காஸாவில் அப்பாவி ஃபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையைப் பற்றிய பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், காஸாவின் பொருளாதார சூழ்நிலையும் ஒரு காரணமாக இருக்கின்றது. இஸ்ரேல் இரண்டு முக்கியமான விஷயங்களுக்காகவே தாக்குதலை நடத்துகிறது. ஒன்று, காஸாவில் அதிகரித்து வரும் மனித வளம். இரண்டு: காஸாவின் சூழ்நிலையை வறுமையான நிலையிலேயே இருக்க வேண்டும்.

palestine warஇஸ்ரேலுக்கு நன்கு தெரியும் காஸாவின் பகுதிகளில் ஹமாசின் செயல்பாடுகளை முடக்குவது எளிதான காரியமல்ல என்று. அவர்களுக்கு வெளிப்படையான எதிரி ஹமாசாக இருந்தாலும், அவர்களின் மறைமுகமான எதிரி காஸாவின் பொதுமக்கள் தான். அதோடுமட்டுமல்லாமல் கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல்கள், கல்லூரிகள், தொழிற்நிறுவனங்கள் என்று இஸ்ரேல் குறிவைத்த இடங்கள் அனைத்துமே ஒரு நாட்டின் முன்னேற்றத்தை உற்பத்தி செய்யும் இடங்களாகும்.

இப்படி, குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பின்னாலுள்ள உள்ளர்த்தங்கள் கவனிக்கத்தக்க ஒன்றாகும். ஃபலஸ்தீனர்களை காலங்காலமாக அழித்தொழித்துவரும் இஸ்ரேலை, இருபத்தி ஐந்து வருடங்களே ஆன ஹமாஸ் இயக்கம் எதிர்த்து நின்று தாக்குதல் நடத்தி வருவதை ஒட்டுமொத்த உலகமே ஆச்சரியத்தோடு பார்க்கும் பொழுது, இஸ்ரேலுக்கு சொல்லவே வேண்டாம். 1987ல் ஃபலஸ்தீனத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள், இன்று ஹமாசில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றார்கள். இதனால், ஹமாசின் வீரியமிக்க போராட்டம் அதிகரிக்கவே செய்கிறதே தவிர, குறையவில்லை. ஹமாசின் போராட்டத்தில் பெண்களும் பாரிய பங்களிப்பை செய்கிறார்கள்.

இதனால், இஸ்ரேலிய இராணுவம் நீண்ட கால திட்டத்தோடு குழந்தைகள் மற்றும் பெண்களை குறிவைத்து தாக்குதலை நடத்துகிறது. இந்தத் தாக்குதலுக்கு மற்றொரு காரணமும் உண்டு. இஸ்ரேலிய இராணுவத்தினரால் ராக்கெட் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட ஹமாசின் நிறுவனர் ஷேக் அஹ்மது யாசீன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது, “2027ல் இஸ்ரேல் என்ற ஒரு நாடே உலக வரைபடத்தில் இருக்காது” என்றார். இதற்கு, குர்ஆன் மூலம் அழகான விளக்கத்தை கொடுத்தார் யாஸீன்.

ஏனென்றால், நாங்கள் குர்ஆனை விசுவாசிக்கிறோம். தலைமுறைகள் ஒவ்வொரு நாற்பது ஆண்டுகளிலும் மாற்றமுறுவதாக அது எமக்குச் கற்றுத் தருகிறது. இது திருக்குர்ஆனிலிருந்து பெறப்பட்டது. பனூ இஸ்ரேவேலர்களை எடுத்துக்காட்டாக கொண்டால் நாற்பது வருடங்கள் அவர்களை அல்லாஹ் அலைந்து திரிய வைத்தான். ஏன் அப்படி? நோய்வாய்ப்பட்ட களைப்படைந்திருந்த தலைமுறையை மாற்றி போராட்ட குணமிக்க ஒரு தலைமுறையைக் கொண்டு வருவதற்காக பேரழிவை எதிர்கொண்ட சமூகத்தை எழுச்சியைக் கொண்டு வரும் சமூகமாக அவன் மாற்றினான். ஃபலஸ்தீனத்திலும் அப்படித்தான். எதிர்வரும் தலைமுறை விடுதலையின் தலைமுறையாக இருக்கும் என்றார்.

