இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசின் தாக்குதல் 1983 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் உச்சநிலையை எட்டியது. இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் மீதான துப்பாக்கிச் சூடும், சிங்களச் சிப்பாய்களால் அப்போது முதல் தொடர்ந்து கொண்டே வருகிறது.

                தமிழகத்தில் உள்ள நாகை, புதுகை, முகவை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம், இலங்கை சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து சொல்லொணாத் துயருக்கு ஆளாகி வருகின்றனர்.

                கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில், சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை சுமார் நானூறைத் தாண்டும்; படுகாயமுற்றவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டும், சிறைப்பிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி மீனவர்கள் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் என்பது பதைபதைக்கும் செய்தி! கானாமல போனவர்கள் எண்ணிக்கை இக்கணக்கில் வராது. மனதைக் கலங்கடிக்கும் இவ்விவரங்கள், இந்தியத் தமிழர்களை எண்ணி? உலகத் தமிழர்களையே உலுக்கி எடுக்கின்றன. வேதனைத் தீயில் விழவைக்கின்றன.

                அண்மையில், இராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், சிங்களக் கடற்படையால் நடுக்கடலில்; நள்ளிரவில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். யுத்தக் கைதிகளைப் போல் மன்னார் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு, ஆடைகளைக் களைந்தும், அம்மணமாக்கியும், அடித்து உதைத்தும், கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

                அதுபோலவே மற்றுமொரு அண்மைய நிகழ்ச்சி பாம்பன் மீனவர்கள் 35 பேர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்; அப்பொழுது சிங்களக் காடையரால் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற அடாதுடிச் செயல்கள் ஏராளம். இவை, தாய்த் தமிழர்களின் நெஞ்சங்களைப் பதறவைக்கின்றன.

                கணவனைக் கடலுக்குள் மீன் பிடிக்க அனுப்பிவிட்டு தூக்கமற்ற மீனவக் குடும்பங்கள் ஏக்கத்தோடு இரவுகளைக் கழிக்கின்றன. ஆருயிர்த் தலைவன், அகாலமாய் மரணம் அடையும்போது, அம்மீனவக் குடும்பம் எழுப்பும் அழுகை ஓலமும், விசும்பல் ஒலியும் கடல் அலைகளோடு சேர்ந்து கரைந்து போகின்றன. அவர்களின் சடலங்கள் மட்டுமே கரை ஒதுங்குகின்றன. வாழ்க்கைக் கனவுகள் கண்ணீர்க் கடலில் கரை சேரமுடியாமல் மிதக்கின்றன.

                தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக இளங்கையில் போராடத் தொடங்கியதிலிருந்து இந்தியத் தமிழக மீனவர்கள், கடலுக்குச் செல்லும் போதெல்லாம் காயப்படுத்தப்படுகின்றனர். கடல் தொழிலில் இருந்து பிரித்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர்.

                இலங்கை சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மீன் பிடித் தொழிலும் மிக மோசமாக நாசமாக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஆறு லட்சம் மெட்ரிக் டன் மீன்களைப் பிடித்து வழங்கும் இவர்களின், கடல் தொழில், கேள்விக்குறியாகி உள்ளது.

                உலக அளவில், நாடுகளுக்கான கடல் எல்லைகள் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, கரையிலிருந்து 22 கி.மீ. தொலைவு வரை உள்நாட்டுக் கடல் எல்லையாகும்; 44 கி.மீ, தொலைவு வரை சுங்கவரி வசூலிக்கும் எல்லையாகும்; 320 கி.மீ. தொலைவு வரை பொருளாதார வளையத்திற்கான எல்லையாகும்; இவை பொதுவாகப் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், மீனவர்களின் நலனையும், வாழ்வையும் கருதி வகுக்கப்பட்ட இவ்விதிமுறைகள்; மிகக் குறுகிய கடல் எல்லைகளைக் கொண்ட நாடுகளுக்குப் பொருந்தாது. இந்து மாக்கடலில், நம் காலடியில் கிடக்கும் இலங்கைத் தீவின் சிங்கள அரசு, இச்சர்வதேச விதிமுறைகளைத் தன் காலில் போட்டு மிதித்து வருகிறது.

                அதன் மூலம் இந்திய-தமிழக-மீனவர்களை அழித்து வருகிறது; கொன்று குவித்து வருகிறது. இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கையின் அதிபர் பண்டாரநாயகாவும் இணைந்து 1974 ஆம் ஆண்டு செய்து கொண்ட அன்றைய ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட கச்சத் தீவின் உரிமையை இலங்கையும் இந்தியாவும் பகிர்ந்து கொண்டன. அந்த ஒப்பந்தத்தில் 1976 ஆம் ஆண்டு சில விதிகள் மேலும் சேர்க்கப்பட்டன. இவற்றின்படி ‘இந்தியக் கச்சத் தீவின்’, மீது இலங்கையைத் தவிர இந்தியாவிற்கு உரிமை எதுவும் இல்லை என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்க (சிங்கள) இலங்கை அரசு முயன்று வருகிறது. அதற்கு, இந்திய நடுவன் அரசும், இரையாகிக் கொண்டிருக்கின்றது என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் சீரிய சிந்தனைப் போக்காகும்.

