வல்லாதிக்கங்களின் சூழ்ச்சியால் அண்மைக் காலத்தில் பேரழிவுக்கு உள்ளான இனம் ஈழத்தமிழினம். வரலாற்றில் ஈடிணையற்ற வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் ஈழத்தமிழரின் போராட்டம். அதனை அழித்தொழிக்க சிங்களப் பேரினவாதத்திற்கு நேரடியாய்த் துணை நின்றது இந்துத்துவ இந்தியப் பார்ப்பனியப் பேரினவாதம்.

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு அறிந்தும் அறியாமலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நின்றவர்கள் தமிழக மீனவர்கள். இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள கடல் பரப்பு-தமிழர் கடல்-விடுதலைப் புலிகளின் வளர்ச்சியில் வகித்த பங்கை யாரும் விளக்க வேண்டியதில்லை. தமிழர் கடலிலிருந்து தமிழர்களை அகற்றி அதைத் தங்கள் முற்றாளுமையின் கீழ் கொண்டு வருவதே இந்தியச் சிங்களப் பேரினவாதத் திட்டமாகும். இதை நோக்கமாகக் கொண்டே தமிழ் மீனவர்கள் மீதான படுகொலை அரங்கேற்றப்படுகிறது.

fishermen 370கச்சத் தீவை தாரை வார்த்ததும் இந்த நோக்கத்தில்தான். கச்சத் தீவை வாரி வழங்கிய இந்திரா அம்மையார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று சொல்வதினும் மேலான ஏமாளித்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. அதே போலத்தான் இவர் ஆட்சிக்கு வந்தால் அல்லது இக்கட்சி ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழர்கள்\தமிழக மீனவர்கள் இன்னல்கள் தீர்ந்து விடும் என்று சொல்வதும் இளிச்சாவத்தனமே! இவ்வாறான முழக்கத்தை முன் வைப்பவர்கள் ஒன்று விலை போனவர்களாக இருப்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு வகையில் ஊதியம் பெறுபவர்களாக இருப்பார்கள்.

நேரு காலம் முதல் இன்றைய மோடி காலம் வரை இலங்கை மலையக மக்கள், ஈழத்தமிழர்கள், தமிழக மீனவர்கள் என்று மாறி மாறி தாக்குதலுக்கும் அழிவுக்கும் உள்ளாகி வரும் வரலாற்றை நினைவுகூர்ந்தாலே எல்லாம் தெளிவாகும். இப்பொழுது கடும் மழைப் பொழிவால் மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவு, திட்டமிட்ட இலங்கை அரசின் புறக்கணிப்பால் நேர்ந்துள்ளதே ஆகும்; அஃது இயற்கைப் பேரிடர் அன்று. இத்துடன் தமிழ்நாட்டின் மீதான எல்லைப் பறிப்பு, இந்தித் திணிப்பு, ஆற்றுநீர் உரிமைப் பறிப்பு முதலான இந்தியத்தின் தாக்குதல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் கூடுதலாக விளங்கும்.

இன்று தில்லி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசு இதுவரையிலும் இல்லாத அளவு சிங்களப் பவுத்தத்துடன் கூடுதல் நெருக்கம் பெற்றுள்ள அரசாகும். இந்துத்துவ இந்தியப் பார்ப்பனியப் பேரினவாதமும் சிங்களப் பேரினவாதமும் ஆரியத் தூய்மையின் அடிப்படையில் பிறந்தவை. “நாங்கள் (வட இந்தியரும் சிங்களவரும்) ஆரியர்கள்; எனவே நாங்கள் இயற்கையாய் நண்பர்கள். ஆனால் தமிழர்கள் அப்படி அல்ல.” இது சிங்களப் பேரினவாதியின் கூற்று மட்டும் அன்று, இங்குள்ள இந்துத்துவ வெறியர்களின் கருத்தும் அதுவே. இந்து இராம், சுப்பிரமணிய சுவாமி, சேசாத்திரி போன்றோரின் செயல்களில் அப்பட்டமாய் வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம்.

