இந்தியாவின் இரும்பு மனிதர் என ஆதிக்கவாதிகளால் அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் கூட இன்றைக்கு இருந்திருந்தால் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார். 2500 கோடி செலவில் 600 அடி உயரத்தில், அமெரிக்க குடியரசின் சுதந்திரதேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரமாகவும், அதைவிட முக்கியமாக இந்த சிலை செய்யத் தேவைப்படும் இரும்பை வீட்டுக்கு வீடு, ஊருக்கு ஊர் கொண்டு வாருங்கள் என கூவி அழைக்கும் மோடி - என படேலுக்கே கூட இது அதிசயமாகத்தான் இருக்கும்.

 ராமர் கோயில் கட்ட வீட்டுக்கு வீடு செங்கல் கேட்ட வி.எச்.பி.யின் புத்திசாலித்தனத்தைப் போல, இரும்பைக் கேட்டுஅலையும் இந்தியாவின் பிரதம வேட்பாளர் மோடி புதிய தகவல் ஒன்றை முன் வைக்கிறார். கடந்த மாதம் குஜராத்தில் அரசு சார்பில் 2500 கோடியை வீண் செய்யும் முயற்சியாக படேலுக்கு ஒரு சிலை வைக்க அடிக்கல் நாட்டு விழாவில் தான் இந்த புதிய தகவலை மோடி வெளியிட்டார். இந்தியாவின் இப்போதைய தேவை படேல் பாணி மதச்சார்பின்மையாம், அவரைப்போலத்தான் இவரும் ஆட்சி செய்வாராம். சர்தார் வல்லபாய் படேல் நினைவு சங்கம் நடத்திய கூட்டத்தில் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்துக் கொண்டே நேருவிற்கு பதில் இந்தியாவிற்கு படேல்தான் பிரதமராயிருக்க வேண்டும்; அப்படி நடந்திருந்தால் இந்தியாவின் தலை எழுத்தே மாறியிருக்கும்; அவரே இந்தியாவை உருவாக்கியவர் என புகழாரம் சூட்டி புதிய சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறார் மோடி.

 மோடி திட்டமிட்டு குஜாத்தில் பிறந்த படேலை முன் நிறுத்தக் காரணம் என்ன? ஏற்கனவே பிரதமராயிருந்த 'தவறான செடியில் பூத்த சரியான மலர்' வாஜ்பாய் (தவறான செடியில் சரியான மலர் எப்படி பூக்கும்? இது கலைஞருக்கே வெளிச்சம்), ஜின்னாவை வானளாவிய அளவில் புகழ்ந்த அத்வானி என இவர்களை எல்லாம் முன்னிறுத்தாமல் படேலை முன்நிறுத்தும் மர்மம் என்ன?

 இந்தியாவின் பிரதமர் பதவிக்கு பார்ப்பனர் அல்லாத இந்துத்துவாவில் மூழ்கித் திளைத்த ஒரு முகமூடி இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதாவிற்குத் தேவைப்பட்டது. இதற்கு சரியான நபர் இனப்படுகொலை நாயகனும், குஜராத்தின் இன்றைய முதல்வருமான மோடிதான் என பாஜக‌ முடிவு செய்தது. டீக்கடையில் வேலை பார்த்த சாமானிய மனிதன் நான் என அடிக்கடி மோடி சொல்லிக் கொண்டிருக்கும் காரணமும் அதுதான். நரேந்திர மோடிக்கு தன்னை பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு, தன்னைபோலவே சாதாரண குடும்பத்திலிருந்து வந்த ஒரு பார்ப்பனரல்லாத செத்துப்போன இந்துத்துவா தலைவர் ஒருவர் தேவை. அதற்கு அதே குஜராத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் படேலை விட்டால் வேறு வழி இல்லை. எனவே தான் படேலின் சமாதியைத் தோண்டுகிறார்... தோண்டுகிறார்.... தோண்டிக் கொண்டே இருக்கிறார்.

 மோடி ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அவர் சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். மோடி தேர்ந்தெடுத்த படேலின் கதை இதுதான்.

