பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறித்து மேலும் விரிவாகப் பேசுவோம். ஒரு வளாகத்தில், காவல் நிறுவனத்தை மாற்றும்போது, லெட்டர் பேடு மட்டும்தான் மாறும். புதிதாக வருகின்றவர்கள் முதல் இரண்டு நாள்களுக்கு விரைப்பாக நிற்பார்கள். ஒரு வாரம் போகும். மீண்டும், முன்பு வேலை பார்த்த ஆள்களே, இப்போதும் வருவார்கள். 50 வயதுக்குமேல் இருக்கும். அவர்களால் சரியாக நடக்கக் கூட முடியாது. முக்கால்வாசி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து தூங்கி விட்டுப் போவார்கள்.  காரணம், பாதுகாப்பு நிறுவனம், மாற்று ஆட்களைத் தராது. சிலர் 12 மணி நேரம், 16 மணி நேரம் வேலை பார்ப்பார்கள்? எப்படி முடியும்?  என்னய்யா? என்றுகேட்டால், சார் நீங்கள் தருகின்ற பணத்துக்கு இப்படி ஆட்கள்தான் கிடைக்கின்றார்கள் என்பார்கள்.

நாம் காவலர்களுக்குக் கொடுக்கின்ற சம்பளம் மிகக் குறைவு. எதிர்காலத்தில் இந்த நிலைமை மாற வேண்டும். ஆண்கள் வெளியில் வேலைக்குப் போகின்றார்கள். வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு நல்ல பாதுகாப்பு தேவை. அப்போதுதான், அலுவலகத்தில் அமைதியாக உட்கார்ந்த பணி ஆற்ற இயலும். வாரக்கணக்கில் வெளியூர் சென்று வரவும் முடியும். எனவே, காவலர்களுக்கு சம்பளத்தைக் கூட்டித் தர வேண்டும்.

இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு சிசி டிவி. (ஊடடிளநன ஊசைஉரவை கூஏ) கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது. முன்பு, 60,000 ரூபாய் விலையில் விற்ற கேமரா, இப்போது 3000 ரூபாய்க்குக் கிடைக்கின்றது. அதில் 40 நாள்கள் பதிவான காட்சிகளைப் பார்க்கலாம். எங்கள் வளாகத்தில் 16 இடங்களில் கேமராக்களைப் பொருத்தியதற்குப் பிறகு,சிறுசிறு திருட்டுகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. பால் பாக்கெட் திருடுபவர்கள், பெட்ரோல் திருடுபவர்கள் உடனே மாட்டிக் கொண்டார்கள்.

ஒரு வளாகத்தில் எந்தெந்த இடங்களில் கேமராக்களை வைக்க வேண்டும் என்பதை, நன்கு ஆய்வு செய்து பொருத்த வேண்டும். பொதுவாக, நுழைவாயில்கள், மின்தூக்கிக்கு அருகில் வைக்க வேண்டும். இதில் நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளன. பதிவான காட்சிகளை உருப்பெருக்கிப் பார்க்கலாம். வண்டி எண்களைச் சரியாகப் பார்க்கலாம். நீங்கள் அயல்நாடுகளில் இருந்தாலும், உங்கள் காலனியில் இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கின்றது என்பதை, உங்களுடைய அலைபேசி, மடிக்கணினியில் பார்க்க முடியும். அத்தகைய வசதிகள் உள்ளன.

அடையாள அட்டை

வளாகத்தில் உள்ள அனைத்து வண்டிகளுக்கும் ஒரு அடையாள வில்லையை ஒட்ட வேண்டும். அந்த வண்டி தொலைவில் வரும்போதே அதைப் பார்த்து, காவலர் கதவைத் திறந்து விடுவார். ஸ்டிக்கர் இல்லாத வண்டிகளை நிறுத்தி விசாரித்து, அனுமதிச் சீட்டு வழங்கித்தான் அனுப்புவார்கள். வெளியில் இருந்து வரும்போது, சிலர் ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வருவார்கள். அவர்களைச் சரியாகப் பார்த்து உள்ளே அனுப்ப வேண்டும்.

