வனம் அதன் பின் உள்ள அரசியல் என்பது வன உரிமைச் சட்டங்களை புரிந்துகொள்ள முக்கியமானது. 48 A அரசியலமைப்பின் படி அரசு வனத்தினையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டியதாகின்றது. வனத்தைப் பாதுகாக்கும் உரிமை மக்களுக்கு இல்லாத நிலை உருவாக்கப்பட்டது. ஆனால் வன உரிமைச் சட்டத்தின் வழி அந்த உரிமை மக்களுக்கு உள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1793 வருடம் ஆங்கிலேயக் கம்பெனி நிரந்தர செட்டில்மெண்ட் கொள்கையினை கடைப்பிடித்தது. அதன் அடிப்படையில் ஜமீந்தாரி முறை இங்கே அறிமுகமானது. 1859 ல் தனியார் சொத்து தொடர்பான கொள்கைகள் உருவானது. அதன் தொடர்ச்சியாக 1927 இந்திய வனச்சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வனச்சட்டம் மூலமாக பிரிட்டீசார் வனத்தினை தங்களின் ஆங்கிலேய நாட்டு நலனுக்கு சுரண்ட பயன்படுத்தினர். பழங்குடி மக்களோ தொடர்ந்து ஆங்கிலேய அரசின் கோட்பாடுகளை எதிர்த்து போரிட்டு வந்தனர். பழங்குடி மக்கள் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய 150 போராட்டங்களில் 75 போராட்டங்களில் அம் மக்களை ஆங்கிலேயர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை.

சுதந்திர இந்தியாவில் 83 மாவட்டங்களில் பழங்குடி மக்கள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. பெரும் போர்க்களமாக மத்திய இந்தியா திகழ்கின்றது. சுதந்திர இந்தியாவில் 83 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பிரச்சனை மாவட்டங்களாக மாறியுள்ளது.
 1952ல் சுதந்திரத்திற்குப் பின் உருவாக்கப்பட்ட வனக்கொள்கையின் படி நாட்டில் 33% நிலம் வனமாக மாற்றப்பட வேண்டும். 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி தேசிய பூங்காக்களும் வனவிலங்கு சரணாலயங்களும் உருவாக்கப்பட்டன. 1976 வருடம் மாநிலப் பொறுப்பிலிருந்த வனம் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. வனப்பகுதிகளில் வனத்திற்குப் பொருந்தா செயல்பாடு தடுக்கப்பட்டது. 1980ல் வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதுவரை வனத்தில் மக்களுக்கு இருந்த செட்டில்மெண்ட் உரிமை மறுக்கப்பட்டது. கோதவர்மன் திருமல்பாட் என்ற வழக்கு தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கலானது. 2002 ஆண்டு மத்திய குழு அமைக்கப்பட்டது. 2002-ல் சுற்றுச்சூழல் அமைச்சகம் வனத்திலிருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது. வனம் என்பது மரம், செடி, கொடி, வன விலங்கு மட்டும்தான் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் செயல்படத் துவங்கினர். உண்மையில் மனிதன் காலடி படாத வனம் என்று ஒன்று உலகில் இல்லை. ஆள் அரவமற்ற அமேசான் காடுகளில் கூட மக்கள் வாழ்ந்த சுவடுகளை கண்டு பிடித்துள்ளனர். ஆனால் இந்தியாவில் வனத்துறை, அரசு என எல்லாம் சேர்ந்து சுமார் 7.5 லட்சம் மக்களை வனத்தை விட்டு வெளியேற்றினர்.

 வனத்துக்குள் 2690 வன கிராமங்களும், வனத்தை வாழ்வுக்காக பயன்படுத்தக்கூடிய 170,379 கிராமங்களும் இருக்கின்றன. வனத்துறையினர் 2690 வன கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து அவர்களை வெளியேற்றவும் துவங்கினர். தேசியப் பூங்கா உள்ள பகுதியில் மக்கள் வாழக்கூடாது என்பது அரசின் கொள்கையாக இருந்தது. ஆனால் பல லட்சம் மக்கள் பல தலைமுறைகளாக அப் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் காய்ந்த இலைகளைக்கூட பொறுக்கக்கூடாது. தேசியப்பூங்கா உள்ள‌ 60% வனப்பகுதியில் இன்னும் எந்த செட்டில்மெண்டும் நடக்கவில்லை. ஒரிஸ்ஸாவில் 60% வனப்பகுதிகளும், மத்தியப் பிரதேசத்தில் 83% மற்றும் ஆந்திராவில் 20% ஆகிய வனப்பகுதிகள் சர்வேகூட செய்யப்படவில்லை. இந் நிலையில் வனத்தில் உள்ள‌ மக்களை வெளியேற்றத் துவங்கினர். சுமார் 200 முதல் 300 பழங்குடி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந் நிலையில் நாடு முழுவ‌துமுள்ள பழங்குடி மக்கள் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து போராடின‌. உரிமை கேட்டுப் பெறுவதில்லை, அது எடுக்கப்பட வேண்டியது என்ற முழக்கம் இப் போராட்டத்தில் முன் வைக்கப்பட்டது. அந்தப் போராட்டம் அரசுக்கு கண்டனம் என்ற வடிவிலிருந்து அது ஒரு உரிமைக்கான போராட்டம் என அறியப்பட்டது. It is not politics of protest,but it politics of struggle அது அரசியல் முன்னோக்காக அமைந்தது. (process of political engagement.)