இந்து இராமோ இராசபட்சேவின் கைகளில் சிரீலங்கா ரத்னா விருதைப் பெற்று மகிழ, சுப்பிரமணிய சுவாமியோ மோடியின் கைகளில் இராபட்சேவிற்குப் பாரத ரத்னா விருது வழங்கிப் பெருமைப்பட விரும்புகிறார். ஏற்கனவே சிங்களப் பேரினவாதத்தின் தத்துவக் குருவான சிங்கள வெறியன் அநாகரிக தர்மபாலாவிற்கு அஞ்சல்தலை வெளியிட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளது புண்ணிய பாரதம். இந்தப் புண்ணிய பூமியா ஈழத்தமிழருக்கு விடுதலையைப் பெற்றுத் தரப் போகிறது? இந்தப் பாரதபுத்திரர்களா தமிழக மீனவர்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?

இந்தியத்திற்கும் சிங்களத்திற்கும் இடையே உள்ள இயற்கையான பிணைப்பைப் புரிந்து கொண்டால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலை, தமிழக மீனவர் படுகொலை, இன்றைய அய்ந்து தமிழ் மீனவர்களின் தூக்குத் தண்டனை ஆகியவற்றிற்கு இடையேயுள்ள இடையுறவைப் புரிந்து கொள்ள முடியும். இலங்கையுடன் நட்புறவு பேணாவிட்டால் சீனா அங்கு வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பது குழந்தைகளை மிரட்டத் தாய்மார்கள் பயன்படுத்தும் பூச்சாண்டியை ஒத்ததே.

உண்மையிலேயே சீனாவை அச்சுறுத்த இந்தியா விரும்பியிருந்தால் அது இலங்கையைப் பலவீனப்படுத்தி இருக்கும். வங்காள தேச விடுதலைக்கு உதவி பாகிசுத்தான் பல்லை உடைத்தது போல் ஈழவிடுதலைக்கு உதவி சிரீலங்காவின் முதுகெலும்பை முறித்திருக்கும்; சிங்களத்தை முழங்காலிடச் செய்திருக்கும். அதன் இராசதந்திரச் சித்து விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும்.

தன் (அ)ரத்தத்தின் (அ)ரத்தமான சிங்களத்திற்கு அப்படியெல்லாம் இந்தியம் எதுவும் செய்து விடாது. இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பரப்பில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் உலா வரலாம்; திரிகோணமலையை யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால் அக்கடல் பரப்பில் தமிழர் கலன்கள் எதுவும் உலா வந்து விடக் கூடாது; அது தமிழர் கடலாய் வரலாற்றில் மீண்டும் இடம் பெற்று விடக் கூடாது. இதுவே தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் பின்னுள்ள வல்லாதிக்க அரசியல்.

அய்ந்து மீனவர்களின் தூக்குத் தண்டனையைத் தனித்த ஒரு நிகழ்வாய் பார்த்து விடக் கூடாது. அதைக் கடந்த காலத்தில் காக்காய் குருவிகளாய்க் கடலிலே சுட்டுக் கொல்லப்பட்ட அய்ந்நூற்றிற்கும் மேலான தமிழக மீனவர் படுகொலையின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் பின்னாலுள்ள வல்லாதிக்க அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்.

தங்களைக் காப்பாற்ற யாருமே இல்லாமல் ஏதிலிகளாய்த் தங்கள் இன்னுயிரை நடுக்கடலிலே பறி கொடுத்த அந்த அப்பாவி மீனவர்களை நாம் மறந்து விட்டோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மீனவர்களும் இழந்த தங்கள் சொந்தங்களை நினைவுக்குள் புதைத்து விட்டார்களோ என்று கவலைப்பட வேண்டி உள்ளது. இலங்கைக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே நடந்த கலந்துரையாடல்களில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி கோரப்படவே இல்லையே?

தமிழக மீனவர்களைக் குறைசொல்லிப் பயனில்லை. அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமே இன்று கேள்விக்குறியாய் உள்ளது. அவர்களின் நிகழ்காலம் வாழ்வா சாவாப் போராட்டமாய் மாறிப் போனது. கடந்த காலச் சாவுகளைக் கிளறினால் மேலும் துயர் வந்து நேரிட வாய்ப்புண்டு. அவர்களின் அச்சம் சரியானது. அவர்களுக்கு ஆதரவாய் அவர்களைக் காப்பாற்ற யாருளர்? பாதுகாக்க வேண்டிய மய்ய அரசே பகை அரசாய்க் கோலோச்சும் கொடிய நிலை; மாநில அரசோ அதிகாரம் ஏதுமில்லா வக்கற்ற அரசு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கோ அடுத்த தேர்தல் பற்றிய கவலையும் கூட்டணி பற்றிய பதட்டமுமே உண்டு.