வெளியில் இருந்து வருகின்றவர்களுக்கு, பணியாளர்களுக்கு அடையாள அட்டை கொடுப்பதால், அவர்களுக்கு ஒரு அச்சம் இருக்கும். அடையாள அட்டை கொடுப்பதை, அவர்களும் பெருமையாகத்தான் கருதுகிறார்கள். படிக்காத நமக்கும் கொடுக்கின்றார்களே என்று மகிழ்ச்சி அடைகின்றார்கள். அதை மற்றவர்களிடம் கொண்டு போய்க் காண்பிக்கின்றார்கள். வெளியில் இருந்து வருபவர்கள், வேலையாள்களை, காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரையிலும்தான் வளாகத்துக்கு உள்ளே இருக்க அனுமதிக்க வேண்டும்.

ஒரு தீ விபத்து நடந்தால் அல்லது ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடந்து அவர்கள் அந்த வீட்டுக்கு உள்ளேயே இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது?

எங்கள் வளாகத்தில் ஒரு சமயத்தில் எத்தனை வெளியாட்கள் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது, வளாகத்தின் நுழைவாயிலில், காவலரிடம் உள்ள பதிவு ஏட்டிலேயே தெரிந்து விடும். இரவு பத்துமணிக்கு மேலும்,வெளியாள்கள் யாரேனும் உள்ளே இருப்பதாகத் தெரிந்தால், அந்த வீடுகளுக்குச் சென்று, உங்கள் வீட்டில் வேலையாட்கள் இன்னமும் இருக்கின்றார்களா? என்று விசாரிப்போம். அப்போதுதான், வீட்டுக்காரர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா? என்பது தெரியும்.

ஒரு வீட்டில் இருந்து பழைய பொருள்களை வேலை ஆட்களுக்குக் கொடுப்பார்கள். அதற்கு, அந்த வீட்டுக்காரர்களிடம் இருந்து எழுத்து மூலமாக ஒப்புதல் வாங்கிக்கொண்டு வந்து நுழைவாயிலில் தர வேண்டும். எனவே, பொருட்கள் திருட்டுப் போகாது.

இதுபோக, வளாகத்துக்கு உள்ளே வருகின்ற சிறு வணிகர்களுக்கும் அடையாள அட்டை கொடுக்கின்றோம். பழைய காகிதங்களை வாங்குபவர், மீன் விற்பவர்களுக்குக் கொடுப்போம். அவர்களுடைய தராசுகளைச் சரி பார்ப்போம். சிலர் தராசை நேராகப் பிடிக்க மாட்டார்கள். நீங்கள் பத்து கிலோ காகிதத்தை வைத்தாலும், அவர் ஒரு கிலோ என்றுதான் எடைபோடுவார். ஒரு நாளிதழ் எத்தனை கிராம்? அப்படியானால் ஒரு மாதத்துக்கு எத்தனை கிராம்? என்று நீங்களே கணக்குப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பிடியை வளைக்கும்போது, ஒரு இடத்தில் அது பூட்டிக் கொள்ளும். அதற்கு மேல் நீங்கள் எத்தனை பேப்பரை வைத்தாலும், எடை கூடாது. இதையெல்லாம் கண்டுபிடித்து, போலீசில் புகார் கொடுத்து பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று எச்சரித்து இருக்கின்றோம்.

தீ விபத்துகள்

தீபாவளி நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில், ராக்கெட் வெடிகளைத் தவிர்க்க வேண்டும். ஒருமுறை, ராக்கெட் வெடி இரண்டு மாடி உயரம் போகின்றவரையிலும் நேராகத்தான் போனது. அடுத்து திடீரெனத் திரும்பி ஒரு வீட்டின் படுக்கை அறைக்கு உள்ளே நுழைந்துவிட்டது. படுக்கை தீப்பிடித்துக் கொண்டது.

