தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வேண்டுகோள்: 

சென்ற சனவரி 25ஆம் நாள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகள் தமிழின ஒற்றுமையில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் ஆழ்ந்த கவலை அளிக்கக் கூடியன.

‘கோடி வன்னியர் கூடும் குடும்ப விழா’வுக்காக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்த ஊர்திகளில் ஒன்று விபத்துக்குள்ளானதும், பெரும்பாலும் தலித்துகளாகிய உள்ளூர் மக்களுக்கும் வண்டிகளில் வந்த வன்னியர்களுக்கும் மோதல் வெடித்ததும், வன்னியர்கள் சிலர் அருகிலிருந்த தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளைக் கொளுத்தி உடைமைகளைச் சூறையாடியதும், காவல் துறையினர் வானோக்கித் துப்பாக்கியால் சுட்டும் தடியடி நடத்தியும் சாலை மறியல் செய்த கூட்டத்தைக் கலைத்ததும், விபத்தினாலோ எதிர்த்தரப்பினரின் வன்செயலாலோ வன்னிய இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததும்... இந்த நிகழ்வுகள் நடந்த விதம், நடந்த வரிசை பற்றியெல்லாம் நம்மால் எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது. இவை எந்த அளவுக்குத் தற்செயலானவை, எந்த அளவுக்குத் திட்டமிட்டவை என்று கண்டறிவதற்கு விரிவான, புறஞ்சார்ந்த, நடுநிலை தவறாத புலனாய்வும் விசாரணையும் தேவை.

தற்செயலாக என்றாலும் சரி, திட்டமிட்ட முறையில் என்றாலும் சரி, நடந்த அவலங்களுக்கு அறப்பொறுப்பு ஏற்க வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் நிறுவுநர் மருத்துவர் இராமதாசு அவர்களும்தான்.

முதலாவதாக, மாமல்லபுரம் விழாவை நடத்தியது வன்னியர் சங்கமா?  பாமக-வா? இரண்டும் ஒன்றுதானா? ஒன்றுதான் என்றால் பாமக-வில் இடம்பெற்று, அதன் வளர்ச்சியில் பங்காற்றிய தோழர்கள் இரும்பொறை குணசேகரன், வள்ளிநாயகம், பழனிபாபா, குணங்குடி அனீபா, ஜான் பாண்டியன், முருகவேல்ராஜன், பசுபதி பாண்டியன், தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்றவர்களுக்கெல்லாம் நீங்கள் தரும் இடம் என்ன? இப்போதும் பாமக பொதுச் செயலாளராக அறியப்படும் தோழர் வடிவேல் இராவணனை ஒப்புக்குத்தான் முன்னிறுத்துகின்றீர்களா? அவர் தன் சமுதாய மக்களுக்காகத் தனியமைப்பு நடத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா? பாமக-வின் இலட்சிய வழிகாட்டிகளாக கார்ல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படங்களைப் பயன்படுத்துவீர்களே, அவர்களையும் வன்னியர் சங்கத்தில் சேர்த்து விட்டீர்களா?

சாதி அரசியலும் சனநாயக அரசியலும் ஒத்துப் போக மாட்டா என்பதை விளங்க வைப்பதற்காகவே இந்த வினாக்கள்.

நமக்குத் தெரிந்த வரை வன்னியர் சங்கத்திலிருந்துதான் மருத்துவர் இராமதாசின் பொதுவாழ்வுப் பயணம் தொடங்கியது. வன்னியருக்குத் தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையில் சமூகநீதியின் பாற்பட்ட ஒரு நியாயம் இருந்த படியால் நாமும் அந்தப் போராட்டத்தை ஆதரித்தோம். மருத்துவர் இராமதாசின் பார்ப்பனிய எதிர்ப்பும், தமிழ்ச் சார்பும், தேர்தல் புறக்கணிப்பும், தலித்துகளோடு ஒன்றுபடும் ஆர்வப் பேச்சும் கடந்த கால வன்னிய சாதித் தலைவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டின.  திரு இளையபெருமாளோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட தீண்டாமை-இழிவுநீக்க முயற்சிகளும், பிற்காலத்தில் குடிதாங்கிக் கிராமத்தில் தன் சாதியினரின் எதிர்ப்பை மீறிச் செயல்புரிந்து ‘தமிழ்க் குடிதாங்கி’ என்று தோழர் திருமாவளவனிடமே பட்டம் பெற்றதும் அவரது மதிப்பை உயர்த்தின.     