மக்கள் விடுதலையையும் தேசவிடுதலையும் உயிர்மூச்சாய்க் கொண்டுள்ள புரட்சியாளர்களும் கூட கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நீதி கோர மறந்து விட்டார்களே? ஒருவேளை அவ்வாறு கோருவது சரியான உத்தியாக இருக்காது என்று கருதுகிறார்களோ? தனியாள் கொலைகளுக்கே நீதி வேண்டும் என்கிறார்கள். கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

இராசீவ் கொலையாளிகள் என அய்யுறப்பட்ட அனைவரையும் அவர்களின் இயக்கத்தையும் அத்தோடு நில்லாமல் ஒன்றும் அறியா இலக்கக்கணக்கான அப்பாவி ஈழத்தமிழர்களையும் கொன்றொழித்த பின்னரும் சிலரின் நீதித்தாகம் இன்னும் அடங்கவில்லை. நால்வரின் இளமையை இருட்டறைக்குள் நாசமாக்கியும் கூட அது தீர்ந்த பாடில்லை; மூவரின் உயிர்ப்பலிக்கு ஆர்ப்பரிக்கிறது. குசராத்திலும் மும்பையிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலீம்களை இந்துத்துவாக் கடவுள்களுக்கு நரபலியாக்கி விட்டு நாக்கூசாமல் பாராளுமன்றத் தாக்குதலுக்கும் மும்பைத் தாக்குதலுக்கும் நீதிகோரிய, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டதும் அதைக் கொண்டாடிய கோரக் கொடுமையும் இங்கேதான் நடந்தது.

உயிர்ப் பிழைப்புக்காய் கடலிலே மீன் தேடும் மீனவர்களைக் கொல்வது இட்லர் யூதர்களைக் கொன்றதற்கு ஒப்பானதன்றோ? விலங்குகளை வேட்டையாடுவதைப் போல் நம் மீனவர்களைக் கடலில் வேட்டையாடிக் கொன்றார்களே கொடிய சிங்களவர்கள்? அதற்கெதிராய் நாம் குரல் கொடுக்க வேண்டாமா? கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டாமா? கொலையுண்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டாமா?

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரும் நாம் கடற்படுகொலைக்கும் நீதி கோர வேண்டும். பன்னாட்டுச் சமூகத்திடம் கேள்வி எழுப்ப வேண்டும். கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்தால் எந்த உசாவலும் இன்றிக் கொல்லப்படுவதுதான் கடல்சார் சட்டமா? அதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்னாட்டு நீதியா? இங்கே நம் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. அதன் விளைவே நம் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை.

தமிழக மீனவர்களுக்கான ஆதரவுக் குரல் மிக மிக வலுவற்றது என்பதே அப்பட்மான உண்மை. நடுக்கடலில் நம் மீனவர்கள் கொல்லப்பட்ட அன்றும் சரி அய்ந்து மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட இன்றும் சரி அவர்களுக்கு ஆதரவாய்த் தமிழகம் கொதித்தெழவில்லை. மூவர் தூக்குத் தண்டனைக்கெதிராய் ஏற்பட்ட பேரெழுச்சி போல் அன்றும் நிகழவில்லை; இன்றும் ஏற்படவில்லை. நிலத்தின் விளிம்பில் கடலை மட்டுமே நம்பி வாழும் அவர்கள் தமிழின மய்ய நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லையோ என்னவோ? நெய்தல் நிலம் தமிழ் நிலம் இல்லையோ? இப்பொழுது நடக்கும் போராட்டங்களில் கூட மீனவச் சமுதாயத்தினர் போராட்டமே ஒரளவு வலுவான போராட்டமாக உள்ளது; மற்றவை வெறும் நீர்த்துப் போன அடையாளப் போராட்டங்களாகவே உள்ளன.

ஒன்றைத் தமிழகத் தமிழர்கள் தெளிவாய்ப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் ஈழத்தமிழர்கள் கூட நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி உலகத்தின் கவனத்திற்கு வலுவாகக் கொண்டு செல்லப்படும் பொழுதுதான் சிரீலங்கா அரச வடிவத்தின் பாசிச உள்ளடக்கத்தைப் புரிய வைக்க முடியும். சிரீலங்கா அரசுக் கட்டமைப்பிற்குள் அறம் சார்ந்த, மக்கள் உரிமை சார்ந்த நற்கூறுகள் எதுவுமில்லை என்பதை விளங்க வைக்க முடியும். சிரீலங்கா நீதிமன்றங்கள் பெயரளவிற்குக் கூட நடுநிலைமையானது அல்ல என்பதை மெய்ப்பிக்க முடியும். இத்தகைய கிஞ்சிற்றும் ஜனநாயகத் தன்மையற்ற ஓர் அரசமைப்பிற்குள் ஈழத்தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் எங்கிருந்து நீதி கிடைக்கும் என்ற கேள்வியை வலுவாக எழுப்ப முடியும். கூடவே இந்தியாவின் பொய்முகத்தையும் கிழிக்க முடியும்; அதன் பின்னால் உள்ள வல்லாதிக்கத்தின் சதியையும் முறிக்க முடியும்.

