மாற்றுத்திறனாளிகளுக்கு நீதி - உச்சநீதிமன்றத் தீர்ப்பு 8-10-2013

நீதியரசர்கள் ரஞ்சனா பிரசாத் தேசாய், ரஞ்சன் கோகாய் உள்ளிட்டவர்களுடன் இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் சதாசிவம் அவர்கள் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பில் மூன்று சதவிகித இடஒதுக்கீட்டை உடனடியாக முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும், இதனால் மொத்த இடஒதுக்கீடு ஐம்பது சதவிகிதத்தைத் தாண்டுமானாலும் அது பாதகமில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உரிய இடஒதுக்கீட்டை வழங்குகள் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பை மாற்றுத்திறனாளிகள் சார்பாக மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

மாற்றுத்திறனாளிகள் தங்களின் வேலை வாய்ப்பு பற்றி பேசும் பொழுதெல்லாம், "மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை உள்ளடக்குவதினால் மொத்த இடஒதுக்கீடு விழுக்காடு ஐம்பதைத் தாண்டிவிடும், இது ஏற்கனவே உச்சநீதிமனற்த்தால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு தொடர்பான தீர்ப்புக்கு எதிரானது" என்று மத்திய மாநில அரசுகளால் கூறப்பட்டு வந்தது. தற்பொழுது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தீர்ப்பில் நீதியரசர் சதாசிவம் அவர்கள் கூறுகையில் "சட்டம் (குறைபாடுடைய நபர்கள் (சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் , 1995) இருந்தும் மாற்றுத்திறனாளிகளின் வேலை வாயப்புக்கான பாதை திறக்கப்படவில்லை. அவர்களின் வழிகளில் உள்ள சமூக முட்டுக்கட்டைகளைத் தாண்டி அவர்களால் வேலை வாய்ப்பை அடைய முடியவில்லை. சமூகத் தடைகள், நடைமுறைத் தடைகள் என்ற இரண்டு தடைகளைத் தாண்டி வேலை வாய்ப்புகளைப் பெற முடியவில்லை என்பதே உண்மை. மேலும் இதன் விளைவாக மாற்றுத்திறனாளிகள் வறுமை மற்றும் வறுந்தத் தக்க நிலையில் வாழ்கின்றனர். மாற்றத்திறனாளிகள் அவர்களின் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ பங்களிப்பை வழங்க இயலாமல் உள்ளனர்." என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தத் தீர்ப்பில் "அ, ஆ, இ, ஈ, ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் மொத்த வேலை வாய்ப்புகளைக் கணக்கிட்டு அதில் மூன்று சதவிகித இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். மூன்று மாத காலத்திறகுள் இந்தப் பணிகள் முடிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர். "மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை மறுக்கும் அரசு நிறுவனங்களின் துறைகளுக்கு பொறுப்பானவர்கள் மீது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட வேண்டும்" என்றும் இந்த்த் தீர்ப்பு சுட்டிக்காட்டுகின்றது.

நீதியரசர் சதாசிவம் அவர்கள் இந்திய நாடெங்கிலும் (National Legal Services Authority) செயல் தலைவராக இருந்து நாடெங்கிலும் சட்டவிழிப்புணர்வு முகாம்களை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். கிராமப்புறங்களில்கூட மக்களின் உரிமைகளை எடுத்துரைக்க சட்டக் குழுக்களையும், பள்ளி, கல்லூரிகளிலும்கூட விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அவர் இன்று இந்திய உச்சநீதிமன்ற நீதியரசாய் இருந்து இத்தகைய ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை பெற அனைத்து வளர்ச்சித் திட்டங்களிலும் அவர்களை உள்ளடக்கியதாக அமைத்திட வேண்டும். இடஒதுக்கீடு மட்டும் அவர்களை முன்னேற்ற போதாது. இடஒதுக்கீடு என்பது ஒரு கருவிதான்.

உணவு, கல்வி, சுகாதாரம், மருத்துவம், தொழில், வேலை வாய்ப்பு, பயிற்சி, அரசிய்ல பங்கேற்பு, பொழுது போக்கு, விளையாட்டு, சுற்றுலா, திருமணம், சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரம், அதிகாரம் பெறுதல், போன்ற அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய வளர்ச்சியே அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும்.

- சூர்ய.நாகப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It