ஏன் இந்த இரகசிய அதிரடிப் பயணம்?

கடந்த 2013, ஆகஸ்ட், மாதத்தில் தாதுமணல் முறைகேடுகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட உயர்திரு. ககன் தீப்சிங் பேடி அவர்கள் சுமார் ஆறு மணல் குவாரிகள் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய ஆறு அல்லது ஏழு நாட்கள் ஆய்வு செய்து, மக்களையெல்லாம் மணல் குவாரிகள் இருக்கும் இடத்திலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சந்தித்து குறைகள் கேட்டார். மனுக்களை பெற்றுக்கொண்டார்.

ஆறே குவாரிகள் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுநாட்கள் செலவிட்டவர், 52 மணல் குவாரிகள் இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு, இங்கே இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமல், திடீரென இங்கே வந்து நின்று கொண்டு, ஆய்வு செய்யும் குழுவின் எந்த பயணத்திட்டம் குறித்தும், அதன் கால அவகாசம் குறித்தும் மக்களுக்கு அதிகாரப் பூர்வமாக தகவல் தெரிவிக்காமல், மணல் குவாரிகளை ஆய்வு செய்ய வந்திருப்பதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பது, நேர்மையாளராக கருதப்படும் திரு. பேடி போன்ற ஓரளவு மதிப்புமிக்க அரசு உயர் அதிகாரி இப்படி நடந்து கொள்வது அவருக்கு, அவர் வைத்திருக்கக் கூடிய பொறுப்பிற்கு அழகல்ல. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்ய வருமுன் தமிழக அரசு தனது இணையதளத்தில் தெளிவாக அறிவிப்பு கொடுத்தது போல, நெல்லை மாவட்டத்திற்கும் அதே போன்ற முன் அறிவிப்பைக் கொடுக்காதது, அரசு இணைய தளத்தில் வெளியிட்டு தகவல் தெரிவிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. என் இந்த இரகசிய அதிரடிப் பயணம்.?

மக்களை சந்திக்காத ஆய்வுக் குழு

ஆய்வுக்குழுவின் வருகை, மக்களுக்கு தெரியுமுன்னரே, தாது மணல் நிறுவனங்களின் ஆதரவாளர்களுக்கு தகவல் முன்னரே கிடைத்து, அவர்கள் தங்களது ஆதரவு சக்திகளை காசு கொடுத்து பெரிய அளவில் திரட்ட அணியமாகிவிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது போலவே, இங்கேயும் ஆய்வுகள் குறைந்த அளவு அதே மாதிரியான முறையிலாவது ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். தாதுமணல் கொள்ளையில், அந்தச் சுரண்டலில் ஈடுபடுகின்ற கம்பெனிகள், மீனவ கிராமங்களுக்கு இரு புறமும் இருக்கும் மணல் திட்டுக்களை முற்றிலும் கரைத்து, அவற்றை முழுமையாக சுரண்டி எடுத்துவிட்டு, பெரும் பாதாளக் குழிகளை தோண்டி வைத்ததன் காரணமாக, மீனவ கிராமங்கள் முற்றிலும் கரைகள் அரிக்கப்பட்டு, கடற்கரைகள் அழிக்கப்பட்டு, வீடுகள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு, மிதந்து கொண்டு வருகின்றன.

புகழ் மிக்க உவரி அந்தோணியார் தேவாலயங்களும், உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில்களும் தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் ஆலைக் கழிவுகளினால் கடல் முற்றிலும் மாசுபட்டு உள்ளது. அந்தத் தடயங்களை யெல்லாம் தமிழக அரசு கொடுத்த காலஅவகாசத்தில், மணல் திருடர்கள் முற்றிலும் அழித்துவிட்டனர். இந்தக் கொடுஞ் செயல்களைப் ஆய்வுக்குழுவினர் பார்க்க வேண்டுமெனில், தங்கள் குழு நேரடியாக மீனவ கிராமங்களுக்குள் வந்து மக்களை நீங்கள் சந்திக்க வேண்டும். அந்தக் கோரத்தாண்டவத்தை நீங்கள் நேரடியாக பார்த்தால் மட்டுமே, மக்களின் வாழ்விடங்களில் வந்து கருத்து கேட்டால் மட்டுமே, இந்தப் பாதிப்பை உங்களால் புரிந்து கொள்ள முடியும். கடந்த கால் நூற்றாண்டும் மேலாக சட்டவிரோதமாக நடைபெறும் மணல்கொள்ளையின் உண்மைத்தன்மை தங்களுக்கு புலப்படும். அதன் அழிவுகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஆகவே, தாது மணல் ஆய்வுக்குழு மீனவ கிராமங்களுக்கும், கடலோரத்தில் இருக்கும் விவசாய கிராமங்களுக்கும் சென்று கள ஆய்வு நடத்த வேண்டும். மக்களை அவர்களின் இருப்பிடங்களில் சந்திக்க வேண்டும். அவர்களின் தோட்டங்களில் சந்திக்க வேண்டும்.