இப்பொழுது நம் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டணையே சட்டம் சார்ந்த நடுநிலைமையோடு கூடிய நீதிமன்ற நடவடிக்கைகளின் விளைவு அல்ல. இஃது இராசபட்சேவின் கண்சாடையில் பிறந்த ஆணையாகும். நம் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்ட அதே காலகட்டத்தில் இலங்கையால் கைது செய்யப்பட்ட இருபத்தைந்து பாகிசுத்தானியர்களுக்கும், ஆறு மாலத்தீவினருக்கும், இன்ன பிறருக்கும் எந்தத் தண்டனையும் வழங்கப்படாததைத் தோழர் திருமுருகன் தம் முகநூலில் அம்பலப்படுத்தி உள்ளார். சிரீலங்கா அரசும் அதிகாரிகளுமே போதைப்பொருள் கடத்தலுக்குத் துணை நிற்பதை அவர் சான்றுகளுடன் நிறுவுகிறார். சிரீலங்கா நீதிமன்றம் அரசுச் சார்பானது என்பதைப் பன்னாட்டு நீதியரசர்களின் குழுவே வெளிப்படையாக அறிவித்துள்ளதையும் அவர் சுட்டுகிறார்.

இவை போன்ற சான்றாதாரங்களைத் தொடர்ந்து நம் உலகச் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஊடகங்களுக்கும் நெருக்கடி தர வேண்டும். ஆளும் வர்க்கச் சார்பான ஊடகங்கள் நம் செய்திகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது உண்மைதான். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். தொடர்ந்த மக்கள் திரள் போராட்டங்கள் ஊடகங்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். ஒன்று திரண்ட மக்கள் முன் ஊடகங்களும் மண்டியிடும்; அரசும் பணியும்.

இப்பொழுது மய்ய அரசும் மாநில பாசகவும் சில நாடகங்களை அரங்கேற்றத் தொடங்கி உள்ளன. மய்ய அமைச்சர்களான நிதின் கட்காரியும் பொன்.இராதாகிருஷ்ணனும் தூக்குத் தண்டனைக் கைதிகளின் பெற்றோர்களைச் சந்தித்துள்ளனர். இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் தூக்குக் கைதிகளை சிறையில் சென்று சந்தித்துள்ளார். மேல் முறையீட்டிற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார். கைதிகள் தங்கள் பெற்றோர்களுக்குக் கடிதங்கள் எழுதவும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தமிழக மீனவர் போராட்டங்களும் ஆங்காங்கே தமிழ்நாடு தழுவி உருவாகி வரும் போராட்டங்களும் வலுப்பெற்று வருவதன் விளைவு எனலாம்.

அதே சமயம் சிங்கள அமைச்சர்கள இலங்கையின் சட்ட(!)நெறிமுறைகளுக்கு ஏற்பத்தான் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனத் தொடர்ந்து கூறி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாகத் தூக்குத் தண்டனை எவருக்கும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டு வாழ்நாள் தண்டனையாக மாறக்கூடும். தமிழ்நாட்டில் மீனவர் போராட்டங்களையும் தாண்டித் தமிழகம் தழுவிய வலுவான போராட்டங்களே அவர்கள் விடுதலையைப் பெற்றுத் தரும்.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் வழக்கமான மரபுப்படி தலைமை அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதோடு அவர் கடமையை முடித்துக் கொண்டார். அடுத்த தேர்தலில் பதவியைப் பிடிக்க நாக்கைத் தொங்கப்பட்டுக் கொண்டலையும் திமுக, அரசியலில் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை என்ற அதன் ஒரே உயரிய கொள்கைக்கு ஏற்ப கூட்டணிக்காக வலை வீசிக் கொண்டுள்ளது. அது பால்விலை உயர்வுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும். தள்ளாத அகவையிலும் அதன் தலைவர் சக்கர நாற்காலியில் வந்தமர்ந்து அவருக்கே உரிய வீருரை ஆற்றுவார். மீனவர் சிக்கலுக்கெல்லாம் அறிக்கை ஒன்றோடு சரி. முன்னது அடுத்த தேர்தலில் வாக்குகளைப் பெறத் தேடாமல் தேடி வந்துள்ள அரிதற்கு அரிதான வாய்ப்பு. தேர்தல் அரசியலில் காங்காலமாய்க் கொட்டை போட்டு வரும் 'சாணக்கியர்' கிடைக்கும் வாய்ப்பை விட்டு விடுவாரா? மீனவர்களுக்கான போராட்டம் ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்கு வாக்குகளைப் பெற்றுத் தரவா போகிறது?

