நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டு திகார் சிறையிலேயே புதைக்கப்பட்ட செய்தியை தமிழின் முன்னணி வெகுஜன  நாளிதழ்கள் (தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி) வெளியிட்ட விதத்தைக் கவனித்தால்,  கூட்டு மனச்சாட்சியின் சூத்திரதாரி யார் என்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

"சாட்சியங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையிலானவை. குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான நேரடி சாட்சியங்கள் எவையும் இல்லை." எனினும்,  "ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய, பல உயிர்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த இயலும்", என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புரை, முழுவதையும் நீதிமன்ற இணைய தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது.

சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த வழங்கப்பட்ட தண்டனையைப் பற்றிய செய்தியை வெளியிடும் போது, அரசு, போலீஸ், உளவுப் பிரிவினர், முன்வைக்கும் வாதங்களை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டு, பிற எந்த மாற்றுக் கருத்தையும்  பொருட்படுத்தாமல், கேள்விக்கு உட்படுத்தாமல்,  அரசு நிறுவனங்கள் முன்வைக்கும்  வாதத்தை அப்படியே பிரசுரிக்கும் பண்பாடு, இந்தியாவிலேயே தமிழ் நாளிதழ்களில் மட்டுமே அதிகமாகக் கானப்படுவதை உணர  முடிகின்றது. 

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள்,   இந்தத் தீர்ப்புரை பற்றியும், வழக்கில் உள்ள குளறுபடிகள் குறித்தும் விரிவாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.   அப்சல் குரு அரிதாக வழங்கிய ஒரு நேர்முகமும் இணையப் பக்கங்களில் காணக் கிடைக்கின்றது.

அரசு,
போலீஸ் / உளவுப் படைகள்,
ஊடகங்கள் (குறிப்பாக வெகுஜன நாளிதழ்கள்),
பொதுக்கருத்து
கூட்டு மனச்சாட்சி,
நீதிமன்றத் தீர்ப்பு,
தூக்கு 
இவற்றுக்கிடையிலான நச்சு வட்டத் ஆபத்தான தொடர்பை உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

கேள்விகள் கேட்காமல் அப்படியே ஏற்கும் நிலை:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வாசித்த போதும், செயற்பாட்டாளர்கள் எழுப்பும் கேள்விகளைக் கவனித்த போதும் அடிப்படையாக எழும் கேள்விகளைக் கூட தமிழ் நாளிதழ்கள் எழுப்ப மறுக்கின்றன.  பார்லிமென்ட் தாக்குதலைத் திட்டமிட்டது யார்? பார்லிமென்ட் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகள் யார்? ஜே.கே. எல்.எப்.ஐச் சேர்ந்த, சரணடைந்த முன்னாள் போராளியான அப்சல் குருவை டில்லிக்கு முகம்மதுவுடன் அனுப்பியது யார்?  பார்லிமென்ட் தாக்குதல் வழக்கு, அப்சலைத் தூக்கிலிட்டதுடன் முடிவடைந்து விட்டதா? என்பன போன்ற கேள்விகளை எழுப்புவது தேசத் துரோகமாகிவிடாது. மாறாக,  இவ்வாறான கேள்விகளை எழுப்பாததன் மூலம், பத்திரிகைகள் தமது கடமையிலிருந்து தவறுகின்றன; துரோகமிழைக்கின்றன என்றே பொருள் படும்.

மரண தண்டனையை தி இந்து நாளிதழ்  நீண்ட காலமாக எதிர்த்து வந்துள்ளது. எனினும், பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில்  சதித் திட்டம் தீட்டியவரான முகமது அப்சலுக்கு - அவரது பங்கினைப் பற்றி விரிவாக குற்றச்சாட்டில் விளக்கப்பட்டு அதை மூன்று நீதிமன்றங்கள் உறுதி செய்து  ஐயமேதுமின்றி நிரூபிக்கப் பட்டுள்ள நிலையில் -  எந்தத் தனி கருணையும் கோருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை", என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது தி இந்து நாளிதழ் 2005 வரை.    எனினும், தனது நிலைப்பாட்டினை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுள்ள இந்து நாளிதழ், "பழிக்கு பழி  நீதியாகாது", என்று 10 02 2013 நாளிதழில் தலையங்கம் தீட்டியுள்ளது.

"ரகசிய தூக்கிலிடலின்  அநாகரீகம்" என்ற மற்றுமொரு தலையங்கத்தில் (12 02 2013)  "இந்திரா காந்தியைக் கொன்றதாகத் தண்டனை விதிக்கப்பட்ட   அன்று சத்வந்த் சிங், கேஹார் சிங், இருவரும் ஜனவரி 6 1989 இதே  திகார் சிறையில் தான் தூக்கிலிடப்பட்டனர். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு அவர்களுக்குப் போதுமான அவகாசம் இருந்தது.  இருவரின் உறவினர்களும், அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்" என வாதாடியுள்ளது இந்து நாளிதழ்.