தீ அணைப்புக்காரர்கள் வந்தனர். அவர்களிடம் மூன்றாவது மாடி வரை செல்லும் ஏணி இல்லை. வேறு இடத்துக்குப் போன் செய்து வண்டியைக்கொண்டு வருவதற்குள், நாங்கள் எல்லோருமே சேர்ந்து போராடி தீயை அணைத்து விட்டோம். தீ அணைப்புக் கருவிகள், முதல் உதவிக் கருவிகளை ஆயத்தமாக வைத்து இருக்கிறோம். தீப்பிடித்தால், முதலில் ஆள்களைக் காப்பாற்றவேண்டும. அடுத்து, கேஸ் சிலிண்டர்களை அகற்ற வேண்டும். குவைத் நாட்டில் வட்டானியா ஸ்கொயர் என்று ஒரு இடம் இருக்கின்றது. விடுமுறை நாள்களில், அங்கேதான் எல்லோரும் கூடுவார்கள். அதேபோல, சிங்கப்பூரில் செராங்கூன் சாலை மாரியம்மன் கோவில் அருகில் கடும் கூட்டம். தீ அணைப்பு குறித்து, தீ அணைப்புத்துறையினர் வந்து செய்து காட்டுவார்கள். அதேபோல எங்கள் வளாகத்திலும் செய்து காட்டுகிறோம்.

மூன்று மாடி உயரத்துக்கும் செல்லக்கூடிய ஏணியை, சங்கத்தின் சார்பிலேயே வாங்கி வைத்து விட்டோம். சாவியைத் தொலைத்துவிட்டு வந்தவர்கள் கூட அதில் ஏறி, புறவழியாக வீட்டுக்கு உள்ளே நுழைந்து சாவியை எடுத்து இருக்கின்றோம்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் கிடைக்கும் நன்மைகள்:

ஒரு குடியிருப்பில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஒற்றுமையாக இருப்பதால், எத்தனையோ நன்மைகள் கிடைக்கின்றன.

எடுத்துக்காட்டாக, மாதந்தோறும் கொடுக்கின்ற பராமரிப்புத் தொகை 1500 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.

குடிப்பதற்கு, நல்ல தரமான குடிநீர் தருகிறோம். கேன் வாங்க வேண்டிய தேவை இல்லை. அதைவிடச் சுத்தமான நீரைத் தருகின்றோம் என்று நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், பலர் கேன் வாங்குகின்றார்கள். அது வீண் செலவு.

சென்னையில் உடற்பயிற்சிக் கூடங்களில் மாதத்துக்கு குறைந்தது 600 ரூபாய் கட்டணம் வாங்குகின்றார்கள். அந்தச் செலவு கிடையாது.

நூலகத்துக்கு அனைத்து ஏடுகளும் வருகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேன் சர்வீஸ் காசு மிச்சம். வாரம் ஒருமுறை சனிக்கிழமை, திருட்டு விசிடி அல்லாத, அனுமதி பெற்ற திரைப்படங்களை, திறந்தவெளி அரங்கில் வெள்ளைச் சுவரில் ஒளிபரப்புகின்றோம். அந்தத் திரையை ஓராண்டுக்கு ஒருமுறை வெள்ளை வண்ணம் தீட்டி புதுப்பிக்க வேண்டும். எங்கள் வளாகத்தில் மணலில் அமர்ந்து படம் பார்க்கலாம். அந்த வேளையில், சிலர் பட்டாணி, சுண்டல் எல்லாம் கொண்டு வந்து எல்லோருக்கும் தருகிறார்கள். கிராமங்களில் கூரைத் தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் கிடைக்கின்றது. சனிக்கிழமைகளில் படம் போடுவதற்கு முன்பு, வளாகத்தில் வசிக்கின்ற பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களை அழைத்துப்பேச வைப்போம். இதை அறிவுத்தேடல் (கூசநயளரசந ழரவே) என்பார்கள். அதாவது கருத்துக் களஞ்சியம். ஓய்வு பெற்ற வங்கிப் பணியாளர்களை அழைத்து, அவர்களுடைய அனுபவங்களைக் கேட்போம்.இது மிகவும் சிறந்தது.

மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், வீட்டு வரி கட்டுவதற்கு, சங்க அலுவலகமே பொறுப்பு எடுத்துக் கொள்கின்றது. அதற்காக, உங்கள் நேரத்தைச் செலவிட வேண்டியது இல்லை. வரிசையில் நின்று காத்துக் கிடக்க வேண்டியது இல்லை.