தேர்தல் கட்சிகளில் எதுவும் வைகோ, வேல்முருகன் கட்சிகள் உட்பட மீனவர்களுக்காக உண்மையாக நேர்மையாகப் போராடா. அவற்றிற்குத் தேர்தல் மட்டுமே குறிக்கோள். இடம் பெறப் போகும் கூட்டணிக்கு ஏற்பவே அவை காய்களை நகர்த்தும். மீனவப் போராட்டங்கள் இந்த வகையில் அவற்றிற்கு எந்தப் பயனையும் தரா. பொதுமைப் புரட்சி இயக்கங்களும் தலித் இயக்கங்களும் தமிழ்த் தேசிய இயக்கங்களுமே நம்பிக்கை ஆற்றல்கள். அவற்றிற்குள் உள்ள கொள்கை முரண்பாடுகள் நாம் அறிந்தவையே. ஆனால் மீனவர் நலனுக்காக ஒன்று சேர்ந்து போராடுவது அவற்றின் கொள்கை முரண்பாடுகளுக்கு எந்தச் சேதத்தையும் விளைவித்து விடாதே!

இவ்வியக்கங்கள் ஒன்று சேர்ந்து போராடுவதற்கு அணுஉலை எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு போன்ற எத்துணையோ களங்கள் உள்ளன. இத்தகைய போராட்டங்களில் ஏற்படும் ஒற்றுமையே நாளைய விடுதலைக்கு வழி வகுக்கும். ஒன்றை மட்டும் இங்கே அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடலாம். நீங்கள் உங்கள் கொள்கை குறிக்கோள்களுக்கு ஏற்ப இயக்கம் கட்டுங்கள்; உங்கள் உத்திகளுக்கு ஏற்ப போராட்டக் களங்களைத் தேர்ந்தெடுங்கள். ஆனால் மேலே குறிப்பட்டுள்ளதைப் போன்ற மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் ஒன்றிணைந்து போராடத் தவறினால் அப்படிப் போராடுவது அமைப்பு வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதினால் நீங்கள் விரும்பும் எந்தப் புரட்சியும் இங்கே நடக்காது; மக்கள் விடுதலையும் சாத்தியம் அன்று.

இறுதியாகத் தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு ஒரு வேண்டுகோள். தேர்தல் கட்சிகளோடு சேர்ந்து போராடுவதை விட்டொழியுங்கள். அது கூட்டம் சேர்வதற்கும் செய்தியாக்குவதற்கும் ஒருவேளை ஓர் உத்தியாகப் பயன்படலாம்; நீண்டகாலப் போக்கில் அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். சிபிஅய், சிபிஎம் வகையறாக்களின் தேர்தல் கூட்டணிகள் விளைவையே தரும்

தமிழக மீனவர்களைப் பகடைக் காய்களாகக் கொண்டு இந்தியா இலங்கை நடத்தும் பேரங்கள் தமிழக மீனவர்களுக்கும் ஈழ மீனவர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. அவர்கள் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளை இரு மீனவ அமைப்புகளும் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும்; இதில் இந்தியா இலங்கை அரசுகள் விலகி நிற்கட்டும். இதற்காக மக்கள் விடுதலையை முன்னிருத்தும் அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கட்டும்; இல்லையெனில் நம் கடல்-தமிழர் கடல்- நம்மிடமிருந்து பறி போகும்; வல்லாதிக்க அரசுக் கப்பல்கள் உலா வரும். விழித்துக் கொள்வோம்! ஒன்றுபட்டுப் போராடுவோம்! தமிழர் கடலைக் காத்து நிற்போம்!

வேலிறையன்

Pin It