fisherman

2011 நவம்பர் மாதத்தில் போதை கடத்தல் தொடர்பாக இலங்கை அரசு கைது செய்தவர்களில் 25 பேர் பாகிஸ்தானியர், 4 இந்தியர், ஆறு மாலத்தீவினர், ஐந்து ஈரானியர் என்று இலங்கை அரசு சொல்லியது. ஆனால் தற்பொழுது ஐந்து மீனவர்களைத் தூக்குத் தண்டனைக்கு அனுப்புவதாக சொல்லி இருக்கிறது. இலங்கை மேற்காசியாவில் இருந்தும், கிழக்காசியாவிற்கு போதை கடத்தலின் போக்குவரத்துப் புள்ளியாக இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானிற்கும், இந்தியாவிற்குமான புள்ளி என்கிறார்கள். இவர்கள் கொடுத்த கணக்கினை உண்மையென எடுத்துக்கொண்டால் ஐந்து மீனவர்களுக்கான தூக்கு எங்கிருந்து வருகிறது? மேலும் இக்கடத்தலில் அதிக அளவிற்கு ஈடுபடுபவர்கள் பாகிஸ்தானியர்கள். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இம்மாதிரியான தண்டனை கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. (http://www.dailymirror.lk/news/14713-lanka-used-as-drug-trafficking-hub.html) இதற்கு முன்னதாக 2010இல் 55 கிலோ ஹெராயின் போதை பொருள், 3.5 கிலோ கோகெய்ன் கடத்தியதாக 58 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த வருடம் ஆகஸ்ட் 23ஆம் தேதி இலங்கையின் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு ஒரு சரக்கினை அனுமதிப்பதற்கான குறிப்பு சென்றிருக்கிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த சரக்கினை புலனாய்வு செய்தபொழுதில் இதில் 131 கிலோ ஹெராயின் இருப்பது கண்டறியப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் இருந்தே இந்த சரக்கிற்கான அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. இலங்கையின் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் அனுமதியில்லாமல் இவ்வாறு அதிக அளவிலான கடத்தல் நிகழ வாய்ப்பில்லை, மேலும் இந்தத் தடுப்பு நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட 131 கிலோ போதைப் பொருளே தெற்காசியப் பகுதியில் பிடிபட்ட அதிக எடைகொண்ட கடத்தலாகும்.

இப்படியான புகழ்பெற்ற கடத்தலை வைத்திருக்கிற இலங்கை அரசின் அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் தமிழக மீனவர்களை, தமிழர்களைக் குறிவைப்பதில் ஆச்சரியம் இல்லை. அமெரிக்காவினைப் பொருத்தவரை ஒன்றைக் குறிப்பிடுவார்கள். அமெரிக்காவின் எஃப்.பி.ஐ போதைக் கடத்தலை தடுக்கும் பணியைச் செய்யும், சி.ஐ.ஏ போதை கடத்தல்காரர்களுக்கு ஆயுதமும், பயிற்சியும் வழங்கும். ஆகவே போதைக் கடத்தல் என்பது அரசு வர்க்கங்களின் செயல்பாடே ஒழிய தனித்த அரசு கடந்த செயல்பாடல்ல.

மக்களை ஒடுக்குவதற்குப் பதிலாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்குவதன் மூலம் அவர்களது எதிர்ப்புணர்ச்சியை மட்டுப்படுத்திவிடமுடியும். இதை உலகின் பல்வேறு பகுதிகளில் அரச எதிர்ப்புணர்வு அதிகரிக்கும் வேளைகளில் போதை மருந்து பயன்படுத்தல் அதிகரிப்பதை காணமுடியும். இதில் ஒருவகையே மது அடிமைப் பழக்கத்தினை அதிகரித்தல். இது ஒருவித மென்மையான போக்காகும். தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் தென்மாநிலங்களில் மதுப் பழக்கத்தினை அரசு அனுமதித்தற்கு காரணம் இதுவாகவும் இருக்கக் கூடும். கள்ளச்சாரயத்தினை ஒழித்து அரசே சாராயம் காய்ச்சுவதை இந்தப் போதை கடத்தலோடு தொடர்புபடுத்தி பார்க்க இயலும்.