 குஜராத்தில் 1875ம் ஆண்டு பிறந்த சர்தார் வல்லபாய் படேல் தனது வயல்காட்டில் விவசாய வேலைகள் பார்த்த நேரம் போக மீதி நேரங்களில் தான் படித்த படிப்பு மறந்துபோகாமல் இருக்க வக்கீல் தொழிலையும் சேர்த்து பார்த்துக் கொண்டிருந்தபோது, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (இதைக்கூட மோடியால் ஒழுங்காக சொல்லமுடியவில்லை மேகன்லால் என்கிறார்) தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் அரசியல் பணியாற்ற வந்தபோது அவரால் கவரப்பட்டு காங்கிரசில் இணைந்தார். காந்தியின் அன்பைப் பெற்றவர்களில் ஒருவராக மாறுகிறார்.

 மகாத்மா காந்தியைப் பொருத்தவரை சுதந்திரத்திற்கு முன் இருந்த காந்தி, சுதந்திரத்திற்கு பின் இருந்த காந்தி என இரண்டு பார்வை பார்க்கலாம். சுதந்திரத்திற்கு முன் இருந்த காந்தியோ, கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை என்பார்களே! அதுபோல இந்துத்துவா பாதி, மதச்சார்பின்மை மீதி என ஒரு விசித்திரக் கலவையாக இருந்தார். அன்றைய காந்தியின் மதச்சார்பின்மை முகமாக ஜவஹர்லால் நேருவும் இந்துத்துவாவின் அடையாளமாய் சர்தார் வல்லபாய் படேலும் இருந்தார்கள் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

 இந்திய சுதந்திரமடைந்தவுடன் தனித்தனி சமஸ்தானங்களாய் இருந்த 536 உள்நாட்டுப் பிரதேசங்களையும் இந்தியாவுடன் இணைத்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் என ஒரே பொய்யை திரும்பத் திரும்ப காங்கிரஸ், பா.ஜ.க. ஆதிக்கவாதிகள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதை இந்தியாவின் வெற்றியாக அல்லாமல் இந்துத்துவாவின் வெற்றியாகவே இருந்தது என பிரச்சாரம் செய்கிறார்கள். இதை இன்றைக்கு வரை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

 ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பது என ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. முதல் நாள் 14ம் தேதி பாக்கிஸ்தானுக்கு சுதந்திரம். ஆனால் இந்திய புரோகிதர்கள் ஆகஸ்ட் 15ம் தேதியை நல்ல நாள் இல்லை என சோலி பார்த்துச் சொல்லி விட்டார்கள். எனவே சுதந்திர தினக் கொண்டாட்டங்களை 14ம் தேதி இரவே ஆரம்பித்தனர். அதுதான் ‘நள்ளிரவு சுதந்திரம்’

 இந்தியாவில் இருந்த 536 சமஸ்தானங்களும் ஆங்கிலேயரையே நம்பி இருந்தன. சுதந்திரத் தேதி அறிவித்தவுடன் அன்றைய கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் இவர்களை ஆங்கில அரசு கை கழுவியதாக அறிவித்தார்.

 536 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்ததற்கு மூலகாரணம் படேல் அல்ல. வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது மறைந்துபோன அந்த ஜாம்பவானின் பெயர் வி.பி.மேனன் என்கிற மலையாளி. அவரே அன்றைய இந்தியாவின் உள்துறைச் செயலாளர். ஆங்கில அதிகாரிகளுக்கும், லண்டன் ஆங்கில அரசிற்கும் மிக நெருக்கமானவர். அவரே இந்திய சுதந்திர மசோதாவை உருவாக்கியவர். இந்தியா முழுவதும் அனைத்து சமஸ்தான மன்னர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவ‌ர். பலரை டெல்லிக்கே வரவழைத்தார். இந்திய முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தனது ஆங்கில அதிகாரிகள் தொடர்பால் ஆங்கில அரசின் அழுத்தத்தை சுதேசி மன்னர்கள் மீது பரவச் செய்தார். இதன் காரணமாக இந்தியாவுடன் இணைந்த சமஸ்தானங்கள் பரோடா உள்ளிட்ட பனிரெண்டு.
 
