தமிழக அரசு உயர்கல்வி குறித்த தனது பொறுப்பைக் கைகழுவத் தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. திமுக, அதிமுக என்ற இரண்டு அரசுகளுக்குமே இதில் பாகுபாடுகள் கிடையாது. கழகப் பாராளுமன்ற உறுப்பினரின் மனைவியை ஒரு கழக அரசு துணைவேந்தராக்கினால், மற்றொரு கழக அரசு, எம்.பி. பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்ற கழகத் தலைமைக் கழகப் பேச்சாளரையே துணைவேந்தராக்கியது. அமைச்சர் பெருமக்களின் மருமக்கள் அமைச்சரின் இரண்டாம் மனைவியின் மருமகன், தங்க பிஸ்கெட் கடத்தி, தண்டனை அனுபவித்தவர் போன்று எவரையும், எந்தக் கேள்வியும் இன்றி துணைவேந்தர்களாக்கி அழகு பார்த்து வருகின்றன திராவிட இயக்கங்களின்  அரசுகள்.

தமிழ்நாட்டு அரசினால் நிறுவப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வரும் பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்கள்  நியமிக்கப்படுவது போல மத்திய பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் ஒருபோதும்  நியமிக்கப் படுவதில்லை. பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் நிதி ஒதுக்கீடு முதல், துணைவேந்தர்களின் செயல்பாடுகள் பலவற்றிலிருநது தமிழகப்  பல்கலைக்  கழகங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் நிறைய உள்ளன. எனவே, 2007 ஏப்ரல் 15 முதல் 2012  ஏப்ரல் 14 வரை துணைவேந்தர் பதவியிலும், 2012 ஏப்ரல் 15 முதல் 2012 நவம்பர் இறுதி வரை துணைவேந்தர்  பொறுப்பு பதவியிலும் நிர்வாகம் செய்த பேராசிரியர் தரீனின் செயல்பாடுகள், பங்களிப்புகள், அவர் மீதான விமர்சனங்கள்,  இவற்றிலிருந்து பெறவேண்டிய படிப்பினைகள் ஆகியவற்றை ஆராய்கிறது இக்கட்டுரை.

தமிழக அரசினால் தனது 19 பல்கலைக் கழகங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியை விட, பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகம் என்ற ஒரு பல்கலைக்  கழகத்திற்கு இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை ஒதுக்கும் நிதி அதிகம். 11 ஆவது திட்ட காலத்தில் மட்டும் முதலில் ரூ.250 கோடிகளைப் பெற்று அவற்றை முறையாகச் செலவிட்டு விட்டு, கடைசி 3 மாதங்களில் மேலும் ஒரு 50 கோடியைப் பெற்றது பாண்டிச்சேரி பல்கலைக் கழகம். ஆனால், தமிழ் நாட்டின் பல பல்கலைக் கழகங்கள் 11 ஆவது திட்டகால நிதியாக ரூ.10 கோடியோ, 20 கோடியோ அதற்கும் குறைவாகவோ  பெற்றன. அவற்றையும் முழுமையாகச் செலவழிக்காத தமிழக பல்கலைக் கழகங்களும் உண்டு.   திட்ட நிதி தவிர, மாநில அரசு ஒதுக்கும் நிதியும் ஆகக் குறைவானதே. ஒரே நாளில்  ரூ.270 கோடிக்கு சாராயம் விற்று சாதனை புரிந்திருந்தாலும், உயர் கல்வி வளர்ச்சிக்கென தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி நாட்டிலேயே ஆகக் குறைவானதாகும். 

தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலுமாக இரண்டு மத்திய பல்கலைக் கழகங்கள் (காந்திகிராம் மைய நிகர்நிலைப் பல்கலைக் கழகம், சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கடல்சார் பல்கலைக் கழகம் தவிர) இயங்கி வருகின்றன. 1985ஆம்  ஆண்டில் நிறுவப்பட்ட  பாண்டிச்சேரி பல்கலைக் கழகம், 2009இல் நிறுவப்பட்டு  திருவாரூரில் இயங்கிவரும் தமிழ்நாடு  மைய பல்கலைக் கழகம் ஆகியவற்றுடன்  21 தனியார் பல்கலைக் கழகங்களும் 19 அரசு பல்கலைக் கழகங்களும் இயங்கி வருகின்றன  நாட்டிலேயே மிக அதிகமாக, தமிழ் நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் (53) இயங்கி வருவதாக யு.ஜி.சி.யின் அறிக்கை குறிப்பிடுகின்றது .

