கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலையில் கடந்த சனிக் கிழமை நள்ளிரவு, மின்னுற்பத்திக்கான பணி தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து சமரசமின்றி போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். அம்மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு சிறிதளவு கூட மதிப்பளிக்காமல் - போராட்டக்குழு எழுப்பியுள்ள நியாயமான கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் தராமல் - எந்தவித முன்னறிவிப்புமின்றி இவ்வளவு பெரிய அணு உலையை இயக்கத் தொடங்கியிருப்பது மத்திய அரசுக்கு சனநாயகத்தில் எந்த நம்பிக்கையும் இல்லாத நிலையை வெளிப்படுத்துகிறது. உண்மையான சனநாயகத்தில் அக்கறை கொண்ட நாங்கள் அனைவரும் மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் ஆறாம் நாள் உசச்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இந்திய அணுமின் கழகம், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய நான்கு அமைப்புகளும் இந்த அணு உலையின் பாதுகாப்புகள் குறித்து அறிக்கைகள் சமர்பிக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பித்திருந்தது. இந்த நான்கு அமைப்புகளில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்திருந்தது. பிற மூன்று அமைப்புகளும் ரகசியமான அறிக்கைகளை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் உறையிலிட்டு வழங்கிவிட்டு, உச்சநீதிமன்ற பதிலுக்கோ, மக்களின் நியாயமான கேள்விகளுக்கோ காத்திராமல் உடனே கூடங்குளம் முதல் அணு உலையை தொடங்க அனுமதியளித்துவிட்டன. இந்த அவசர கோலம் ஏன்? மத்திய அரசு மற்றும் இந்திய அணுமின் கழகத்தின் இந்த அவசரமே கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து நிறைய சந்தேகங்களை எழுப்புகின்றன.

மக்களின் பாதுகாப்பு தொடர்பான இது போன்ற முக்கியமான விஷயங்களில் மத்திய அரசும், இந்திய அணுமின் கழகமும், அணுசக்தி ஒழுங்காற்று வாரியமும் எப்படி இவ்வளவு மெத்தனமாகவும், மேலோட்டமாகவும், சனநாயகத்திற்கு விரோதமாகவும் செயல்பட முடிகிறது? எந்த ஒரு வெளிப்படையான தன்மையும் இந்த அமைப்புகளிடம் இல்லை என்பது நமக்கெல்லாம் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. பொய்யான தகவல்களையும், முன்னுக்குப்பின் முரண்பட்ட அறிக்கைகளையும் இந்திய அணு மின் கழகமும், மத்திய அரசும் மக்களுக்கு வழங்கி மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

தரமற்ற பொருட்களை கொண்டு கூடங்குளத்தில் அணு உலை கட்டுமானம் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்துள்ளன. கூடங்குளம் அணு உலைக்கான உதிரிப்பாகங்களை ரஷ்யாவிலிருந்து அனுப்பிய அமைப்பு அண்மையில் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது. உதிரிப்பாகங்களை அனுப்பியதில் ஊழல் புரிந்துள்ளதாக அதன் உயர் அதிகாரிகள் மீது தொடர்ந்து பல புகார்கள் எழுப்பப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவை குறித்து எந்த விசாரணையுமின்றி அணு உலையை இயங்க அனுமதித்திருப்பது, இந்தியப் பிரதமர் மீதும், மத்திய அமைச்சர்கள் மீதும், இந்திய அணுசக்தித் துறை உயர் அதிகாரிகள் மீதும் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

கூடங்குளம் அணு உலையைச் சுற்றி 16 கி.மீ. சுற்றளவில் கிராமங்களே இல்லை என்று வெளிப்படையாகவே துணிந்து இந்த அமைப்புகளால் பொய் சொல்ல முடிகிறது; ஆனால் ஏறக்குறைய 5 இலட்சம் மக்கள் இந்த சுற்றளவில் வசித்து வருகின்றனர். இந்த பொய்த் தகவலை, முரண்பட்ட அறிக்கையைக் கண்டித்து தமிழக அரசு எந்த ஒரு கண்டன அறிக்கையையும் வெளியிடவில்லை.

மக்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்ளாத, ஊழலில் திளைத்து நாட்டு வளங்களைக் கொள்ளையடிக்கும், சனநாயகத்தில் நம்பிக்கையற்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். தொடர்ந்து கூடங்குளம் அணு உலை விஷயத்தில், பொய்யான, முரண்பட்ட தகவல்களை வழங்கி மூடுமந்திரமாகவே செயல்படும் இந்திய அணுமின் கழகத்தையும், அணு சக்தித் துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

காங்கிரஸ் அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள், சமூக அமைப்புகள் குரலெழுப்ப வேண்டும்; தமிழக மக்களை முட்டாள்களாக்க முனையும் இந்திய அணு சக்தித் துறையையும், இந்திய அணுமின் கழகத்தையும், அணுசக்தி ஒழுங்காற்று ஆணையத்தையும் அம்பலப்படுத்துவோம்! அளப்பரிய தியாகங்கள் புரிந்து சமரசமின்றி தொடர்ந்து போராடும் இடிந்தகரை - கூடங்குளம் மக்களுக்கும் அவர்களை வழிநடத்தும் போராட்டக் குழுவினருக்கும் துணைநிற்போம்!

- அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, திருநெல்வேலி

Pin It