குதலுக்குள்ளானோருமாக நிறுவனத்தின் மீதும், ஆண்டர்சன் மீதும் நியூயார்க் நீதிமன்றில் 1999 இல் வழக்கொன்றை பதிந்தனர். ஆனால் இந்தியாவில் உள்ள கார்பைடு ஆலை விபத்திற்கு அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனம் எவ்வகையிலும் பொறுப்பேற்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கின் விசாரணைகள் மந்தகதியில் நடந்து கொண்டிருக்கையில் ஆண்டர்சனுக்கு எதிரான வழக்கை நடுவணரசு கைவிடப்போவதாக மாறுபட்ட பேச்சுக்கள் 1992 வாக்கில் எழுந்த நிலையில் குற்றயிரும், குலை உயிருமாக பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்களுமாக போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்துதான் நீதி மன்றம் ஆண்டர்சனுக்கு பிடியாணை பிறப்பித்து தேடத்(!) தொடங்கிற்று. அமெரிக்கா அவரைக் காணவில்லை என்று தெரிவித்தபோது, ஆண்டர்சனைத் தொடர்ந்து கண்காணித்துவந்த பிரித்தானியப் பத்திரிகை ஒன்று அவர் நியூயார்க்கில்தான் இருப்பதாக செய்தி வெளியிட்டது. ஆண்டர்சனை ஒப்படைக்கும்படி பலமுறை இந்திய அரசு அமெரிக்க அரசை கேட்டுக் (கெஞ்சிக்) கொண்டதாக அடிக்கடி செய்திகள் வெளியானாலும் 2003 ஆண்டு நடுப்பகுதியில் அமெரிக்காவிடம் இதுபற்றி வினவப்பட்டதாக(!) இந்திய அரசு ஒப்புக் கொண்டது. எனினும் நீண்ட சாக்குப்போக்கிற்குப் பிறகு வாய்திறந்த அமெரிக்கா, குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களின் சில பிரிவுகள் அவரை ஒப்படைப்பதற்கான வரையறைக்குள் வரவில்லை குற்றவாளியின் அமெரிக்கா அதிகாரத்துடன் மறுத்துவிட்டது.

ஆண்டர்சன் எப்படி தப்பினார் என்பது நமது ஆட்சியாளர்களின் மக்கள் நல சார்பையும், மனசாட்சி குறித்த கேள்வியையும் எழுப்பி நிற்பதுடன். படுகொலையில் நேரடி குற்றவாளி இல்லையே தவிர அதிகார மட்டத்தினரின் பங்கு ஏறக்குறைய அதற்கு சற்றும் குறைந்தது இல்லைதான் என்பதை காட்டுவதாக இருக்கிறது. 2000 டாலர் பிணையில் மின்னலென வெளியில் வந்த ஆண்டர்சன் அடுத்த மிகச்சில மணித்துளிகளில் மத்தியப்பிரதேச அன்றய ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அர்ஜுன்சிங்கின் சிறப்பு கரிசனத்தின் பேரில், மாநில உள்துறை செயலர் துரிதகெதியில் போபால் ஆட்சியரைத் தொடர்புகொள்ள ஆண்டர்சனின் வீட்டுக்காவல் ‘சீசேமென’ திறந்து கொள்ள ஆண்டர்சனும், அவரது சகாக்களும் நிதானமாக வெளியேறினர். நகரெங்கும் சாவோலமும், இறந்த உறவினர்களின் அழுகுரல்களும். காயம்பட்டோரின் புலம்பல்களும் கேட்ட வண்ணமிருக்க பிணங்களை எரிக்கும், அடக்கம் செய்யும் சடங்குகளின் புகைமூட்டத்தின் நடுவே ஆண்டர்சனும், அவரது சகாக்களும், எவ்வித பதட்டமும் அடையாமல் மாநில காவல்துறைத் தலைரே தமக்கென வழங்கப்பட்டிருந்த அரசு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, மாவட்ட ஆட்சியரும் உடன்வர பல்லாயிரக்கணக்கான சடலங்களின் மீது மெல்ல ஊர்ந்தபடிக்கு ஆண்டர்சனின் மீது சிறிய நகக்கீறலும் விழாமல் விமானமேற்றினர்.