இவ்வளவு அழுத்தத்திற்குப் பிறகும் இந்தியாவுடன் இணைய மறுத்தது மூன்று சமஸ்தானங்கள். முதலாவது ஜீனாகத். இதன் முஸ்லிம் மன்னர் மொகமத்தான். இவர் தனக்கிருந்த ‘உரிமையால்’ பாகிஸ்தானோடு இணைய விரும்பினார். அவரின் திவானாக, (முதலமைச்சராக) இருந்த சர் ஷாநவாஸ் புட்டோ (அதாவது பெனாசிர் புட்டோவின் தாத்தா) அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஜீனாகத் சமஸ்தானத்தின் மொத்த மக்கள் தொகையில் 82 சதவிகிதம் இந்துக்கள். எனவே, ஜீனாகத் பாகிஸ்தானோடு இணையக்கூடாது என எதிர்த்தார் உள்துறைச் செயலாளர் வி.பி.மேனன். தானும் எதிர்த்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல். ஆனால் அவரின் காரணம் வேறுமாதிரியாக இருந்தது.

ஜூனாகத் சமஸ்தானத்தில் தான் சர்தார் படேல் குலதெய்வமாகக் கருதிய சோமநாதர் ஆலயம் இருந்தது. இந்த ஆலயத்தைத்தான் பின்னாட்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்கான் மன்னர் கஜினி முகம்மது படையெடுத்ததால் தீட்டாகிப்போனதாக கூறி பலகோடி பணம் செலவு செய்து அரசு கஜானாவை காலிசெய்தார் படேல். சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் இந்த சோமநாதபுரம் ஆலயத்திற்கு பெண்களை பொட்டுக்கட்டிவிடும் நீண்ட நெடிய வழக்கம் இருந்தது. அங்கேயிருந்த பார்ப்பனர்கள் இதை இந்துமத வழிமுறையாக ஆக்கி வைத்திருந்தனர். பொட்டுக்கட்டிவிடப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களை ஆதிக்க வர்க்கம் தனது இச்சைகளுக்குப் பயன்படுத்தியதால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தந்தை இல்லாதவர்களாக வளர்ந்தனர். இந்த கோயிலைச் சுற்றி வாழ்ந்த ‘தந்தையற்ற’ பல்லாயிரம் குழந்தைகளைப் பற்றி பாடிய குஜராத்திய கவிஞன் நார்சிமேத்தா என்பவர் பாடிய பாடலே இவர்களுக்கு ‘ஹரிஜன்’ என்ற பெயரை பெற்றுத்தந்தது. அதாவது தந்தைகளற்ற பிள்ளைகளே கவலைப்படாதீர்கள் நீங்கள் ஹரிக்குப் பிறந்தவர்கள். அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார். இதைத்தான் குஜராத்தில் பிறந்த காந்தி கடன் வாங்கி இந்தியாவில் இருந்த ஒடுக்கப்பட்ட சமூக மக்களை ஹரிஜன் என்று அழைத்தார்.

இந்தக் கோயில் பாக்கிஸ்தான் வசம் போய்விடக்கூடாது என பதைபதைத்தார் படேல். இறுதியாக சமஸ்தான திவானோடு பேச்சுவார்த்தை நடத்தினார் உள்துறைச் செயலாளர் வி.பி.மேனன். தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே இந்திய அரசு திட்டமிட்டு ஜீனாகத் சமஸ்தானத்தின் தற்காலிக அரசை பம்பாயில் அமைத்தது. அதன் பிரதமராக காந்தியின் மருமகன் சமஸ்தாஸ் காந்தி பொறுப்பேற்க வைக்கப்பட்டார். இந்த கூத்துக்களுக்கு நடுவேதான் ஜீனாகத் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது எனவும், இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைவது மக்களின் விருப்பம் எனவும் முடிவு செய்தனர். பல்வேறு ‘தில்லாலங்கடி’ வேலைகள் செய்து 1948 பிப்ரவரி 20ம் தேதி 91 சதவிகித ஜீனாகத் சமஸ்தான மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துவிட்டதாகக் கூறி சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார் வி.பி.மேனன்.

