“கூடங்குளம் குழந்தைகள்”
இடிந்தகரை மற்றும் அருகாமை கிராமங்கள்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்


மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர்
திருநெல்வேலி மாவட்டம் 

அன்பார்ந்த அய்யா:

வணக்கம். இடிந்தகரை, கூடங்குளம், கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணல் போன்ற பல்வேறு கிராமங்களிலிருந்து வரும் “கூடங்குளம் குழந்தைகள்” நாங்கள் கீழ்க்காணும் விண்ணப்பத்தை தங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறோம். 

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பற்றது என்பதால் அதை நிரந்தரமாக மூட வேண்டும் எனக்கோரி எங்கள் பெற்றோர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில் ஜியோ-பொடால்ஸ்க் எனும் ஊழல் மிக்க ரஷ்ய நிறுவனத்திடமிருந்து கீழ்க்காணும் தரமற்ற உபகரணங்களையும், உதிரிப் பாகங்களையும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வாங்கியிருப்பதாக இந்திய அணுமின் கழகம் (NPCIL) தனது ஏப்ரல் 29, 2013 தேதியிட்டக் கடிதத்தில் (No. NPCIL/VSB/CPIO/2574/KKNPP/2013/737) தெரிவித்திருக்கிறது: “Steam Generators, Cation and anion filters, Mechanical Filter, Moisture Separator and Reheater, Boric solution storage tanks, Regenerative blow down heat exchanger, Pipelines and fittings of different systems, Insulation materials, PHRS Heat exchanger.” 

2012 பிப்ரவரி மாதம் ஜியோ-பொடால்ஸ்க் நிறுவனத்தின் கொள்முதல் இயக்குனர் (procurement director) திரு. செர்கே ஷூட்டாவ் (Sergei Shutov) என்பவர் ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜியோ-பொடால்ஸ்க் நிறுவனத்துக்கு தரங்குறைந்த விலை குறைவான மூலப் பொருட்களை  வாங்கி அதிக விலைகொண்ட உயர்தரப் பொருட்களாக கணக்குக் காட்டி அதிலே ஊழல் செய்திருக்கிறார். இதனால் ஜியோ-பொடால்ஸ்க் உபகரணங்களும், உதிரிப் பாகங்களும் தரமற்றவையாக ஆபத்தானவையாக இருக்கின்றன. இவற்றைக் கொண்டு நிறுவப்பட்டிருக்கும் கூடங்குளம் அணுஉலை மிக மிக ஆபத்தானது.

அதேபோல, இன்ஃபோர்ம்டெக் (Informtekh) எனும் ரஷிய நிறுவனத்தின் இயக்குனர் திரு. அலெக்ஸாண்டர் முராக் (Alexander Murach) என்பவரும் அணுஉலைகளுக்கு  தரமற்றப் பொருட்கள் வழங்கியதாக கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இஷோர்ஸ்கி சவோடி (Izhorskiye Zavody) எனும் ரஷ்ய நிறுவனம் அணுஉலை கொதிகலனை (Reactor Pressure Vessel) வடிவமைத்திருக்கிறது. இந்தியா ஒப்பந்தமிடுவதற்கு முன்பாகவே அதனை தயாரிக்கத் துவங்கிவிட்டதாகச் சொல்லும் இந்த நிறுவனம் தரமற்றப் பொருட்களை தயாரிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கொதிகலனின் நடுப்பகுதியில் பற்றவைப்பு (weld) இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குத் தேவையான வால்வுகள், பம்புகள், மின்கம்பிகள் போன்றவற்றை 58 மில்லியன் டாலருக்கு செக் (Czech) நாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருப்பதாக அறிகிறோம். இவற்றின் தரத்தையும் நாங்கள் சந்தேகிக்கிறோம். ஏனென்றால் கடந்த ஐந்து மாதங்களில் ஆறு பேர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இறந்திருக்கிறார்கள். நேற்றுகூட (மே 5, 2013) ஒருவர் இறந்திருக்கிறார். 

இந்த நிலையில் பாதுகாப்பற்ற கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடிவிட்டு, அதனை மாற்று எரிசக்தி நிலையமாக உருவாக்க வேண்டும் என்றும், எங்கள் வாழ்வுரிமைக்காகவும், வாழ்வாதாரங்களுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் எங்கள் பெற்றோர், உற்றார் மீது போடப்பட்டிருக்கும் 350க்கும் அதிகமான வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென்றும் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

தங்கள் உண்மையுள்ள,

கூடங்குளம் குழந்தைகள்

Pin It