டெல்லிச் சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அருந்ததி ராய் பிபிசிக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். இந்தப் போராட்டம் நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் என்றும், இது அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்காது என்றும், இது போன்ற வன்முறைகள் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தாலும் காவல் துறையினராலும் நிகழ்த்தப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். அவர் கூறும் மற்ற காரணங்கள் நியாயமானதாகப் பட்டாலும், இந்த டெல்லி சம்பவத்திற்கு மட்டும் எதற்கு இந்தளவு கூப்பாடு என்று கூறியது மிகவும் கண்டனத்திற்குரியது.

டெல்லியில் நடந்தது என்ன? அந்த மாணவி நடு இரவிலோ, பின்னிரவிலோ வெளியில் சுற்றவில்லை. ஒன்பது மணிக்குத்தான் அதுவும் பேருந்து நிறுத்தத்தில்தான் நின்றிருக்கிறாள். தன்னந்தனியாக அல்ல; தன் நண்பருடன்தான் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறாள். அப்பொழுதுதான் இது நிகழ்ந்துள்ளது. அடுத்த முக்கியமான விசயம், இச்சம்பவம் நாட்டின் தலைநகரத்தில் நடந்துள்ளது. போலீஸ் ஸ்டேசன் கூட இல்லாத, சாதிக்கொடுமைகளும், கட்டப்பஞ்சாயத்துகளும் நடந்து கொண்டிருக்கும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தில் நடந்தது அல்ல இச்சம்பவம்.

எங்க அப்பன் பாட்டன் காலத்திலிருந்தே வாழ்கிறோம்; பூரணகும்ப மரியாதையோடு சாதியைக் கட்டி காப்பாற்றி வருகிறோம் என்ற மனோபாவம் பெருநகரங்களில் குறைந்துள்ளது. படிப்பு, பணி நிமித்தமாக பல இன, சாதி, மதத்தினரும் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அடிப்படையில் வாழும் சூழலுள்ள நகரம் அது. குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பிறகு, ஐடி தொழில்நுட்பம் சார்ந்த பணி, படிப்பு காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளது.

மாறிவரும் உலகமயமாக்கலின் காரணமாக பெண்கள் படிப்பதும், வேலைக்குச் செல்வதும் அதிகரித்திருக்கும் சூழலில், நடுத்தர வர்க்கம் தங்கள் வீட்டு பெண்களை முன்பைவிட அதிகமாக வெளியில் அனுப்புகிறார்கள். இந்தச் சூழலில் உருவாகும் கலாச்சாரம் வேறுவிதமானது.

ஆணும், பெண்ணும் சந்திப்பதும், உரையாடுவதும் உடலுறவுக்கு மட்டுந்தான் என்கிற நிலப்பிரபுத்துவ, சாதியக் கலாச்சாரத்திற்கு எதிரான, பெருநகர படித்த நடுத்தர வர்க்கத்தின் ஆண், பெண் நட்புக் கலாச்சாரம்தான் பாலியல் வன்முறையை ஒரு சமூக அநீதியாகப் பார்க்க வைக்கிறது.

தன் சாதிப் பெருமை தன் பெண்ணின் உடம்புக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டும், ஆண்மைதான் வீரம் என்று நினைத்துக் கொண்டும், வேறு சாதிப் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கினால் கைகொட்டிச் சிரிப்பதும், தன் சாதிப் பெண்ணுக்கு அந்த நிலை ஏற்பட்டால் மூடி மறைத்து பாதுகாப்பதுமாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள முடியாது.

இப்படிப் பட்ட சூழலில் குறைந்த பட்ச பொருளாதார சுதந்திரத்தோடு பெண் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான, படிப்பு, வேலை இவற்றிற்காக வெளி உலகில் அச்சமின்றி பிரவேசிக்க எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற உரிமைக்காக வெடித்த போராட்டம் இது.

இந்த போராட்டத்தைப் பார்த்து ஒரு காங்கிரஸ்காரர், 'பெண்கள் நடு இரவில் ஊர் சுற்றுவதற்கு அல்ல சுதந்திரம்' என்று கருத்து தெரிவித்தார். டெல்லியில் இருந்து கொண்டே, அமெரிக்கா அரசுக்கு இரவு முழுக்க கண்விழித்து வேலை பார்க்க பெண்கள் வேண்டுமாம். ஆனால் இரவில் பெண்கள் வெளியில் வருவது ஊர் சுற்றுவதற்காம்.

அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆணும் தன்னுடைய அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என்று யாரையும் 9 மணிக்குக் கூட வெளியில் அனுப்ப முடியாதா என்றும், துணையாகச் சென்ற ஒரு ஆணாகிய தனக்கும் பாதுகாப்பில்லையா என்பதை உணர்ந்தும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு கம்யூனிசம் தெரியாது, வற‌ட்டுத்தனமான வர்க்கப் பார்வை கிடையாது, ஜம்மு, மணிப்பூரில் ராணுவம் செய்ததுகூட அவர்களுக்குத் தெரியாது இருக்கலாம். கைரலாஞ்சியின் சாதி வன்முறைக் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியாதுகூட இருக்கலாம். ஏனெனில் அது அவர்களது பிரச்சினை இல்லை. எல்லா மனிதர்களும், எல்லா வர்க்கமும் தனக்கு நேர்ந்த நேரடி பாதிப்புகள், இழப்புகளிலிருந்துதான் கற்றுக் கொள்வதும், போராடுவதும். அப்படி எழுந்த போராட்டம்தான் டெல்லி போராட்டம்.

இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் தனக்கு போராட ஆட்களில்லாததால், அருந்ததி ராய் போன்ற மனித உரிமைக் காவலர்கள் அவர்களுக்காகப் போராட வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் இந்தப் பெண் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி. தன் சக மாணவிக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக, கல்லூரி மாணவர்களின் தன்னிச்சையான எழுச்சிதான் இந்தப் போராட்டத்தின் தொடக்கம். ராணுவமும் போலீசும் செய்கிற பாலியல் வல்லுறவு மட்டுமே மனித உரிமை மீறல் என்பதை எப்படி அருந்ததிராய் போன்றவர்கள் பார்க்கிறார்களோ அதுபோலத்தான் நடுத்தர வர்க்கத்துக்கு இவைதான் பிரதானமாகத் தெரியும்.

களை எடுக்கிற பெண்களும் ஆதிவாசிகளும் தங்கள் குடும்பத்திற்குள்ளே கூட ஆண்களின் வல்லுறவுக்கு ஆளாகி எதிர்க்கவே திராணியின்றி இருக்கையில் குறைந்த பட்ச சுதந்திரம் உள்ள நடுத்தரவர்க்கம்தான் இது போன்ற பிரச்சினைகளுக்குப் போராட முடியும், இதுதான் சமூக யதார்த்தம்.

இது போன்ற நடுத்தர வர்க்கத்தின் போர்க்குரலால் உருவானதுதான் டாக்டர் முத்துலெட்சுமி கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு முறை, ராஜாராம் மோகன் ராய் கொண்டு வந்த சதி ஒழிப்பு, குழந்தைத் திருமணம் ஒழிப்பு, இன்று பயன்படும் வரதட்சணை ஒழிப்புச் சட்டம், பெண்கள் குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை ஒழிப்புச் சட்டம் என்று கூறலாம். இந்த சட்டங்கள் எல்லாம் கிராமத்தில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள எல்லா ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கப் பெண்களுக்கும் முழுமையாகப் பயன்படுகிறதா என்ன? அவ்வாறில்லை என்பதற்காக அவற்றை தூக்கி எறிந்து விட முடியுமா? போலீசும், ராணுவமும் நாள்தோறும் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து குரல் கொடுப்பது எந்த நம்பிக்கையில்? இந்த அரசாங்கத்தை, அதன் சட்டத்தையும் மதித்துதானே? இந்த அரசின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்கிறவர்களால், இந்த சமூகத்தின் ஒரு பகுதியான நடுத்தரவர்க்கத்தின், பெண் சமத்துவத்திற்கான போராட்டத்தை எப்படி இப்படி பொறுப்பற்று விமர்சனம் செய்ய முடிகிறது?

நேரடியாக ஆதிவாசிகளுக்கும், ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும், விளிம்பு நிலையினருக்கும் பயன்படும் சட்டங்களும், போராட்டங்களும் தான் மதிப்பு மிக்கவை. அவற்றினால் மட்டுமே வராலாறு முழுக்க, சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்வது மார்க்சியத்தை, கம்யூனிசத்தை வறட்டு சூத்திரமாகப் பார்ப்பதன் விளைவு.