இந்தக் கூற்றை உலகத்தில் உள்ள யார் நம்புகிறார்களோ இல்லையோ இஸ்ரேலியார்கள் நம்புகிறார்கள். இஸ்ரேலிய மக்கள் அதை முழுமையாக நம்புகிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு தாக்குதலின் போதும், அவர்களின் இலக்கு குழந்தைகள் மற்றும் பெண்களாக இருக்கின்றது. இதனால், அவர்கள் ஃபலஸ்தீன மக்கள் எந்தளவிலும் வளர்ச்சியடைவதை விரும்பவில்லை.

காஸா பகுதி பல ஆண்டுகளாகவே முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை பார்க்க முடியாமல் இருந்து வந்தது. 2006 போன்ற காலங்களில் இஸ்ரேலிய இராணுவம் முழுவதுமாக முற்றுகையிட்டிருந்தது. கடல், வான், தரைவழித் தாக்குதல் என்று காஸா பகுதி முற்றிலும் மோசமாக இருந்தது. ஒரு சில வருடங்களில் இஸ்ரேலின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் புரிந்து கொண்டு, காஸா பகுதி மக்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இஸ்ரேலை எதிர்த்துப் போராட ஆரம்பித்தனர். இதனால்எல்லா ரீதியாகவும் அவர்கள் தயாராகினர்.

காஸாவில் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதனால், இளைஞர்கள் அதிகமாக இருக்கின்றனர். குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என்று 2012ம் ஆண்டு யுனிசெப் கணக்கெடுப்பு கூறுகிறது. இதில், 51 சதவீத குழந்தைகள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காஸாவில் 4,500 குழந்தைகள் பிறந்துள்ளனர். இது குறைவுதான். ஏனென்றால், குண்டுவெடிப்பு, ராக்கெட் வீச்சு போன்ற பாதிப்பால் பெரும்பாலான பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

காஸாவில் நிலவி வரும் பதற்றமான‌ மற்றும் சண்டைகளுக்கு மத்தியிலும் இளைஞர்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். காஸாவில் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் இருக்கின்றனர். ஆண், பெண் சேர்த்து வருடத்திற்கு 40,000 பட்டதாரிகள் உருவாகின்றனர். காஸாவில் பல்வேறு தசாப்தங்களாக கல்வி கற்பதற்கான சூழல் உருவாகாமல் இருந்தது. ஆனால், தற்பொழுது உள்ள இளைஞர்கள் எந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற உறுதியான மனநிலையிலும், சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையிலும் இருக்கின்றனர்.

கடந்த மாதம் காஸாவில் உள்ள இரண்டு பட்டதாரிகள் இணைந்து புதிய மென்பொருள் ஒன்றை கண்டுபிடித்து ஐ.டி. நிறுவனங்களுக்கு இன்டர்நெட் மூலம் உலகம் முழுவதும் விற்பனை செய்யும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தனர். அவர்களின் இந்த முன்னேற்றத்திற்கு பன்னாட்டு அமைப்புக்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளன‌. இந்த தகவல் சமீபத்தில் காஸாவில் இருந்து வந்தது. அவர்கள் ஃபலஸ்தீன தகவல் பரிமாற்றம் மற்றும் தொலைத்தொடர்பு துறை மாணவர்களான யாஸீர் யூனிஸ் மற்றும் கலீல் சலிம் ஆகியோர் ஆவர்.