tareen_375துணைவேந்தர் தரீன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்  முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், ஊழலுக்குப் பெயர் பெற்றிருந்த அர்ஜுன் சிங்  மனித வள மேம்பாட்டு அமைச்சராகவும், அப்துல் கலாம் ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் நியமனம் பெற்றார். மத்திய பல்கலைக் கழகங்களின் வழக்கப்படி 5 ஆண்டுகளுக்கு அவருக்கு துணைவேந்தர் பதவி நியமனம் வழங்கப்பட்டது. முன்னதாக, 25 ஆன்டுகள் வரை அவர் மைசூர் பல்கலைக் கழக நிலவியல் பேராசிரியராகவும், காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும், சவுத் ஏசியன் பவுண்டேஷ‌னின் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவத்துடன் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றார்.

தரீன் நிர்வாகக் காலத்தில் பாராட்டப் பெற்ற செயல்கள்:

கமிஷன் பெறுவது, சொத்து குவிப்பது, ஆசிரியர் நியமனங்களில் பேரம் பேசி வசூல் செய்வது, தரகர்களிடம் நெருக்கமாக இருப்பது, கல்வி வியாபாரத்தில் ஈடுபடும் தனியார் கல்லூரி முதலாளிகளிடம்  நெருக்கமாக இருப்பது, மக்கள் பணத்தில் புது கார் வாங்குவது - என்ற எந்த ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது அவரின் விமர்சகர்களால் கூட  வைக்கப்பட்டதில்லை. 

பல்கலைக் கழக நூலகத்திற்கு ஆகப் பொருத்தமான ஒரு நூலகரைத் தெரிவு செய்து, உரிய நிதி நல்கைகளையும் வழங்கி,  சுதந்திர‌மாக இயங்குவதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்து, இன்று பாண்டிச்சேரி பல்கலைக் கழக ஆனந்த ரெங்கப் பிள்ளை நூலகத்தை, நாட்டில் சிறந்த நூலகங்களில் ஒன்றாக வளர்த்தெடுத்திருப்பது இவரது தனிப்பெரும் பங்களிப்பாகக் கருதப்பட வேண்டும். (தமிழக அரசினால் நிர்வகிக்கப்படும் எந்தப் பல்கலைக் கழகத்தின் நூலகமும் இதற்கு நிகராக இயங்கவில்லை என்பதையும், இந்த நூலகத்தின் தரத்தினை எட்ட இன்னும் 10 ஆண்டுகளாவது அவற்றிற்கு ஆகும் என்பதையும் உறுதியாகக் கூறலாம்).

பெருமளவில் ஒரு நலன்புரி (welfare) நிர்வாகத்தை  அமல்படுத்தியது தரீனின் பாணியாக இருந்தது. வணிகச் சூழலை, பல்கலைக் கழக வளாகத்திலும் நிர்வாக அணுகுமுறைகளிலும்  முற்றாகத் தவிர்த்தார். மாணவர்களின் கல்விக் கட்டணங்களை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். அமைச்சகத்தின் நெருக்கடிக்குப் பின், கடந்த மார்ச் மாதம்தான் கட்டணங்களை உயர்த்தும் முடிவிற்கு அனுமதியை அளித்தார்.

பல்கலைக் கழக விருந்தினர் மாளிகையில் அறை வாடகை நாளொன்றுக்கு ரூ.500 என்றிருந்ததை ரூ.100 ஆகக் குறைத்தார். பல்கலைக் கழகம் லாபம் சம்பாதிக்கும் நிறுவனம் அல்ல என்று விளக்கமும் கொடுத்தார். பல்கலைக் கழக அழைப்பின்  பெயரில் பணி செய்ய வருபவர்களுக்கு அன்றாடப் படியாக ரூ.150 மட்டும் கொடுத்து வரும் சூழலில், தங்கும் அறை வாடகையாக  மட்டும் ரூ.500 அறைவிட்டால், கையிலிருந்தா நமது விருந்தினர் கட்டுவார்? என்பது அவரது கேள்வியாக இருந்தது. ரூ.50க்குள் ஒரு விருந்தினர் தனது உணவுத் தேவைகளை, விருந்தில்லத்தில் முடித்துக் கொள்ளும் வகையில் விருந்தினரில்ல உணவுக் கட்டணங்க‌ளும்  நிர்ணயிக்கப்பட்டன.