சமூக மாற்றத்தை விரும்பும் கருப்பு, சிவப்பு கட்சிக்காரர்கள், தேசிய உணர்வாளர்கள், அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள் என அனைவருமே சாதி, வர்க்கம் ஒழிந்து சமத்துவ சமூகம் வரும்போது பாலியல் வன்முறையற்ற சமூகம் உருவாகும் என நம்பிக்கொண்டு பாலியல் வன்முறை என்கிற கேடுகெட்ட செய்லை பொருட்படுத்தாமல் இருந்து விட்டனர். ஆபாசப் படங்கள், விளம்பரங்கள், பெண்ணை ஒரு பாலியல் ஜந்துவைப் போல் சித்தரிக்கும் திரைப்படங்கள், மத சாஸ்திரங்கள், இலக்கியங்கள், பத்திரிக்கைகள் போன்றவற்றை எதிர்ப்பது பெண்கள் அமைப்புகளின் பொறுப்பு, அதில் தங்களுக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லை என்று இருந்து விட்டனர். (மணிப்பூரில் பெண்கள் மீதான ராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு எதிராக அங்கும் பெண்கள் மடடும்தான் போராடினர்.) இந்த வரலாற்றுத் தவறின் மோசமான விளைவுதான் இன்று அக்கொடூரச் செயலுக்கு மரண தண்டனை கேட்டுப் போராடும் இந்தக் கொந்தளிப்பு.

நாம் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றே கவனிக்காமலோ ஒதுக்கித் தள்ளிய பிரச்சினை, ஒரு தரப்பினரால், தன்னிச்சையாக, உணர்வுப் பூர்வமான போராட்டமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்கிற சமூக எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு அதன் ஆரம்ப அடிச்சுவடியான அரசு, அதிகார வர்க்கம், போலீஸ், ராணுவம் செய்யும் வன்முறைகள் மட்டுமே வன்முறை என்றும், சாதியாலும் வர்க்கத்தாலும் ஏழ்மையில் உள்ளவர்களின் பிரச்சினை வெளியுலகிற்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்றும், சாதாரணமானவர்களுக்குக் கூடத் தெரிந்த இந்த விசயத்தை புதிதாக கண்டுபிடித்தது போல் கூறிக் கொண்டு திரிவதும் கம்யூனிசத் தத்துவத்தை மிக மொன்னையாகப் புரிந்து கொண்டதன் வெளிப்பாடுதான்.

இது வரையில் இந்தியாவில் கோவில் திருவிழாவைத் தவிர, வேறு எதற்கும் இவ்வளவு பெருந்திரளான கூட்டத்தை ஒரு பொதுவிசயத்திற்கான போராட்டத்திற்குப் பார்த்த‌தில்லை. தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருக்கிற அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தவிர, இந்த போராட்டம் தான், ஆண்களோடு பெண்களும் சரிசமமாக கலந்து கொண்ட போராட்டம். பெண்கள் மீதான வன்முறையை தன் வாழ்வோடு சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்சினையாக புரிந்து கொண்டு ஆண்களும், பெண்களுக்காக போராட்டத்தில் கலந்து கொண்ட தன்னெழுச்சியான போராட்டம். பல முறை தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகையை வீசியும் எல்லாவற்றையும் தாண்டி பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாதி, இனம், மதம், மொழி, பால் கடந்து ஒரு நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினைக்காக, பெண்ணுரிமைக்காக ஆண்களும் பெண்களும் மாணவர்களும், மாணவிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

இநதப் போராட்டத்திற்குக் காரணமான, டெல்லியில் நடந்த அந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவற்றை நாம் ஆராய வேண்டும் என்பதில் மறுப்பேதுமில்லை. இவ்வளவு வன்மமாக ஒரு பெண்ணை தாக்குவதற்குப் பின் உள்ள அரசியல், கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார, உளவியல் கூறுகள் ஆராயப்பட வேண்டியவை. ஆனால், (அமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா அநீதிகளுக்கும் எதிராக, ஒரு நாள் பொறுக்கமுடியாத கோபம் பிறிட்டுக் கிளம்பும் என்கிற புரிதல் இன்றி) இது வரை நடக்காத வன்முறையா இந்தப் பெண்ணுக்கு நடந்து விட்டது என்றும், இந்த ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூப்பாடு, கொந்தளிப்பு என்றும், இந்த போராட்டமே அவசியமற்றது என்றும் கூறுவது சமூக நலனுக்கு விரோதமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Pin It