எங்கள் பகுதியில் ஒரு சட்டை தேய்த்துக் கொடுக்க 5 ரூபாய் வாங்குகின்றார்கள். நாங்கள் சலவைக்காரருக்கு வளாகத்துக்கு உள்ளேயே இடம் ஒதுக்கிக் கொடுத்து, 3.50 என்று பேசி கொடுத்து வருகின்றோம். ஏராளமான வீடுகள் இருப்பதால், அவர் தேய்த்து முடியவில்லை. அந்த அளவுக்குத் தொழில் நடக்கின்றது.

அதேபோல, கிழிந்து துணிகளைத் தைத்துக் கொடுப்பதற்கு, ஒரு தையல்காரருக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்து இருக்கின்றோம்.

கழிவு நீர் அடைப்பை அகற்றுகிறோம். காவலர்களை நியமித்து இருக்கின்றோம்.

சிறுசிறு மின் பழுதுகள், தண்ணீர்க்குழாய் பழுதுகளைச் சரிபார்ப்பதற்குப் பணியாளர்களை, மாதச் சம்பளத்துக்கு அமர்த்தி இருக்கின்றோம். அந்தச் செலவு மிச்சம்.

அனைத்து வீடுகளுக்கும் எலக்ட்ரிகல் கன்வெர்ட்டர் வாங்கினோம். மொத்தமாக வாங்கியதால், 20 விழுக்காடு கழிவு கிடைத்தது.

சிஎஃப் எல் விளக்குகளுக்கு அடுத்த கட்டமாக, இப்போது, எல்இடி மின் விளக்குகள் வந்து விட்டன. ஐந்து வாட் மின்சாரத்தில், நல்ல வெளிச்சம் தருகின்றது. ஒன்றுபோல, 150 கார் நிறுத்தும் இடங்களுக்கும் அந்த விளக்குகளை வாங்கிப் பொருத்தத் தீர்மானித்தோம். அதை ஒரே இடத்தில் பேரம் பேசி விலை குறைத்து வாங்குகின்றோம்.

நவராத்திரி கொலு கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் மரம் வைக்கின்றோம். ஓணம் பண்டிகை கொண்டாடுகிறோம். அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து நடக்கின்றோம். குழந்தைகள் தினம், தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன. அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். தனியார் வானொலி நிகழ்ச்சிகள் நடத்தி, போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குகின்றார்கள்.

தீபாவளி அன்று, வெடிகளை ஒதுக்குவதற்கு ஒரு இடத்தை ஒதுக்கி, எல்லோரையும் அந்த இடத்தில் வெடிகளை வெடிக்கச் செய்கின்றோம். சிலர் தொடர்ச்சியாகப் பல மணி நேரம் வெடி போடுவார்கள். எல்லோரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பல மணி நேரம் ரசிக்கலாம். ஓசியிலேயே திருவிழா கொண்டாடலாம்.

பூங்காவில் எஃப் எம் ரேடியோ வைத்து ஒலிபரப்புகின்றோம். அந்தக் காலத்தில் பூங்காங்களில் ரேடியோ கேட்ட அனுபவத்தைப் பெறுகின்றோம்.

எங்கள் குடியிருப்பில், ஒரேயொரு முறைதான், எல்லோரையும் பார்க்க முடிந்தது. சென்னையில் நில நடுக்கம் வந்தபோதுதான், வீட்டுக்குள் இருந்து எல்லோரும்வெளியே ஓடி வந்தார்கள். நமது வளாகத்தில் இவ்வளவு பேர் இருக்கின்றார்களா? என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. வாரந்தோறும் இவர்களைச் சந்திக்கச் செய்ய வேண்டும். என்ன செய்வது? வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோவிலில் விசேட பூசை ஏற்பாடு செய்தோம். கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் கூடியது. சுமார் இரண்டு மணி நேரம் அங்கே ஒன்றாக இருக்கின்றார்கள். பிரசாதம் கொடுக்கின்றார்கள்.