110 ஏக்கர் பரப்பளவில் சமூக அறிவியல் புலங்களுக்கெனத் தனியாக ஒரு புதிய வளாகத்தினைத் திட்டமிட்டு உருவாக்கினார். தனது ஐந்தாண்டு நிர்வாகத்தில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியப் பணியிடங்களில்  பெருமளவில் நேர்மையுடன் நிரப்பியது, பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை மும்மடங்கிற்கும் மேலாக உயர்த்தியது ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.

பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் பயணம் செய்வதற்காக 400 சைக்கிள்களை பல்கலைக் கழகத்தின் சார்பிலேயே வாங்கி அர்ப்பணித்தது, பல்கலைக் கழகத் தோட்டக் கலைத் துறையினரின் சேவையை முழுமையாகப் பெற்று, பல்கலைக் கழக வளாகம் முழுவதையும்  செடி கொடிகளுடனும், புல்வெளிகளுடனும், மலர்களுடனும் பராமரிக்கச் செய்தது, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் நலன்களிலும், சிறுபான்மையினரின் நலன்களிலும் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டது, அரசியல்வாதிகளோ, துறையின் அமைச்சரோ, அமைச்சகத்தினரோ, பல்கலைக் கழகத்தின் அன்றாட நிர்வாகத்திலோ,  நியமனங்களிலோ தலையிடாத சூழலை உருவாக்கிக் கொண்டது ஆகியவையும் பாராட்டப்பட வேண்டிய செய்கைகள் ஆகும்.

காலை 9.30 மணிக்கு அலுவலகம் வருவதில் தாமதிப்பதுமில்லை;  5.30 மணிக்கு மேல் அலுவலகத்திலிருந்து கிளம்புவதில் தாமததித்ததுமில்லை. பல்கலைக் கழகத் துணைவேந்தர் என்பதைவிட, ஒரு கார்ப்பொரேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி போலவே இயங்கி வந்தார். 

மாணவர் தேர்தலை அவரது நிர்வாகத்தின் ஐந்தாவது ஆண்டின் இறுதியிலேயே அனுமதித்தார். ஷங்காய் உலக உயர்கல்வி நிறுவனத் தரப் பட்டியலில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனது பல உரைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்

பல கோடி ரூபாய் செலவில் பல்கலைக் கழகத்திற்குப் பொருட்களை  வாங்கும்பொழுது என்னென்ன விதிமுறைகள்  பின்பற்றப் படவேண்டும் என்பதற்கு ஒரு கையேட்டை உருவாக்கி, அதைப் பின்பற்றுமாறு செய்ததன் மூலம், கொள்முதல் யாவும் வெளிப்படைத் தன்மை பெற்றன.

அவரது ஐந்தாண்டு கால நிர்வாகத்தில் அவருக்குப் பெருமளவு  பக்கபலமாக இருந்து அவரது திட்டங்களைச்  செயல்படுத்த உதவியவர்களில் இரு தளபதிகளாகச் செயல்பட்டது,  பதிவாளர் லோகநாதனும், நிதி அலுவலர் ராகவனும் என்பது பல்கலைக் கழக ஊழியர்களும், அலுவலர்களும், ஆசிரியர்களும் அறிந்த உண்மை.

இந்திய ராணுவத் தலைமைத் தளபதியுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி, ராணுவ உயர் அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் ஆய்வில் ஈடுபட தனி வழிவகை ஏற்படுத்தித் தந்தார். பல்கலைக் கழகத்திற்குத் தேசிய அளவில் கூடுதல் வெளிச்சம் கிடைக்கச் செய்யும் முயற்சியாக, பல்கலைக் கழகக் கீதம் ஒன்றை  உருவாக்கியது இவரது முக்கிய பங்களிப்பாகக் கருதப் படும்.

ஊடகவியலுக்கென ஒரு துறையையும் ஒரு ஆய்வு மையத்தையும் உருவாக்கியதுடன், அவற்றைத் தனது நிர்வாகத்  தேவைகளுக்கென முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். பல்கலைக் கழகம் குறித்து அவரே உருவாக்கிய ஆவணப் படம், தனது உரைகளில் பெருமளவிலானவற்றை வீடியோ வடிவில் ஆவணப்படுத்தியது , மாணவர் பயிற்சிக்கென உருவாக்கப்பட்ட இதழில் அதீத அக்கறை காட்டியது ஆகியவை இவ்வகையில் குறிப்பிடத் தக்கவை.