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கித் தேர்தல் அரசியலுக்குச் சென்ற பிறகும் தமிழீழ விடுதலை, தமிழகத் தன்னுரிமை, ஒரு-மொழிக் கொள்கை, மண்டல் பரிந்துரைச் செயலாக்கம் ஆகிய நிலைப்பாடுகளில் தமிழ்த் தேசிய, சமூகநீதி ஆற்றல்கள் உங்களோடு தோழமை கொண்டு நின்றோம். இப்போதும் அதுதான் சரியென்று நம்புகிறோம். மண் பயனுற மக்கள் தொலைக்காட்சி நிறுவியதை மருத்துவரின் முதன்மைச் சாதனைகளில் ஒன்றாக இப்போதும் மதிக்கிறோம்.

பாமக-வும் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் அணிசேர்ந்த போது வரவேற்றோம், துணைநின்றோம், தோள் கொடுத்தோம்.    

தேர்தல் வழிப் பதவி அரசியலில் முக்குளிக்க முக்குளிக்க பாமக-வின் முற்போக்குக் கொள்கைகள் கரைந்து போய் விட்டன. யாரும் கொள்கை பார்ப்பதில்லை, நான் மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? என்பது மருத்துவரய்யாவின் மந்திரக் கேள்வி ஆயிற்று. ஒளிவுமறைவற்ற சந்தர்ப்பவாத அரசியலால் பாமக-வின் பெயர் கெட்டது. இது நம்பத்தகாத கட்சி என்று மாற்றுக் கட்சியினர் மட்டுமல்லாமல், கட்சி சாராத பொதுமக்களும் கருதலாயினர்.

சென்ற 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாமக அடைந்த படுதோல்வி மருத்துவரை விரக்திப் படுகுழியில் தள்ளியிருக்க வேண்டும். இதிலிருந்து எழுந்து வர கொள்கை அரசியலைத் துணைக் கொள்வதற்குப் பதிலாக அப்பட்டமான சாதி அரசியலைக் கையிலெடுத்து விட்டார்.

எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் காதல் எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு என்ற பிற்போக்கு நிலைப்பாடுகளிடம் மருத்துவர் தஞ்சம் புகுந்து விட்டார். சென்ற 2012 சித்திரை முழு நிலவில் காடுவெட்டி குருவின் பேச்சு இதற்கு முன்னோட்டம் ஆயிற்று. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு காதல் திருமணம், இதையொட்டி ஒரு ‘கௌரவ’த் தற்கொலை என்பவற்றைச் சாக்கிட்டு மூன்று சேரிகளை வன்னிய சாதி வெறியர்கள் தாக்கிச் சூறையாடியதை பாமக ஒப்புக்குக் கூடக் கண்டிக்கவில்லை. மாறாக மருத்துவர் அந்த வன்கொடுமையை நியாயப்படுத்துவதற்காக காதல், கலப்பு மணம், நாடகத் திருமணம் என்றெல்லாம் தத்துவ விசாரம் செய்து, ‘புள்ளிவிவர’ங்களை அள்ளி விட்டதோடு, தலித்துகளை நக்கலடிக்கவும் தயங்கவில்லை. சாதிப் பொருத்தம், சாதகப் பொருத்தம், பணப் பொருத்தம் பார்த்து நடத்தப்படும் ஏற்பாட்டுத் திருமணங்களே உண்மையில் நாடகத் திருமணங்கள் என்ற உண்மையை மறைத்து, செம்புலப் பெயல்நீர் போலும் அன்புடை நெஞ்சம் தான் கலந்திடும் இயல்பான காதலை நாடகம் என்று மருத்துவர் இராமதாசு வர்ணித்தது அவரது பிற்போக்கு உள்ளக்கிடக்கையை உலகறியச் செய்து விட்டது. ஐயா, உங்கள் முற்போக்கு நாடகம் முடிந்து திரை விழுந்து விட்டது.  

இந்த சாதிவெறி அரசியலில் பிற சாதிவெறி ஒட்டுக் குழுக்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வதும், தலித் அல்லாதார் கூட்டணியை உருவாக்க முயல்வதும் சமூக நீதிக்குக் குழிபறிக்கும் வேலை என்பதில் ஐயமில்லை. பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்று ஈரோட்டுப் பெரியார் சொன்னதை ‘தாடி வைக்காத  திண்டிவனத்துப் பெரியாரு’க்கு யார் புரிய வைப்பது?         