நிலநடுக்கத்தின் போது, ஒலிபெருக்கி வழியாகவும் அறிவித்தோம். அதை எல்லோரும் பாராட்டினார்கள். இன்டர்காமில் இருந்து ஒலிபெருக்கியில் அறிவிப்புகளைச் செய்யலாம். ஒரு வீட்டில் இருந்து திருடன் திருடன் என்று கத்தினால், வளாகம் முழுவதும் கேட்கும். இந்த வசதியைப் பெரியவர்களுக்கு மட்டும்தான் தெரிவித்து இருக்கின்றோம். இல்லை என்றால், குழந்தைகள் அதில் விளையாடி விடும்.

சில வளாகங்களில் மாதத்துக்கு ஒருமுறை சிரிப்பு அரங்கம் நடைபெறுகிறது. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகிறது. மக்கள் மனம் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

ஒரு தனி வீட்டுக்கு இவ்வளவு வசதிகளையும் செய்ய முடியுமா? இந்த வசதிகள் அனைத்தும், அடுக்குமாடி வளாகங்களில் மட்டுமே கிடைக்கும்.

சங்கக் குளறுபடிகள்

சங்க அலுவலகத்தில் பொறுப்பில் இருப்பவர்களே, பணத்தைக் கையாடல் செய்து விடுவதும் உண்டு. இது எல்லா இடங்களிலும் நடக்கின்ற ஒன்றுதான். எங்கள் குடியிருப்பிலும் நடைபெற்று இருக்கின்றது.

ஒரு குடியிருப்பில், புல் வெட்டியதற்கான செலவு ரூ 20,000 என்று எழுதி இருந்தார்கள். சில இடங்களில், வளாகத்துக்கு உள்ளே வராத பொருட்களுக்கு எல்லாம் பணம் கொடுத்ததாக எழுதுவார்கள். குறிப்பாக, வாட்டர்ஃபில்டர் ஒவ்வொரு மாதமும் மாற்றியதாக எழுதுவார்கள். அதற்குப் பணம் வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், மாற்றி இருக்க மாட்டார்கள். அதேபோல, வளாகத்துக்கு உள்ளே வந்து, விடுமுறை நாள்களில் கடை வைக்கின்ற வணிகர்களிடம் பணம் வாங்குவதும் உண்டு. சிலர், ஒரு குழி தோண்ட வேண்டும் என்றால், மூன்று பேருக்கு சம்பளம் கேட்பார்கள்.

அரசுப் பணிகளில் எந்த ஒரு வேலை என்றாலும், இரண்டு மூன்று பேரிடம் ஒப்பந்தப்புள்ளி வாங்குவார்கள். ஆனால், சங்க வேலைக்கு வருகின்றவர்கள், பிறரது பரிந்துரைகளின் பேரில்தான் வருவார்கள். அப்படி வந்தால்தான் நல்லது. ஏனென்றால், அந்த ஆளைப் பற்றித் தெரிந்தவர்கள்தான், துணிந்து பரிந்துரை செய்வார்கள். அப்படி வருகின்றவர்களும், பெயரைக் காப்பாற்ற வேண்டும், அடுத்து வாய்ப்புப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை செய்வார்கள்.

நான் எத்தனை நாள்கள் வெளியில் சென்று திரும்பினாலும், காசாளரை உடனே அழைத்து, பணம் கையிருப்பு எவ்வளவு இருக்கின்றது? என்பதைப் பார்த்து, அந்தப் பணம் அவரது கையில் இருக்கின்றதா? என்பதை உடனே வாங்கி எண்ணிப் பார்த்து விடுவேன்.

ஒருமுறை 40,000 ரூபாய் குறைந்தது. எங்கே? என்று கேட்டபோது, ‘செயலாளர் வைத்து இருக்கின்றார்’ என்று சொன்னார். அவரை அழைத்துக் கேட்டேன். ‘அவசரத் தேவைக்காக எடுத்தேன். ஆண்டுக்கு ஒருமுறைதானே கணக்குக் காட்ட வேண்டும். அதற்குள் திருப்பி வைத்து விடுகிறேன்’ என்றார்.