அவர் மீதான குறிப்பிடத்தக்க சில விமர்சனங்கள்:

துணிச்சல் மிக்கவர் என்றாலும், அவர் ஒரு எதேச்சதிகாரி என்றால் மிகையில்லை. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமில்லாதவராகவே இருந்தார்.  என்றாலும், வெகு சிலருக்கு அவர் சாதகமாகவே இருந்தார். அந்த வெகு சிலரும் தமது சுய நலங்களுக்காக அவரைப் பயன்படுத்தி வந்தார்கள் என்ற விமர்சனத்தை மறுப்பதற்கில்லை. 

தொலைநிலைக் கல்வியின் இயக்குநராக அயல்பணியில் வந்திருந்த ஒருவரை, விசாரணைக் கமிஷனின் அறிக்கையின் பெயரில்,  முடிவெடுக்கப்பட்ட அதே  நாளில் திருப்பி அனுப்பியது பல்கலைக் கழக வளாகத்தில் பலத்த சலசலப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.  இணைத் துணைவேந்தர் எனப்படும் புரோ வைஸ் சான்சலர் பதவிக்கு நிகரான இயக்குநர் பதவியிலிருந்து தனது நெடுநாளைய நண்பர், தரீனின்  செயல்பாடுகளில் அதிருப்தியடைந்து விலகிக்கொள்ள முன்வந்த போது, அதைத் தடுக்காமல் அனுமதித்தது இவரது சுயநலத்தை அம்பலப்படுத்தியது.  தொடர்பியல் துறையின் இணைப் பேராசிரியராக அவரது நிர்வாகக் காலத்தில் அவராலேயே  பணி நியமனம் பெற்ற ஒருவரை நிரந்தரப்  பணி நீக்கம் செய்ததும் அந்த இணைப் பேராசிரியர் பின்னாளில் நீதிமன்றத்தில், பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தீர்ப்புப் பெற்றதும்,  இவரது நேர்மை மீதான முக்கிய விமர்சனங்களாகும். 

ஆசிரியரல்லாத அலுவலர்களின் பதவி உயர்வுகளில் இவர் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை ஊழியர் சங்கங்கள் முன் வைக்கின்றன.  மாணவர் விடுதிகளின் எண்ணிக்கைகளைப் பெருமளவில் உயர்த்தக் காரணமான தரீன், அங்கு வழங்கப்பட்ட உணவு குறித்து போதிய அக்கறை எதையும் செலுத்தவில்லை, மாணவர்கள் இதற்கென ஆர்ப்பாட்டங்கள் செய்த போதும், நீண்ட காலத் தீர்வை எட்ட முயற்சிக்கவில்லை என்பதும், 4 ஆண்டுகளாக மாணவர்களின் கட்டணங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தவர், தனது நிர்வாகப் பணிக்காலம்  நிறைவுறும் வேளையில் கடுமையாக உயர்த்திவிட்டதையும், மாணவர்கள் தரப்பில் விமர்சனங்களாக முன்வைக்கின்றனர். 

மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களை, மதிப்பிடும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் தரும் மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களைத் தரம் பிரித்து, அதில் சிறந்தவர்களை நல்லாசிரியர்கள் என்று கவுரவப்படுத்தியது மிகுந்த விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. அது வெளிப்படையாக நடத்தப்படவில்லை என்பதும், மாணவர்களின் மதிப்பீட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆசிரியரின் திறனை எடைபோடுவது சரியல்ல என்பதும் ஆசிரிய சமூகத்தால்  சுட்டிக் காட்டப்பட்டது. நாட்டிலேயே எந்தப் பல்கலைக் கழகமும் அமுல்படுத்த முன்வராத இந்த நடைமுறையை நடைமுறைப் படுத்தியதுடன், அதன் உச்சமாக புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணிநிரந்தரப் படுத்துதலுக்கு இது  அடிப்படை என அறிமுகப்படுத்தியதும், அதனால் பலரது புரபேஷன் காலம் நீட்டிக்கப்பட்டதும், ஒருவர் பணி நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அது நீதிமன்றத்தின் தலையீட்டால் நிறுத்தப்பட்டதும், இவர் மீதான தீராப் பழிகளாகவே குறிக்கப்படும். 