‘கச்சத் தீவு இந்தியாவுக்கே உரியது. அத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமையுண்டு; கச்சத் தீவில் மீனவர்கள் மீன் வலைகளை உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் உண்டு, கச்சத் தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் யாருடைய அனுமதியின்றி வழிபடச் செல்லும் உரிமையும் உண்டு. இப்போது இவ்வுரிமைகளும், இவை போன்றவையும் இலங்கைச் சிங்கள அரசால் மறுக்கப்படுகின்றன.

                ‘சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவின் மீது ஒருவேளை தாக்குதல் தொடுத்திட்டால்? அவர்களுக்கு, ராணுவத் தளம் அமைக்க, இலங்கை அரசு அனுமதி கொடுத்து விட்டால்??, அதனால், இந்தியாவிற்கு பேராபத்து ஏற்பட்டு விட்டால்..?!? என்கின்ற, ஊகமான கேள்விகளுக்கு விடையாக . . . . அல்ல ... வினையாக அப்போதைய நடுவண் அரசு எடுத்த முடிவுதான் ‘கச்சத்தீவு ஒப்பந்தம் அதன் தீய விளைவுதான்’.

இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாமல், இந்தியத் தமிழக மீனவர்களும் சிங்களப் படையினரால் இன்று அழித்தொழிக்கப்பட்டு வரும் அவலநிலை!

                இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய நடுவன் அரசு, இலங்கைக்கு நவீன போர்க்கப்பலைக் கொடுத்து உதவுகிறது. கண்ணி வெடிப் பாதிப்புக்கு உள்ளாகாத ஊர்திகளையும் தாராளமாய்த் தருகிறது; குண்டு துளைக்காத பாதுகாப்புக் கவசங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் உட்பட இருநூற்றி ஐம்பது கோடி ரூபாய் மதிப்புக்குமேல் ஆயுதங்களை அள்ளித் தந்துள்ளது. இவை தவிர்த்து, நூறு கோடி ரூபாய் நிதி உதவியும் இலங்கை அரசு, நம்மிடமிருந்து பெற்றுள்ளது. போதாக் குறைக்கு, இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய இராணுவம் போர்ப்பயிற்சி வேறு புகட்டியுள்ளது! இந்திய அரசின் இராணுவ உதவியையும் நிதி உதவியையும் பெற்றுக் கொண்டு இலங்கைச் சிங்கள அரசு என்ன செய்கிறது? இலங்கைக் குடிகளான தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் இராணுவத்தின் மூலம் துப்பாக்கி முனையில் நசுக்கி வருகிறது என்பதே உண்மை. கொன்று நரவேட்டையாடி வருகிறது என்பது கண்கூடு!

                இக்கொடூரத் தாக்குதலுக்கு முடிவு கட்ட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், உட்பட எல்லா எதிர்க்கட்சிகளும், ஓங்கிக் குரல் எழுப்பி வருகின்றன. நடுவண் அரசோ கேளாக் காதுடன் மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்து, மெத்தனமாகக் கிடக்கிறது.

                இந்தியாவின் அரசியலை தீர்மானிக்கும் ‘வல்லமை படைத்த’ தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையும் தாண்டி, ‘கடிது ஓச்சி மெல்ல எறிக’ என்னும் வள்ளுவர் வாசகத்தை இப்போதேனும் கையில் எடுக்க வேண்டும்; தனது தமிழின உணர்வைத் தங்குதடையின்றி வெளிப்படுத்த வேண்டும்.

             தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்திட நடுவண் அரசையும் அதன் மூலம் இலங்கைச் சிங்கள அரசையும் வலியுறுத்திட வேண்டும்.

             இந்தியாவிற்குரிய மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்டிட கச்சத் தீவை மீட்டெடுக்க வேண்டும்.

             இலங்கைச் சிறையில் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் யாவரையும் உடனடியாக விடுதலை செய்திட நடுவன் அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             அத்துமீறி இந்திய கடற்பகுதிக்குள் நுழையும் சிங்கள மீன்பிடி படகுகளையும், இலங்கைக் கடற்படையினரையும் தடுத்து நிறுத்த இந்தியக் கப்பல் ரோந்துப் படையினரை நடுவண் அரசு ஆயுதங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

             கடல் எல்லைகளைத் தெளிவுறுத் காட்டுவதற்கு ஏதுவாக, ஒளிவிடும் மிதவைகளை இரவு பகல் மிதக்கவிட வேண்டும்.

             இலங்கையின் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை இந்திய நடுவன் அரசு தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு காயமுற்ற மீனவர்களுக்கு உதவித் தொகையும் மருத்துவ வசதியும் வழங்கிட வேண்டும்.

             ‘சார்க்’ நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாயுள்ள இந்தியாவும், இலகங்கையும் இப்பகுதியில் பதட்டம் நீங்கி அமைதி நிலவுவதற்கான ஏற்பாடுகளைத் தாமமின்றித் தொடங்க வேண்டும். அணிசேரா நாடுகளில் ஒன்றான, அண்டைத் தீவு, அலைகடல் வழியே, அருந்தமிழர்களை நித்தம் காவு கொள்ளும் நீசத்தனம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதுவரை, இந்தியத் தமிழர்கள் உலகத்தமிழர்களோடு சேர்ந்து ஓங்கிக் குரல் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

Pin It