காமன்வெல்த்-2

உலக வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, இந்தியா, சீனா போன்றவற்றின் துணையோடு தமிழர்கள் மீதான இனப்படுகொலையானது சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். கொத்துக்குண்டுகள், இரசாயன குண்டுகள் என தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி 2009ல் நடந்த இறுதிகட்ட போரில் மட்டும் 1,50,000 மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்து இரத்தவெறியோடு அலைந்த சிங்கள அரசின் மீது இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுகளை உலகத் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் அழுத்தத்தால் சர்வதேச சமூகம் எழுப்ப தொடங்கியது. இந்த தொடர்ச்சியான இனப்படுகொலை மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகளால் விழி பிதுங்கியிருந்த சிங்கள அரசை காப்பாற்ற அதன் எஜமானிகள் முன் வந்தனர்.

அதன் முதற்கட்டமாக இனவெறிப் போரினால் நசிவடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க அவை முடிவெடுத்தன. போரின் போதே பல நிறுவனங்கள் (முக்கியமாக ஏர்டெல்) போரை நடத்த துணை நின்றதை நாம் அறிவோம். போருக்கு பின்பும் ஏகாதிபத்தியங்களின் ஆசியோடு பல அந்நிய முதலீடுகள் இலங்கையில் நடைப்பெற்றன.

அதன் அடுத்த கட்டமாக காமன்வெல்த் மாநாட்டை 2011 ல் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக 2007ல் இலங்கை விண்ணப்பித்திருந்தது. கடந்த 2009 நவம்பர் 27-29 டிரினாட் அண்ட் டோபாகோவில் நடைப்பெற்ற காமன்வெல்த் மாநாட்டின்போது இலங்கையின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. இனஅழிப்பு போர் முடிவடைந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் வதைப்பட்டுக் கொண்டிருந்தபோது இது நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இங்கிலாந்து பிரதமர் காட்டன் பிரவுன், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட், கனடாவின் சிடீஃபன் கார்ப்பர் ஆகியோர் சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்திய இனவெறிப்போரில் மனித உரிமை மீறல்கள் நடைப்பெற்றுள்ளதையும், முள்வேலி முகாம்களில் இலட்சக்கணக்கான தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பின் காரணமாக 2011 மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

ஒருவேளை எந்த எதிர்ப்புமில்லாமல் 2011ல் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றிருந்தால் இந்நேரம் நமக்கு தலைவராக இராசபட்சே இருந்திருப்பான். குறைந்தபட்சம் இந்த ”அயோக்கிய” அமெரிக்க தீர்மானம் போன்ற ஏமாற்று தீர்மானங்கள் கூட வந்திருக்காது.

2009ல் நடந்த எதிர்ப்பு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு 2011-ல் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடந்த மாநாட்டில் இலங்கைக்கு எதிரான குரல்கள் குறைந்திருந்தன (அ) குறைக்கப்பட்டிருந்தன. மாநாட்டின் இறுதி நாளன்று 2013 காமன்வெல்த் மாநாட்டிற்கான இடம் குறித்து விவாதிக்கபட்டு இலங்கையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இராசபட்சே பேச அழைக்கப்பட்டபோது கனடா அதிபர் சிடீபன் கார்ப்பர் இலங்கையில் காமன்வெல்த் நடைபெற்றால் தனது நாடு புறக்கணிக்கும் என்றும், தனது சக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் முக்கியமாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனையும் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரிவிட்டு எலிசெபத் ராணி உட்பட உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் கூடியிருந்த அந்த அரங்கத்தை விட்டு வெளிநடப்பு செய்தார்.

இன்றளவிலும் கனடாவின் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் ஒருமித்தமாக இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு மற்ற நாடுகளையும் புறக்கணிக்க கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

1)http://www.theglobeandmail.com/news/national/ottawa-opposes-sri-lanka-bid-to-host-next-commonwealth-summit/article1381338/
2)http://transcurrents.com/news-views/archives/5522

இந்த கூட்டத்தில் இந்திய அரசின் சார்பாக துணை பிரதமர் கமீது அன்சாரி கலந்து கொண்டார். ஆஸ்திரேலியா இந்திய அரசுக்கு யுரேனியம் தர மறுத்ததையடுத்து மன்மோகன் சிங் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

வருகின்ற நவம்பர் மாதம் 10 முதல் 17 வரை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த 8 நாள் மாநாடானது பல பிரிவுகளாக நடக்கின்றது. நவம்பர் 10 முதல் 14 வரை காமன்வெல்த் இளையோர் மன்றம்(Commonwealth Youth Forum) மற்றும் காமன்வெல்த் மக்கள் மன்றத்தின் (Commonwealth People Forum) கூட்டம் நடைபெறும். மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விடயங்கள் மீதான விவாதம் 15 ஆம் தேதி நடைபெறும்.

http://www.chogm2013.lk/Peoples_Forum.php
http://www.chogm2013.lk/Youth_Forum.php

அதற்கிடையே நவம்பர் 12 முதல் 14 வரை காமன்வெல்த் வர்த்தக சபையின் (Commonwealth Business Council) வர்த்தக மன்ற கூட்டம் (Commonwealth Business Forum) நடைபெறும். இதில் உறுப்பு நாடுகளிலிருந்து 1000க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும். அவை தங்களுக்குள் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளும். மாநாட்டை நடத்தும் இலங்கைக்கு பெருமளவில் முதலீடுகள் குவியும். அதாவது இந்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த நடந்த முயற்சிகளுக்கு பின்னால் இதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் கோடிக்கணக்கான முதலீடுகள் தான் முக்கிய காரணமாக திகழ்கிறது. http://www.chogm2013.lk/Business%20_Forum.php

இலங்கையில் நடைபெறவிருக்கும் 2013 காமன்வெல்த் மாநாட்டிற்கான நோக்கமாக ”நிறுவனங்களின் வழியான வாய்ப்பு” (COMMONWEALTH 2013: OPPURTUNITY THROUGH ENTERPRISE) கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனையெடுத்து14-17 தேதிகளில் காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் கூட்டம் (Commonwealth Heads Of Governments Meet - CHOGM) நடைபெறும். இதில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு பாதுகாப்பு, சனநாயகம், வர்த்தக பிரச்சனைகள், கால நிலை மாற்றம், வளர்ச்சி, கல்வி, சுற்றுப்புறச் சூழல், பாலின சமத்துவம்,சுகாதாரம்,மனித உரிமை, தகவல் தொடர்பு போன்ற விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும். இதற்கிடையில் அங்காங்க சில கலைவிழாக்களும், போட்டிகளும் நடைபெறும். காமன்வெல்த் மாநாடு நவம்பர் 10-17 வரை ஒட்டுமொத்தமாக 8 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு ஏதுவாக இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று உலகுக்கு காட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலை காமன்வெல்த் நடப்பதற்கு முன்பாக வருகின்ற செப்டம்பர் 21 அன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சதிவலைகளுக்கு இடையே காமன்வெல்த் மாநாடு தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கையில் நடைபெற இருப்பது உலகத்தமிழர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் கொதித்தெழ செய்துள்ளதையடுத்து இதற்கெதிரான குரல்கள் உலக அரங்கில் வலுத்து வருகிறது.

                --- தொடரும்

- த.ஆனந்த், ஒருங்கிணைப்பாளர், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., 9677226318)

Pin It