அகடமிக் ஸ்டாப் காலேஜ், நிர்வகிக்கப்படும் முறை குறித்து எவ்வளவு புகார்கள் எழுப்பப்பட்ட போதும், அவர் அதன் நிர்வாகத்தில் தலையிடாமல் பாராமுகங் கொண்டிருந்தார் என்பது ஒரு முக்கியமான குற்றச்சாட்டு. கல்வி வணிகமயமாகி விடக் கூடாது என்ற அக்கறையில், தொலைநிலைக் கல்வியின் விரிவாக்கத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும், தரமான தொலை நிலைக் கல்வியின் தேவையை உணர்ந்து அதனை முன்னெடுக்கத் தவறிவிட்டார். அவரது நிர்வாகக் காலத்தில் பெருமளவு பாராமுகங் கொண்டு உரிய வளர்ச்சியை எட்டாமலே போனது இந்த அகடமிக் ஸ்டாப் காலேஜும், தொலைநிலைக் கல்வி இயக்கமுமாகும். 

கிரீன் டெக்னாலஜி முதல் நேனோ டெக்னாலஜி வரை பல புதிய துறைகளை அவர்  உருவாக்கியிருந்தாலும், சட்டப் புலத்தினை வளர்த்தெடுப்பதில் அவருக்கு ஒரு அச்சம் இருந்து கொண்டே இருந்தது. அவரால், கைகழுவப்பட்டவற்றுள் ஒன்று சட்டப் புலம் ஆகும். காரைக்கால், அந்தமான் வளாகங்களை, மைய வளாகத்துடன் தொழில் நுட்பரீதியாக இணைவிக்கும் முயற்சிகளில் அவர் அக்கறை செலுத்தியிருந்தாலும், அவற்றின் வளர்ச்சியில் தீவிர கவனத்தைச் செலுத்தவில்லை என்பதே உண்மை. 

கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுவதில் மிகுந்த கவனம் செலுத்தினாலும், அவரது சுயநலம் இதில் வெளிப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும். மயில்சாமி அண்ணாதுரைக்கு அவர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது தவிர, பிற யாவற்றையும் இவ்வகையில் அடக்கிவிட முடியும். அவருக்குச் சிகிச்சையளித்த தேசிய அளவில் சிறந்த டாக்டருக்கு இவர் கவுரவ டாக்டர் பட்டம்  வழங்கியதைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டலாம்.  தான் சார்ந்த கர்நாடக மாநிலத்தவர் ஒருவருக்கும்,  இவர் முன்பு துணைவேந்தராக இருந்த மாநிலத்தின்  முதல்வருக்கும்,   தன்னைத் தெரிந்த்தெடுத்த குழுவின் உறுப்பினராக இருந்த ஒருவருக்கும் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியதையும் நேர்மையான செயலின் வெளிப்பாடாகக் கருத முடியாது 

படிப்பினைகள் :

1. அதிகாரப் பகிர்வு : எல்லா அதிகாரங்களையும் அவர் தன்னிடம் குவித்து வைத்திருந்தாலும், பெருமளவில் பதிவாளரையும், நிதியலுவலரையும் நம்பிப் பொறுப்புகளை ஒப்படைத்திருந்தார். அதனால், அவரால் தனது தலைமைப்பணிகளில் கூடுதல் நேரமும் கவனமும் செலுத்த முடிந்தது. 

2. வெளிப்படையான நிர்வாகம் : கமுக்கம் என்பது பெருமளவு கடைப்பிடிக்கப்பட்டாலும், கொள்முதலில் அவர் வெளிப்படைத் தன்மையைக்  கொண்டிருந்தார். பர்ச்சேஸ் மேனுவல் ஒன்றை அவரே உருவாக்கி அதனைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியதால், கொள்முதலில் வெளிப்படைத் தன்மை சாத்தியமானது. 

3. முழுமையாக இயங்கியவர்: பணியை ஒப்புக் கொண்ட நாளிலேயே, தனது திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியதும், ஐந்தாண்டு காலமும் துணைவேந்தர் அலுவலகத்தில் கோப்புகள் தாமதப்பட்டன என்ற புகாருக்கு இடம் தராமலும் இயங்கினார் தரீன். பணி நியமனம் செய்யப் பட்டவுடனே, தனது ஐந்தாண்டு காலத்திற்கான செயல் திட்டத்தை வகுத்துக்கொண்டு அவற்றை முறைப்படி ஒவ்வொன்றாக நிறைவேற்றியதன் மூலம், நாட்டிலேயே 11ஆவது திட்ட காலத்தில் வேகமான வளர்ச்சி கண்ட மத்திய பல்கலைக் கழகம் என்ற பெயரைப் பெற முடிந்தது. 