25 ஆண்டுகால மணல் கொள்ளை

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் குவாரிகளும், அவற்றை தரம் பிரிக்கும் மணல் ஆலைகளும் அதிகமாக கடலோரங்களில் மீனவ குடியிருப்புகளுக்கு அருகில் இல்லை. அவைகள் மீனவ கிராமங்களைக் கடந்து கொஞ்சம் தொலைதூரமாகவும், தாது மணல் ஆலைகள் உள்நாட்டுப் பகுதியிலும் இருக்கின்றன. அது தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தான் மணல் கொள்ளை நடந்து வருகிறது. அங்கே, மணல் கொள்ளையினால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் தற்போதுதான் உணர்ந்து வருகிறார்கள். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்திலோ ஏறக்குறைய 25 ஆண்டுகாலங்கள் இங்கே சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. இந்த மணல் கொள்ளையர்கள் கோடீஸ்வரர்கள் ஆனது, கல்வித் தந்தையர்களாக உருமாறியதற்கு நெல்லை மாவட்ட கடற்கரை மணல் கொள்ளை தான் அடிப்படைக் காரணமாக அமைந்தது இங்கே தான் மணல் கம்பெனிகள் மக்களை பிரித்தாளக் கூடிய, சுரண்டக்கூடிய, மீனவ மக்கள் மத்தியில் மோதல் போக்குகளை ஏற்படுத்தக்கூடிய தந்திரங்களை, பால படங்களை இந்த நெல்லை மண்ணிலே தான் கற்றார்கள். இதற்கு நீங்களும் ஏற்கெனவே சாட்சிதான்.

ஒரு மாத கால ஆய்வு தேவை

கடந்த 1996 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் பெருமணல் கிராமத்தில் நடந்த மணல் கம்பெனிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது தாங்கள், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் உதவி ஆட்சியராக இருந்தீர்கள். ஆகவே, நெல்லை மாவட்டத்தில் தாது மணல் கொள்ளையின் தாக்கத்தை அன்றே மக்கள் உணர்ந்திருந்தார்கள். நீங்களும் உணர்ந்திருந்தீர்கள். அதற்குப் பிறகு தான், இந்த மணல் அலை நிறுவனங்களின் அதிபர்கள் மிகவும் பகாசூர, பலம் பொருந்திய, அரசியல் செல்வாக்கு மிக்க அமைப்புகளாக இன்று உருமாறி இருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் 25 ஆண்டுகால மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்யும் போது, அதற்கு தேவையான காலம் எடுத்து, முறையான வகையில், போதுமான நேரம் ஒதுக்கி இந்த ஆய்வை அறிவியல் பூர்வமாக திறம்படச் செய்ய வேண்டும்.

உங்களின் இந்த மேலோட்டமான ஆய்வு நடவடிக்கை என்பது எங்களுக்கு இந்த அரசின் மீது மேலும் அதிருப்பதியை ஏற்படுத்தும் முன், உங்களைப் போன்ற சில நேர்மையான அதிகாரிகள் மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தும். ஆகவே, உங்களின் பயணத்திட்டத்தை முறையாக, நியாயமாக அறிவித்து விட்டு, ஆய்வு செய்யுங்கள். நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளை முறையாக ஆய்வு செய்ய குறைந்தது ஒரு மாதம் தேவை. ஆகவே, ஒரு மாத காலம் ஒதுக்கி ஆய்வு செய்து மணல் கம்பெனிகளின் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசுக்கு வெளிபடுத்த வேண்டும். நீங்கள் முறையான அனுமதி பெற்ற குவாரிகளை, அந்த மணல் ஆலைகளை மட்டுமே ஆய்வு செய்து வருகிறார்கள். அனுமதி பெறாத, சட்டவிரோத மணல் குவாரிகளை, மணல் ஆலைகளை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டுமெனில், நீங்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள மக்களைச் சென்று சந்திக்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் முறைகேடுகள் வெளிவர வாய்ப்பில்லை. அந்த சட்ட விரோத செயல்பாடுகளுக்கு நீங்களும் உடந்தையாகி விடுவீர்கள்.