தமிழ் வெகுஜன நாளிதழ்கள் ஒரே நிலைப்பாட்டுடன் தான் இந்த விஷயத்தை அணுகி வருகின்றன.  தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியான உடனேயே அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராளி    சுப.உதயகுமார்  "தூக்குத் தண்டனை, மரண தண்டனை என்பவை காட்டுமிராண்டித்தனமானவை, கேவலமானவை, அசிங்கமானவை, அநாகரிகமானவை. எந்த ஒரு மிருகக் கூட்டமோ, பறவைக் கூட்டமோ, மீன் கூட்டமோ இப்படி தங்களில் ஒருவரைத் திட்டமிட்டு "சட்டபூர்வமாக" கொலை செய்வதில்லை. உயிர்வதைக்கு தண்டனை உயிரெடுப்பா? அவர்கள் செய்தால் கொலை; நாம் செய்தால் தண்டனையா? பண்பாடே உன் விலை என்ன?", என்று  பேஸ்புக்கில் கருத்துரைத்தார்.  மேற்கத்திய நாளிதழ்கள், ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் வெளியிடப்படும் மாற்றுக் கருத்துகளை கவனித்து அவற்றைத் தொகுத்து, வெகுஜன விவாதத்திற்கு முன்வைக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.

"அப்சல் குருவுக்கு தூக்கு : சட்ட நெறியைத் தூக்கிலிட்டதற்குச் சமம்"  என்று   தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சியின் பெ.மணியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பை எந்த வெகுஜன நாளிதழும் வெளியிட முன்வரவில்லை. "அப்சல் குருவுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது, சட்டவழிப்பட்ட நீதிமன்ற முறையில் அல்ல. நீதிபதிகள், மக்கள் உணர்ச்சி மற்றும் தங்களுக்கு இருந்த 'நாட்டுப்பற்று' ஆகியவற்றின் காரணமாக, தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறார்கள். இத்தண்டனை, Court of Justice முறையிலும் வரவில்லை. Court of Law முறையிலும் வரவில்லை. நீதிபதியின் விருப்பு – வெறுப்பு சார்ந்த, வழிமுறையில் வந்துள்ளது."  என்பது அவரது வாதம்.

அப்சல்குருவுக்கு நீதி வேண்டும் என்று கோரும் இணையதளம் இது தொடர்பான தீவிர முயற்சிகள் யாவற்றையும் தொகுத்து வெளியிட்டுள்ளது.

"ஜனாதிபதி அவர்களே, உங்கள் அலுவலகத்தால்,  கருணை மனு நிராகரிக்கப் பட்ட பலரையும் விட, அப்சல் குருவைத் தூக்கிலிட ஏன் அவசரம் காட்டினீர்கள், என்பதை இந்தியப் பேரரசு விளக்க வேண்டும்", என்று கோரி 202 செயற்பாட்டாளர்கள் ஒப்பமிட்ட கடிதத்தை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.

இப்படி மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்து வருபவர்களுக்கு வெகு ஜன செய்திப் பரப்பில் சிறிதும்  இடம் தரப் படுவதுமில்லை. மாறாக, அவை தமது முன் தீர்மானத்துடன், செய்தியை அணுகுவதும் அப்படியே அடைமொழிகளுடன்  வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

அப்சல் குரு தூக்கிலிடப் பட்ட செய்தியைத் தமிழ் முன்னணி நாளிதழ்கள் வெளியிட்ட விதத்தை விரிவாகக் காண்போம்

நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு- தினகரன்

பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான்: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு - தினத்தந்தி

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்  - தினமணி

நிறைவேற்றம் !   அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை; டில்லி திகார் சிறையிலேயே  உடல் அடக்கம்.   பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவனுமான, அப்சல் குருவுக்கு, 43, நேற்று காலை, டில்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. - தினமலர்

இந்திய மொழி நாளிதழ்கள் எல்லாமே இப்படி, அரசின் ஊதுகுழல்களாக இருக்கின்றனவா என்பதை அறிய தெலுங்கு,   மலையாள முன்னணி நாளிதழ்கள் சிலவற்றில் இந்தச் செய்தி வெளியிடப் பட்டுள்ள விதத்தை ஆராய்ந்தோம்.