4. மூர்க்கத் தனமும், எதேச்சதிகாரமும் : தனது முடிவுகள் எல்லாவற்றிலும் விடாப்பிடியாக இருந்தது, அதனால் எவ்வளவு பாதகம் வருமானாலும் அது பற்றிய அக்கறையோ, கவலையோ இல்லாமல் இருந்தது, இடித்துரைக்கும் வலுக்கொண்ட  ஆசிரியர் சங்கத்தை  அனுமதிக்காமல் இருந்தது ஆகியவற்றால், அவரது பல முன்மாதிரியான செய்கைகள் கூட அவற்றிற்குரிய கவனத்தைப் பெறத்தவறின. "இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்" என்பது இவருக்குத் தான் மிகப்பொருத்தம். ஆசிரியர் அலுவலர் மாணவர் சங்கங்களைத் தனது பணிக்கான இடையூறாக அமைந்து விடும் என்று அஞ்சினாரே தவிர, அவற்றின்  விமர்சனங்கள் தன்னைச் சீராக்கிக் கொள்ள உதவும் என்று அவர் எண்ணாதது அவருக்கே இழப்புகளை ஏற்படுத்தியது.    

5. ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சாணக்கியம் : தேசிய அளவில் பத்திரிகையாளர்களுடன், ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அவற்றைத் தனது மிஷனுக்கு லாவகமாகப் பயன்படுத்தவும் அவர் தவறவில்லை. பல்கலைக் கழக ஊடக மையத்தினைப் பூரணமாகப் பயன்படுத்திக் கொண்டார். 

6. துதி பாடிகள் : பொது அரங்குகளில் துதி பாடுவதைப் பெருமளவில் ஊக்குவிக்காமல் இருந்தாலும், தனக்கென ஒரு சிறு குழுவை நெருக்கமாக வைத்திருந்தார். அதில் சிலர், நெருக்கத்தைப் பயன்படுத்தி, பல சுய நல செயல்களில் ஈடுபட்டபோது, இவரால் அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.  துதி பாடிகளும், கிட்சன் கேபினட்களும் இல்லாத தமிழ் நாட்டுத் துணைவேந்தர்கள் எவரேனும் உண்டா என்ன? என்ற கேள்விக்குத் தனியாகத்தான்  விடை தேடவேண்டும். 

7. நிதியைப் பெருக்கியவர் : பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் உறுப்பினராக இருந்தபோதும், பின் அந்த அனுபவத்தைக் கொண்டும், பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்திற்குரிய நிதியைப் பெறப் போராட அவர் எபொழுதும் தயங்கியதில்லை. 11ஆவது திட்ட காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் ஆடிட் அப்ஜெக்ஷன் எதுவுமின்றிச் செலவழித்து விட்டு, பின் கூடுதலாக  நிதி ஒதுக்கக் கோரிப் பெற்றவர் தரீன். இன்று 12 ஆவது திட்ட காலத்தில் ரூ 600 கோடி முதல் ரூ 1000 கோடி  வரை நிதி நல்கை கிடைக்கும் சூழலை உருவாக்கியதில் தரீனின் பங்கு முக்கியமானது. 

நிறைவாக:

தமிழகத்தில் நிலவும் சூழ்லை மனதில் கொண்டும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நிலவி வந்த சூழலையும் கவனத்திற் கொண்டே தரீனின் நிர்வாகம் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஒரு நலன்புரி நிர்வாகத்தினை (welfare administration)  வழங்குவதில் அவருக்கிருந்த ஆர்வமும், ஒடுக்கப்பட்டோர் நலனிலும், பெண்களைப் பணியமர்த்துவதில் கூடுதல் கவனம் செலுத்தியதும், மாற்றுத் திறனாளிகளின் நலனில் அவர் அளித்த  முன்னுரிமையும், அரசியல் அழுத்தங்களுக்கு செவிமடுக்காமல் நேர்மையாக நியமனங்களைச் செய்ததிலும் அவர் தனிப் பெரும் கவனம் பெறுகின்றார். அவர் மீதான மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளும், குறைகளும்  அவரைத் தனிப்பெரும் சாதனையாளராகக் கருத முடியாமல் செய்கின்றது. என்றாலும், எல்லா விமர்சனங்களையும் மீறி பாண்டிச்சேரி பல்கலைக் கழக வரலாற்றில் தரீனுக்கென உரிய இடத்தைக் காலம் அவருக்கு வழங்கும் என்றே தோன்றுகின்றது.

Pin It