பாமக-வின் இந்த சாதிய அரசியலின் ஒரு வெளிப்பாடுதான் மரக்காணம் கொடுநிகழ்வுகள். வன்னியர் விழாவுக்கு வந்தவர்களிடம் இராமதாஸ்-குரு வகையறா ஊட்டி வளர்த்த சாதி வெறிதான் அவர்களை மரக்காணம் தெற்குக் காலனிக்குள் நுழைந்து தீவைப்புத் தாக்குதலில் ஈடுபடச் செய்துள்ளது. தலித்துகள் ஒருவேளை மறியலில் ஈடுபட்டிருந்தாலும் கூட அது காவல்துறை தீர்க்க வேண்டிய சிக்கலே தவிர சாலையை விட்டு விலகிப் போய் ஊருக்குள் புகுந்து வன்செயல் புரிவதற்கு நியாயமில்லை. இரண்டு வன்னிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பு விபத்தா கொலையா, கொலை என்றால் செய்தது யார் என்று காவல்துறை புலனாய்வு செய்துவருகிறது. தமிழகக் காவல்துறையை நம்புவதற்கில்லை என்றால் பாமக கோருவது போல் சிபிஐ புலனாய்வுக்கு வகை செய்யலாம். மரக்காணம் வன்செயல்கள் அனைத்துக்கும் சேர்த்து எல்லாத் தரப்பினரும் ஏற்கும் படியான நீதி விசாரணைக்கும் கூட ஆணையிடலாம். சாதிப் பகைமை  மறைந்து நல்லிணக்கம் மீள எவ்விலையும் தரலாம்.

மரக்காணம் அவலத்துக்கு அறப் பொறுப்பு பாமக-வையே சாரும் என்பதில் ஐயமில்லை. அக்கட்சியும் அதன் நிறுவுநரும் அக்கறையோடு தமது அணுகுமுறையை மீளாய்வு செய்து, சாதிய அரசியலிலிருந்தும், அதற்கு வழிகோலிய சந்தர்ப்பவாதப் பதவி அரசியலிலிருந்தும் மீண்டெழுந்து தமிழின நலனுக்கும் சமூகநீதிக்குமான போராட்ட அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

“நுனிக் கொம்பேறினார் அ(.)திறந்தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற எச்சரிக்கையை அரசியல் வகையில் பாமக சீர்தூக்கிப்  பார்க்க வேண்டுகிறோம்.

மரக்காணம் நிகழ்வுகளில் மருத்துவர் இராமதாசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது பழி சுமத்துவதை ஏற்க இயலாது. அக்கட்சியின் உள்ளூர் ஆதரவாளர்கள் சிலர் ஆத்திரமூட்டலுக்குப் பலியாகி வன்முறையில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பை நாம் மறுக்கவில்லை. ஆனால் அக்கட்சித் தலைமை, குறிப்பாகத் தோழர் தொல். திருமாவளவன் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டதும், ஏட்டிக்குப் போட்டியாக சாதிவெறியைத் தூண்டாமல் சமூக நல்லிணக்கத்தையும் தமிழ் மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தியதும் போற்றுதலுக்குரியது. தம்மிடமிருந்து அம்பேத்கர் சுடர் விருது பெற்ற ஒருவர் முன்பு தர்மபுரியிலும் இப்போது மரக்காணத்திலும் தலித் எதிர்ப்பை அரசியலாகக் கைக்கொண்டிருப்பது குறித்துத் திருமாவே வேதனைப்படுவார்.

மருத்துவர் இராமதாசின் சாதிய அரசியலைக் கண்டிப்பது வேறு. வன்னியர்கள் அனைவரையும் சாதிவெறியர்களாகவும் வன்கொடுமைக்காரர்களாகவும் படம்பிடிப்பது வேறு. வன்னியர்களும் உழைக்கும் மக்களே. அவர்களும் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் ஓர் அங்கமே என்பதை மறந்து விடலாகாது. தலித் அல்லாத பிற்பட்ட வகுப்பினர் அனைவரையும் ஆதிக்க சாதியினர் என்று முத்திரையிடுவது சமூக அறிவியலுக்கும், தமிழ்த் தேசியக் கருத்தியல் மற்றும் நடைமுறைக்கும் புறம்பானது. சாதியடுக்கில் ஆதிக்க சாதி என்பது ஒரு சார்புநிலைக் கருத்தாக்கமாகவே இருக்க முடியும். பார்ப்பனர்களைக் கொடுமுடியாகவும் தலித்துகளை அடிக்கல்லாக்கவும் கொண்ட வர்ண-சாதி இந்துச் சமூக அமைப்பில் இடைச்சாதிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்புநிலையில் ஆதிக்கம், அடிமை ஆகிய இருவகைக்கும் பொருந்தக் காணலாம். ஏன்? பார்ப்பனர்களுக்குள்ளேயும், தலித்துகளுக்குள்ளேயும் கூட, இந்தப் பிரிவுகள் இருப்பது மெய்.      