ஆண்டர்சன் ‘தப்பியது’ பற்றி பின்னர் எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அர்ஜுன் சிங் எல்லாம் அன்ற மத்திய காங்கிரஸ் அரசின் உத்தரவின்படிதான் நடந்ததாக ஒப்புக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் போபால் துயர நிகழ்வுகள் பற்றி நினைவு கூர்ந்த அன்றய வெளியுறவுச் செயலாளர் எம்.கே. ரஸ்கோத்ரா, ஆண்டர்சன் விபத்தில் பாதிப்படைந்தோரை சந்தித்து ஆறுதல் கூறவும், இழப்பீடு வழங்கவும் ஒத்துக் கொண்டு இந்தியாவிற்கு வரவிரும்பியதாகவும் அவ்வாறு அவர் பாதுகாப்பாக வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டதாகவும் இவை பற்றி அன்றய உள்துறை அமைச்சரும், பிரதமரும் அறிந்திருந்தாகவும் புயலை கிளப்பினார். மக்கள் பிணங்களின் மீது அரசியல் செய்த ஆட்சியாளர்களுக்கு அந்த பிணங்களைக் கொண்டே நீதியின் கண்களை மறைந்துவிட்டு வந்து சென்ற ஆண்டர்சனுக்கும் பெரிதான இடைவெளி இருப்பதாக சொல்லிவிடமுடியாதுதான்.

ஆண்டர்சன் கசியவிட்டுப்போன நச்சின் கொடிய மூச்சானது இன்றும் போபாலின் பஞ்சபூதங்களை மெல்லக் கொள்ளும் விசமாக மாற்றிவிட்டிருக்கிறது. வாயு கசிந்த மூன்றாவது நாளே ஆலையை சுற்றிலும் உள்ள வாயுவின் நச்சு முறிக்கப்பட்டுவிட்டதாக அரசும் அதன் நிர்வாகமும் போக்குகாட்டினாலும் போபாலின் சகல இடத்திலும் அதன் கோரமுகம் இன்று வரைத் தலைக்காட்டத்தான் செய்கிறது. 1999 ஆம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவைச் சேர்ந்த கிரீன் பீஸ் அமைப்பினர் யூனியன் கார்பைடு ஆலையைச் சுற்றியுள்ள நிலம், நீர் ஆகியவற்றை ஆய்வு செய்ததில், பல்வேறு நச்சு இரசாயனப் பொருட்கள் அவற்றில் காணப்படுவதை கண்டறிந்து தெரியப்படுத்தினர். மேலும் 2002 ஜனவரியில் சிருஷ்டி என்ற அமைப்பினர் நடத்திய களப் பரிசோதனையில் போபால் ஆலைப்பகுதியில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் பாதரசம் மற்றும் காரியம் அதிகளவு இருப்பதை கண்டு அதிர்ந்தனர். ஆக தாய்ப்பாலை உறிஞ்சும் குழந்தைகளையும் குடிக்கத் தொடங்கிற்று அடுத்தத் தலைமுறைக்கான போபாலின் நச்சு. மேலும் வேறு சில பெண்கள் தொடர்பான சிக்கல்களும் எழுத் தொடங்கின. பேறுகாலப் பெண்களின் கரு கலைந்து போவது, உடல் உறுப்பு குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது என இயற்கையை சீர் குலைப்பதில் மண்ணில் கைவைத்து பெண்ணில் முடிந்தார்கள்.

 போபாலில் புற்று நோய், மற்றும் நுரையீரல் தொடர்பான நோய் கண்டு இறப்பது என்பது அங்கு சாதாரண நிகழ்வாயிற்று. புற்று நோயால் மட்டும் இதுவரையிலும் 35 ஆயிரம்பேர்வரை இறந்து போயிலுள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் பல இனந்தெரியாத நோய்களுக்கு (ஆண்டர்சனின் பெயர் வைக்கலாமா என்கிற அளவிற்கு) மக்கள் ஆளாகிக் கொண்டுள்ளனர்.

ஆண்டர்சன் கசிய விட்ட வாயுவில் செத்தவர்கள் எவரும் அதிகாரவர்கத்தினர் இல்லை. இருக்கவும் இயலாது. நகரின் புறஞ்சேரியில் இருப்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களும், இஸ்லாமி மக்கள் மட்டுமே. பலரும் தாம் முன்பு பார்த்து வந்த வேலைகளை செய்ய இயலாத வகையில் உடல் நலம் பாதிக்கப்பட்டமையால் இருந்த வேலையையும் கைவிட நேர்ந்தது. எனவே அவர்கள் மேலும் மேலுமென வறுமையில் விழுந்தனர்.

போபால் விசவாயு பரவலுக்குப்பிறகு அநாதையான சிறுவர்கள் நிலை மற்ற யாதொருவரையும் விட பரிதாபத்திற்குரியது. அது பற்றி தனியான கட்டுரைகள் எழுதுமளவிற்கு செய்திகள் இருந்து வருகின்றன. பல ஆயிரம் தாய், தந்தையர் அற்ற சிறுவர்கள் தமது கல்வியை மேற்கொண்டு தொடர இயலாமல் கூலி வேலைகளுக்கு செல்லும் ‘வளர்ச்சியை’ நமது ஆண்டர்சனும், அவரது இந்திய எடுபிடிகளும் தோற்றுவித்துள்ளனர். புதிதாய் பிறக்கும் இளம் சிசுக்களோ விதவிதமான உடல் நலக்குறைவுடன் பிறந்து பூமியை, மனிதரை மனதார சபித்துக் கொண்டுள்ளனர்.