 இதேபோல் பல்வேறு கடும் போராட்டங்களுக்குப் பின்னர் ஹைதராபாத் சமஸ்தானமும் வி.பி.மேனனின் கடும் முயற்சியால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

 ஜீனாகத் சமஸ்தானத்திற்கு நேர் எதிராக இருந்தது காஷ்மீர். அங்கு மன்னர் இந்துவாகவும், பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாகவும் இருந்தனர். இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைய விரும்பாமல் தனி சுதந்திர நாடாக இருக்க விரும்பிய காஷ்மீர் மன்னரை பதான்களின் படையெடுப்பு என்ற பெயரில் ஒரு போலி படையெடுப்பை காரணம் காண்பித்து, ஜீனாகத் போல ஒரு ‘காட்சி வாக்கெடுப்பு’ கூட நடத்தாமல் இந்தியாவுடன் இணைத்தார் வி.பி.மேனன். இந்த காஷ்மீர்தான் நேருவின் பூர்வீக பூமி. அதனால் இதன் மீது பெருங்கவனம் செலுத்தினார் நேரு.

 பெரும்பான்மையான சமஸ்தான மன்னர்கள் இந்துக்கள். அவர்களிடம் படேலும், மேனனும் ஒரு முக்கிய விஷயத்தை பிரச்சாரமாக வைத்தனர். இனி இந்தியாவை முகலாயர்களோ, மிலேச்சர்களோ அதாவது ஆங்கிலேயர்களோ ஆளமாட்டார்கள். நம்முடைய சமூகத்தைச் சேர்ந்த பார்ப்பனரான பண்டிட்டே (நேரு) ஆள்வார். எனவே, இந்தியாவுடன் இணைந்துவிடுங்கள் என்பதே அது. முஸ்லிம் மன்னர்களிடம் படைபலத்தை பிரயோகம் செய்தனர். இந்து மன்னர்களிடம் இப்படி மதவாதப் பிரச்சாரம் செய்தனர். இதோடு ஆங்கில அரசு சமஸ்தானங்களைக் கைவிட்டதும் சமஸ்தானங்களின் இணைவை முழுமையடைய வைத்தது.

 சுதந்திரம் இந்தியாவிற்குத்தான் கிடைத்தது - காங்கிரஸிற்கு அல்ல என்றார் காந்தி. காங்கிரஸிற்கு அல்ல; ஆர்.எஸ்.எஸ் சிற்கே வந்ததாக அது கருதிக்கொண்டது. நாட்டை புன‌ருத்தானம் அதாவது மறு சீரமைப்பு செய்யும் பொறுப்பு தனக்கே இருப்பதாக அது கருதியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனியாக இயங்கினாலும், வீர சவார்க்கர் தலைமையிலான இந்து மகாசபை வேறாக இருந்தாலும் இவை இரண்டின் மிகத்தீவிர ஆதரவாளர்கள் ஏராளமானோர் காங்கிரசிலும் இருந்தனர்.
 
 '536 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தது படேலின் சாதனை. எனவே, அவரே இந்தியாவின் இரும்புமனிதர்' என பிரச்சாரம் செய்யும் இந்துத்துவாதிகள் படேலின் குருநாதரும், இந்தியாவின் தந்தையுமான காந்தியை இந்துமகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்சின் ஆதரவாளரான கோட்சே தலைமையிலான அணியே கொன்றது என்பதை திட்டமிட்டு மறைக்கின்றனர். 'இந்தியாவை படேலே ஒருங்கிணைத்தார். அவர் உள்துறை அமைச்சராக இருந்த‌தால்தான் இது சாத்தியமானது. இந்தியாவே உருவானது' எனக் கூறுவோர், இதே படேல் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான் போதிய பாதுகாப்பில்லாமல் காந்தி கொல்லப்பட்டார் என்பதையும், படேல் வளர்த்த இந்து தீவிரவாதமே காந்தியைப் பலிவாங்கியது என்பதையும் வசதியாக மறந்துவிட்டனர்.