‘இல்லை. உடனே வைக்க வேண்டும்’ என்றேன். ‘இப்போது முடியாது’ என்றார். நான் உடனே ஒரு தாளை எடுத்து, ‘சங்கப் பணத்தில் 40,000 ரூபாய் குறைகிறது. அதற்குப் பொறுப்பு ஏற்று, நான் உடனே பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கின்றேன்’ என்று எழுதி, செயற்குழு உறுப்பினர்களிடம் கொடுத்தேன். அவர்கள் உடனே கூட்டத்தைக் கூட்டினார்கள். ‘நீங்கள்தாம் இரண்டு மாதங்களாக ஊரில் இல்லையே? நடந்தது என்ன?’ என்று விசாரிக்கத் தொடங்கினார்கள். குட்டு வெளிப்பட்டது.

எப்போதுமே, பணம் கையிருப்பு என்பது, பத்து ஆயிரத்துக்கு மேல் அலுவலகத்தில் இருக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும், குடியிருப்புவாசிகள் கட்டுகின்ற பணத்தை, வங்கிக் கணக்கில் செலுத்திவிடவேண்டும். அது மட்டும் அல்ல இப்போது 5,000 ரூபாய்க்கு மேல் நீங்கள் யாருக்குப் பணத்தைக் கொடுத்தாலும், செக் மூலமாகத்தான் கொடுக்க வேண்டும் என்று தணிக்கையாளர்கள் சொல்லுகிறார்கள்.

எனவே, காசோலை எழுதித்தான் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும். எந்த ஒரு சில்லறைச் செலவுக்கும் கூட, வங்கியில் போட்ட பணத்தில் இருந்து எடுத்து வந்தால், பிரச்சினையே இருக்காது. கணக்கும் சரியாக இருக்கும். தணிக்கையாளரும் அதிகக் கேள்விகள் கேட்க மாட்டார்.

பொருளாளர், கணக்குத் தெரிந்தவராக இருந்தால் இன்னமும் நல்லது. தலைவர் அல்லது செயலாளர், பொருளாளருடன் இணைந்துதான் பணத்தை செக் எழுதி பணத்தை எடுக்க முடியும் என்ற விதி இருக்க வேண்டும். பொருளாளர் துணை இல்லாமல், பணத்தை யாரும் எடுக்க முடியாது. அவர் நேர்மையானவராக இருக்க வேண்டும். அவர் ஒரு நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிபவராக இருப்பின் இன்னமும் நல்லது.

ஒவ்வொரு ரூபாயைச் செலவிடும்போதும், அது, 200 பேருடைய பணம் என்று கருதிச் செலவிட வேண்டும். அந்த உணர்வு இருந்தால், சிக்கனம் வந்து விடும். ஒரு சங்கம் என்றால், மாதம் எவ்வளவு செலவு ஆகும் என்பது, சில மாதங்களிலேயே தெரிந்து விடும். வருவாய்க்கு ஏற்ற செலவு செய்வது என்பதும் ஒரு கலை. அது முடியாதபோது, உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவித்து விட வேண்டும். அவர்களுடைய ஒப்புதலோடு, மாதாந்திரப் பராமரிப்புத்தொகையை உயர்த்த வேண்டும்.

ஒவ்வொரு மாதமும், செயற்குழுக்கூட்டம் நடைபெற வேண்டும். அதில் வயதில் முதிர்ந்த இரண்டு பெரியவர்கள் இருக்க வேண்டும். பிரச்சினைகளைத் தெளிவாக விவாதிக்க வேண்டும். ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். அது முடியவில்லை என்றால், பெரும்பான்மை உறுப்பினர்கள் சொல்லுவதைச் செயல்படுத்த வேண்டும். பல பிரச்சினைகளைப் பேசினாலும், ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதை வெளியில் வந்து விமர்சிக்கக் கூடாது. உள்ளே நடந்ததை வெளியில் சொல்லி, எதிர்ப்பைத் தூண்டிவிடக் கூடாது. முடிவை எடுப்பதற்கு முன்பே, தங்கள் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் ஒப்புதல் கொடுத்துவிட்டால், பிரச்சினையே இல்லை. எடுக்கின்ற முடிவுகளை, அறிக்கையாக எழுதி, அவ்வப்போது, அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைத்து விடவேண்டும். கோப்புகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.