தமிழ்ச் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதியினர் என்று ஒதுக்கி வைத்து விட்டுத் தமிழ்த் தேசியம் வெல்வது முயற்கொம்பே. தீண்டாமைக்கும் சாதிய வன்கொடுமைகளுக்கும் எதிரான போராட்டத்தை உறுதியாக முன்னெடுக்கும் போதே தமிழின ஒற்றுமைக்கு அடிப்படையான தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைக்காகவும் போராடுவது புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தட்டிக்கழிக்கக் கூடாத ஒரு பணி.

தோழர் திருமா பதவி அரசியலுக்காக எத்தனையோ விட்டுக் கொடுத்தும் கூட, இந்த நெருக்கடியில் அவருடைய தேர்தல் கூட்டாளிகள் நியாயத்தின் பக்கம் நிற்பதை விடவும் வாக்கு வங்கி சார்ந்த சாதிக் கணக்கு பார்த்தே வாய் திறந்தார்கள் என்பதை அவர் கவனித்திருப்பார் என நம்புகிறோம்.

வேடிக்கை என்னவென்றால், மருத்துவர், திருமா இருவருமே போராட்ட அரசியலில் இருந்துதான் பதவி அரசியலுக்குச் சென்றார்கள். இருவருமே  தேர்தல் புறக்கணிப்பில் தீவிரமாக இருந்து விட்டுத்தான் சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலில் குதித்தார்கள். மரக்காணம் அவலங்களிலிருந்து மீண்டு வருவதென்றால் சந்தர்ப்பவாதப் பதவி அரசியலை விட்டு உரிமைப் போராட்ட அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று பொருள்.

மரக்காணம் தொடர்பான ஜெ. அரசின் அணுகுமுறை அரசுக்கும் காவல்துறைக்கும் உள்ள பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும், எதிர்காலத்தில் சனநாயக உரிமைகளைப் பறிப்பதற்குக் காரணங்களை உருவாக்குவதாகவும் உள்ளது.

கோரிக்கை எதுவானாலும் சரி, ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மருத்துவர் இராமதாசைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்ததும், அவர் பிணையில் வெளியே வர முடியாத படி புதுப் புது (அல்லது பழைய பழைய) வழக்குகளில் மீண்டும் மீண்டும்  தளைப்படுத்துவதும் ஜெ. அரசின் பழிவாங்கும் அரசியலுக்கே சான்றாகும். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்குகளை விலக்கிக் கொள்ளும்படி இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய அதே போழ்தில் மருத்துவர் இராமதாசு கூடங்குளம் வழக்கில் தளைப்படுத்தப்பட்டது ஜெ. அரசின் வக்கிரத்தையே காட்டுகிறது.    

மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் நீங்கலாக மற்ற அனைத்து  வழக்குகளையும் விலக்கிக் கொள்வது இயல்புநிலை மீளத் துணைசெய்யும். மருத்துவர் இராமதாசின் சாதிய அரசியலை எதிர்க்கும் போதே அரசின் தயவில் அவரோடு கணக்குத் தீர்க்கத் தேவையில்லை. சாதிய அரசியலை சமூக நீதி அரசியலால் எதிர்கொண்டு முறியடிக்கும் தெளிவும் துணிவும் நமக்குத் தேவை.

எவ்வித நிபந்தனையும் இன்றி மருத்துவர் இராமதாசை உடனே விடுதலை செய்யக் கோருகிறோம். (இதை எழுதி முடிக்கும் நேரத்தில் மருத்துவர் இராமதாசு பிணை விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.) 

பொதுவாக மற்றவர்கள் மீதான வழக்குகளையும் விலக்கிக் கொண்டு மரக்காணம் வன்முறை, மகாபலிபுரம் கூட்டம், மற்றும் பின்னிகழ்வுகள் தொடர்பாகச் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்யக் கோருகிறோம். வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கக் கோருகிறோம்.

சட்டப் பேரவை உறுப்பினர் குருவுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறோம். காடுவெட்டி குருவின் தடாலடி மேடைப் பேச்சால் ஒரு தேசத்தின் பாதுகாப்புக்கே ஆபத்து என்றால் அந்தத் தேசம் ஒழிந்து போவதே நல்லது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற ஆள்தூக்கிச் சட்டங்கள் எவருக்கு எதிராக ஏவப்பட்டாலும் எதிர்க்கும் கொள்கைத்  தெளிவும் திடமும் தமிழக சனநாயக ஆற்றல்களுக்குத் தேவை.    

இறுதியாக, மாணவர் போராட்டத்தால் தலைநிமிர்ந்த தமிழன்னை மரக்காணத்தால் தலைகுனிந்து நிற்கிறாள். அவளை மீண்டும் தலைநிமிரச் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்குமுண்டு.

-   தியாகு, பொதுச் செயலாளர், த.தே.வி.இ.

Pin It