கூடங்குளத்தில் முதலிரண்டு அணுஉலைகளும் முடங்கிக் கிடக்கும் நிலையில், இன்னும் கூடுதல் அணுஉலைகள் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருப்பதை தொடர்ந்து எதிர்ப்பது, தடுப்பது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கிறது. குறைந்தது நாற்பது ஆண்டுகள் உழைக்கவேண்டிய முதலாவது உலையின் டர்பைன், அதில் வணிகரதியிலான மின் உற்பத்தி துவங்கும் முன்னரே தூக்கி எறியப்பட்டிருக்கிறது. இது உலையின் நம்பகத்தன்மையை, பாதுகாப்பை பெரும் கேள்விக்குள்ளாக்குகிறது. தரமற்ற உபகரணங்களாலும், உதிரிப்பாகங்களாலும் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலைகள் பற்றி சார்பற்ற சுதந்திரமான விசாரணை நடத்துவதற்குப் பதிலாக புதிய உலைகள் அமைக்க எத்தனிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

koodankulam agitation 604

இரண்டாவது உலையின் டர்பைனிலிருந்து உதிரிப்பாகங்கள் முதல் உலைக்கு மாற்றப்பட்டிருப்பதாக கூடங்குளம் அதிகாரிகள் தெரிவித்தார்கள். ஆனால் தற்போது இரண்டாம் உலையில் சோதனை ஓட்டம் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கிறார்கள். இப்படி முன்னுக்குப்பின் முரணான, உண்மைக்குப் புறம்பான தகவல்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, மோசடிகள் நிறைந்த கூடங்குளம் அணுஉலை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடிப் போடப்பட்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்திலும் கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்தினர் ஐந்து லட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிற தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது.

கூடங்குளத்தில் திடீரென மின்சார உற்பத்தி துவங்கியது இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாதுகாப்பதற்கும், அவரது வருகையை நியாயப்படுத்துவதற்கும்தான். கூடங்குளம் அணுஉலை உண்மையிலேயே அற்புதமாக இயங்குகிறது என்றால், விளாடிமிர் புடினும், பிரதமர் நரேந்திர மோதியும் வந்து அதை முறைப்படி துவக்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கலாமே? வணிகரதியிலான மின் உற்பத்தி எப்போதுத் துவங்கும் என்று தேதி அறிவித்திருக்கலாமே?

“ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்” என்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தற்போதைய நிலை. “உலகிலேயே சிறந்த உலை” என்று இந்தியப் பெரும்புள்ளிகளாலும், இப்போது ரஷ்ய அதிபராலும் புகழப்பட்டுள்ள கூடங்குளம் உலைகள் உண்மையில் ஆரோக்கியமான நிலையில் இல்லை. இந்திய ஆளும்வர்க்கமும், உலகளாவிய அணுசக்தி வல்லாதிக்கமும் இங்கேக் கட்ட விரும்பும் அணுசக்தி தாஜ்மகாலின் அடிக்கல்தான் கூடங்குளம் திட்டம். “அடிக்கல்லே ஆடிக்கொண்டிருக்கிறது” என்பதை ஒத்துக்கொண்டால், தாஜ்மகால் திட்டம் தகர்ந்துவிடும். எனவேதான் மன்மோகன் சிங் அரசும், நரேந்திர மோதி அரசும், ரஷ்ய அரசும், ரஷ்ய கம்பெனிகளும், இந்திய அணுசக்தித் துறையும் ஒன்றாக இயங்கி ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.

“எங்கள் மக்களின் உயிர்களோடு விளையாடுகிறீர்களா?” என்று இவர்களைத் தட்டிக்கேட்பதற்கு தமிழகத்தின் பெரிய கட்சிகளோ, அவற்றின் தலைவர்களோ தயாராக இல்லை. காரணம் என்ன என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 19) காலை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி. ஜெயலலிதா அவர்களையும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் சந்தித்து, கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகளை நிறுவக் கூடாது என்று கோரும் விண்ணப்பம் ஒன்றை அளித்தோம். அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் அரசியல் செயலாளர் எங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டார்.

கேரளத்தில் ஓர் அணுமின் நிலையம்கூட அமைக்க மறுக்கிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலாரில் புதைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். அதுபோல மராட்டிய மாநிலம் ஜைத்தாப்பூரில் அணுமின் நிலையம் வேண்டாம் என்று ஆளும் பாரதீய ஜனதா கட்சியே நிலைப்பாடு எடுக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கூடுதல் உலைகளை நிறுவுகிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்தி தமிழக மக்கள் நலன்களை காக்க வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொண்டோம்.