கொழும்பு துறைமுகம் மிகவும் பாதுகாப்புடைய துறைமுகம். உலகின் மிக முக்கிய சரக்கு துறைமுகத்தில் கொழும்புவும் ஒன்று. போதைப் பொருள் கடத்துவதற்கு துறைமுகத்தினைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் மட்டுமே கடத்தல்காரர்கள் மீனவர்களைப் பயன்படுத்த வேண்டிவரும். ஆனால் இலங்கையைப் பொருத்தவரையில் இலங்கையின் பிரதான துறைமுகமே பயன்படுத்தப்படுகிறது. அதுவும் அந்தப் பொருளை நாட்டிற்குள் எடுத்து வருவதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்தி அனுப்பப்படுகிறது. (http://www.bbc.com/news/world-asia-25217771 நன்றி கோபி ரத்னம்) இது குறித்து இலங்கையின் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதைப் பேசிய அனுரா திசநாயகே என்பவர்,’இந்தக் கடத்தல் சிறிய கடத்தலை செய்பவர்களாக இருக்க முடியாது, அரசியல்வாதிகளின் துணையோடே இது நிகழமுடியும்’ என்கிறார்.

இந்தக் கடத்தலும் கூட பாகிஸ்தானில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கே எடுத்து வரப்படுகிறது. இதன்மீது எந்தவகையான தண்டனை வழங்கப்படப் போகிறது என்று பார்க்கவேண்டும்.

மேலும் கடந்த 2014 ஆகஸ்ட் 20ஆம் தேதியில் இந்தியாவின் போதை தடுப்பு உயர் அதிகாரிகள் இலங்கை போதை தடுப்பு அதிகாரிகளோடு பேசி இருக்கிறார்கள். http://timesofindia.indiatimes.com/india/Narcotics-authorities-of-India-and-Sri-Lanka-meet-to-stem-drug-menace/articleshow/40520948.cms இந்தப்ப் பேச்சுவார்த்தையில் என்ன பேசினார்கள் என்கிற விவரம் தெரியவில்லை. ஆனால் அநாகரிகா தர்மபால எனும் சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாதிக்கு இந்திய அரசு தபால்தலை வெளியிட்டு கெளரவித்ததற்குப் பின்னர் இது நிகழ்ந்திருக்கிறது.

குறிப்பாக சொல்லவேண்டுமெனில் சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து நிறுத்தப்பட்டதை இந்திய அரசு கோத்தபயாவினை அழைத்து கண்டித்ததை அடுத்து, இலங்கையின் கடற்படை அதிகாரி இந்தியாவிற்கு வந்து சென்ற இரண்டொரு நாட்களில் இது நிகழ்கிறது எனில் இந்த நிகழ்விற்கும் இதற்கும் தொடர்பில்லாமல் இருக்க முடியாது. இலங்கையின் நீதித்துறை நேர்மையான முறையில் இயங்கவில்லை, அரசு சார்பானதாக இருக்கிறது என்று 2006இல் சர்வதேச நீதிபதிகள் சார்ந்தகுழு பகிரங்கமாக ஆய்வு செய்து அறிவித்தது என்பதை இந்நேரத்தில் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் இலங்கையின் உச்சநீதிமன்ற நீதிபதி ராஜபக்சேவிற்கு ஆதரவாக செயல்படவில்லை எனும் காரணத்தினால் நீக்கப்பட்டார் என்பதை மனித உரிமை ஆணையம் உட்பட கண்டித்தது.

இதற்கு நடுவில் 28-அக்டோபர் 2014 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க கோரி 28ஆம் தேதியில் இருந்தே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். http://www.adaderana.lk/news.php?nid=28564&utm_source=twitterfeed&utm_medium=twitter

இந்திய அரசின் ஆதரவில்லாமல் இத்தகைய ஒடுக்குமுறை மீனவர்கள் மீது நிகழ வாய்ப்பில்லை. ஏனெனில் தமிழக மீனவர்-ஈழமீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருக்கிறது என்பதையும், பாரம்பரிய மீன்பிடி பகுதியாக இக்கடற்பகுதி அறிவிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை வைத்தபிறகும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இத்தகைய மிரட்டல் போக்கின் மூலம் தமிழக மீனவர்களை கடலிலிருந்து அப்புறப்படுத்த இந்தியா-இலங்கை முயலுகிறது என்பதே உண்மை.

இந்தியா இலங்கைக்கு இடையேயான உறவில் புவிசார் அரசியல் சார்பான நகர்வுகளில் பாதிக்கப்படுவதும், இனி கடுமையான சிக்கலுக்குள்ளாவதுமான இனமாக தமிழினம் இருக்கும். இதை நாம் கவனத்தில் எடுக்காவிட்டால் தொடர்ச்சியான் ஒடுக்குமுறைக்குள்ளாவோம்.

- திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

Pin It