செயற்குழுவில் உள்ள பெரியவர்கள், ஒவ்வொரு வாரமும், அனைத்துப் பணப் பரிமாற்றங்களுக்கான வவுச்சர்களையும் வாசித்துப் பார்த்து, இந்தச் செலவு தேவைதானா? இல்லையா? கூடுதலாகப் பணம் வழங்கப்பட்டு உள்ளதா? என்பதையெல்லாம் சரிபார்க்க வேண்டும். கேஷ் வவுச்சர், செக் வவுச்சர் என இரண்டு வகை உண்டு. செக் கொடுப்பதிலும் மோசடி நடைபெறுவது உண்டு.

பொதுக்குழு ஆண்டுக்கு ஒருமுறைதான் கூடும்.

சங்கப் பொறுப்பாளர்களுள் ஒருவர் வட மாநிலத்தவராக இருந்தால், மொழிப் பிரச்சினை வரும். ஒருவர் பேசுவதை மற்றவர் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்.

சிலர், நிறைய வசதிகளைச் செய்ய வேண்டும் என்பார்கள். சிலர், காவலர்கள் ஏன் தேவை? அவரவர் வீட்டை அவரவர் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? என்று கேட்பார்கள்.

முதல் மாடியில் இருப்பவர்கள், நாங்கள்ஃலிப்டில் ஏறுவதே இல்லை. அதற்கும் சேர்த்து நாங்கள் ஏன் பணம் கட்ட வேண்டும்? என்று கூடக் கேட்பார்கள்.

ஒரு சாதாரண குடியிருப்புவாசி என்ன வேண்டுமானாலும் பேசலாம். சங்கப் பொறுப்பாளர்கள் சற்றுப் பொறுப்பு உணர்ச்சியோடுதான் பேச வேண்டும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சங்கப் பொறுப்பாளர்கள் யாரும் ஊதியம் பெறுவது இல்லை. அவர்களுடைய நேரத்தைச் செலவிடுகிறார்கள். குடும்பத்தோடு வெளியில் புறப்படும்போது ஒரு பிரச்சினையைக் கொண்டு வருவார்கள். அதனால், அவர்களுடைய குடும்பத்தில் பிரச்சினை வந்துவிடும்.

வளாகத்தில் வசிக்கின்ற ஒரு பொறியாளர் மேற்பார்வை பார்க்கிறார் என்றால், அவரது வீட்டுக்குப் போன்செய்து, மின் மோட்டாரைப் போடச் சொல்லுங்கள் என்று கேட்கக்கூடாது.

அவர்களது குடும்பத்தினர், ‘நாங்கள் என்ன உங்களுக்கு வேலைக்காரர்களா? எங்களுக்கு ஏன் போன் செய்கிறீர்கள்?’ என்று கேட்பார்கள். எந்தப் பிரச்சினை என்றாலும் அலுவலகத்துக்குத்தான் பேச வேண்டும்.

ஒரு பிரச்சினையை ஆவேசமாக எடுத்துக் கொண்டு வருவார் ஒருவர். அவரை உட்கார வைத்து, ஆற அமரப் பேச வேண்டும். அதில் அவர் பாதி சமாதானமாகி விடுவார். இரண்டு பேரும் என்ன சொல்லுகிறார்கள்? என்பதைக் கேட்டு, அதில் உள்ள நியாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

கிராமங்களில் நாட்டாண்மை என்றால் எளிது. ஏனென்றால், அவருக்கு ஊரில் எல்லோரும் கட்டுப்படுவார்கள். இதுதான் தீர்ப்பு என்று அவர் சொன்னால், அதை ஒப்புக்கொண்டு எழுந்து போய்விடுவார்கள். அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் அனைவருமே, ஏதேனும் ஒரு துறையில் சிறந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்கள், நீங்கள்சொல்லுவதை அப்படியே கேட்டுக்கொண்டு போய்விட மாட்டார்கள். சங்கக் கூட்டங்களிலேயே இது தெரியும்.