தமிழக குடிமைச் சமூக அங்கத்தினர் சில கேள்விகள் கேட்டாக வேண்டும்:

[1] முறையாக மூன்று நாட்கள் தொடர்ந்து இயங்காத கூடங்குளம் அணுஉலை இந்தியாவின் மொத்த அணுமின்சார உற்பத்தியில் 20 விழுக்காடு பங்களிப்பதாகச் சொல்வது உண்மையாக இருக்க முடியுமா?

[2] கடந்த நவம்பர் 5-ஆம் நாள் இந்திய மின்சாரத் துறை அமைச்சர் அணுசக்தி பிற நாடுகளால் புறக்கணிக்கப்படுகிறது, செலவு அதிகம் கொண்டது என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தார். ஆனால் இப்போது ரஷ்யாவிடமிருந்து 12 அணுஉலைகள் வாங்கப் போகிறோம் என்று பிரதமர் அறிவிக்கிறார். அப்படியானால் தெரிந்தேதான் செய்கிறீர்களா அணுசக்தித் தவறுகளை?

[3] ரஷ்யாவின் முதலிரண்டு உலைகளே ஓடாமல் உறங்கிக் கிடக்கும்போது, எந்த அடிப்படையில் இன்னும் 10 உலைகள் வாங்குகிறீர்கள்?

[4] இந்த உலைகளுக்கு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவு ஆகுமே? அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? அதற்கு எவ்வளவு வட்டிக் கொடுக்க வேண்டும்? யார் யார் இந்த வியாபாரத்தில் பங்கெடுக்கிறார்கள்? அவர்களுக்கெல்லாம் என்ன லாபம் கிடைக்கிறது? இத்தனை பெரிய வியாபரத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாங்கினீர்களா? மக்களை கலந்தாலோசித்தீர்களா?

[5] இத்தனை அணுஉலைகளிலிருந்து வெளிவரும் ஆபத்தான அணுக்கழிவுகளை 48,000 ஆண்டுகள் எங்கே வைத்து பாதுகாக்கப் போகிறீர்கள்?

[6] இந்த அணுஉலைகளை மேலாண்மை செய்வதற்கு சார்பற்ற, சக்திமிக்க ஓர் அமைப்பு இந்தியாவில் இதுவரை இல்லையே?

[7] ரஷ்யாவின் அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் அவர்கள் இழப்பீடு தருவார்களா, மாட்டார்களா? எவ்வளவு தருவார்கள்? யார் இதெற்கெல்லாம் பொறுப்பு? விபத்து நடந்தால் பொதுமக்கள் யாரை அணுகவேண்டும்? போபால் அனுபவம் வயிற்றை புரட்டிப் போடுகிறதே?

கூடங்குளம் அணுஉலை மற்றும் இந்திய அணுசக்தித் திட்டங்களை எதிர்க்கும் நாங்கள் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்:

[1] எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் நாளை “அணுத்தீமையற்ற தமிழக நாள்” என அனுசரிக்கப் போகிறோம். அன்றைய தினம் இடிந்தகரையில் 1224-வது நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்; அன்றைய நாள் எங்கள் பெண்கள் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். போராட்டக் குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறோம்.

[2] போராட்டத்தைப் பற்றியும், அடுத்த நகர்வுகள் பற்றியும் கலந்தாலோசிப்பதற்காக டிசம்பர் 31 அன்று மாலையும் மற்றும் சனவரி 1 அன்று காலையும் இடிந்தகரையில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

[3] சனவரி மாதத் துவக்கத்தில் கேரளத்தின் அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து, ஆபத்தான கூடங்குளம் திட்டத்தையும், விரிவாக்கத் திட்டங்களையும் எதிர்க்கவும், எங்கள் போராட்டத்துக்கு அதரவு தரவும் கேட்டுக்கொள்ளப் போகிறோம்.

[4] பிப்ருவரி மாதம் 19-ஆம் நாள் கன்னியாகுமரியிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ருகர் நகரம் வரை தொடர்வண்டிப் பயணம் மேற்கொண்டு அணுசக்திக்கு எதிரானப் பரப்புரை செய்யவிருக்கிறோம்.

- போராட்டக் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Pin It