போபால் நஞ்சாகி இந்த முப்பதாண்டுகளில் கூட முறையான இழப்பீடும், சுற்றுசூழல் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படாததை கண்டித்து வரும் திசம்பர் 2 ஆம் திகதியில் வழமைபோல தில்லிவரும் போபாலை சேர்ந்த பாதிக்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாநிலை இருக்க முடிவுசெய்துள்ளனர். இதுதான் இன்று வரையிலான நிலை. அப்படியே நீடிக்கும் அவர்களின் கோரிக்கைகளிலும் பெரிதான மாற்றமில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் நலம் பேணுதல் பொருட்டு, பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வு காண என தேசியக் கமிசன் ஒன்றை அமைத்தல்.

2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி பாதுகாக்கப்பட்ட குடிநீ வழங்கவும்,

ஆலை மற்றும் அதன் வளாகப்பகுதிகளை சுத்திகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக இருக்கின்றன.

இந்த கோரிக்கைளில் வலி மிகுந்த மாற்றம் என்று ஒன்று இருக்குமானால் அது ஆண்டர்சனின் மீதான சட்ட நடவடிக்கை என்பது மட்டுமே. ஆண்டர்சன் வாழ்க்கையிலிருந்து மட்டுமல்ல வழக்கிலிருந்தும் தப்பிக் கொண்டுவிட்டார்.  

ஏற்கெனவே 2006 ஏப்ரலில் பாதிக்கப்பட்ட 39 பேர் போபாலிலிருந்து 800 கி.மீ. 33 நாட்கள் நடைபயணமாக தில்லி வந்து காலவரையரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டனர். அவர்கள் யாதொருவரும் ஆண்டர்சனோ அவரது சகாக்களோ கிடையாது என்பதால் அவர்களது போராட்டம் மிக மோசமாக அதிகாரவர்க்கத்தினரால் அடக்கி ஒடுக்கப்பட்டது. எனினும் உலகெங்கும் அந்த அப்பாவி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு பெருகவே செய்தது.

வாழத் தகுதியற்றதாக்கியிருக்கும் நிலத்தில் படிந்த நஞ்சை அகற்றுவதாக வாக்களித்த கார்பைடு ஆலையின் பினாமி நிறுவனமான டௌ கெமிக்கல்ஸ் கடைசியில் கைவிரித்துவிட்டது. அது மட்டுமல்ல உலகமய சூழலில், இந்திய மக்களின் எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிவிடும் போக்கில் பான்னாட்டு நிறுவனங்களின் எதிர்காலம் என்பது இங்கு ஒளிமயமாக இருப்பதை இன்றய நோக்கியா ஆலை முதல் அன்றய போபால் பூச்சிக் கொல்லி ஆலைவரை நமக்குச் சொல்வதாக இருக்கின்றன. நாளை கூடங்குளம் போன்றவை இரஷ்ய, அமெரிக்க நிறுவனங்களை ஒளிரச் செய்யலாம். நிறுவனங்களின் தேசமாகிவரும் இந்தியாவில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் கலாசரத்தில் முதலில் தூக்கி எறியப்படுபவர்கள் மக்களாகவே இருந்து கொண்டுள்ளார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய போபால் பற்றிய ‘மெல்லக் கசியும் போபால் துயரம்’ என்ற கட்டுரை ஒன்றில் குறிப்பிட்ட வரிகளையே மீண்டும் எழுதி இந்த கட்டுரையை நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆண்டர்சன் தாமாக முன்வந்து சரணடைவார் என்று யாராவது நினைத்தால் அவர் நிச்சயம் நல்ல நகைச்சுவை உணர்வுடையவராகத்தான் இருக்க வேண்டும். 89 வயதாகும் ஆண்டர்சனை ஒப்படைக்கும் எல்லை சுருங்கி வருவதாக இங்குள்ள அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே பேசிவருகின்றனர். இதுபற்றி அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளோ ஆலோசித்து வருகின்றோம் என்ற ஒரே பதிலைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டுள்ளனர். ஹெட்லியை விசாரித்தது போல ஆண்டர்சனை விசாரணை வளையத்திற்குள் எளிதில் கொண்டு வர இயலும் என்றும் கூட பலரும் நம்புகின்றனர். அவர்கள் நம்பிக்கை வாழ்க! ஆண்டர்சனின் இயற்கையான மரணம் நிகழும் வரை நம்மை நம்பவைக்கும் முயற்சியும், இழுத்தடிக்கும் விசாரணையும் நீண்டு கொண்டேதான் செல்லப் போகிறது.

- இரா.மோகன்ராஜன்

Pin It