தெலுங்கு நாளிதழ்களில் இச் செய்தி வெளியிடப் பட்ட விதம் : 

ஆந்திரஜோதி :
అఫ్జల్ గురుకు ఉరి :     அப்சல் குரு தூக்கிலிடப் பட்டார்
పార్లమెంటు దాడి కేసులో దోషి. అత్యంత గోప్యంగా మరణ శిక్ష అమలు. :  பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்.  தூக்கு ரகசியமாக நிறைவேற்றப் பட்டது
తీహార్  జైలులో ఉరితీత - అక్కడే ఖననం :  திகார் சிறையிலேயே உடல் அடக்கம் செய்யப் பட்டது . 

ஈநாடு :
ఉగ్రగురుకి ఉరి.:   தீவிரவாத குருவுக்கு தூக்கு 
పార్లమెంటుపై దాడి కేసులో  పదేళ్ళ తర్వాత అఫ్జల్ కు ఉరి శిక్ష అమలు. :  பார்லிமென்ட் தாக்கப் பட்ட வழக்கில் பத்தாண்டுகளுக்குப் பின் அப்சல் தூக்கிலிடப் பட்டார். 
అత్యంత రహస్యంగా ఆపరేషన్. :   அதி ரகசியமாக நிறைவேற்றப் பட்டது. 
క్షమాభిక్ష పిటిషన్ ను 3న తిరస్కరించిన రాష్ట్రపతి.  : கருணை மனுவை 3ம் தேதி ஜனாதிபதி நிராகரித்தார். 
తీహార్ జైల్లోనే ఉరి, అక్కడే ఖననం. : திகார் சிறையில் தூக்கிலிடப் பட்டு அங்கேயே புதைக்கப் பட்டார். 

சாக்க்ஷி
అఫ్జల్ గురుకు ఉరి.  அப்சலுக்கு  தூக்கு
పార్లమెంటుపై దాడి కేసులో :  பார்லிமென்ட் தாக்கப் பட்ட வழக்கில்
రహస్యంగా మరణ శిక్ష అమలు.  : ரகசியமாக நிறைவேற்றப் பட்டது 

மலையாள நாளிதழ்களில் இந்தச் செய்தி வெளியிடப் பட்ட விதம் : 
மலையாள மனோரமா :
அப்சல் குரு தூக்கிலிடப் பட்டார் - அதிர்ச்சியில் காஷ்மீர்
மாத்ருபூமி:
அப்சல் குரு தூக்கிலிடப் பட்டார்
மத்யமம்
அப்சல் குரு தூக்கிலிடப் பட்டார்

ஆங்கில நாளேடுகளில் இந்தச் செய்தி வெளியிடப் பட்ட விதம் : 

நாட்டையே அதிர வைத்த அணுசக்தி கொண்ட‌ இந்தியாவையும் பாகிஸ்தானையும் போரின் விளிம்புக்கு நகர்த்திச் சென்ற   அப்சல்  பார்லிமென்டைத் தாக்குவதற்கு சதித் திட்டமிட்ட 11 ஆண்டுகளுக்குப் பின் அதிகாலையில் தூக்கிலிடப்பட்டார்.  தீவிரவாத குருவைத் தூக்கிலிட்டதன் மூலம்  இந்தியாவின்  வேதனையான ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது
[Terror Guru's Hanging Closes - A Traumatic Chapter For India - டைம்ஸ் ஆப் இந்தியா ]

13/12 Kingpin Afzal Guru Hanged
13/12 தாக்குதலின் தலைவன் அப்சல் குரு தூக்கிலிடப் பட்டான் : The Sunday Express

Afzal guru hanged in secrecy, buried in Tihar Jail
அப்சல் குரு ரகசியமாகத் தூக்கிலிடப் பட்டார்.  திகார் சிறையிலேயே புதைக்கப் பட்டார்  The Hindu

நிறைவாக:
அரசின் ஊது குழலாக வெகுஜனத் தமிழ் நாளிதழ்கள் மாறி வெகு காலமாகி விட்டது.  அரச பயங்கரவாதத்தை ஊடகங்கள் ஊக்குவிப்பதும், மாற்றுக் குரலுக்கு செவிமடுக்க மறுப்பதும், தொடர்ந்து கொண்டே இருந்தால், அது  ஊடக பயங்கரவாதத்திற்கே இட்டுச் செல்லும் என்ற அச்சமே மேலிடுகின்றது. 

நன்றி :
தெலுங்கு நாளிதழ்களின் செய்திகள் மொழிபெயர்ப்பு : சாந்திஸ்ரீ
மலையாள நாளிதழ்களின் செய்திகள் மொழிபெயர்ப்பு : ஷீனா ஜான்ஸன்.

Pin It