 காந்தியின் படுகொலை மட்டுமல்ல... இதே படேல் உள்துறை அமைச்சராக இருந்த போததான் டெல்லியில் நடைபெற்ற மதக்கலவரத்தின் போது பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இப்படி முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு முன்னர் அன்றைய இந்திய ஜனாதிபதியும், படேலின் தீவிர ஆதரவாளருமான பாபு ராஜேந்திரபிரசாத் 1948 மே 14 அன்று படேலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதன் சாராம்சம் இதோ... "கலகத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டம் தீட்டி இருப்பதாக எனக்குத் தெரிகிறது. முஸ்லிம்கள் போல் தோற்றம் தருகிற, ஆடை அணிவிக்கப்பட்ட பலரை அவர்கள் தயார்படுத்தி இருக்கின்றனர். இந்துக்களைத் தாக்கி, அவர்களைத் தூண்டிவிட்டு கலகம் செய்விக்கப் போகிறார்கள். இதே போல் முஸ்லிம்களையும் சில இந்துக்களை விட்டு தாக்கவைத்து முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு ஒரு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் வேலையை ஆர்.எஸ்.எஸ். செய்யப்போகிறது...." இப்படி போகிறது அந்தக் கடிதம்.

 காந்தி கொல்லப்பட்ட போதே அதன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பிரதமராய் இருந்த நேரு, உள்துறை அமைச்சர் படேலுக்கு எழுதிய கடிதத்தில் 'காந்தியின் கொலை ஒரு தனிப்பட்ட நபரின் வேலை அல்ல. ஆர்.எஸ்.எஸ்.சால் செயல்படுத்தப்பட்ட விரிவான திட்டத்தின் ஒரு பகுதியே என்ற முடிவிற்கு நான் வந்திருக்கிறேன்' என எழுதினார். ஆனால் படேலோ 'குற்றவாளிகள் கொடுத்திருக்கிற வாக்குமூலங்களிலிருந்து இதில் ஆர்.எஸ்.எஸ். சம்மந்தப்படவே இல்லை என்பது தெளிவாகப் தெரிகிறது. வீரசவார்க்கரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்துமகாசபையின் ஒரு பிரிவுதான் சதியைத் தீட்டியிருக்கிறது; காந்தியின் கொலையை நிறைவேற்றியிருக்கிறது. இதில் பெரிய அளவில் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்' என பதில் கடிதம் எழுதினார். பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் படேல், ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத். ஆனால் தொடர்பு எல்லாம் கடிதத்தில்தான்..... இதே காலகட்டத்தில் இந்தப் படுகொலையில் வீரசவார்க்கர் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் விடுதலை செய்யப்பட்டார். இந்திய அதிசயமாக அப்ரூவரின் வாக்குமூலத்தை வைத்து இவரை குற்றவாளி ஆக்க முடியாது என அன்றைய நீதியரசர் தீர்ப்பளித்தார். இவரின் படத்தைத்தான் பாரதிய ஜனதா தனது ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் திறந்துவைத்து அழகுபார்த்தது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிலரும் கலந்து கொண்டனர் என்பது கூடுதல் செய்தி.

 ஆர்.எஸ்.எஸ்சிற்கும், காந்தியின் படுகொலைக்கும் தொடர்பில்லை என்று சொன்ன சர்தார் படேலே நிர்பந்தங்களின் காரணமாக திடீரென ஒரு நாள் ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்கிறேன் என்றார். கொஞ்ச நாட்களிலே அந்தத் தடையையும் அவரே நீக்கினார்.

 டெல்லியில் நடந்த முஸ்லிம்களின் மீதான கடும் மதவெறி தாக்குதலை நேரு கண்டித்தபோதும் படேல் அதைப்பற்றி ஒருபோதும் கவலைப்படவே இல்லை. இதோ அன்றைய காலகட்டத்தில் மத்திய அமைச்சராய் இருந்த அபுல்கலாம் ஆசாத் தன்னுடைய இந்திய விடுதலை வெற்றி என்ற நூலில் குறிப்பிடுகிறார், படேல் பற்றி

 "டெல்லி நகரில் உள்ள முஸ்லிம் வீடுகளில், விடுதிகளில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என சர்தார்படேல் அறிவித்தார். இந்துக்களையும், சீக்கியர்களையும் தாக்குவதற்காக டெல்லி முஸ்லிம்கள் ஆயுதங்களை சேகரித்து வைத்திருந்தனர். இந்துக்களும், சீக்கியர்களும் முஸ்லிம்களைத் தாக்கியிராவிட்டால், முஸ்லிம்கள் முந்திக் கொண்டு அவர்களை அழித்துவிட்டிருப்பார்கள் என்றார் படேல்.