தற்பொழுது, பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டி போடும் மோட்டாவிரன் மொபைல் அப்ளிகேஷன் மற்றும் மென்பொருள் டெவலப்மெண்ட் நிறுவனத்தின் முதலாளிகள். இதுதொடெர்பாக, அவர்கள் கூறும் போது, எங்களுடைய முன்னேற்றத்திற்கு பல்வேறு சமூக நல அமைப்புக்கள் உதவி செய்தன. நாங்கள் காஸாவில் உள்ள இளைஞர்களுக்கு படிப்பதற்கான வசதி வாய்ப்புக்களையும், தொழிற் துறைகளில் முன்னேறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்வோம் என்றனர்.

இதுபோன்று, காஸாவில் கல்வி சூழலிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. காஸாவின் இளைஞர்கள் சுதந்திரம் மற்றும் சாதிப்பதற்கான வாய்ப்புக்களை எதிர்பார்த்து இருக்கின்றனர். காஸாவின் இந்த முன்னேற்றம் இஸ்ரேலின் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கும், நெருக்கடிக்கும் ஒரு காரணமாகும்.

முதலில், காஸாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்து மாநில அளவிலான அங்கீகாரத்தை வைத்துக் கொண்டு, பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் அரசியல் ரீதியாக மக்களை ஏமாற்றி வந்தனர். நீண்ட காலத்திற்குப் பின்பு உலக அரசியல் மாற்றங்கள், காஸா மக்களின் வீதிகளில் இறங்கிய போராட்டங்கள் இஸ்ரேலிய அரசுக்கு தெளிவான செய்தியை எடுத்துக் கூறியது. ஃபலஸ்தீனை விட்டு முழுமையாக வெளியேறாத வரை, ஃபலஸ்தீன மக்களின் போராட்டம் முற்றுப்பெறாது.

இரண்டாவதாக, காஸாவில் குழந்தைகள் மற்றும் வீடுகள் மீது குண்டுகளை வீசி, திட்டமிட்டு கொன்றொழித்து வந்தது. இந்த அநீதி இளைய தலைமுறை மத்தியில் நம்பிக்கையின் விதையாய் மாறியது. இஸ்ரேலின் வன்முறை, முற்றுகை, அழித்தொழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஃபலஸ்தீனயர்கள் பாதிப்பால் உணர்ந்தனர். சொந்த நாட்டிலேயே உரிமைகள் மறுக்கப்பட்டு அகதிகளாக வாழும் நிலையில் இருந்து கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று உறுதி பூண்டனர். இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்த்து நிற்க ஆரம்பித்தனர்.

இதுதான், காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முக்கியமான காரணங்களாகும். காஸா மக்கள் வளர்ச்சியை நோக்கி செல்லவே முயல்கின்றனர். அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள முயல்கின்றனர். இஸ்ரேலுக்கு எதிராக தற்காப்பு யுத்தத்தையே மேற்கொண்டு வரும் ஹமாஸ், அங்குள்ள மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்று வீரியமாக செயல்படுகின்றனர். இஸ்ரேலின் வளர்ச்சி உலகம் முழுவதும் இருந்தாலும், சொந்த நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஹமாசின் யுத்த தந்திரங்களுக்கு முன் இஸ்ரேலிய இராணுவம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழலே இந்தப்போரிலும் நிலவியுள்ளது.

காஸாவின் கல்வி ரீதியான முன்னேற்றமும், மனித வளங்கள் அதிகரித்தலும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தான் ஹமாஸ் மீது ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, குழந்தைகள் பெண்கள் என்று குறிவைத்து இனப்படுகொலை செய்கிறது.

ஆனாலும், காஸா பகுதி மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் சிறிதும் மாறவில்லை. முழு ஃபலஸ்தீனையும் மீட்கும் வரை போராட்டம் முற்றுப் பெறாது என்ற இலட்சிய வேட்கையின் இறுதி, இஸ்ரேலின் அழிவாகத் தான் இருக்கும் என்பதுதான் ஃபலஸ்தீன மக்களின் போராட்டம் உணர்த்தும் செய்தியாகும்.

- நெல்லை சலீம்

Pin It