ஆனந்த விகடன் பழைய புத்தகங்கள் மூன்று நான்கு கிலோ இருந்தது. அதைக் காணவில்லை. தலைவர் அதை விற்றுவிட்டார் என்று ஒரு பெரியவர் குற்றச்சாட்டு சொன்னார். இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தாங்கிக் கொள்கின்ற மனப்பான்மை வேண்டும். அதை ஒரு தமாசாக எடுத்துக்கொள்ள வேண்டும். கண்டு கொள்ளவே கூடாது. நமது நோக்கம், குடியிருப்போருக்குத் தொண்டு ஆற்றுவது.

பொறுப்புக்கு வருபவர்களைப் பற்றி, உறுப்பினர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இது தன்னலம் அற்ற சேவை. பொறுப்பாளர்கள், தங்களுக்கு அலலது வேண்டியவர்களுக்கு, உறவினர்களுக்குச் சாதகமாகச்செயல்பட்டு ஒரு முடிவை எடுக்கிறார் என்றால், பிரச்சினை வந்து விடும். அப்படிப்பட்டவர்களை அகற்றி விடவேண்டும்.

சங்க அலுவலகப் பொறுப்பாளர்கள் முதலில் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். அதற்குப்பிறகுதான், அவர்கள் மற்றவர்களுக்கு அறிக்கை அனுப்பலாம்.

நபிகள் நாயகத்திடம் ஒரு தாய் வந்தார். “என் மகன் நிறைய இனிப்பு சாப்பிடுகின்றான். அவனுக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். ஒரு வாரம் கழித்து வரச்சொன்னார். அவர்களும் வந்தார்கள். அப்போது அவர் அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘இனிப்பு சாப்பிடாதே’ என்றார்.

இதை கடந்த வாரமே நீங்கள் சொல்லி இருக்கலாமே? என்றுஅந்தத் தாய் கேட்டபோது, அப்போது, ‘நானும் நிறைய இனிப்பு சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்; இப்போது நிறுத்தி விட்டேன்’ என்றார்.

அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தில் உள்ள அனைவருமே ஒரு முறை, அலுவலகப் பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும். அல்லது, செயற்குழு உறுப்பினர்களாகவேனும் இடம் பெற வேண்டும். அப்போதுதான் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு வரும்.

இன்றைக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை யார் தேர்ந்து எடுக்கின்றார்கள்? படிக்காதவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டுதான் வாக்கு அளிக்கின்றார்கள். படித்தவர்கள் வாக்குப் போடுவதே இல்லை. வாக்குப் பதிவு நாள் அன்று, ஒரு இளம்பெண்ணிடம் வாக்கு அளித்து விட்டு வா; என்று சொன்னேன். இல்லை அங்கிள். நான் இப்போதுதான் நெயில் பாலிஷ் போட்டு இருக்கின்றேன். அவர்கள், மையை வைத்து விடுவார்கள். இரண்டு மூன்று நாள்களுக்கு அழியாது. அசிங்கமாக இருக்கும் என்றாள். இப்படி இருந்தால், எப்படி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?

வரி விலக்கு தேவை

உள்ளாட்சித்துறை செய்ய வேண்டிய, குப்பை அகற்றுகின்ற பணியை குடியிருப்போர் சங்கம் செய்கிறது. எனவே, இப்படிப்பட்ட சங்கங்களுக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும். சங்கப் பணத்தை நிரந்தர வைப்புத் தொகையில் வைத்து இருக்கின்றோம். அதில் வருகின்ற வட்டிக்கு விலக்கு அளிக்கலாம். பல பணிகளுக்குக் கொடுக்கின்ற தொகையில், 12 விழுக்காடு சேவை வரி கட்டுகிறோம். அந்த சேவை வரியில் இருந்தும் பொதுநலச் சங்கங்களுக்கும், அடுக்குமாடி சங்கங்களுக்கும் விலக்கு அளிக்கலாம்

(தொடரும்..)

- அருணகிரி

Pin It