நெல்லை மாவட்டத்தில் 128 அதிகாரிகளைக் கொண்ட 15 குழுக்களாக செயல்படும் உங்களது தாது மணல் ஆய்வுக் குழுவின் முழுமையான பட்டியலை மக்களுக்கு வெளிபடுத்தவேண்டும். இந்த தாது மணல் ஆய்வுக் குழுவில் வனத்துறை, சுகாதாரத்துறை, நீர்வளத்துறை, ஊராட்சிமன்றங்களின் அதிகாரிகள், மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை, கடல் உயிரியலாளர்கள், நிலவியல் அதிகாரிகள், மருத்துவர்கள் இடம் பெற்றிருக்கிறார்களா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக

1. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கனிம வளக் கொள்ளை குறித்த, கனிம சட்ட விதி மீறல்கள், சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த திரு. ககன்தீப்சிங் பேடி இ.ஆ..ப. அவர்களின் ஆய்வு அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் ஆய்வின் அறிக்கையை பொது மக்கள் பார்வைக்கு கண்டிப்பாக வைக்க வேண்டும்.

2.சட்ட விரோதமாக கனிம மணலை கொள்ளை அடித்து, நாட்டிற்கு பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்திய கனிம ஆலை அதிபர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் செய்த பொருளாதார குற்றத்திற்காக அவர்களின் சட்டவிரோத சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். அவர்களிடம் இரு மடங்கு அபதாரம் (தண்டம்) விதிக்க வேண்டும்.

3.இந்த சட்டவிரோத கனிம மணல் கொள்ளைக்கு துணையாக நின்று, அரசிற்கு அவப்பெயரையும், நாட்டிற்கு பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள பல துறைகளைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகளையும் கைது செய்து அவர்களின், சொத்துக்கள் குறித்த ஆய்வையும், தணிகையையும் மேற்கொள்ளவேண்டும்.

4.கனிம மணல் நிறுவனங்கள் தங்கள் குடோன்களில் பதுக்கி வைத்துள்ள சட்ட விரோத கனிம மணல் இருப்புகளை அரசு கையகப்படுத்த வேண்டும்.

5.தமிழக அரசு அமைத்திருக்கிற ஆய்வுக் குழுக்களில் மீனவ மக்களின் நம்பிக்கையை பெற்ற சமுதாயத் தலைவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறச் செய்யவேண்டும்.

6.இந்தக் கனிம மணல் கொள்ளையினால் இயற்கை வளங்களுக்கு, (LOSS OF ECOSYSTEM SERVICE) குறிப்பாக அரியவகை கடல்வாழ் உயிரினங்களைக் கொண்ட தேசிய கடல்வளப் பூங்கா மன்னார் வளைகுடாவிற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு, விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தகுந்த இழப்பீடும், கடலை மாசுபடுத்திய குற்றத்திற்கான தண்டனையும், அதனால் நாட்டிற்கு மீன் ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கிற அந்நிய செலவாணி இழப்பீட்டையும் அந்தக் கனிம மணல் நிறுவனங்களிடம் (அவர்களிடம்) இருந்தே அரசு பெற்று மக்களுக்கு அளிக்க வேண்டும்.

7.கனிம மணல் குறித்து இதுவரையிலும் முப்பது ஆண்டுகளாக பொதுவிசாரணையே நடத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களின் அடிப்படையில், கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை விதிமீறல்கள் அடிப்படையில், அறிவியல் ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். கனிம மணல் வளங்கள் சுரண்டப்பட்டதினால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த தாக்கங்கள் (CUMULATIVE IMPACT STUDY - ASSESSMENT) குறித்த ஆய்வை அரசு மேற்கொள்ள வேண்டும்.

8.இந்தக் கனிம மணல் கொள்ளையினால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சுகாதாரச் சீர்கேடுகள் குறித்த ஒரு நல ஆய்வு அறிக்கையை (HEALTH IMPACT STUDY) பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கனிம மணல் வளங்கள் சுரண்டப்பட்ட காரணத்தால், ஏற்பட்ட கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும், தகுந்த இழப்பீடும் முறையாக அரசு வழங்க வேண்டும். !

9.கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை கடலோரப் பகுதி முழுவதும் கனிம மணல் அள்ளும் நிறுவனங்கள், அரசின் நிலங்களையும், ஏழை மக்களிடம் இருந்து மிரட்டி, பறித்து வைத்துள்ள அனைத்து நிலங்களையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.

10. தமிழக முதல்வர் அவ்வப்போது மேடைகளில் சொல்லுவது போல, எனது அரசு “மக்களுக்காகத் தான் திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல” என்ற கொள்கையை கொண்ட அரசாக இருக்கமானால், இந்தத் தாரக மந்திரத்தின் அடிப்படையில் உறுதியாக இயங்குமானால், இப்படிப்பட்ட நம்பத்தகுந்த, நேர்மையான உறுதியான நடவடிக்கைகளை அதிகாரிகளாகிய தாங்கள் மேற்கொண்டு நாட்டின் வளங்களை, மக்களின் வாழ்வாதாரத்தை, சுகாதாரத்தை பாதுகாக்க, சனநாயகத்தை, நாட்டின் பொருளாதரத்தை பாதுகாக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 

- ம.புஷ்பராயன், அமைப்பாளர், கடலோர மக்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு.

Pin It