 டெல்லி கரோல் பார்கிலும் - சப்ஜி மண்டியிலும் சில ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. உள்துறை அமைச்சர் படேல் கட்டளைப்படி மந்திரி சபையின் அறைக்கு எதிரே உள்ள அறையில் அந்த ஆயுதங்கள் எங்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. நாங்கள் மந்திரி சபை கூட்டத்திற்கு வந்தபோது அவற்றைப் பார்வையிடலாம் என படேல் எங்களிடம் கூறினார். நாங்களும் (நேரு உட்பட) சென்று பார்த்தோம். அங்கு மேஜை மீது சில துருப்பிடித்த கத்திகள், சமையலறை கத்திகள், பேனா கத்திகள், பிடியுடனும், பிடி இல்லாமலும் இருந்தன.

 பழைய வீடுகளின் வேலியிலிருந்து எடுக்கப்பட்ட இரும்புக் கம்பிகளும் இரும்பு ஈட்டிகளும் இருந்தன. சில இரும்பு தண்ணீர்க் குழாய்களும் இருந்தன. இந்துக்களையும், சீக்கியர்களையும் அழிக்க இவற்றை முஸ்லிம்கள் சேர்த்து வைத்திருந்தனர் என்றார் படேல்.

 கத்தி சிலவற்றை எடுத்துப் பார்த்த மவுண்ட் பேட்டன் (அப்பொழுதும் மவுண்ட் பேட்டன்தான் கவர்னர் ஜெனரல்) இவற்றைக் கொண்டு டெல்லி நகரத்தை கைப்பற்ற முடியுமென்றால் அவர்கள் இராணுவத் தந்திரங்களை மிக அற்புதமாக கற்றவர்கள் என்றார் சிரித்தபடி."

 இப்படி எழுதுகிறார் மவுலான அபுல் கலாம் ஆஸாத்.

 இவ்வளவிற்குப் பிறகும் படேல் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வந்த போதெல்லாம் அவரைக் காப்பாற்றியவர் அன்றைய பிரதமர் நேரு

 இந்தியாவின் உள்துறைச் செயலாளர் வி.பி.மேனனின் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி தன்னை இரும்பு மனிதராக்கிக் கொண்டவர் படேல்.....

 கடும் உள்நாட்டு கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு மிக எதிராக செயல்பட்டவர் படேல் .....

முதன் முறையாக சுதந்திர இந்தியாவில் அரசு கஜானா பணத்தை தனிப்பட்ட முறையில் சோமநாதபுரம் ஆலயத்தை புதுபிக்க வீண் செலவு செய்தவர் படேல் . . .

தனது குருநாதர் காந்தியின் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கரிசனம் காட்டியவர் படேல் ......

முஸ்லிம்களுக்கு 1909ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்த கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் இருந்த இட ஒதுக்கீடு, தனிவாக்காளர் தொகுதி இவற்றை ஒரே நாளில் ஒழித்துக் கட்டியவர் படேல்.

இந்த படேலைத்தான் இந்தியப் பிரதமராய் ஆகியிருந்தால் இந்தத் தேசமே மதச்சார்பின்மை தேசமாக மாறி இருக்கும் என்கிறார் குஜராத்திய கதாநாயகன் மோடி.......

 நாமும் சொல்கிறோம் -

 இதே படேலை துணைப்பிரதமராக - உள்துறை அமைச்சராக ஆக்காமல் நேரு இருந்திருப்பாரேயானால் காந்தியையும் காப்பாற்றி இருக்கலாம்; இந்த தேசத்தையும் மதவெறியில் இருந்து காப்பாற்றி இருக்கலாம்.

- கே.எம்.சரீப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It