இதன் தொடச்சியாக பல்வேறு அதிகார மையங்களுக்கு பழங்குடி மக்களின் குரல் புறக்கணிக்க முடியாததாக மாறியது. உச்ச நீதிமன்றத்தில் 2004ல் கோதவர்மன் வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில் பழங்குடி மக்களுக்கு வரலாற்று அநீதியை விளைவித்துவிட்டதாக ஒப்புக்கொண்டது. பழங்குடி மக்களுக்கான சட்டத்தை வடிவமைக்கும் பணியினைச் செய்ய பழங்குடி இயக்கங்கள் பிரதமரிடம் ஆர்வத்தை வெளிப்படுத்தின. ஏனெனில் இந்த சட்டமும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உருவாக்கும் நிலை ஏற்பட்டது. பழங்குடிகளுக்கு ஒரு போதும் வனத்துறை நியாயம் வழங்காது என பழங்குடியினருக்குத் தெரியும். எனவே அரசின் இந்த சட்டம் இயற்றும் பொறுப்பை சுற்றுச்சூழல் அமைச்சகம் வசம் ஒப்படைக்கும் முடிவை பழங்குடி இயக்கங்கள் எதிர்த்தன. இதன் விளைவாக இந்த சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு பழங்குடி அமைச்சகத்தின் வசம் தரப்பட்டது. மக்கள் இயக்கங்களின் ஆலோசனைகள் முக்கிய பங்காற்றின. முடிவில் 2006 டிசம்பர் மாதம் இந்த Forest Rights Act 2006 (Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act) குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினார்.

இந்த சட்டம் பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்வாதார உரிமைகளை அங்கீகரித்தது. கிராம சபை எல்லாவற்றையும் தீர்மானிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மரம் வெட்டுவது கூட கிரம சபை அனுமதியுடனே செய்யமுடியும். நில பட்டாக்களை கிராமசபை தீர்மானிக்கும். தனி நபர்களை விட ஊர் என்ற கூட்டு நிலை தீர்மானிக்கும் சக்தியானது. மக்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட செட்டில்மெண்ட் உரிமையான நிலப் பட்டா கேட்டு மனு செய்தார்கள். ஜீன் 2012 வரை சுமார் 32 லட்சம் மக்கள் இக் கோரிக்கைக்காக மனு செய்துள்ளனர். அதில் 13 லட்சம் வரை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தமிழகம், கோவா, ஒரு சில வட கிழக்கு மாநிலங்கள் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

மதுரை உயர்நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி என்பவர் தாக்கல் செய்த வழக்கு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற வன அதிகாரி சாம்பசிவம் தாக்கல் செய்த வழக்கு என ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் வனப்பகுதியில் மக்களுக்கு அரசு பட்டா வழங்குவதற்கு முன் தங்களிடம் அனுமதி பெற்று வழங்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு உள்ளது. இதனை தடையாணை என அரசும் அதன் அதிகாரிகளும், சில தொண்டு நிறுவனங்களும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன‌. மத்திய பழங்குடி அமைச்சர் கிசோர் சந்திர தியோ தமிழக முதல்வருக்கு இந்த வழக்கில் உள்ள உத்தரவை உடனே நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். ஆனால் தமிழக அரசு இப் பிரச்சனையில் பாராமுகமாக செயல்படுகின்றது.

வள‌ர்ச்சி என்ற பெயரில் மக்களின் கிராம சபை அனுமதி இல்லாமல், ஒரிஸ்ஸாவின் நியாம்கிரி மலையில் சுரங்கம் தோண்டிய வேதாந்தா வழக்கில் வன உரிமைச்சட்டம் படி கிராம சபை அனுமதி பெற்றே கம்பெனிகளுக்கு நிலத்தை தரமுடியும் என உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் கூறியுள்ளது. வன உரிமைச்சட்டம் இந்த அரசியல் மற்றும் சமூகப் பின்னணியில் உருவானது. ஒரு சட்டம் அதனை கையாளும் மக்களின் அரசியல் சமூகப் புரிதல் மற்றும் நியாயங்களின் அடிப்படையில் புதிய வடிவம் பெறுகின்றது. புத்தகங்களில் வெறும் சட்டமாக இருப்பதாலேயே அதனால் எந்தப் பலனும் வந்துவிடாது. சனநாயக சமூகத்தின் முன் எழுப்பப்படும் இக் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டியதும், பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக ஆதரவளிப்பதும் நமது சனநாயக கடமை.

(10.10.2013 கோயமுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தில் சி.ஆர். பிஜாய் பேசியதன் சுருக்கப்பட்ட வடிவம். சி.ஆர். பிஜாய் பழங்குடி உரிமை சார்ந்த செயல்பாட்டாளர்; மனித உரிமைப் போராளி, எழுத்தாளர், P.U.C.L மற்றும் Campaign for Survival and Dignity,ஆகிய இயக்கங்களில் செயல்படுபவர்)

Pin It